vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 622 blog entries.

நேசிக்கப்படுவீர்

2 இராஜாக்கள் 17 : 38-41                                       28 ஜூலை, 2017 வெள்ளி

“அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைப் பற்றிக்கொண்டிருந்து…” – 2 இராஜாக்கள் 18 : 6

வாசிப்புப் பகுதியை வாசித்துப் பாருங்கள். வேறு தேவர்களுக்கு அஞ்சாதீர். தேவ உடன்படிக்கையை மறவாதீர் என்று இஸ்ரவேலருக்கு கர்த்தர் சொல்லியிருந்தார். ஆனால் யூத மக்கள் கர்த்தர் சொல்லைக் கேட்டு நடக்கவில்லை. ஒரு பக்கம் கர்த்தருக்குப் பயந்தனர். இன்னொரு பக்கம் விக்கிரகங்களையும் சேவித்தனர். பூரண நம்பிக்கையின்மை. தள்ளாடும் விசுவாசம். இதே நிலை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வரை அதாவது பல தலைமுறைகளையும் பாதித்தது.

தியானப் பகுதியில், எசேக்கியா என்ற அரசன் பற்றி எழுதப்பட்டுள்ளது. இவர் ஆண்டவரிடம் பற்று கொண்டிருந்தார். கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார். ஆண்டவரும் அவரோடிருந்தார். அவர் காலத்தில் மக்கள் செழித்திருந்தனர். அரசரும் எல்லாவற்றிலும் சித்தி பெற்றார். எந்த நிலையிலும் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிருத்தல் நமது வாழ்வைப் பாதுகாக்கும்.

ஒரு ஊரில் ஒரு நல்ல செல்வந்தர் இருந்தார். அவர் ஏழைகளுக்குத் தான தருமம் செய்தார். ஒருநாள் இரவில் ஒரு கனவு கண்டார். கனவில் ஒரு தேவதை ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதுகிறீர்கள் என்று இவர் தேவதையைக் கேட்டார். இறையவரை நேசிக்கிறவர்கள் பெயர் பட்டியலை எழுதுகிறேன் என்றார் தேவதை. அந்தப் பட்டியலில் என் பெயர் இருக்கிறதா என்று செல்வந்தர் கேட்டார். உன் பெயர் இங்கே இல்லை என்றார் தேவதை. அடுத்த இரவு வெகு நேரம் செல்வந்தர் விழித்திருந்தார். இறைவனை நேசிக்கிறவர் பட்டியலில் தன் பெயர் இல்லையே என்று வருந்தினார். எப்படியோ தூங்கிவிட்டார். அன்றைக்கும் அதே கனவு. தேவதை எழுதியதைப் பார்த்தார். எதுவுமே கேட்க விரும்பவில்லை. ஆனால் தேவதை அவரிடம் இறையவரை நேசிக்கிறவர்கள் பட்டியலில் இன்றைக்கு உன் பெயர் இருக்கிறது என்றார்.

இறையவரை நேசிக்கிறதை மெய்ப்பிக்க நற்செயல் செய்து பயனில்லை. இறையவர் அருள் தருகிறார்! வளம் தருகிறார்!  ஆவியரின் துணை இருக்கிறது! ஆகவே நல்லவை நாடு! நன்மை செய்! இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் பெற்ற மீட்பிற்குக் காரணமான அளவற்ற அன்பு நமது செயல்களில் வெளிப்படட்டும். இறையவர் உன்னை நேசிக்கிறார். இறையவரால் நேசிக்கப்படுவதே பெரிய பேறு. தெய்வீகப் பேறுபெற்று வாழ்வீர்.

அளவற்ற அன்புகொண்டவரே, நாங்களும் உம்மில் நிலைத்திருந்து, உமது நேசத்தை அனுபவித்து, பிறருடனும் பகிர்ந்து கொள்ள எமக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

நேசிக்கப்படுவீர்2017-07-27T11:42:25+00:00

அடித்தளம்

மத்தேயு 7 : 24-27                                                 17 ஜூலை, 2017 திங்கள்

“கேட்டு, இவைகளின்படி செய்கிறவன்…” – மத்தேயு 7 : 24

உறுதியான கட்டுமானத்திற்கு … சிமென்ட் என்ற விளம்பரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆடம்பர விளம்பரங்களைப் பார்த்து பயனற்ற பொருளை வாங்கி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். பார்த்தல், கேட்டல், படித்தல் ஒருவகை மயக்கம். ஒருவரின் மனைவி எப்பொழுதும் வேதாகமம் படித்துக்கொண்டே இருப்பார். வீடு பெருக்குவது, துணி துவைப்பது, சமைப்பது, கடைக்குச் செல்வது, சம்பாதிப்பது அத்தனையும் கணவன் தான் செய்வார். இந்தப் பெண்மணி வேதம் படித்து என்ன பயன்?

என் வார்த்தைகளைக் கேளுங்கள், அதற்கேற்ப வாழுங்கள், அறிவாளிகள் ஆவீர்கள். உங்கள் வாழ்வு அசையாத அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு ஒப்பாகும். இப்படி ஒரு சிறிய உவமையைச் சொன்னவர் இயேசு. கேட்டதற்கு, படித்ததற்கு ஏற்ற வாழ்வில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ்ந்திருந்தால் நமது சபைகள் எப்படி இருந்திருக்கும்? எப்படி இருக்க வேண்டிய சபைகள் இப்படி இருக்கின்றன. எப்படி வாழவேண்டிய கிறிஸ்தவர் பிறர் நகைக்க வாழுகின்றனரே. கிறிஸ்தவப் பள்ளிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் பணத்தைச் சார்ந்து செயல்பட்டு இறைச் சேவையை மறந்து சிறுமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே. குற்றம் பெருத்தவையாகியிருக்கின்றன நமது ஊர்கள். இங்கே பல குற்றவாளிகள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். பலநேரங்களில் காலையில் படிக்கிற வேதாகமம் பகல் நேரத்து நமது செயல்பாடுகளில் பிரதிபலிப்பதேயில்லையே. நாம் செய்கிற தவறுகளை நாம் நமது சாமர்த்தியமாக, அறிவின் விளைவாக, புத்திக்கூர்மையின் பலனாக புளகாங்கிதப் பட்டுப்போகிறோம். மகனே, மகளே நீ தவறு செய்கிறாய் என்ற இறையவரின் குரல் இந்த ஆரவாரத்தில் நமக்குக் கேட்பதேயில்லை. பெருமழை பெய்தால்! பெருவெள்ளம் வந்தால்! பெருங்காற்று வீசினால் நமது நிறுவனங்கள் பேரழிவிற்கு உட்படுமே.

வேதத்தை வாசியுங்கள். இயேசுவின் செய்தி நமது மனங்களில் எப்போதும் தங்கியிருக்கட்டும். திருவசனங்கள் நமது தின வாழ்வை செம்மைப்படுத்தட்டும். நாம் அவருக்குள் வாழ்ந்திருப்போம். அவரே நமது வாழ்வின் அடித்தளமாகட்டும். புயல் வரும், மழை வரும். ஆனால் நாம் இயேசுவுக்குள் அசையாதிருப்போம்.

பூரணரே, எங்கள் அசையாத அடித்தளம் இயேசுவாகட்டும்! உறுதியான வாழ்க்கையை வேதவசன நடைமுறைதரட்டும். இயேசுவின் வழியே ஆமேன்.

அடித்தளம்2017-07-17T05:56:20+00:00

கெட்டுப்போகாதிருங்கள்

ரோமர் 13 : 11-14                                         12 ஜூலை, 2017 புதன்

“தெளிவடைந்து பாவஞ் செய்யாதிருங்கள்.” – 1 கொரிந்தியர் 15 : 34

தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்! ஏமாறாதீர்! தெளிவாயிருங்கள். நேர்மையுடன் வாழுங்கள்! பாவஞ்செய்யாதிருப்பீர். வேதத்தின் மற்றொரு மொழி பெயர்ப்பில் எழுதப்பட்டிருப்பதை எனது பார்வையில் எழுதிப் பார்த்தேன். தரப்பட்டுள்ள ஆதார வரிகளைவிட எனது பார்வையில் எழுதியிருப்பது சற்றுத் தெளிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பாவம், தவறு, தீமை, வேசித்தனம், சண்டை, பொறாமை போன்ற குற்றங்கள் மனக்குழப்பத்தில், தெளிவின்மையால் தான் நடைபெறுகின்றன. ஒருவகை மனமயக்கத்தில், ஏக்கத்தில், ஏமாற்றத்தில், விரக்தியில் தான் `இருளில் நடக்கிறவர்கள் போல’ துர் இச்சைகளுக்கு இடம் கொடுக்கிறோம். தெளிவாயிருக்கிற எவரும் தவறு செய்திடத் துணிவதில்லை. மனத்தெளிவு என்பது ஒரு வகை உள்வெளிச்சம். இறையவரின் அருட்தன்மையால் ஒவ்வொரு மனதிலும் மனவெளிச்சம் அருளப்பட்டுள்ளது. இறையவரின் அருட்பிரசன்ன உணர்வை மறக்கின்ற மனம்தான் இருட்டில் நடக்கத் துவங்குகின்றது.
மனத்தெளிவு, மனவெளிச்சம் உள்ள எவரும் இறையவர் தன்மையைத் தான் பிரதிபலிப்பர். மனத்தெளிவு, பகலில் நடப்பதைப் போன்ற தடுமாற்றமற்ற நேர் வழி நடப்பைத் தரும். ஒளியின் ஆட்சி இருளின் தடுமாற்றத்தை புறந்தள்ளிவிடும். நானே உலகத்தின் ஒளி என்று கூறிய இயேசுவோடு இணைந்திருப்போம். இதைத்தான் `ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிநான்காம் வசனத்தில் எழுதியிருக்கிறது. இயேசுவை அணிகலனாக ஆடையாக அணிந்து வாழ்ந்திட பவுலடியார் ரோம் நகர் விசுவாசிகளுக்குக் கூறியது நமக்கும் பொருந்தும். இயேசுவை அணிந்து கொள்வீர்! இயேசு உங்களிடம் சொல்லியது போல, நீங்கள் உலகத்திற்கு வெளிச்சம் ஆவீர்கள். வெளிச்சம் வெளிச்சத்தோடு தான் சேரும். இருள் எவ்வளவு இருந்தாலும், இருளால் வெளிச்சத்தை விழுங்க முடியாது. காரிருளிலும் ஒரு சிறிய அகல்விளக்கு தன்னை வெளிப்படுத்தும். வெளிச்ச வரிகள் வெளியே தெரியும். வெளிச்சம் விசுவாசிக்குக் கிடைத்திருக்கிற அருட்கொடை. தெளிவடைவீர்! பாவம் தவிர்ப்பீர்! நேர்மையுடன் வாழ்வீர்.

ஒளியின் உறைவிடமே, நீவீர் எனக்குத் தந்திருக்கிற ஒளியைத் தூண்டி என்னைப் பிரகாசிக்கச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

கெட்டுப்போகாதிருங்கள்2017-07-11T05:50:10+00:00

எல்லை

1 கொரிந்தியர் 10 : 25-28                                     11 ஜூலை, 2017 செவ்வாய்

“பூமியும், அதன் நிறைவும்… கர்த்தருடையவை.” – சங்கீதம் 24 : 1

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு! எப்படி? என்னையும் பிற அனைத்தையும் படைத்தவர் பரம பிதா. தந்தையராம் இறையவர் சொத்து எனது அனுபவத்திற்கு உட்பட்டது தானே! எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு! ஆனால் எனக்கு ஒத்துக் கொள்ளாதவையும் இருக்கின்றன. உடல் நலம் பாதிக்கக் கூடியவற்றை நான் உண்ணமாட்டேன். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு! நான் கிறிஸ்தவன். பக்திவிருத்திக்கு, விசுவாச உணர்வை வளர்க்கிறவற்றை நான் அனுபவிப்பேன், பயன்படுத்துவேன். அதே சமயம் கிறிஸ்துவுக்கு ஏற்காதவற்றை நான் விலக்கிவிடுதல் தானே கிறிஸ்தவப் பண்பு. கிறிஸ்துவும் அப்படிப்பட்ட ஒரு தெளிவைத்தானே நம்மிடம் எதிர்பார்க்கிறார். எல்லாம் கர்த்தருடையவை! இதை சரியாகப் புரிந்து கொள்ள எகிப்து, பார்வோன், இஸ்ரேலியர், மோசே இவர்கள் காலத்து நிகழ்வை நினைத்து அல்லது படித்துப் பார்ப்போம். மனிதர், மிருகம், பயிர் வகைகள், நதி, நீர், தவளை, கொசு, ஈ, வெட்டுக்கிளி, நோய், கல், மலை அனைத்தையும் ஆளுகின்றவர் கர்த்தர். இவற்றில் எதையும் ஆசியாக அல்லது வாதையாகப் பயன்படுத்திடும் ஆற்றலும் உரிமையும் கர்த்தருக்கு இருந்தது. `யாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன்’ என்றார் கர்த்தர். ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என விதிவிலக்கை மனிதகுலத்திற்கு ஓர் எல்லையாக்கினவர் கர்த்தர்.

நம்முடைய உரிமையில் எத்தனை ஆற்றல் உள்ளதோ அதைவிட `வேண்டாம்’ என்ற வேலி மிகவும் எச்சரிப்புடன் நாம் தவிர்க்க வேண்டிய கத்திமுனையாகும். சுவர் வேலி! தேசங்களை, ஊர்களைப் பிரித்து வைக்கிறது. உதாரணம் சீனப் பெரும் சுவர். முள்வேலி! முட்கம்பிகள் எல்லையை பிரித்துக் காட்டும். உயிர்வேலி! ஆடுதின்னாப் பாளை என்ற செடி எல்லை ஓரத்தில் வைத்து வளர்க்கப்படும். இவை ஆடு மாடுகளைத் தடுத்து நிறுத்தும். மின்வேலி! கரடி, யானை, காட்டு மாடுகளை வயலில் நுழைந்துவிடாமல் தவிர்க்கும் ஆபத்து நிறைந்த எல்லை. எல்லையை மதிக்காமல் நுழைவது உயிர் நஷ்டம் ஆகிவிடும். எல்லை என்பது உரிமைக்கோடு மட்டுமல்ல! அது உயிர்க் கோடு. உரிமையை உயர்த்திப் பிடிக்கிறோம். நன்று. எல்லையை மதித்து வாழ்கிறோமா? பத்து கட்டளைகள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தொடாதே! ருசி பாராதே போன்ற எல்லைகள் நமக்கு இருக்கின்றன.

எல்லை தாண்டி பந்து சென்றாலும் விசில் ஊதப்படும். எல்லை தாண்டி விளையாட்டு வீரர் சென்றாலும் விசில் ஊதப்படும். கர்த்தருக்கு அடுக்காதவை எனக்கும் வேண்டாதவை ஆகட்டும். இறையவர் விலக்கியவற்றிற்கு நானும் விலகி வாழுவேன். விலகி வாழ்ந்திடவும் கற்றுக் கொள்வோம்.

எல்லையை உருவாக்கிய பரம தந்தையே! என் உரிமையை மீறாமல் வாழுகின்ற நல்உணர்வை எமக்குத் தாரும். இயேசு வழியே ஆமேன்.

எல்லை2017-07-10T11:07:53+00:00

இரத்த சுத்தி

தரிசனம் 1 : 5-6                                                             10 ஜூலை, 2017 திங்கள்

“பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது.” – 1 யோவான் 1 : 7

பாவம் என்ற சொல் முதல் யோவான் நிருபத்தில் சுமார் இருபத்து ஐந்து தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவத்திலிருந்து விலகி வாழ்ந்திட பல ஆலோசனை இக்கடிதத்தில் பதிவாகியிருக்கிறது. பாவத்திலிருந்து விலகி வாழ்ந்திட வேண்டும் என்ற எச்சரிப்புகளும் இருக்கின்றன. குமாரனாகிய இயேசுவின் இரத்தம் எவ்வித பாவத்தையும் நீக்கி, நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. இயேசுவின் இரத்தம் குற்றமில்லாதது. பாவப் பரிகாரமாக சிலுவையில் சிந்தப்பட்டது இயேசுவின் இரத்தம். உலகத்தவரின் பாவத்தைக் கழுவிச் சுத்திகரிப்பதற்காகவே பாவ நிவாரண பலி இரத்தமாகச் சிந்தப்பட்டது. `இயேசுவின் இரத்தம்’ என்பது மந்திரச் சொல் அல்ல. நம்மை செத்த கிரியைகளற்ற பாவத்தின் செயல்களிலிருந்து தூய்மைப்படுத்துகிறது இயேசுவின் இரத்தம். ஒளியில் நடக்க, புதிய ஆற்றல் கொடுத்திட; நல்ல செயல்களைச் செய்திட உணர்வும், உந்துதலும், ஆவலும், ஆற்றலும் தருவதே இயேசு நமக்காக சிலுவையில் சிந்திய இரத்தம். இதைத்தான் தரிசன ஆகமத்தில், தங்கள் மேலாடைகளை ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்தவர்கள் என்று உவமித்து எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் இரத்தம் நமது இதய சுத்தியின் காரணமாகின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பலியிடப்பட்ட மிருகத்தின் இரத்தம் தெளிக்கப்பட்டது, வாசல் நிலைக்கால்களில் பூசப்பட்டது. இப்படி இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டவை, அழிவினின்று தண்டனையினின்று தப்பித்துக் கொண்டன. இதே பார்வையில் இயேசுவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்கிறது.

திருப்பந்தி என்ற திருவிருந்தில் `பாவ மன்னிப்பிற்காக சிந்தப்பட்ட’ இயேசுவின் இரத்தம் வழங்கப்படுகிறது. பாவம் மன்னிக்கப்பட்ட உறுதியான அனுபவ உணர்வுடன் இயேசுவின் இரத்தமாம் திராட்சைச் சாறு பெற்று பருகப்படுகின்றது. இறை அருள் இயேசுவின் இரத்தத்தில் விசுவாசிகளின் உடலில் சங்கமம் ஆகின்றது. விசுவாசிகளின் இரத்தம் தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்து புரிந்து கொள்ளக் கடினமானது தான். இயேசுவின் இரத்தம் பெற்றுப் பருகப்படுவது ஓர் இறைமயமான மறைபொருள் செயல்பாடு எனலாம்.

சுத்திகரிக்கிற இயேசுவின் இரத்தத்திற்காக தோத்திரம் செய்வோம். இதே அனுபவத்தில் ஓர் எச்சரிப்பையும் மனதில் ஏற்போம். எவராவது அபாத்திரமாய், தகுதியற்ற நிலையில், மனந்திருந்திட உறுதியற்ற நிலையில் ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவரின் இரத்தத்திற்கு எதிராகக் குற்றமிழைத்து தண்டனைத் தீர்ப்பை வரவழைத்துக் கொள்கிறார். இயேசுவின் இரத்தம் விலைமதிக்க முடியாதது. அலட்சியப்படுத்தாதீர்! ஆசிகளை இழக்காதீர்! ஆக்கினையை ஏற்காதீர்.

இறையவரே,ஏனோதானோ என உமது அருள்  பயன்படுத்தப்பட்டால், பயன்படுத்துவோரை அழித்து விடும் என்ற உணர்வுடன் எச்சரிப்புடன் அருளை அணுகுகின்ற உணர்வினைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

இரத்த சுத்தி2017-07-10T06:03:33+00:00

தொடாதீர்

2 இராஜாக்கள் 18 : 14-15                                         7 ஜூலை, 2017 வெள்ளி

“ஆலயத்தி(லும்)… எடுத்து வெகுமானமாக…” – 2 இராஜாக்கள் 16 : 8

சீரியா நாட்டின் அரசரும் இஸ்ரவேல் அரசரும் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் சேர்ந்து யூதேயா நாட்டின் மேல் படையெடுத்தனர். யூதேயா நாட்டின் அரசர் பெயர் ஆகாஸ். தனது நாட்டைக் காப்பாற்றிட, எருசலேம் பேராலயத்தில் இருந்த வெள்ளியையும், பொன்னையும் வெகுமானமாக்கினார் ஆகாஸ்.

வாசிப்புப் பகுதியிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு. யூதாவில் அரசராயிருந்தவர் பெயர் எசேக்கியா. அப்பொழுது அசீரியா நாடு யூதாவின் மேல் படை எடுத்தது.  பல நகரங்களை அசீரியர் வென்றெடுத்தனர். எசேக்கியா அரசர் அசீரியாவுக்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார். ஆலய சம்பத்து அசீரியாவுக்குக் கப்பம் ஆயிற்று.  `சிவன் சொத்து குல நாசம்’ என்பது நட்பு மதத்தினரின் பொதுவான நம்பிக்கை. `கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தல்போல…’ என்று ஒரு சொல்லாடல் இருக்கிறது. இவையிரண்டிலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்து நமக்கும் பொருந்தும். தனக்குச் சொந்தமில்லாத பொருளை தெய்வத்திற்கு அர்ப்பணிப்பது தவறு. இது போன்றே தெய்வ சொத்தை தனியார் பயன்படுத்துவது தேவத் துரோகம்.

தேவத் துரோகங்கள் ஆகாஸ் காலத்தில், எசேக்கியா காலத்தில் மட்டும் நடக்கவில்லை! இன்றைக்கும் தொடருகின்றது! ஆலய காணிக்கை, பொறுப்பாளர்களால் கையூட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆலய நிலம், சபை நிறுவனச் சொத்துக்கள் பரிபாலனப் பொறுப்பில் இருப்பவர்களால், சுயலாபத்திற்காக விற்கப்படுகின்றன. இறையவர் செல்வத்தால், தங்கள் செல்வாக்கை சிலர் உயர்த்திக் கொள்கின்றனர். இதைப் பற்றி ஊழியர்கள் கவலைப்படுவதில்லை, கண்டிப்பதில்லை, வெட்கப்படுவதில்லை.

இறையவர் வீடு கள்ளர்குகை ஆக்கப்பட்டபோது இயேசு சினம் கொண்டார். கொள்ளையரை விரட்டியடித்தார். சாட்டையால் பேசினார் இயேசு. இறையவர் கருணையுள்ளவர், மன்னிக்கிறவர் இது உண்மை தான். இறையருளின் விளக்கமாக மன்னிப்பு மனிதரைச் சந்திக்கிறது. அருளப்படுகிற மன்னிப்பு அவமானப்படுத்தப்பட்டால் இறையவரின் சீற்றம் உன்னைத் தொடும். இது உறுதி. கடவுளின் செல்வத்தைச் சுரண்டியவர்கள் செல்லாக்காசு ஆனதை விசுவாசிகள் அறிவர். நானும் அறிவேன். பல வருடம் படுக்கையில் கிடந்தார் அந்த முன்னாள் பொருளாளர். காரணம் இருந்தது. கடவுளின் பணத்தைக் கையாடல் செய்தார். இரவும் பகலும் வேதனையில் கூச்சலிட்டே இறந்தார் இன்னொருவர். சபையின் சொத்தை விற்றுப் பயன்படுத்தியவர் இவர். இன்னொருவருக்கு, கட்டிய மனைவிகூட கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றவில்லை! கதைகள் தொடருகிறது.

கம்பி வழியே செல்கிற மின் ஆற்றல் கண்ணுக்குத் தெரியாது! ஆனால், தொட்டால் ஆபத்து. தொடாதீர் என்றுகூட சில இடங்களில் எழுதப்பட்டிருக்கும். ஆபத்தோடு விளையாடாதீர்! ஆபத்துக்கு விலகுவீர்! தொடக்கூடாததைத் தவிர்ப்பீர்! ஜீவனைக் காத்துக் கொள்வீர். வம்பை விலைகொடுத்து வாங்காதீர்.

எச்சரிப்பை முன் வைக்கிற இறையவரே, தீமைக்கு விலகி வாழுகின்ற மனத்திண்மை தாரும். இயேசு வழியே ஆமேன்.

தொடாதீர்2017-07-06T13:08:18+00:00

மான அவமானம்

லூக்கா 8 : 43-48                                                                  4 ஜூலை, 2017 செவ்வாய்

“ என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.” – யோவேல்  2 : 26

`வேற்றினத்தாரிடையே என் மக்கள் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்’ என்று கர்த்தர் கூறியதாக யோவேல் எழுதி வைத்தார். மானம், ஈனம், வெட்கம் துக்கம் இஸ்ரவேலரை அணுகாதாம்…. ஏன்? இஸ்ரவேலர், கடவுளின் மக்களாக கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்!

நிலமே அஞ்சாதே! விலங்குகளே அஞ்சாதீர்! சீயோன் மக்களே மகிழ்ந்திரு! என பலப் பல தைரிய மொழிகள் கூறப்பட்டன. `ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்’. இது தான் அஞ்சாமைக்கு, வெட்கமின்மைக்கு, மகிழ்ச்சிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.

பெரிய காரியங்களை இயேசு செய்தார். புதுமை அற்புதம், அடையாளம், வல்ல செயல்கள் இயேசுவால் அரங்கேறின. மக்கள் மேல் மனதுருகி, இரக்கம் கொண்டு மக்களின் நம்பிக்கையைப் பாராட்டி சில பல அற்புதங்கள் செய்யப்பட்டன. துன்பத்தின் வேதனையில் `இறைவா ஏன் என்னைக் கைவிட்டாய்’ என்று கசிந்தழுகின்றனர் மக்கள். இயேசுவும் சிலுவை வேதனை தாங்கிட முடியாதவராக `என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று அயர்ச்சியில் கேள்வி கேட்டார். மனித இனத்தின் கைவிடல் வேதனையை மொத்தமாக இயேசு சிலுவையில் அனுபவித்தார் என்று விளங்குகிறது. நமது அவமானத்தை வேதனையை, துன்பத்தை அனுபவத்தில் புரிந்து கொள்ளக் கூடியவர் நமது ஆண்டவர். கைவிடப்பட்ட இயேசு, நமக்காக கைவிடப்பட்டார். இனி எவரும் கடவுளால் கைவிடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்திட, மனித இனத்தின் பதிலாளாக இயேசு கைவிடப்பட்டார். சிலர் இயேசுவைக் கைவிடலாம். இதனால் அவர்கள் அவமானப்படலாம். இயேசு எவரையும் கைவிடுவதில்லை. எவரும் அவமானப்பட இயேசு இடங்கொடுப்பதுமில்லை. நாம் அவருடைய சினேகிதர். நாம் அவருடைய சீடர்கள். நாம் அவரால் உலகில் அனுப்பப்படுகிறவர்கள். நம்மை அவர் கைவிடுவதில்லை. நம்மை அவர் வெட்கப்பட இடங்கொடுப்பதுமில்லை.

இயேசுவைப் போல, பேதுரு கடலின் மேல் நடக்க விரும்பினார். பேதுருவின் விருப்பம் உண்மையான விருப்பம் என நான் நினைக்கவில்லை. கடல் மேல் நடந்தது இயேசுவா, ஆவேசம் அல்லது பிசாசா என்று டெஸ்ட் பண்ணினார் பேதுரு! இயேசுவை ஆவேசம் என்று சந்தேகப்பட்டார். கடலில் அமிழ்ந்தார் பேதுரு! பிறப்பிலேயே மீனவரான பேதுரு நீந்துவதை மறந்தார், தண்ணீரில் மூழ்கினார். அவிசுவாசம் வெட்கப்படுத்தும். விசுவாசம் வெற்றி தரும்.

இனிய இறையவரே! என்னை வெட்கப்படுத்தாதவரே! உமக்கு நன்றி. எப்போதும் என்னுடன் இரும். வழி நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

மான அவமானம்2017-07-03T11:05:10+00:00

பெயராற்றல் பேராற்றல்

அப்போஸ்தலர் 3 : 6-10                                         29 ஜுன், 2017 வியாழன்

“நசரேயன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் குணமாகி….” – அப்போஸ்தலர் 4 : 10

சிற்றூர்களில் சகஜமாக நடைபெறுகிற காட்சியை ஒரு இடத்தில் கண்டேன். ‘அப்பா பேரைச் சொல்லி, பக்கத்துக் கடையிலே போய் அஞ்சு ரூபாக்கி வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா.’ இளைய மகன் டயர் வண்டியை ஓட்டிக் கொண்டு ஓடினான். கடைக்காரரிடம் கேட்டான். `உன் அப்பா ஆரு’ என்று கேட்டார். பையன் பெயரைச் சொன்னான். கடைக்காரர் பொருளைக் கொடுத்தார்.

நசரேயன் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நடைபெற்ற நிகழ்வை ஆதாரப் பகுதியில் வாசிக்கிறோம். நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியை வாசிப்புப் பகுதியில் படிக்கிறோம்.

நீங்கள் சிலுவையில் அறைந்தவரும், கடவுள் மரித்தோரிலிருந்து எழுப்பினவருமாகிய நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் குணமாகி உங்கள் முன் நிற்கிறான், என்று நடைபெற்ற அற்புதத்திற்கு விளக்கம் கொடுத்தார் பேதுரு.

நமது நம்பிக்கை சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று மட்டும் நினைக்க வேண்டாம். இயேசு உயிர்த்தெழுந்த ஆண்டவர்.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்பதில் புது உயிர் கொடுக்கும் வல்லமை பெற்றவர் என்பது விளங்குகிறது (சங்கீதம் 23:3). `கிறிஸ்து இயேசு’ என்ற பெயரில் பாவமன்னிப்பு, மீட்பு, விடுதலை, இரட்சிப்பு, உயிர்ப்பு என்ற புதிய வாழ்வின் ஆதாரங்கள் அடங்கியிருக்கின்றன.

இயேசுவின் பெயரை பேதுரு உச்சரித்தார். பிறப்பிலிருந்தே இரு கால்களும் பயனற்றிருந்தவரின் கையைப் பிடித்தார், தூக்கினார், எழுந்து நட என்றார் பேதுரு. உட்கார்ந்திருந்தவரின் பாதங்களும் கணுக்களும் பலம் கொண்டன. எழுந்தார், நடந்தார், குதித்தார். கடவுளை துதித்தார்.

இயேசுவின் பெயரை நோய் நீக்க, பிரச்சனை நீங்கிட, சண்டைகள் ஓய்ந்திட நமது குடும்பத்திற்குள் பயன்படுத்தியிருக்கிறோமா?

`கூசல துநளரள’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இயேசுவின் பெயரைப் பயன்படுத்திப் பார்; பலனைக் காண்பாய்.

அருளுருவே! அருளரசே! உமது திருமகன் வழியாக எம்மை ரட்சித்தீர் தோத்திரம். இயேசுவின் வல்லமையுள்ள பெயரை நம்பிக்கையுடன் பயன்படுத்திடும் பயன்பாட்டு ஆவியைத் தாரும். ஆமேன்.

பெயராற்றல் பேராற்றல்2017-06-28T11:54:01+00:00

ஆயத்தமாயிருப்போம்

1 பேதுரு 3 : 5-7                                               27 ஜுன், 2017 செவ்வாய்

“நோவாவின் நாட்கள் எப்படியோ அப்படியே மனுஷகுமாரன் வருகையும் இருக்கும்.” – மத்தேயு 24 : 37

சில வருடங்களுக்கு முன்பு நகர் முழுவதும் ஒரு நாளைக் குறித்து அந்த நாளில் இயேசு வரப்போகிறார் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பள்ளிக்குச் சென்ற மாணவன் இதைப் பார்த்தான் படித்தான். இரவில் சாப்பிட அமர்ந்து குடும்ப ஜெபம் முடிந்தது. தன் தகப்பனாரிடம் அப்பா நாளை அம்மாவின் பிறந்தநாள். நாம் கொண்டாட முடியாது என்றான். தாயார் ஏன் என்று கேட்டார். பையன் அமைதியாக நாளை இயேசு உலகை நியாயந் தீர்க்க வரப் போகிறார். ஊர் முழுவதும் சுவரொட்டிகளைப் பார்த்தேன் என்றான்.

இத்தகைய நிகழ்வுகள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. உலகம் எப்போது முடியும்? இயேசுவின் வருகை எப்போது இருக்கும் என்ற ஆய்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தங்களை பரிசுத்தவான்கள் என்றும், தங்களோடு கடவுள் வந்து பேசினார் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய பொய் பிரச்சாரங்களை நம்பாமல் ஆராய்ச்சியில் இறங்கிப் பயப்படாமல், உலகில் சந்திக்கும் சோதனைகள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள், வான்வெளியின் அறிகுறிகளைக் காணும் போது விசுவாசத்தில் இணைந்திருந்து கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்ந்தால் நாம் வாழ்வடைவோம். கிறிஸ்து எப்பொழுது வந்தாலும் அனுதின ஆயத்தமும் அவர்மேல் வைக்கிற விசுவாசமுமே நம்மை இறையரசில், விண்ணக வாழ்வில் சேர்க்கும் என்பதை நினைவிற் கொள்ளுவோம்.

இயேசு உலகை நியாயந்தீர்க்க மறுபடியும் வருவார் என்பதே திருமறை கூறும் உண்மை. இதில் சந்தேகமில்லை. இதற்காக பயப்படாமல் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் அவர் கற்பித்தபடி பிதாவின் சித்தத்தைச் செய்து நித்திய வாழ்வில் பிரவேசிப்போம். நமது தியானப் பகுதியில் தெளிவாக மனுஷகுமாரனின் வருகை மக்கள் வயலில் இருக்கும் போதும், எந்திரம் அரைத்துக் கொண்டிருக்கும் போதும் நடைபெறும் என்று கூறுகிறது. அதாவது மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போது அது நடைபெறும். தனியே காத்திருப்புக் கூட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது ஆண்டவர் வந்து தம்முடையவர்களைச் சேர்த்துக் கொள்வார்; அவருடைய வருகையைக் குறித்து அக்கறை அற்றவர்கள் கைவிடப்படுவார்கள் என்று சொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இயேசுவின் வருகையை எப்படிப் புரிந்து கொள்வது? நோவா பேழையைக் கட்டி முடிக்க நாள் ஆனது. அதைக் கண்டும் மக்கள் சிந்திக்கவில்லை. இன்றும் கடவுள் இயற்கை நிகழ்வுகள் வழியாகப் பேசுகிறார். வசனத்தின் வழியே பேசுகிறார்.  இவற்றை நாம் கருத்தில் கொள்ளாமல் கவலையற்று வாழ்கிறோம். மழை பொழிந்தது, மக்கள் அழிந்தார்கள். கடவுள் எல்லாரையும் எச்சரிக்கிறார். கேட்கத் தவறிப் போனால் அழிவு ஏற்படும். திடீரென்று இயேசு வருவார். தப்பவே முடியாது. இயேசுவாகிய பேழையில் அடைக்கலம் புகுவோம். பேராபத்திலிருந்து காப்பாற்றுவார். நித்திய வாழ்வில் சேர்ப்பார்.

எங்களோடு பல வழிகளில் பேசுகிற கடவுளே, எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து, உமது சித்தப்படி வாழ்ந்து, விசுவாசத்தில் நிலைத்திருந்து நித்திய வாழ்வைப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ஆயத்தமாயிருப்போம்2017-06-26T08:44:41+00:00

அவருக்கென பிழைத்திருங்கள்

எபேசியர் 2 : 1-10                                                                23 ஜுன், 2017 வெள்ளி

“…அவர் எல்லாருக்காகவும் மரித்தார் என்று நிதானிக்கிறோம்.” – 2 கொரிந்தியர் 5 : 15

கடவுளின் அன்பும், அருளுமே மீட்பின் அடித்தளம். ஆறுதலின் கடவுளின் விருப்பத்திற்கு விரோதமாய் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் கடவுளின் அன்பினாலும் அருளுளினாலும் புதிய வாழ்க்கை பெற்று செயல்படும் முறையை இங்கே ஆசிரியர் விவரிக்கிறார். கிருபையினால் விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டவர்கள். இது கடவுளின் ஈவு. இதுவே நாம் வாசித்த பகுதியின் மையச் செய்தி. திருமறையில் பாவமும் மரணமும் தொடர்புள்ளவைகளாகக் கூறப்பட்டுள்ளது. பாவத்தின் சம்பளம் மரணம். உயிர்த்தெழுதல் படைப்பைப் போன்று எப்படி கடவுளின் அருளோ அப்படியே பாவத்திலிருந்து புதிய வாழ்க்கைக்குரிய மீட்பும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. தீய சக்தி அதிகாரத்தோடு கிரியை செய்வதற்கு இடம் கொடுப்பது இவ்வுலகத்தின் வழக்கம். பாவ வாழ்வு என்பது கடவுளின் விருப்பப்படி வாழ்க்கையை அமைக்காமல் நமது மனம் விரும்பிய முறையில் வாழுவதாகும்.

கடவுளின் இரு பண்புகளான அன்பும், கிருபையும் கிறிஸ்துவின் வழியாய் மனிதனின் மீட்புப் பணியில் வெளிப்பட்டது. கிறிஸ்துவுக்குள் நாம் முந்திய வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்கு நேராய் உயிர்ப்பிக்கப் படுகிறோம். இதனால் நமது வாழ்க்கையில் உயிர்த்தெழுதல் மைய இடத்தைப் பெறுகிறது. இந்த வாழ்வு நமக்கு இயல்பாகவே கிடைப்பதில்லை. கடவுளின் கிருபையாலே கிடைக்கிறது. கிறிஸ்துவோடு ஐக்கியம் எனும் உயரிய நிலையில் வாழும் வாழ்க்கை நமக்கு அருளப்படுகின்றது. கிறிஸ்துவின் அருளினால் கிடைத்த இந்த வாழ்க்கை நித்தியமானது. நிகழ் காலத்திற்கு உரியவையாயிராமல் எதிர்காலத்திற்கும் உரியது. ஆதாமுக்குள் எல்லா மனிதரும் பாவம் செய்தது போல எல்லாரும் கிறிஸ்துவுடன் மரித்திருக்கிறார்கள். அவர் மரணத்தை ஜெயித்து உயிர்த்தது போல விசுவாசிகள் நித்திய மரணத்தை வெற்றி கொண்டிருக்கிறார்கள். இதை விசுவாசத்தால் சொந்தமாக்கிக் கொள்வது ஒவ்வொருவரையும் சார்ந்தது.

கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிற நாம் இனி நமக்காகப் பிழைத்திராமல் நம்மை உயிர்ப்பித்திருக்கிற கிறிஸ்துவுக்காகப் பிழைத்திருக்க வேண்டும். நாம் பிழைக்கும்படி இயேசுகிறிஸ்து மரித்தார். நம்மைச் சுற்றியிருக்கிற மக்கள் இந்த இயேசுவில் விசுவாசம் வைத்துப் பிழைக்கும்படி அவர்களுக்கு இச்செய்தியைச் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போம்.

நம்மை மீட்க தன்னுயிரையே ஈந்த இயேசுவுக்காய் பிழைத்திருப்போம். இயேசுவின் பணியைத் தொடருவோம்.

நாங்கள் வாழ்வடைய உமது நேசக்குமாரனைத் தந்த கடவுளே, அவரில் நித்திய வாழ்வுக்குப் பிழைத்திருக்கிற நாங்கள் அவருக்காக வாழ அருள் செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அவருக்கென பிழைத்திருங்கள்2017-06-23T06:08:17+00:00
Go to Top