vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 622 blog entries.

இயேசுவே மேசியா

ரோமர் 1 : 1-7                                                22 ஜுன், 2017 வியாழன்

“இயேசுகிறிஸ்துவை நினைத்துக்கொள். அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர்.” –  2 தீமோத்தேயு 2 : 8

கிறிஸ்தவ உலகம் நற்செய்திக் கூட்டங்கள் மற்றும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கிறது. இவற்றில், நோயாளிகளை பெயர் சொல்லி அழைத்து சுகப்படுத்தும் நிகழ்வுகள் ஏராளம். அற்புதங்களையும் அடையாளங்களையும் எதிர்பார்ப்பது மனித இயல்பே.

நமது ஆண்டவரிடமும் பரிசேயரும், வேதபாரகர்களும் வந்து ஓர் அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்று கேட்டார்கள். நமது ஆண்டவர் கடினமான வார்த்தையால் அவர்களை கண்டித்தார். பின்பு, யோனா மூன்று நாள் மீனின் வயிற்றில் இருந்தார், மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் வெளியே வந்தார். இதுபோலவே மனிதகுமாரனும் மூன்று நாட்கள் பூமியின் வயிற்றில் இருப்பார், மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் வெளிவருவார் என்றார்.  மனுக்குலம் பாவஞ்செய்து கடவுளின் மகிமையை இழந்தபோது அந்த மகிமையையும், மேன்மையையும் திரும்ப பெற்றுக் கொள்ளும்படி பிதாவாகிய கடவுள் மேசியாவை வாக்குப் பண்ணினார். கடவுள் வாக்களித்தபடியே மேசியாவான இயேசுவை அனுப்பினார். இயேசுவின் அற்புதக் கன்னிப் பிறப்பு, விண்ணில் தோன்றிய அற்புத நட்சத்திரம் இவையெல்லாவற்றையும் மனுக்குலம் கண்டது. அத்துடன் இயேசு செய்த பல அற்புதங்களும் அடையாளங்களும் அவரே வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை உறுதி செய்தன. இயேசுவும் அருளுரைகள் வழியாக இதைத் தெளிவுபடுத்தினார்.

இயேசுவின் செயல்கள் வழியாக அவர் கடவுளின் குமாரன், வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதைத் தெளிவுபடுத்தினாலும், அவரே வாக்களிக்கப்பட்ட மேசியா, உலக இரட்சகர், பாவப்பரிகாரி எனக் காணத் தவறிப்போனார்கள். இயேசு சிலுவையில் கொடூர மரணத்தைச் சந்தித்தார். மரணமடைந்த அவரைக் கல்லறையில் அடக்கம் செய்து அரசாங்க முத்திரையும் வைக்கப்பட்டது. இயேசு சொன்னபடியே யோனாவைப் போல மூன்றாம் நாளில் பூமியின் வயிற்றிலிருந்து உயிருள்ளவராக வெளியே வந்தார். இயேசுவின் உயிர்தெழுதலே அவர் வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை உறுதி செய்தது. அத்துடன் உலகில் நடந்த எல்லா அற்புதங்களிலும் மேலான, முதன்மையான அற்புதம் இயேசுவின் உயிர்த்தெழுதலே. இயேசு உயிர்த்தெழாவிட்டால் பவுலடிகளார் சொல்லுகிறபடி எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. இயேசு உயிர்த்தெழுந்ததினால் தான் உலக வரலாறு இரண்டாகப் பிளவுபட்டது. இயேசு வரலாற்றின் மையமானார்.

திருமறை எழுத்துக்களை கமாலியேலின் பாதப்படியில் கற்ற பவுலடிகளார் இயேசுவின் உயிர்த்தெழுதலால் கவரப்பட்டார். உயிர்த்த ஆண்டவரின் அழைப்பைப் பெற்றார். அதனால் தான் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது ‘உயிர்த்த இயேசு கிறிஸ்துவையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்து, ஏனெனில் அவர் மரித்து உயிர்த்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையின் எல்லா நிலைகளில் வாழ்வு தருபவர் அவரே,’ என்கிறார். நாம் உயிர்த்த ஆண்டவரை கண்ணால் காணாமல் விசுவாசிப்பதால் பாக்கியவான்கள். இந்த விசுவாசத்தில் இயேசுவையே அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் நிறுத்தி வாழ்வோம்.

வாக்கு மாறாத கடவுளே, மேசியாவான இயேசுவைத் தந்து, அவரே வாக்களிக்கப்பட்டவர் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள உயிருடன் எழுப்பினீர் நன்றி. உயிர்த்த ஆண்டவரில் நிலைத்து வாழக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இயேசுவே மேசியா2017-06-21T10:06:31+00:00

இயேசுவே இரட்சகர்

மத்தேயு 21 : 23-27                                                  16 ஜுன், 2017 வெள்ளி

“நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின்கீழ் மனுஷருக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமுமில்லை.” – அப்போஸ்தலர் 4 : 12

கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். விண்ணுலகில் சிறந்த படைப்பு தூதர்கள். மண்ணுலகில் சிறந்த படைப்பு மனிதன். அவனை படைப்பின் மையமாகவும், மகுடமாகவும் படைத்தார். மனிதனோடு பேசி எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த இன்பமான சூழ்நிலையில் வாழ எவற்றைச் செய்யவேண்டும். எவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்தார். கடவுள் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டவற்றை மனிதன் செய்தான். அதனால் கடவுளோடுள்ள வாழ்வை இழந்தான், கடவுளைப் பிரிந்தான், மகிழ்ச்சியை இழந்தான். அன்பின் உருவான கடவுள் மனிதனை இந்த நிலையிலிருந்து விடுவித்து தம்முடன் சேர்த்துக்கொள்ள மேசியா ஒருவரை வாக்களித்தார். மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்களை நீண்ட வரலாற்றில் தீர்க்கர்களைக் கொண்டு சொல்லிக் கொண்டு வந்தார். அவர் இவ்வுலகில் பிறந்து, மனுக்குலத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்று, சிலுவையில் பாடுபட்டு இரத்தஞ்சிந்தி மரிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.

கடவுள் முழு உலகையும் ஆயத்தஞ்செய்து எல்லாம் நிறைவேறினபோது மேசியாவான இயேசுவை கன்னியின் வயிற்றில் பிறக்கச் செய்தார். இயேசு தமது அருளுரைகளாலும், தாம் செய்த அற்புதங்களாலும் தாமே வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதைத் தெளிவுபடுத்தினார். ஆனால் அவர் பிறந்த யூத சமூகம் அவரை மேசியாவாக ஏற்க மறுத்து,  சிலுவையில் அறைந்து கொலை செய்தது. அத்துடன் இயேசுவின் வரலாறு முடிந்து போயிற்று என்று நினைத்தார்கள். ஆனால் கடவுள் இயேசுவை மூன்றாம் நாளில் உயிர்தெழச் செய்தார். உலகில் நடந்த மிகப்பெரிய அற்புதம் இதுவாகும். இதுவே இயேசு வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை முழு உலகிற்கும் வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

உயிர்த்த இயேசுவைக் கண்ட அவருடைய சீடர்கள் மரணம் வாழ்க்கையின் முடிவல்ல. அதன் பின்பும் ஒரு வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வு கடவுளோடிருக்கிற வாழ்வு. அந்த வாழ்வை அருளுகிறவர் இயேசு என்ற நம்பிக்கைக்கு வந்தார்கள். இரட்சிப்பு என்பது உடல், ஆன்மாவின் மீட்பும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் மீட்புமாகும். இதை அருளுகிறவர் இயேசு ஒருவரே. எனவே தான் நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின் கீழ் மனிதர்களுக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமுமில்லை என்று பிரசங்கித்தார்கள்.  பிறவியிலே மாற்றுத் திறனாளியானவன் சுகம் பெற்றான். இது மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதனால் ஆசாரியரும் மக்களின் மூப்பர்களும் கதிகலங்கிப்போனார்கள். அவர்களின் அடக்கு முறைக்கும் கேள்விக்கும், ‘உயிர்த்த இயேசுவே இவனுக்குப் புதுவாழ்வு கொடுத்தார்’, என்றார்கள். நாம் பாவ அடிமைத்தனத்திலிருக்கிறோம். பாவத்தின் பல பரிணாமங்களால் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பாவத்திலிருந்தும் அதன் எல்லாப் பரிணாமங்களிலிருந்தும் இயேசு மட்டுமே மீட்கிறார். அவரில் மட்டுமே விசுவாசம் கொள்ளுவோம். மீட்பை ருசிப்போம். கடவுளோடுள்ள வாழ்வைப் பெறுவோம்.

அன்பின் பரமபிதாவே, பாவ அடிமைத்தனத்திலும் அதன் பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்கிற எங்களை இயேசுவில் மீட்டிருக்கிறீர். அவரில் மட்டுமே விசுவாசம் கொண்டு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

இயேசுவே இரட்சகர்2017-06-15T08:13:57+00:00

கடவுளில் வாழ்வு

ஏசாயா 55 : 1-3                                        12 ஜுன், 2017 திங்கள்

“கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.” – ஆமோஸ் 5 : 6

இரண்டாம் யெரோபெயாம் அரசாண்ட காலத்தில் மக்கள் சமாதானத்தையும் செழுமையையும் அடைந்தார்கள். வணிகம் பெருகியது, செல்வம் தழைக்கலாயிற்று, செல்வந்தர் எண்ணிக்கை பெருகிற்று. ஆனால் யுத்த காலத்தில் வறியவர்களாக்கப்பட்ட மக்கள் செல்வந்தர்களின் அநீதியினால் இன்னும் வறுமைக்குள்ளானார்கள். வறியவர்கள் ஒடுக்கப்பட்டு இக்கட்டான நிலையில் இருந்தார்கள். செல்வந்தர்களோ வேனிற்காலத்திற்கும், மாரிக்காலத்திற்கும் தனித்தனியே மாளிகைகளைக் கட்டி, குடித்து, வெறித்து வாழ்ந்தார்கள். நீதியும் நியாயமும் புரட்டப்பட்டன. செல்வந்தர்கள் அதிக இலாபம் நாடி ஏழைகளை ஒடுக்கினார்கள். கையூட்டு கொடுத்து நீதியைப் புரட்டினார்கள். ஆமோஸ் தீர்க்கருக்கு இவை தாங்கமுடியாத தீங்குகளாகக் காணப்பட்டன.

மேற்கூறிய சமூகக் கேடுகள் இஸ்ரவேலரின் சமய வாழ்க்கையின் கேட்டினால் ஏற்பட்டது என்கிறார் தீர்க்கர். மக்கள் யெகோவாவை பாகாலைப் போல தொழலாயினர். தங்கள் தீய வாழ்விற்குத் நியாயம் கற்பிக்கும் வண்ணம் தங்கள் சமய வாழ்வினையையும் அமைத்துக் கொண்டனர். மக்களின் சமய, சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீதியுள்ள கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் மக்களைச் சந்திக்கப் போகிறார், அநீதியை அழிப்பார் என்கிறார் தீர்க்கர். கடவுள் இஸ்ரவேலரைப் பற்றி அக்கரையுள்ளவர். காரணம் பூமியிலுள்ள சலக வம்சங்களிலும் இவர்களையே தமக்குச் சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தார். ஆனாலும் அவர்களின் அக்கிரமங்களினிமித்தம் அவர்களைத் தண்டிப்பார் என்கிறார். கடவுள் இஸ்ரவேலரைத் தண்டிப்பது அவர்கள் மீது அவருக்குள்ள சிறப்பான அக்கறையேயன்றி வேறு ஒன்றுமில்லை. தண்டனையின் வழியாக இஸ்ரவேலர் மடிந்து போவதையல்ல, மனந்திரும்பிப் பிழைப்பதையே கடவுள் விரும்புகிறார். அதனால் தான் கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் என்கிறார்.

தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். சேனைகளின் கடவுளாகிய கர்த்தர் உங்களுக்கு இரங்குவார். கடவுளின் வல்லமை வானம், பூமி, பாதாளம் ஆகியவற்றின் மேல் உள்ளது. பாவி யாராயிருந்தாலும், எங்கிருந்தாலும் அவனைத் தண்டியாமல் விடார். ஒருவன் கடவுளை மறந்து போகும் போது அவர் சமூகத்தில் நீதி நேர்மையற்று, சமய வாழ்வில் தூய்மையற்றுப் போகிறான். கடவுளின் நீதி பரிசுத்தம், தூய்மை ஆகிய பண்புகள். மனிதனின் வாழ்க்கையில் கடவுளை மறப்பது நீதி பரிசுத்தம் தூய்மை ஆகிய பண்புகள் புரளக் காரணமாகின்றன. நம்மையும் கடவுள்  தெரிந்தெடுத்திருக்கிறார். எல்லா நிலையிலும் துறையிலும் வாழ்விக்கிறார். மனிதநேயத்தோடு வாழுவோம். கர்த்தரையே தேடுவோம்.

நீதி நேர்மையுள்ள கடவுளே, உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மில் நிலைத்திருந்து உம்மையே தேடி வாழ்வு பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே,  ஆமேன்.

கடவுளில் வாழ்வு2017-06-12T05:07:11+00:00

கைவிடாத கடவுள்

சங்கீதம் 141 : 1-3                                                9 ஜுன், 2017 வெள்ளி

“வேலையெல்லாம் நீ முடித்துத் தீருமட்டும் அவர் … உன்னைக் கைவிடுவதுமில்லை.” – 1 தினவர்த்தமானம் 28 : 20

இஸ்ரவேலர் விடுதலைப் பயணத்தில் சீனாய் மலை அடிவாரம் வந்தார்கள். கடவுள் சீனாய் மலையில் இறங்கினார். பயங்கரமான இக்காட்சியை இஸ்ரவேலர் கண்டார்கள். கடவுள் மோசேயை மலைமீது ஏறிவரச் சொன்னார். மோசே ஏறிப்போனார். கடவுள் சீனாய் மலையில் மோசேயை மத்தியஸ்தராகக் கொண்டு இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்தார். இந்த உடன்படிக்கையின் உறவில் வாழ பத்து கற்பனைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். இந்தக் கற்பலகைகளை ஒரு பெட்டியில் வைத்தார்கள். அதை வைத்துக் கூடாரம் போட்டார்கள். இதுவே கடவுள் வாசம் பண்ணும் தரிசனக் கூடாரம் அல்லது ஆசரிப்புக் கூடாரம். இது கடவுள் வாசம் பண்ணும் இடம். தரிசனக் கூடாரம் கடவுள் தங்கள் மத்தியில் வாழ்கிறார் என்பதை உறுதி செய்தது. மோசே அழகிய தரிசனக் கூடாரத்தை அமைத்து அதை திருநிலைப்படுத்தினார். கடவுளின் பிரசன்னம் தரிசனக் கூடாரத்தை நிரப்பியதை இஸ்ரவேலர் கண்டார்கள். இஸ்ரவேலர் கானான் நாட்டிற்குச் சென்றார்கள். காலப்போக்கில் அரசமைந்தது. இரண்டாவது அரசனாக தாவீது அரியணை ஏறினார். சுற்றியுள்ள நாடுகள் மீது படையெடுத்து நாட்டின் எல்லைகளை விரிவு படுத்தினார். மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்.

தாவீதுக்குக் கடவுள் தங்கள் மத்தியில் வாழ அழகிய ஆலயம் கட்டவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் தாவீது அல்ல, அவர் மகன் சாலொமோன் தான் ஆலயம் கட்டுவான் என்பதை நாத்தான் தீர்க்கர் வழியாக தெரிவித்தார். நாத்தானின் அறிவுரையை ஏற்ற தாவீது ஆலயத்திற்காக பொருட்களைச் சேகரித்தார். ஆலயத்தின் வரைபடத்தைக் கடவுள் தாவீதுக்கு வரைந்து காண்பித்திருந்தார். அதை தன் மகன் சாலமோனுக்கு தாவீது வரைந்து காண்பித்தார். மிகப்பெரிய ஆலயப் பணியைச் செய்ய வேண்டும். பொருளாதார வசதிகள், பணியாட்கள் போன்றவற்றை நினைத்து மலைப்பும் திகைப்பும் ஏற்பட்டது. தாவீது சாலொமோனிடம் கடவுள் வாழும் இருப்பிடத்தை அமைக்கப் போகிறாய். ஆலயப் பணியை செய்துதிடுமட்டும் கடவுள் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று தைரியம் சொல்லுகிறார்.

சாலொமோன் தாவீது வரைந்து காட்டியபடி ஆலயத்தை அழகாக கட்டி முடித்தார். கட்டிடம் கலைநயம் மிக்கதாக அமைந்தது. சாலொமோன் ஆலயம் கட்டின இடம், கடவுள் தாவீதுக்குத் தரிசனமானதும், தாவீது ஆயத்தம் செய்திருந்ததுமான மோரியா மலையிலுள்ள எபூசியனான ஒர்னாவின் களமாகும். கடவுள் எங்கோ வாழ்கிறவரல்ல. மக்களோடு வாழுகிறவர். அதனால் தான் `இதோ, கடவுளின் கூடாரம் மனுஷரிடத்திலிருக்கிறது; அவர்களிடத்தில் அவர் தங்குவார் என்று வாசிக்கிறோம். நமது ஆலயங்களில் கடவுளின் நிறைவான பிரசன்னம் இருக்கிறது. அவரையே ஆராதித்து மகிழுவோம்.

எங்கள் மத்தியில் வாழுகின்ற கடவுளே! இயேசுவில் அழைக்கப்பட்டிருக்கிற நாங்கள் வசனத்தையும் சாக்கிரமெந்துகளையும் பெற்றுக் கொள்ள உம் வாசஸ்தலத்தில் நாடிவர உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

கைவிடாத கடவுள்2017-06-09T05:10:30+00:00

கை சுத்தமான வாழ்வு

1 கொரிந்தியர் 4 : 1-4                                            5 ஜுன், 2017 திங்கள்

“நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது  லாபத்தைத் தேடியடைந்ததுண்டா?” – 2 கொரிந்தியர் 12 : 17

ஆதாயம் இல்லாமல் யாராவது ஆற்றோடு போவார்களா? என்பது பழமொழி. நாம் எதைச் செய்தாலும் ஓர் எதிர்பார்ப்போடு செய்கிறோம். ஆனால் பலர் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் காரியங்களைச் செய்கிறார்கள். நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி நம் நாட்டு விடுதலைக்காக போராடி வெற்றி பெற்றது எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்துச் செய்ததல்ல.

பவுலடிகளார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ரோமக் குடியுரிமையுள்ளவர். சிறந்த கல்விமான், நியாயப்பிரமாண முறையின்படி வாழ்ந்தவர். இவரை இயேசு ஆட்கொண்டபோது, இயேசுவில் பெற்ற பாவமன்னிப்பின் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடு இணை இல்லை என்று அறிந்தார். தான் கண்டுக் கொண்ட மேசியா இயேசுவே என்பதை தீவிரமாக மக்களுக்குக் கூறி அறிவித்தார். திருச்சபைகள் உருவாயின. இந்தத் திருச்சபைகளோடு தொடர்பு வைத்துக்கொள்ள நேரில் சென்று பார்த்தார். கடிதங்கள் எழுதினார். சில சமயங்களில் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களை அனுப்பிப் பார்த்து விசாரித்து வரச் சொன்னார். தன்னைக் கடவுளின் உக்கிராணக்காரன் என்று அழைத்தார். உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனாக காணப்படவேண்டும் என்று விரும்பினார். தன்னை அழைத்த கடவுளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்தில் வாழ்ந்தார்.

கடவுளின் திருப்பணியைச் செய்வோரிடத்தில் அதிக உண்மை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பவுலடிகளார் கொரிந்தியரிடம் நான் உங்களிடம் அனுப்பியவர்கள் வழியாக நான் ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்தேனா? என்கிறார். இக்கேள்வி தன் மனச்சாட்சி சுத்தமாக இருப்பதை காட்டுகிறது. யாரும் தன் ஊழியத்தை குறைகூறக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்.

எவரும் உங்களை ஏமாற்றிச் சம்பாதிக்கவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும், உங்கள் பணமல்ல என்கிறார். உங்களுடையவை களையல்ல, உங்களையே ஆசிக்கிறேன் என்கிறார். பெற்றோருக்கு பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோரே செல்வத்தைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆதலால் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காக மிகவும் சந்தோஷமாய் செலவு பண்ணவும், முழுவதும் செலவு பண்ணவும் விரும்புகிறேன் என்கிறார். கடவுள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மைத் தம் மக்களாக அழைத்திருக்கிறார். நம் அழைப்பை உணர்ந்து எதையும் நாடித் தேடாமல் குறுக்கு வழியில் சம்பாதிக்காதபடி நிறைவோடு வாழுவோம்.

எங்கள் தந்தையே! இயேசுவில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் எங்களை அழைத்திருக்கிறீர் நன்றி. நாங்களும் உண்மையுள்ள உக்கிராணக்காரராக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

கை சுத்தமான வாழ்வு2017-06-05T03:42:40+00:00

வேரில்லாத விசுவாசம்

1 சாமுவேல் 8 : 7-9                                             29 மே, 2017 திங்கள்

“அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைச் சேவித்து வந்தார்கள்.” – 1 சாமுவேல் 8 : 8

கிரியை இல்லாத விசுவாசம் மட்டுமல்ல, வேரில்லாத விசுவாசமும் செத்ததுதான். தியான வசனத்தை உள்ளடக்கிய வாசிப்புப் பகுதி, நாம் அறிந்த ஒன்று. தங்களை எகிப்திலிருந்து விடுவித்து வனாந்தரப் பயணத்தில் பாதுகாத்து வழி நடத்தின கடவுளை மறந்து, ஒரு புதிய அரசரை இஸ்ரவேலர் விரும்பியதை வாசிப்புப் பகுதி விவரிக்கிறது. சீனாய் மலையடியில் பொற் கன்றுக்குட்டியை இஸ்ரவேலர் வணங்கிய நிகழ்வினை நாம் அறிவோம். இரண்டு நிகழ்வுகளும் இஸ்ரவேலரின் நன்றியில்லாமையையும், மேலோட்டமான விசுவாசத்தையும் காண்பிக்கின்றன.

வாரம் தவறாமல் ஒரு முதியவர் பிச்சைகேட்டு எங்கள் வீட்டுக்கு வருவார். ஒருமுறை, `சில்லறை இல்லை, அடுத்தவாரம் பார்ப்போம்’, என்று சொன்னேன். கடந்த பல மாதங்களாக அவருக்கு உதவி செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், தூஷண வார்த்தைகள் சொல்லி திட்டிக் கொண்டே போனார். அதன் பிறகு அவருக்கு நான் பிச்சையிடுவதில்லை.  நன்றி மறப்பதிலும், தேவைக்காக மட்டும் கடவுளைத் தேடுவதிலும் இஸ்ரவேலர் இந்தப் பிச்சைக்காரரை விடக் குறைந்தவர்களில்லை.
எகிப்திலிருந்து நானூறு வருட அடிமை வாழ்வினின்று விடுதலை, செங்கடலைப் பிரித்து கடவுள் உருவாக்கிய பாதை, பகலிலும் இரவிலும் மேகம் – அக்கினி ஸ்தம்பப் பாதுகாப்பு, தண்ணீர், காடை, மன்னா போன்ற உணவுகள் யாவையும் கொடுத்தவர் கடவுள் என்பதை இஸ்ரவேலர் அறிவார்கள். ஆனால் மலைமேலேறிச் சென்ற மோசே வரவில்லையென்ற ஒரே காரணத்துக்காக பொற்கன்றுக்குட்டியை தெய்வமாக வணங்கினர். கானான் தேசத்தில் இராஜாக்களையெல்லாம் மேற்கொண்டு, நியாயாதிபதிகள் வழியாக இஸ்ரவேலரை ஆண்டு வந்தவர் கடவுள் என்பது தெரிந்தும், வேறொரு ராஜா வேண்டுமென்று இஸ்ரவேலர் கேட்டார்கள்.

நாம் எப்படி? கடவுளின் கிருபையினால், இயேசு கிறிஸ்துவின் பாடு – மரணம் – உயிர்ப்பு இவற்றில் வைக்கும் விசுவாசமே நம்மை இரட்சிக்கும் என்று உணர்ந்திருக்கிறோம்; ஆனால் அந்த விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறோமா? நல்ல நேரம் பார்ப்பது, ஜோசியம் கேட்பது, வாஸ்து பார்ப்பது, குறிப்பிட்ட சில ஊழியர்கள் சொன்னால் நடக்கும் என்று நம்புவது போன்ற அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிறோமா? வேண்டாம். கர்த்தரையே முழுமையாக நம்புவோம்.

மெய்க் கடவுளாகிய ஆண்டவரே, எல்லாவற்றையும் பார்க்கிலும் உம்மிடம் அன்பு கூர்ந்து, உமக்குப் பயந்து, உம்மிடத்தில் நம்பிக்கையாயிருக்கும்படி எங்களைப் பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

வேரில்லாத விசுவாசம்2017-05-28T16:00:16+00:00

ஆயத்தமாயிருங்கள்

1 தெசலோனிக்கேயர் 5 : 1-6                                        24 மே, 2017 புதன்

“ அப்படியே நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷ குமாரன் வருவார்.” – மத்தேயு 24 : 44

விடிகிற வேளையை நாம் அறிவோம்; திருடன் வருகிற வேளையை அறிவோமா? மின்னல், ஒளியைக் காணும்போது `இடி இடிக்கப் போகிறது’ என்று உணருகிறோம்; மின்னல் எப்பொழுது மின்னும் என்பதை அறிய முடியுமா? இப்படியே உலகினை நியாயந்தீர்க்க வரப்போகும் மனுஷகுமாரன் வரும் நாளையோ நேரத்தையோ எவரும் அறிய முடியாது என்பது சத்திய வேதம் கூறும் உண்மை.

ஏற்கனவே மரியாளின் மகனாக மனுஷகுமாரன் மனுக்குலத்தை மீட்க வந்தார்; இனி வரப்போகிற மனுஷகுமாரன் உலகினை நியாயந்தீர்க்க வருவார். முதல் வருகை கடவுளின் கருணையையும், மன்னிப்பையும் உலகோர் உணர்ந்துகொள்ளக் காலங்களை நீட்டித்துக்கொடுத்தது. இரண்டாம் வருகையோ ஆயத்தமாயிருப்பவர்களுக்கு ஆனந்த வாழ்வையும், ஆயத்தமில்லாதவர்களுக்கு எரியும் நரகத்தையும் முடிவு செய்யும் இறுதி நேரத்தைக் கொண்டு வருகிறது. எனவே `ஆயத்தமாயிருங்கள்’ என்கிற எச்சரிக்கை, கடவுளின் வாயிலிருந்து வரும் `கிருபையின் கடைசிக் குரல்’ என்பதில் ஐயமில்லை.

எப்பொழுது வருவார் என்பதை நாம் அறியாதபடியால், எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையும் இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது. எப்படிப்பட்ட ஆயத்தம் என்பதை வாசிப்புப் பகுதி தெளிவாகக் கூறுகிறது. இருளின் செயல்களை (சாத்தானின் கிரியைகளை) ஒழித்துவிட்டு, ஒளியின் கிரியைகளை (ஒளியாகிய கிறிஸ்து இயேசுவை) அணிந்து கொள்ளுவதே ஆயத்தமாயிருப்பதின் அடையாளங்களாகும். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுவதெப்படி? புத்தாடை அணியுமுன் அழுக்காடைகளைக் களைவது போல, பாவச் செயல்களை விட்டு விலகுவது ஆயத்தத்தின் முதல்படி. `இயேசுவே என் இரட்சகர்’ என்ற விசுவாசம். இந்த விசுவாசத்தினால் நான் மீட்கப்பட்டிருக்கிறேன் என்ற நம்பிக்கை, இந்த நம்பிக்கையோடு வாழும் அன்பின் வாழ்வு இவைகளே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆயத்தங்கள். விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்னும் ஆயத்தங்களோடு இருப்பவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குப் பயப்பட வேண்டியதில்லை.

அருள் நிறைந்த கர்த்தாவே, இருளின் தீய வழிகளை விட்டு விலகி, ஒளியின் பிள்ளைகளாக எங்களை ஆயத்தப்படுத்திக் காத்துக் கொள்ளும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஆயத்தமாயிருங்கள்2017-05-19T16:12:49+00:00

பேசும் கடவுள்

யோபு 33 : 14-19                                      18 மே, 2017 வியாழன்

“கடவுள் ஒருமுறை பேசுவார், இருமுறையும் பேசுவார், மானிடரோ அதைக் கவனிக்கிறதில்லை.” – யோபு 33 : 14

`தோட்டத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்’. ஆதாம் – ஏவாளிடம் கர்த்தர் சொன்னார். அவர்கள் கேட்கவில்லை. `அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம்’.  சாலமோனிடம் கடவுள் இரண்டு முறை சொன்னார். அவன் கவனிக்கவில்லை. ஒருமுறை இருமுறை மட்டுமல்ல, பலமுறை கடவுள் பேசினாலும், மனிதர்கள் கடவுள் சொல்லுவதை முழுமையாகக் கவனிக்கிறதில்லை.

சத்திய வேதத்தின்படி, கடவுள் மனிதர்களோடு பேசுகிற நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் ஏராளம் சொல்லப்பட்டிருக்கின்றன. முதல் மனிதனாகிய ஆதாம் முதல், காயீன், நோவா, ஆபிரகாம், மோசே, நியாயதிபதிகள், இராஜாக்கள், தீர்க்கத்தரிசிகள், யாவரோடும் கடவுள் பேசினார். நேருக்கு நேராக, சொப்பனங்கள், தரிசனங்கள் வழியாகக் கடவுள் மானிடர்களோடு பேசினார் என்பதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. தியான வசனத்தில் வரும் `பேசுவார்’ என்ற பதம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு கடவுள் மனிதர்களோடு பேசுவதைக் குறிக்கிறது. மனிதனின் பாவங்களை உணர்த்துவதும், மனந்திரும்புதலுக்கென்று அழைப்பதுமான கடவுளின் வார்த்தைகளையே `பேசுவார்’ என்ற சொல் குறிக்கிறது.

தான் ஒரு பாவி என்பதை யோபு ஒத்துக் கொண்டாலும் தியான வசனத்தின் பின்னணி வாக்கியங்களில் தனது நேர்மையைப் பற்றி யோபு பெருமை பாராட்டுகிறார் என்ற எண்ணம் எலிசாவுக்கு உண்டானது. அதனால் யோபுவின் இழப்புகளும் துன்பங்களும் அவரது பாவங்களை உணர்த்துவதற்குக் கடவுள் பேசுகிற ஒரு வழி என்று எலிசா நினைவூட்டுகிறார். ஒருமுறை இருமுறையல்ல, தினந்தோறும் தமது வசனங்கள் வழியாகக் கடவுள் நம்மோடு பேசுகிறார். சில நேரங்களில் சொப்பனங்கள் தரிசனங்களின் வழியாகவும் பேசலாம். சில இழப்புக்கள், ஆபத்துக்கள், நோய்கள் வழியாகவும் எச்சரிக்கலாம். `என் ஜனத்தைப் போகவிடு’ என்று கடவுள் பலமுறை சொன்ன பின்பும் கவனியாமலிருந்த பார்வோனும் அவன் சேனைகளும் செங்கடலில் அமிழ்ந்து போனதை நாம் அறிவோம். சீரழிக்கும் பேரழிவு வருமுன், சிறு சிறு துன்பங்களை கடவுளின் குரலாக எண்ணி கவனித்து மனம் திரும்ப முன்வருவோம். பேசுகிற கடவுளின் அழைப்பிலுள்ள அவரது அன்பைப் புரிந்துகொள்வோம்.

உமது அருள்நிறைந்த வசனங்கள் வழியாகத் தினந்தோறும் எங்களோடு பேசுகிற கடவுளே, உமது வார்த்தைகளைக் கவனித்து மனம்திரும்பும் ஆற்றலைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

பேசும் கடவுள்2017-05-17T16:57:42+00:00

ஆலோசனை

நீதிமொழிகள் 4 : 1-4                                                      17 மே, 2017 புதன்

“தீர்க்கதரிசியினிடத்தில் என் ஆண்டவன் போவாரானால்….. அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.” – II இராஜாக்கள் 5 : 3

`உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்கிறார் திருவள்ளுவர். ஊற்றுக்கண் சிறியதாக இருந்தாலும் சீறிப்பாயும் தண்ணீர் தித்திப்பாக இருக்கிறது. கடுகும் மிளகும் அளவில் சிறியவைதான்; ஆனால் காரத்தில் குறைந்தவையல்ல. நல் ஆலோசனைகள் கொடுக்கிறவர்கள் பெரியவர்களாகவும், கல்விமான்களாகவும் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

தியான வாக்கியத்தில், சீரியா ராஜாவின் படைத்தலைவன் நாகமானின் மனைவிக்கு ஆலோசனை சொல்வது, குறைந்த வயதுள்ள ஒரு அடிமைப் பெண். அவளது எஜமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இஸ்ரவேலிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டு வரப்பட்ட அந்தச் சிறுமி, தனது வயதினையும், வாழ்கிற அடிமை வாழ்வினையும் பற்றி பயம் கொள்ளாமல், அவளது எஜமானின் நோய் நீங்குவதற்குரிய ஓர் ஆலோசனையைச் சொன்னாள். சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியிடம் சென்றால், அவர் எஜமானனின் நோயை நீக்கிவிடுவார் என்பது தான் அந்தச் சிறு பெண்ணின் ஆலோசனை. வேதம் சொல்லுகிறபடி நாகமான் சமாரியா சென்றார். தீர்க்கர் எலிஷா நாகமானுக்குச் சுகம் தந்தார்.  வயதிற் குறைந்த அதுவும் அடிமையாக இருந்த ஒரு சிறுமிக்கு இந்த ஆலோசனையைச் சொல்லும் ஞானமும் துணிச்சலும் எப்படி வந்தது? தீர்க்கத்தரிசி, கடவுளின் ஊழியன் அந்தக் `கடவுளின் அருள் தீர்க்கன் வழியாகத் தன் எஜமானனுக்குச் சுகம் கொடுக்கும்’ என்ற அசையாத நம்பிக்கை தான் இந்த ஆலோசனையைச் சொல்லும் ஆற்றலை அந்தப் பெண்ணுக்குத் தந்தது.

`ஆலோசனையும் விவேகமும் என்னுடையவை, நானே உணர்வு; வல்லமை என்னுடையது’ என்று வாசிப்புப் பகுதியில் கர்த்தர் சொல்லுகிறார். குணமாக்க முடியாத தொழுநோயிலிருந்து நாகமானுக்கு விடுதலை கொடுத்த கடவுள், மனிதர்களால் விடுபட்டு வரமுடியாத பாவ நோயினின்று மனுக்குலத்தை விடுவிக்க ஞான ஆலோசனையைத் தமது மகன் வழியாக வெளிப்படுத்தினார். ஒரு அடிமையைப் போல் பாடுபட்டு, சிலுவையில் சிறுமைப்படுத்தப்பட்டு மரணத்தை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்து நமக்கு நீதியும், பரிசுத்தமும், மீட்பும் அருளும் ஞானமானார்.

இயேசுவை நம்புகிறவர்களுக்கு அவர் ஞானத்தையும் ஆலோசனையையும் தருகிறார். அவருக்குள் ஞானம், அறிவு என்பவற்றின் ஐசுவரியங்களெல்லாம் மறைந்திருக்கின்றன. மகா தீர்க்கதரிசியாகிய இவரது குணமாக்கும் வல்லமையை நாம் பிறருக்குச் சொல்லும்போது `வாக்கையும் ஞானத்தையும் நானே உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று வாக்குறுதி தருகிறார் இரட்சகர் இயேசு.

ஞானத்தின் ஊற்றாயிருக்கிற இயேசு மீட்பரே, உமது குணமாக்கும் வல்லமையைப் பறைசாற்றும் நல் ஆலோசனைக்காரர்களாக எங்களை மாற்றும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஆலோசனை2017-05-16T16:34:40+00:00

வாழ்த்துக்கள்

1 கொரிந்தியர் 13 : 11-13                                       16 மே, 2017 செவ்வாய்

“சகோதரருக்குச் சமாதானமும், விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.” – எபேசியர் 6 : 23

வாழ்த்துக்கள் பலவிதம். `நீடூழி வாழ்க’ `வாழ்க வளமுடன்’ `சுகமாக இருங்கள்’ இப்படிச் சரீர வாழ்வின் செழுமையை மையப்படுத்தியே பெரும்பாலான வாழ்த்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் தியான வசனத்தில் தூய பவுலடியார் கூறும் வாழ்த்துதலோ வித்தியாசமானது. அவர் கடவுளால் `பிடிக்கப்பட்டதின்’ நோக்கத்தை அவரது கடிதங்களின் துவக்கத்திலும் முடிவிலும் வரும் வாழ்த்துக்களில் கூட அறிவிப்பதற்குப் பவுல் மறந்ததில்லை. கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தினால் கிடைக்கும் மீட்பையும் மீட்பினால் கிடைக்கும் சமாதானத்தையும், மீட்கப்பட்டவர்கள் வாழவேண்டிய அன்பின் வாழ்க்கையையும் வலியுறுத்துவதில் பவுல் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அழிவுக்குரிய உலக வாழ்வின் செல்வங்களைப் பெறும் ஆவலை விட அழிவில்லாத ஆன்மீக வளங்களை விசுவாசிகள் பெறவேண்டும் என்கிற பவுலடியாரின் பேராவல் சிந்தனை வசனத்தில் பிரதிபலிக்கிறது.

`சரீர வாழ்வுக்குத் தேவையானவற்றைப் பெற்று வாழ்க’ என்று வாழ்த்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் நிலையான பரலோக இன்பத்தை இழந்துவிட்டு, நிலையற்ற உலக வளங்களை மட்டும் நாடுவதில் என்ன பயன்? உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் எப்படி முக்கியமானவையோ, அப்படியே சரீரத்தைவிட ஆன்மாவும், உலகத்தைவிட பரலோக வாழ்வும் அதிக முக்கியமானவைகளல்லவா? பூமியிலுள்ளவைகளையல்ல, கிறிஸ்து கடவுளின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளையே தேடுங்கள்.

ஆன்மீக வாழ்வின் வளர்ச்சியில் நாம் குழந்தைகளாகவே இருப்பது சரியல்ல. `ஐஸ்கிரீம் வேண்டும்’ `கூடிலள வேண்டும்’ என்று கேட்கும் குழந்தைகளைப்போல `சுகம் வேண்டும்’, `வேலை வேண்டும்’, `பணம் வேண்டும்’ என்று கேட்காமல் பெரியவர்களான பின் விசவாசம், சமாதானம், அன்பு இவைகளில் பெருகி வாழ விரும்புவதும் வாழ்த்துவதும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளங்களாகும். அன்பின் இலக்கணம் ஆண்டவர் இயேசு. சமாதானப்பிரபு ஆண்டவர் இயேசு. அவரில் விசுவாசம் வைத்து வாழவும் பிறரை வாழ்த்தவும் ஆவியானவர் அருள் புரிவாராக.

உன்னதமான கர்த்தரே, அன்பிலும், சமாதானத்திலும், விசவாசத்திலும் வளரும்படி பிறரை வாழ்த்தும் ஞானத்தை அருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

வாழ்த்துக்கள்2017-05-15T15:33:02+00:00
Go to Top