ரோமர் 1 : 1-7 22 ஜுன், 2017 வியாழன்
“இயேசுகிறிஸ்துவை நினைத்துக்கொள். அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர்.” – 2 தீமோத்தேயு 2 : 8
கிறிஸ்தவ உலகம் நற்செய்திக் கூட்டங்கள் மற்றும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கிறது. இவற்றில், நோயாளிகளை பெயர் சொல்லி அழைத்து சுகப்படுத்தும் நிகழ்வுகள் ஏராளம். அற்புதங்களையும் அடையாளங்களையும் எதிர்பார்ப்பது மனித இயல்பே.
நமது ஆண்டவரிடமும் பரிசேயரும், வேதபாரகர்களும் வந்து ஓர் அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்று கேட்டார்கள். நமது ஆண்டவர் கடினமான வார்த்தையால் அவர்களை கண்டித்தார். பின்பு, யோனா மூன்று நாள் மீனின் வயிற்றில் இருந்தார், மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் வெளியே வந்தார். இதுபோலவே மனிதகுமாரனும் மூன்று நாட்கள் பூமியின் வயிற்றில் இருப்பார், மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் வெளிவருவார் என்றார். மனுக்குலம் பாவஞ்செய்து கடவுளின் மகிமையை இழந்தபோது அந்த மகிமையையும், மேன்மையையும் திரும்ப பெற்றுக் கொள்ளும்படி பிதாவாகிய கடவுள் மேசியாவை வாக்குப் பண்ணினார். கடவுள் வாக்களித்தபடியே மேசியாவான இயேசுவை அனுப்பினார். இயேசுவின் அற்புதக் கன்னிப் பிறப்பு, விண்ணில் தோன்றிய அற்புத நட்சத்திரம் இவையெல்லாவற்றையும் மனுக்குலம் கண்டது. அத்துடன் இயேசு செய்த பல அற்புதங்களும் அடையாளங்களும் அவரே வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை உறுதி செய்தன. இயேசுவும் அருளுரைகள் வழியாக இதைத் தெளிவுபடுத்தினார்.
இயேசுவின் செயல்கள் வழியாக அவர் கடவுளின் குமாரன், வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதைத் தெளிவுபடுத்தினாலும், அவரே வாக்களிக்கப்பட்ட மேசியா, உலக இரட்சகர், பாவப்பரிகாரி எனக் காணத் தவறிப்போனார்கள். இயேசு சிலுவையில் கொடூர மரணத்தைச் சந்தித்தார். மரணமடைந்த அவரைக் கல்லறையில் அடக்கம் செய்து அரசாங்க முத்திரையும் வைக்கப்பட்டது. இயேசு சொன்னபடியே யோனாவைப் போல மூன்றாம் நாளில் பூமியின் வயிற்றிலிருந்து உயிருள்ளவராக வெளியே வந்தார். இயேசுவின் உயிர்தெழுதலே அவர் வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை உறுதி செய்தது. அத்துடன் உலகில் நடந்த எல்லா அற்புதங்களிலும் மேலான, முதன்மையான அற்புதம் இயேசுவின் உயிர்த்தெழுதலே. இயேசு உயிர்த்தெழாவிட்டால் பவுலடிகளார் சொல்லுகிறபடி எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. இயேசு உயிர்த்தெழுந்ததினால் தான் உலக வரலாறு இரண்டாகப் பிளவுபட்டது. இயேசு வரலாற்றின் மையமானார்.
திருமறை எழுத்துக்களை கமாலியேலின் பாதப்படியில் கற்ற பவுலடிகளார் இயேசுவின் உயிர்த்தெழுதலால் கவரப்பட்டார். உயிர்த்த ஆண்டவரின் அழைப்பைப் பெற்றார். அதனால் தான் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது ‘உயிர்த்த இயேசு கிறிஸ்துவையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்து, ஏனெனில் அவர் மரித்து உயிர்த்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையின் எல்லா நிலைகளில் வாழ்வு தருபவர் அவரே,’ என்கிறார். நாம் உயிர்த்த ஆண்டவரை கண்ணால் காணாமல் விசுவாசிப்பதால் பாக்கியவான்கள். இந்த விசுவாசத்தில் இயேசுவையே அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் நிறுத்தி வாழ்வோம்.
வாக்கு மாறாத கடவுளே, மேசியாவான இயேசுவைத் தந்து, அவரே வாக்களிக்கப்பட்டவர் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள உயிருடன் எழுப்பினீர் நன்றி. உயிர்த்த ஆண்டவரில் நிலைத்து வாழக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
