மத்தேயு 21 : 23-27 16 ஜுன், 2017 வெள்ளி
“நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின்கீழ் மனுஷருக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமுமில்லை.” – அப்போஸ்தலர் 4 : 12
கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். விண்ணுலகில் சிறந்த படைப்பு தூதர்கள். மண்ணுலகில் சிறந்த படைப்பு மனிதன். அவனை படைப்பின் மையமாகவும், மகுடமாகவும் படைத்தார். மனிதனோடு பேசி எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த இன்பமான சூழ்நிலையில் வாழ எவற்றைச் செய்யவேண்டும். எவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்தார். கடவுள் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டவற்றை மனிதன் செய்தான். அதனால் கடவுளோடுள்ள வாழ்வை இழந்தான், கடவுளைப் பிரிந்தான், மகிழ்ச்சியை இழந்தான். அன்பின் உருவான கடவுள் மனிதனை இந்த நிலையிலிருந்து விடுவித்து தம்முடன் சேர்த்துக்கொள்ள மேசியா ஒருவரை வாக்களித்தார். மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்களை நீண்ட வரலாற்றில் தீர்க்கர்களைக் கொண்டு சொல்லிக் கொண்டு வந்தார். அவர் இவ்வுலகில் பிறந்து, மனுக்குலத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்று, சிலுவையில் பாடுபட்டு இரத்தஞ்சிந்தி மரிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.
கடவுள் முழு உலகையும் ஆயத்தஞ்செய்து எல்லாம் நிறைவேறினபோது மேசியாவான இயேசுவை கன்னியின் வயிற்றில் பிறக்கச் செய்தார். இயேசு தமது அருளுரைகளாலும், தாம் செய்த அற்புதங்களாலும் தாமே வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதைத் தெளிவுபடுத்தினார். ஆனால் அவர் பிறந்த யூத சமூகம் அவரை மேசியாவாக ஏற்க மறுத்து, சிலுவையில் அறைந்து கொலை செய்தது. அத்துடன் இயேசுவின் வரலாறு முடிந்து போயிற்று என்று நினைத்தார்கள். ஆனால் கடவுள் இயேசுவை மூன்றாம் நாளில் உயிர்தெழச் செய்தார். உலகில் நடந்த மிகப்பெரிய அற்புதம் இதுவாகும். இதுவே இயேசு வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை முழு உலகிற்கும் வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.
உயிர்த்த இயேசுவைக் கண்ட அவருடைய சீடர்கள் மரணம் வாழ்க்கையின் முடிவல்ல. அதன் பின்பும் ஒரு வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வு கடவுளோடிருக்கிற வாழ்வு. அந்த வாழ்வை அருளுகிறவர் இயேசு என்ற நம்பிக்கைக்கு வந்தார்கள். இரட்சிப்பு என்பது உடல், ஆன்மாவின் மீட்பும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் மீட்புமாகும். இதை அருளுகிறவர் இயேசு ஒருவரே. எனவே தான் நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின் கீழ் மனிதர்களுக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமுமில்லை என்று பிரசங்கித்தார்கள். பிறவியிலே மாற்றுத் திறனாளியானவன் சுகம் பெற்றான். இது மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதனால் ஆசாரியரும் மக்களின் மூப்பர்களும் கதிகலங்கிப்போனார்கள். அவர்களின் அடக்கு முறைக்கும் கேள்விக்கும், ‘உயிர்த்த இயேசுவே இவனுக்குப் புதுவாழ்வு கொடுத்தார்’, என்றார்கள். நாம் பாவ அடிமைத்தனத்திலிருக்கிறோம். பாவத்தின் பல பரிணாமங்களால் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பாவத்திலிருந்தும் அதன் எல்லாப் பரிணாமங்களிலிருந்தும் இயேசு மட்டுமே மீட்கிறார். அவரில் மட்டுமே விசுவாசம் கொள்ளுவோம். மீட்பை ருசிப்போம். கடவுளோடுள்ள வாழ்வைப் பெறுவோம்.
அன்பின் பரமபிதாவே, பாவ அடிமைத்தனத்திலும் அதன் பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்கிற எங்களை இயேசுவில் மீட்டிருக்கிறீர். அவரில் மட்டுமே விசுவாசம் கொண்டு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
