நீதிமொழிகள் 4 : 1-4 17 மே, 2017 புதன்
“தீர்க்கதரிசியினிடத்தில் என் ஆண்டவன் போவாரானால்….. அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.” – II இராஜாக்கள் 5 : 3
`உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்கிறார் திருவள்ளுவர். ஊற்றுக்கண் சிறியதாக இருந்தாலும் சீறிப்பாயும் தண்ணீர் தித்திப்பாக இருக்கிறது. கடுகும் மிளகும் அளவில் சிறியவைதான்; ஆனால் காரத்தில் குறைந்தவையல்ல. நல் ஆலோசனைகள் கொடுக்கிறவர்கள் பெரியவர்களாகவும், கல்விமான்களாகவும் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
தியான வாக்கியத்தில், சீரியா ராஜாவின் படைத்தலைவன் நாகமானின் மனைவிக்கு ஆலோசனை சொல்வது, குறைந்த வயதுள்ள ஒரு அடிமைப் பெண். அவளது எஜமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இஸ்ரவேலிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டு வரப்பட்ட அந்தச் சிறுமி, தனது வயதினையும், வாழ்கிற அடிமை வாழ்வினையும் பற்றி பயம் கொள்ளாமல், அவளது எஜமானின் நோய் நீங்குவதற்குரிய ஓர் ஆலோசனையைச் சொன்னாள். சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியிடம் சென்றால், அவர் எஜமானனின் நோயை நீக்கிவிடுவார் என்பது தான் அந்தச் சிறு பெண்ணின் ஆலோசனை. வேதம் சொல்லுகிறபடி நாகமான் சமாரியா சென்றார். தீர்க்கர் எலிஷா நாகமானுக்குச் சுகம் தந்தார். வயதிற் குறைந்த அதுவும் அடிமையாக இருந்த ஒரு சிறுமிக்கு இந்த ஆலோசனையைச் சொல்லும் ஞானமும் துணிச்சலும் எப்படி வந்தது? தீர்க்கத்தரிசி, கடவுளின் ஊழியன் அந்தக் `கடவுளின் அருள் தீர்க்கன் வழியாகத் தன் எஜமானனுக்குச் சுகம் கொடுக்கும்’ என்ற அசையாத நம்பிக்கை தான் இந்த ஆலோசனையைச் சொல்லும் ஆற்றலை அந்தப் பெண்ணுக்குத் தந்தது.
`ஆலோசனையும் விவேகமும் என்னுடையவை, நானே உணர்வு; வல்லமை என்னுடையது’ என்று வாசிப்புப் பகுதியில் கர்த்தர் சொல்லுகிறார். குணமாக்க முடியாத தொழுநோயிலிருந்து நாகமானுக்கு விடுதலை கொடுத்த கடவுள், மனிதர்களால் விடுபட்டு வரமுடியாத பாவ நோயினின்று மனுக்குலத்தை விடுவிக்க ஞான ஆலோசனையைத் தமது மகன் வழியாக வெளிப்படுத்தினார். ஒரு அடிமையைப் போல் பாடுபட்டு, சிலுவையில் சிறுமைப்படுத்தப்பட்டு மரணத்தை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்து நமக்கு நீதியும், பரிசுத்தமும், மீட்பும் அருளும் ஞானமானார்.
இயேசுவை நம்புகிறவர்களுக்கு அவர் ஞானத்தையும் ஆலோசனையையும் தருகிறார். அவருக்குள் ஞானம், அறிவு என்பவற்றின் ஐசுவரியங்களெல்லாம் மறைந்திருக்கின்றன. மகா தீர்க்கதரிசியாகிய இவரது குணமாக்கும் வல்லமையை நாம் பிறருக்குச் சொல்லும்போது `வாக்கையும் ஞானத்தையும் நானே உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று வாக்குறுதி தருகிறார் இரட்சகர் இயேசு.
ஞானத்தின் ஊற்றாயிருக்கிற இயேசு மீட்பரே, உமது குணமாக்கும் வல்லமையைப் பறைசாற்றும் நல் ஆலோசனைக்காரர்களாக எங்களை மாற்றும். இயேசுவின் வழியே ஆமேன்.
