யோவான் 14 : 4-7 10 ஜூலை, 2018 செவ்வாய்
“இயேசு அவனிடம் வழியும், சத்தியமும் ஜீவனும் நானே என்றார்.” – யோவான் 14 : 6
கடவுள் உலகத்தைப் படைத்தபோது பிரயாணம் செய்வதற்குப் பாதைகள், சாலைகள் ஏற்படுத்தப்படவில்லை. பூமி மலைகளால், மரங்களால் காடுகளால், பாலைவனங்களால், கடலால் ஒழுங்கற்று இருந்தது. வழிகள் ஒன்றும் உருவாக்கப்படாத நிலையில் மனிதர்கள் நடந்த பாதைகளே வழிகளாயின! பின்னர் சாலைகள் தோன்றி, விரிவடைந்து நான்கு வழிச்சாலைகளாக உருவெடுத்துள்ளதை அறிவோம்.
பாதை போடுகிறவர் கடவுள். உலக மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பரப்பிட உலகமெங்கும் தேசங்களை இணைக்கும் பாதைகளை கடல் வழியாகவும் தந்தவர் கடவுளல்லவா! இன்று வர்த்தகங்கள் வியாபாரங்கள் செழிக்க தரை, கடல், வான் என உருவான பாதைகளும் வழிகளும் கடவுளின் புகழையே சொல்கின்றன.
கடவுளோடு இணைந்து வாழும்படி நாம் படைக்கப்பட்டோம். பாவத்தினால் இந்த வாழ்வை நாம் இழந்துபோனோம். கடவுளோடு இணையும் வழிகளை மனிதன் தன் அறிவுக்குட்பட்டுக் காண முயற்சித்துத் தோல்வியடைந் தான். கடவுள் நம்மீது அன்பு கூர்ந்து தம்மை அடையும் வழியாக இயேசுவைத் தந்தார். கடவுள் நமக்குத் தந்திருக்கிற மிகப்பெரிய வழி இயேசுகிறிஸ்துவே! உலகில் இன்று காணப்படும் அத்தனை வழிகளையும் மனிதகுல நன்மைக்காக கடவுள் இயேசுவில் அமைத்துத் தந்திருக்கிறார்.
இன்று வழிதெரியாதவர்கள் விலாசத்துடன் அலைகிறார்கள். பிழைக்க வழி தெரியாதவர்கள் பள்ளங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள். நானே வழி என்று கூறி நம்மை வழி நடத்தும் கிறிஸ்துவை மறந்து விட்டீர்களா? இயேசு கிறிஸ்து நடந்து வந்த பாதையிலும் முட்கள் கிடந்தன. விழுதல் இருந்தது. வேதனைகள் இருந்தன எனினும் கடவுளோடுள்ள உறவிலும் அவர் வார்த்தையின்படியும் இயேசு வாழ்ந்தார். எனவே அவரின் வாழ்வு வெற்றியாக இருந்தது. அவர் மகிமையும் மேன்மையும் அடைந்தார்.
இயேசு கிறிஸ்துவே நம் வழி! அந்த வழியில் சிறிதும் தடம் புரளாமல் நடந்து செல்வோம். இயேசு நடந்த வழிகளில் நம் கால்கள் நடந்து முடிவில் நித்திய பேரின்பம் காண்போம்.
வழிகாட்டும் இறைவா! ஏதும் அறியாத எங்களுக்கு பாதை தவறிய எங்களுக்கு, வழிகளைத் திறந்து தந்து ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
