எபேசியர் 2 : 14-18 21 ஜூலை, 2018 சனி
“அவர் வந்து, தூரத்திலிருந்த உங்களுக்கும் சமீபத்திலிருந்தவர்களுக்கும் சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.” – எபேசியர் 2 : 17
குழப்பம், கலக்கம், போராட்டங்கள், ஒற்றுமையின்மை, யுத்தங்கள் இவைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களை கேட்டுப் பார்ப்போம். சமாதானம் என்றால் என்னவென்று. மேற்கூறியவைகளுக்கு விடிவுகாலம் வருவதே சமாதானம்.
இயேசு கிறிஸ்து அருளும் மிகப்பெரிய அருளே சமாதானம். அவர் எருசலேம் நகருக்கு அதைக் கொடுக்க நினைத்தார். ஆனால் அந்நகர் சமாதானத்துக்கேதுவானவைகளை அறிந்துகொள்ள விரும்பவில்லை. காரணம் பாவங்களை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. பூமியில் மனிதருக்குள் சமாதானம் என்ற நோக்கத்திலே பிறந்தவர் கிறிஸ்து இயேசு. சமாதானத்தை இழந்து நின்ற மக்களுக்காக கண்ணீர் வடித்தார். மனுக்குலம் சமாதானத்தை இழந்ததற்கு காரணம் பாவம். இதனால் கடவுளோடுள்ள சமாதானத்தையும் ஐக்கியத்தையும் இழந்தோம். இயேசு மனுக்குலத்தின் பாவங்களை ஏற்று சிலுவையில் மரித்ததால் கடவுளோடு மனுக்குலம் சமாதானத்தைப் பெற்றது. இயேசு தம் பாடு மரணத்தால் நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்கி சமாதானம் செய்து வைக்கிறார்.
உள்ளத்தில் ஒரு அமைதி, குடும்பத்தில் ஒரு தெளிவு, வாழ்வில் ஒரு சுகம் இவை தான் சமாதானம். சமாதானம் நமது ஆன்மீக வாழ்வின் நோக்கமாகும். இயேசு இன்று அதை நமக்குத் தருகிறார். இயேசு என் பாவப் பரிகாரி என்கிற நம்பிக்கை எனக்கு பாவமன்னிப்பின் நிச்சயத்தைத் தருகிறது. பாவமன்னிப்பின் நிச்சயம் எங்கு இருக்கிறதோ அங்கு சமாதானம் இருக்கும். இதை இயேசு மட்டுமே தருகிறார்.
நாம் இயேசு கிறிஸ்துவிடம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுவோம். இயேசுவின் சமாதானம் நிச்சயம் நாளை அல்ல. இன்றே அருளப்படுகிறது. இயேசுவின் சமாதானம் நம்மை நிரப்புவதாக.
சமாதான காரணரே! இறைவனே! வாழ்வில் என்றும் சமாதானத்திற்காக கெஞ்சி நிற்கிறோம். இன்றே அதை இயேசுவில் எங்களுக்குத் தந்து அருள் புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
