ஏசாயா 44 : 6-8                                                   30 ஜூலை, 2018 திங்கள்

“இதோ யுக முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” – மத்தேயு 28 : 20

நான் நேற்றைய நாளுக்குச் சொந்தகாரன். இன்றும் எனக்கு சொந்தமாகலாம். நாளைய நாள் எனக்கு எப்படிச் சொந்தமாகும்? இனிமேல் எனக்குக் காலங்கள் உண்டா? நாட்கள் வருமா? இத்தகைய கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. இச்சூழ்நிலையில் நாம் வாழும் காலம் மட்டும் நம்மோடிருப்பவர் யார்? இந்த உலகத்திற்கே முடிவு உண்டு என்று இயேசு கிறிஸ்து திட்டவட்டமாக கூறுகிறார். அந்த முடிவு நாள் மட்டும் நம்மோடு கூட இருக்கிறேன் என்று இயேசு வாக்குறுதியும் வழங்கி உள்ளார்.

நிலையற்ற மனிதர்கள், நிலையற்ற உறவுகள், நிலையற்ற செல்வங்கள் நிலையற்ற வாழ்வு என உண்மைகள் தெரியும்போது நிலையானவரை நாம் நம்பி இருக்க வேண்டாமா? இயேசு கிறிஸ்து நிலையானவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். முடிவுபரியந்தம் நம்முடனே இருக்கிறவர். ஆபிரகாம் என்னும் நீதிமான் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ஆனால் இயேசு நான் ஆபிரகாமிற்கு முன்னமே இருக்கிறேன் என்று கூறினார்.

முடிந்துபோகும் மாதங்கள் ஆனாலும் சரி, நாட்கள் ஆனாலும் சரி. இயேசு கிறிஸ்து நம்மோடு இருந்தாலே போதும். அவர் என்னோடு இருக்கிறார் என்பதே நம் விசுவாசம். இந்த விசுவாசத்தில் வாழ்வோம். முடிவு பரியந்தம் கடவுள் உங்களை நடத்துவார். உங்கள் நாட்கள் ஆண்டவருடையவை.

ஆதி அந்தமில்லாத கடவுளே! ஒவ்வொரு நாளும் எம்மைக் காத்து வருவதற்காய் நன்றி. உமது வார்த்தையின்படி என்றும் எங்களைக் காத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.