கொலோசேயர் 1 : 26-28                                   2 ஆகஸ்ட், 2018 வியாழன்

“ஆவியின் அனுக்கிரகம் பொதுப் பிரயோஜனத்திற்கென்று அவனவனுக்கு அருளப்படுகிறது.” – 1 கொரிந்தியர் 12 : 7

ஆவியின் வரங்கள் அனேகம், எல்லா வரங்களும் எல்லாரிடமும் இல்லை. ஒவ்வொருவரும் வரங்களில் வேறுபட்டவர்கள். ஆனால், வரங்கள் அருளப்பட்ட நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் `பொதுப்பயன்’. நமக்குப் பிழைப்பை உண்டுபண்ண, தனியார் சொத்தாக ஆவியின் வரங்கள் வழங்கப்படவில்லை.

கொரிந்து பட்டணத்திலிருந்த மக்கள், இறைவனின் `கிருபை வரங்கள்’ தங்களுக்கு மட்டும்தான் என நினைத்தனர். இந்த எண்ணம் தவறு எனச் சுட்டிக்காட்டுவதற்காக, பவுல் எழுதிய கருத்துக்களில் ஒன்று நமது தியானப்பகுதி. இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தவர். இயேசுவே பொதுப் பிரயோஜனத்துக்காகத் தான் மரித்தார், உயிர்த்தார். இயேசுவை அறிவிக்கும் `ஆவியானவரின் வளங்கள்’ மனிதரின் சுயநல நோக்கத்திற்காக அருளப்படுமா? யோசியுங்கள். போதித்தல், உணர்த்தல், விசுவாசித்தல், குணமாக்குதல், அற்புதங்கள் செய்தல், தரிசனம் உரைத்தல், ஆவியைப் பகுத்தறிதல், பல மொழிபேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் ஆகியன, ஒரே ஆவியானவரின் விருப்பத்தின்படியே ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது.

கடவுளின் பிள்ளையாகிய எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ன? நான் அல்ல… எனக்கு வழங்கப்பட்டவையின் சொந்தக்காரர் கடவுள். இப்படி நான் நம்பினால், ஆவியின் வரங்களைத் தனிப்பிரயோஜனத்துக்கென பயன்படுத்துவது தவறு என உணருவேன். இறைவன் நன்மையான ஒரு சிலவற்றை, பொதுஜனப்பிரயோஜனத்திற்கென்று நம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கிறார். சுயநலம் கருதாமல் பொதுநலக்கருத்துடன் அவற்றைப் பயன்படுத்தக் கருத்தாக இருப்போம்.

நம்மைத் தெய்வம் வளப்படுத்துகிறார். நாம் பிறரைப் பலப்படுத்துவோம். கடவுள் மகிழ்ச்சியடைவார்.

ஆண்டவரே! பிறர் பயன்பட என்னை ஓர் கருவியாக்கியருளும். பிறர் வாழ்வுக்காக என் வாழ்வு பயன்படுவதாக அமைய கிருபை புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.