சங்கீதம் 115 : 1-10                                           17 ஆகஸ்ட், 2018 வெள்ளி

“அறியப்படாத கடவுளுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன், நீங்கள் அறியாமல் ஆராதிக்கிறதெதுவோ அதையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” – அப்போஸ்தலர் 17 : 23

ஏதென்ஸ் நகர் மக்கள், பல தெய்வ நம்பிக்கையுடையவர்கள். பவுல் அவர்களுக்கு `ஒன்றே தெய்வம், அவர் இயேசுகிறிஸ்து’ என்ற புதிய கொள்கையை வற்புறுத்தினார். ஏதென்ஸ் நகர மக்களின் தெய்வ பக்தியைக் கண்டார் பவுல். மூட நம்பிக்கை எனக் குறை கூறவில்லை. `விக்ரக ஆராதனை’ எனக் கண்டிக்கவில்லை. இம்மக்களிடம் காணப்பட்ட `பக்தியை’ இயேசுகிறிஸ்துவின் செய்தித் தெடர்புக்கு இணைப்புப் புள்ளிகளாக்கினார்.

பிற மதத்தவர் எல்லாரிடம் தெய்வபக்தி இருக்கிறது. பயத்தோடு இவர்கள் தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களின் `தெய்வபக்தியை’ சுவிசேஷத்தை எடுத்துக் கூறும் வாய்ப்புக்குச் சாதகமாக நாம் பயன்படுத்துகிறோமா? இவர்களிடம், நாம் காணும் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், ஒரு சில நல்ல பண்பாடுகளைப் பாராட்டி, இவைகளைத் தொடர்புப்புள்ளிகளாக எண்ணி நல்லுறவு கொண்டு, அவர்களுடைய துன்பங்களில் பங்கு பெற்று, தேவையில் உதவி செய்கிறோமா? கடவுள் கிறிஸ்துவின் வழியாய் முழு உலகையும் நேசிக்கிறார். முழுப்படைப்பும் இரட்சிப்பைப் பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். ஆகவே, பிற மதத்தினருக்கு இயேசுவைச் சுட்டிக்காட்ட அன்பான அணுகுமுறை நமக்கு முக்கியமானது.

பிற சமயத்தவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… அவன் நமது `சகோதரன்’ எனக் கூறலாமா? பிற சமயத்தவரின் அன்பை நாம் பெறுவது தவறல்லவே? நமது அன்பைப் பிற மதத்தவருக்குக் காட்டுவதும் தவறில்லையே? உலகோர் யாவரும் நம்மைப் போல் ஆதாமின் மக்கள்தானே. இவர்களுக்காகவும் இயேசு மரித்தார் என நம்புகிறீர்களா? அப்படியானால் இவர்களில் அன்புகூரத் தடை என்ன? இவர்களுக்கு இயேசுவை எடுத்துக் கூற என்ன தயக்கம்? பிறருடைய சமய வாழ்வில், கிறிஸ்தவத்தின் தொடர்புப்புள்ளிகள் எவை என்பதைத் தேடிப்பாருங்கள். பரிசுத்தாவியானவர் உங்களை வழி நடத்தட்டும்.

முழு உலகையும் படைத்துப் பராமரித்து வருகிற ஆண்டவரே! எமக்கு நீர் தந்த மீட்புக்காக உமக்கு ஸ்தோத்திரம். உமது மீட்பைப் புரியாமலே, அறியாமல் ஆராதிக்கிற மக்களில் அன்பு செய்யும் மனப்பக்குவத்தை எமக்குத் தாரும் ஸ்வாமி. இயேசுவின் வழியே ஆமேன்.