ஏசாயா 54 : 7-10                                                   21 ஜனவரி, 2019 திங்கள்

“ …என் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாமலும் இருக்கும்…”  – ஏசாயா 54 : 10

‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துதலே உலகத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய கடமை ஆகும். ஒருவரால் மற்றவர்களை எளிதாக மனம் சோர்ந்து போகச் செய்யலாம். இந்த உலகம் பெரும்பாலும் மனச்சோர்வு உண்டாக்குகிறவர்களால் நிறைந்திருக்கிறது. கடவுளின் பிள்ளைகளாக கிறிஸ்தவர்களின் பிரதான கடமை, நாம் ஒருவருக்கொருவர் ஊக்கம் அளிப்பதே ஆகும்’ – வில்லியம் பார்க்.

ஏசாயா 54 : 6ல் கணவனால் கைவிடப்பட்டு மனம்நொந்து நிற்கும் ஸ்திரீயைப் போலவும், இளம் வயதில் கணவனால் தள்ளப்பட்ட மனையாளைப் போலவும் இருக்கும் கடவுளின் மக்களைப் பார்த்து கடவுள் சொன்ன வார்த்தை ஊக்கமளிப்பதாய் உள்ளது. இமைப்பொழுது எனது முகத்தை மறைத்தேன் எனினும் நித்ய கிருபையுடன் இரங்குவேன் என நம்பிக்கை ஊட்டுகின்றார். அந்த நம்பிக்கையின் ஆதாரமாய் அமைவது, அவர் நம்மோடு செய்து கொண்டிருக்கும் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையே ஆகும்.

மாறாதக் கடவுள் மாற்றமில்லாத தமது சமாதான உடன்படிக்கையை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நம்மோடு செய்திருக்கிறார். அந்த உடன்படிக்கையின் தொடர்ச்சியை நாம் ஞானஸ்நானத்தில் அனுபவிக்கிறோம். ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவருக்கும் கிருபையின் வார்த்தையாக இந்த வார்த்தைகள் சொல்லப்படுகிறது. கடவுள் ஞானஸ்நானத்தின் வழியாக நம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இதனால் நாம் அவருடைய கோபாக்கினைக்குத் தப்பி, அவரது கிருபையின் மறைவுக்கு வந்திருக்கிறோம் என்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி. கடவுள் என்மேல் இரக்கமாய் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வழியாக நான் அவரில் நல்ல உறவில் வாழமுடியும் என்பதே நமக்கிருக்கும் சமாதான உடன்படிக்கையின் நிச்சயம். எந்தச் சூழ்நிலையிலும் இந்த நம்பிக்கையுடன் சமாதானமாய் வாழுவோம்.

கிருபையுள்ள கடவுளே, உமது சாட்சியுள்ள திருவசனத்தைக் கொண்டு எங்களை உடன்படிக்கை உறவில் உண்மையாய் வாழ உதவிபுரியும். எல்லா நிலையிலும் உமது சமாதானத்தைப் பெற்றுக் கொண்டவர்களாய் உலகிற்கு முன் உமது சமாதானத் தூதுவர்களாய் வாழ எங்களை ஆற்றல்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே. ஆமேன்.