2 கொரிந்தியர் 1 : 20-22                                       26 ஜனவரி, 2019 சனி

“…கிறிஸ்துவுக்குள்ளாக ஸ்திரப்படுத்துகிறவரும் நம்மை அபிஷேகம் பண்ணினவரும் கடவுளே.” – 2 கொரிந்தியர் 1 : 21

முதல் நூற்றாண்டு. ஆதிகால திருச்சபையின் ஒரு எளிய கிறிஸ்தவரை ஒருமுறை நீதிபதியின் முன்பாக கொண்டு வந்து நிறுத்தினர். அவன் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவெனில் அவன் எதைச் செய்தாலும் ‘கடவுள் இதைப் பார்க்கிறார். நாம் கடவுளுக்கு உண்மையாய் இருந்தால் கடவுளும் உண்மையாய் இருப்பார் என்று கூறுகிறார்’ என்று கூறப்பட்டது. நீதிபதி கிறிஸ்தவனை நோக்கி உண்மையிலேயே நீ அப்படி நம்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு கிறிஸ்துவன் நான் அப்படி நினைக்கவில்லை என்று சொல்லி மறுதலித்தான். ஆனால் நீதிபதியோ ‘நான் அப்படி நம்புகிறேன்’ என்றார். அப்போதுதான் கிறிஸ்தவனுக்குப் புரிந்தது நம்மைவிட நீதிபதி உண்மையான கிறிஸ்தவர் என்று.
அநேக சமயங்களில் திரியேகக் கடவுளின் நாமத்துக்குள்ளாக திருமுழுக்குப்பெற்ற கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் மூலம் நமக்கு கிடைத்த அபிஷேகம் மற்றும் வாக்குத்தத்தங்களில் உண்மையற்றவர்களாகவும் உறுதியற்றவர்களாகவுமிருக்கிறோம். திருமுழுக்கில் கடவுளின் வாக்குத் தத்தங்களை திருவசனத்தின் மூலம் வாக்களித்து அவற்றை இயேசுகிறிஸ்துவின் மூலம் ஆம் என்றும் ஆமேன் என்றும் நிறைவேற்றியுள்ளார் கடவுள். அதற்கு மேலாக பரிசுத்த ஆவியைக் கொண்டு, நம்மை முத்தரித்து ஆவியின் அச்சாரத்தையும் நமக்குத் தந்துள்ளார். ஆகவே திரியேக கடவுளின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், கடவுளின் சித்தத்தை அதிகாரத்தோடும், வல்லமையோடும் நிறைவேற்ற தகுதியுடையவர்களாகிறோம்.

அப்போஸ்தலர்களை அபிஷேகித்து அனுப்பிய அதே ஆண்டவர், கிறிஸ்து வழியாக நம்மையும் ஞானஸ்நானத்தில் அபிஷேகித்து முத்தரித்து ஸ்திரப்படுத்தி வழிநடத்துகிறார். கிறிஸ்துவுக்காக நாம் அனுபவிக்கிற பாடுகள் இயேசுகிறிஸ்துவை பிறர் காணும் வண்ணம் நாம் வாழ்ந்து காட்டுகிற கிறிஸ்துவுக்கான நம் வாழ்க்கை யாவும் கடவுளின் ஆற்றலினால் மட்டுமே என்பதில் உறுதி கொள்வோம். வல்லமையானவர் நம்மை ஞானஸ்நானத்தில் அபிஷேகித்திருக்கிறார். உண்மையுள்ளவர் நம்மை நடத்துகிறார். ஊக்கமுடைய ஆவியானவர் நம்மை கடைசிவரை நடத்துவார். இதுவே கிறிஸ்தவ வாழ்வில் நமது நிச்சயம். இந்த நிச்சயத்தோடு வாழுவோம்.

அன்புமிக்க நல்ல கடவுளே! பரிசுத்த ஆவியானவரால் திருவசனத்தைக்கொண்டு எங்களை வரவழைத்து ஞானஸ்நானத்தில் அபிஷேகித்து ஆவியின் அச்சாரத்தை தந்தவரே, தொடர்ந்து உமக்கென்று வாழ எம்மை ஆற்றல்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே. ஆமேன்.