எரேமியா 36 : 1-8                       11 மார்ச், 2019 திங்கள்

“….ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்கள் கேட்க வாசி;…” – எரேமியா 36 : 6

தற்காலத்தில் மக்கள் ஆலயத்திற்கு வருவதைப் பார்க்கிறோம். சிலர் முதல் மணி அடிப்பதற்கு முன்பே வந்து விடுகின்றனர். பலர் இரண்டாவது மணி அடிக்கும் போது உள்ளே அமர்ந்து விடுகின்றனர். ஒரு சிலர் அப்போது தான் வீட்டிலிருந்து புறப்படுவர். பலர் போதகர் பிரசங்கம் பண்ணும் வரை உள்ளே வந்து கொண்டிருப்பர். ஒரு நாளில் ஒரு பெண் பிரசங்கம் முடிந்ததும் உள்ளே வந்து அமர்ந்தார். போதகர் கோபமடைந்து, ‘பிரசங்கத்திற்கு முன்பு வரமுடிந்தால் ஆலயம் வாருங்கள். இல்லையெனில் வரவே வேண்டாம்’ என்றார். நம்மில் பலர் இப்படித் தான் இருக்கிறோhம். ஆராதனையில் எது முக்கியம் என்பதை அறியாமல் கலந்து கொள்கிறோம். ஆராதனையில் முக்கியம் இறைச் செய்தியே. கடவுளின் வார்த்தையே. இஸ்ரவேலருடைய வாழ்விலும் ஆராதனை ஒரு சடங்காக மாறிவிட்டது. பலி ஒன்றே பிரதானமாக இருந்தது. உபவாசம் ஜெபம் போன்றவை கடமைகளாக மாறிப்போயின. எரேமியா தீர்க்கதரிசி இதைக் கண்டித்தார். அவ்வாறு கண்டித்த நேரம் அவர்கள் உபவாசத்திற்காக கூடி வந்த நேரம். இஸ்ரவேலர் தங்கள் சமயக் கடமையை நிறைவேற்ற அடிக்கடி தேவாலயத்தில் கூடுவதுண்டு. அப்படி ஒரு உபவாச நாளில் அவர்கள் கூடி வந்தனர். கூடி வந்ததற்கு நோக்கம் எதுவும் இல்லை. வழக்கமான ஒன்று என்பதே அவர்களின் நிலை. அவ்வாறு கூடி வந்த மக்களிடம் எரேமியா தான் கடவுள் வார்த்தையாக முதலில் உரைத்தது முதல் தற்போது வரையிலும் எழுதி பாரூக் என்பவரிடம் கொடுத்தார். அவர் ஜனங்களுக்கு முன்பாக வாசித்தார்.

கடவுளின் வார்த்தை நமக்கு ஒரு உரைகல் போன்றது. நம்முடைய பாவத் தன்மையை வெளியரங்கப்படுத்துகிறது. உண்மையான மனஸ்தாபத்திற்கும் வேண்டுதல்களுக்கும் நம்மை வழி நடத்துகிறது. இறை வார்த்தையைக் கேட்காமல் நாம் செய்யும் ஒவ்வொரு சமயக் கடமையும் வீண். நமது உபவாசமும் வீணே. ஆலயம் கடவுள் நமக்குத் தந்திருக்கிற கொடை. அதில் கூறப்படும் வார்த்தைகள் நமது வாழ்வுக்குரியவை. அவர் வார்த்தையை முதன்மைப்படுத்துவதன் வழியாக கடவுளின் பிரசன்னத்தை உணருகிறோம். நமது உபவாசம் அர்த்தத்தோடு அமையட்டும். நமது ஜெபங்கள் கடவுளின் சமூகத்தில் எட்டட்டும். அவர் நம்மை ஆசீர்வதித்து பலப்படுத்துவார்.

வார்த்தையான ஆண்டவரே. உமது வார்த்தையை கேட்காமல் நாங்கள் ஜெபிப்பதும் உபவாசிப்பதும் பலி செலுத்துவதும் வீணே. எங்கள் பாவத் தன்மையை உணரச் செய்யும். உமது வார்த்தைகளை கேட்கும் நல் உணர்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.