உபாகமம் 34 : 5-9                                      8 ஏப்ரல், 2019 திங்கள்    

“…மோசே தன் கைகளை வைத்தப்படியினால் அவன் ஞானத்தின் ஆவியால் நிறைந்தவனானான்.” – உபாகமம் 34 : 9

உயர் பதவியிலிருப்போர் அடிக்கடி பணிமாறுதல் பெற்று வேறு இடங்களுக்குச் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் போது புதிதாய் வருகிறவர்களிடம் தங்கள் பொறுப்புகளை, கோப்புகளை ஒப்படைப்பர். இது வழக்கமான செயல். ஏற்கனவே இருந்தவர்களின் ஆசியோடு புதியவர்கள் பணியைத் தொடர்வது ஆசீர்வாதமாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமையும்.

மோசே இவ்வுலக வாழ்வை விடும் காலம் வந்த போது, தனக்குப் பின் தன் இடத்திலிருந்து இஸ்ரவேலரை வழி நடத்தப்போகும் யோசுவாவை சந்தித்தார். அவர் மேல் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தார். அவருடைய ஆசீர்வாதத்தை கடவுள் அங்கீகரித்து யோசுவாவை ஞானத்தினால் நிறைத்தார்.

மக்களை வழிநடத்துவது எவ்வளவு கடினம் என்பதை யோசுவா நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் செங்கடல் பிரிந்தது முதல் மோசேயின் மரணம் வரை இவர் மோசேயுடன் இருந்தார். இவருக்கு மக்களின் மனநிலை நன்கு தெரிந்திருந்தது. எப்படி இவர்களை வழிநடத்தப் போகிறோம் என்ற பயமும் இருந்தது. அதே சமயம் மோசேயுடன் இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்ற கடவுளின் வாக்கும் அவருக்கு கிடைத்திருந்தது. யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட பணி எளிதன்று. மக்களை வழிநடத்த வேண்டும். கானான் நாட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்களைத் துரத்த வேண்டும். நாட்டைத் தன் மக்களுக்கு எவ்விதப் பிரச்சனையுமின்றிப் பங்கிட வேண்டும். இப்படிப்பட்ட கடினமான பணிகளைச் செய்ய ஞானம் தேவை. கடவுள் அதை அவருக்குக் கொடுத்தார்.

கடவுளின் திருப்பணிகளில் நாட்டை ஆள்வதும் ஒன்று. ஆவியானவரின் செயல்பாடுகளின் வழியே நாட்டையும் மக்களையும் சரியான பாதையில் கொண்டு செல்வோரும் உண்டு. அரசியல் வேறு ஆலயம் வேறு என்று எண்ணாமல், நமக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பணியையும் கடவுளின் மகிமைக்கென்று ஞானத்தோடு செயல்படுத்தக் கவனமாயிருப்போம்.

அன்புள்ள கடவுளே! நாம் பெற்றிருக்கும் பல வேலைகள் கடவுளுக்குரியதா உலகுக்குரியதா என்று பிரித்துப் பார்க்காமல் அவற்றை கடவுளின் பணியாகக் கருதும் எண்ணத்தைத் தாரும். அனைத்தையும் ஞானத்தோடு செயல்படுத்த உமதாவியைக் கொடும். இயேசுவின் வழியே ஆமேன்.