லூக்கா 11 : 37-41 02 மே, 2019 வியாழன்
“உங்களுக்குள்ளவற்றில் தர்மம் கொடுங்கள், அப்பொழுது, சகலமும் உங்களுக்கு சுத்தமாயிருக்கும்.” – லூக்கா 11 : 41
பரிசேயன் ஒருவன் இயேசுவை விருந்துக்கு அழைத்தான். அழைக்கப்பட்டவர்கள் கைகளையும் கால்களையும் கழுவவில்லை. இதைக் கண்ட பரிசேயன் ஆச்சரியப்பட்டான். பரிசேயன் மனநிலை அறிந்த இயேசு அவர்கள் மாய்மால குணத்தையும் கபட வேடத்தையும், ஈயாமையாயிருப்பதையும், நியாயத்தை புரட்டுவதையும், அன்பை அசட்டை செய்வதையும் இங்கு வெளிப்படுத்துகிறார். அத்துடன் வீண்பெருமையையும், ஏழைகளைத் துன்புறுத்துவதையும், மூடத்தனத்திலிருந்து தங்களையும் பிறரையும் ஏமாற்றுவதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. இவையெல்லாம் இப்பகுதியில் கண்டிக்கப்படுகின்றன.
நமது தியான வாக்கியப் பகுதி வெளித் தூய்மையை அல்ல அகத்தூய்மையை வலியுறுத்துகிறது. நம் ஆண்டவர் இயேசு, போஜனபானம் பண்ணுகிற பாத்திரங்களின் வெளிப்புறத்தை சுத்தமாக்குகிறீர்கள். ஆனால் உட்புறம் கொள்ளையும், பொல்லாப்பும் நிறைந்திருக்கின்றது என்று கண்டிக்கிறார்.
அகத்தின் அழுக்கை நீக்கி பரிசுத்தமாக்குவதற்கே இயேசு வந்தார். இயேசுவை மேசியாவாகக் கண்டுக்கொள்ளத் தவறிப் போனார்கள். விசுவாசக் கண்களுடையோர் இயேசு என்னும் ஒளியினால் ஒளிபெற்று இயேசுவே மெய்யான ஒளி என கண்டுக் கொள்ளுவர். அவர்களுக்கு வேறு அடையாளங்கள் தேவை இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் உள்ளக் கண்கள் ஒளியுடையதாவதை அறிந்து கொள்ளுகின்றனர். நம் கண்கள் பார்வையற்றவையா, இல்லையா என்பதை ஆராய்ந்தறிந்துகொள்ள இயேசு இதைக் கூறினார்.
கடவுள் வீற்றிருக்கும் உள்ளம் தூய்மையாயிருக்கும். அதனால் புறத்தூய்மை தானாக உண்டாகும். கடவுளே உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் உண்டாக்கினார். உள் தூய்மையடைய கடவுளின் அன்பு நிரம்பி இருக்க வேண்டும். அன்பு இருக்கும் இடத்தில் தர்மம் கொடுக்கும் சிந்தை இருக்கும். இதனால் தான் கடவுள் தந்தவற்றை அறிந்து அன்பில் நிலைத்திருந்து தர்மம் செய்யுங்கள். அப்படிச் செய்தால் நம் உள்ளும் புறமும் சுத்தமாயிருக்கும். இப்படி இருக்க பார்த்துக் கொள்ளுவோம்.
எங்களை உள்ளும் புறமும் தூய்மையாய் படைத்த கடவுளே! பாவத்தால் எங்கள் அகத்தூய்மை அற்றுப்போனதை உணருகிறோம். இயேசுவில் எங்களுக்கு அகத்தூய்மையாய் இருக்க கிருபை செய்யும் இயேசுவில் பிதாவே. ஆமேன்.
