சங்கீதம் 107 : 1-6 31 ஆகஸ்ட், 2019 சனி
“கர்த்தர் நல்லவர்… தம்மை நம்புகிறவர்களைக் காப்பாற்றுவார்.”– நாகூம் 1 : 7
நள்ளிரவில் மலைச்சரிவில் வழி தவறி விழுந்தான் ஒருவன். ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கினான். எத்தனை அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியாது. ‘காப்பாற்றும் ஆண்டவரே. எந்த மனிதனும் உதவி செய்ய முடியாது! ஆண்டவரே நீர்தான் காப்பாற்ற வேண்டும்’ என உரக்க ஜெபித்தான்.
‘கையை விடு… காப்பாற்றப்படுவாய்’ என்று ஒரு சத்தம் கேட்டதாம். சில நிமிடங்கள் மௌனம், பயம், நம்பிக்கையின்மை. ஆண்டவரை நம்பி, கையை விட்டுவிட அடுத்த வினாடி அவன் தரையில் நின்றான். அதாவது அவன் தொங்கி இருந்த மரக்கிளை, தரையிலிருந்து சில அடி உயரத்தில் தான் இருந்தது. இருட்டில் அவனுக்கே இது தெரியாது. கடவுளை நம்பி, தனது ஒரே ஆதாரத்தையும் விட்டு விட்டான். காப்பாற்றப்பட்டான்.
நாகூம் இதைத்தான் சொல்கிறார் – தம்மை நம்புகிறவர்களைக் காப்பாற்றுகிறார் கடவுள்! காப்பாற்றப்படுவதற்குக் காரணம், மனித நம்பிக்கையல்ல… கடவுளின் நல்ல தன்மை. கடவுள் நல்லவராக இருப்பதால் மனிதனைக் காப்பாற்றுகிறார். பிறரை நம்பி ஏமாந்தவன் நான். என்னை நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம். திட்டமிட்டுப் பிறரை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறேன்.
இவை காட்டும் உண்மை என்ன தெரியுமா? நம்பிக்கை இருந்தால் போதாது. நம்பிக்கை வைக்கும் நபர் நம்பத் தகுந்தவராக இருப்பதுதான் முக்கியம். கர்த்தர் நல்லவர், நம்பத் தக்கவர். நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசுவைக் கொடுத்தவர்.
ஆகவே தின வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்தும் கர்த்தர் விடுவிக்க வல்லவர். கர்த்தர் என்றைக்கும் எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை. கர்த்தரை நம்பு. நீ வாழ்ந்திருப்பாய்.
கர்த்தாவே! வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற உமக்கு நன்றி. நீர் பொய் சொல்வதில்லை. நல்லவர். என்னைத் தினமும் காத்து நடத்தும். அவநம்பிக்கையிலிருந்து காத்து விசுவாசத்துக்குள் வழி நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.
