யாக்கோபு 1 : 19-23 29 ஆகஸ்ட், 2019 வியாழன்
“நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளைப் பற்றி ஜாக்கிரதையாயிருந்து இவைகளில் நிலைத்திரு.” – 1 தீமோத்தேயு 4 : 15
வாலிபம் சோதனை மிகுந்த காலம். ஆடம்பரம், ஆசை, சோம்பல் மிகுந்து காணப்படும் வாழ்க்கைப் பகுதி வாலிபம்தான். துணிவு, புதுமை காணல் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருப்பதும் வாலிபப் பருவத்தில்தான். பெரியவர்களின் கூற்றைவிட, நண்பர்கள் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும் வாலிப நாட்கள்தான்.
தேவ ஊழியன் தீமோத்தேயு ஒரு வாலிபன். தீமோத்தேயுவின் வாழ்க்கை முன்மாதிரியான வாழ்க்கையாக அமைய, வர இருக்கும் சோதனைகளைச் சந்திக்க ஜாக்கிரதையாக இருக்கக் கூறுகிறார் மூத்த தேவ ஊழியர் பவுல். ஜாக்கிரதையாக வாழ்க்கையை அமைக்க, வேத வசனம் நம்மைப் பலப்படுத்துகிறது. கடவுளின் பிரமாணம் நமது பாவத்தை, பாவம் செய்வதற்கான காரணத்தையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. நாம் செய்யாமல் விட்ட நன்மைகள் ஏராளம். தெரிந்து செய்த தீமைகள் எண்ணிலடங்கா. தெரியாமலே செய்த தவறுகளுக்குக் கணக்கே இல்லை. ஒவ்வொரு வினாடியும் நாம் ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும்.
‘ஒரு வழிப்பாதை’ என்ற அறிவிப்பைப் பார்த்தால் போலீஸ்காரருக்குப் பயப்படுகிறோம். கண்ணாடியில் முகம் பார்க்கும் போது அழுக்கிருந்தால் துடைத்துக் கொள்கிறோம். வேத வசனம் நம்மை எச்சரிக்கிறது. நமது பாவங்களைச் சுட்டிக் காட்டுகிறது. பாவக் கறையைக் கழுவித் துடைக்க இயேசுவாம் மீட்பரிடம் செல்ல சுவிசேஷம் நம்மை அழைக்கிறது.
இளமையானாலும் முதுமையானாலும் எச்சரிப்பாக வாழ்வதற்குத் தேவ வசனத் துணை நமக்குத் தேவை. முன்மாதிரியாக வாழ, கர்த்தரின் அருள் தேவை. எச்சரிப்புத் தருகின்ற கடவுளே முன்மாதிரியான வாழ்க்கை நடத்த பலத்தையும் தருகின்றார். மனந்திரும்புவதற்கான உறுதியைக் கடவுள் தருகின்றார். உங்கள் குணத்தில் தேர்ச்சியடையுங்கள். உங்கள் நற்செயலில் முதிர்ச்சி அடையுங்கள். விசுவாசத்தில் வளருங்கள். கிருபையில் நிலைத்திருங்கள்.
ஆண்டவரே, நாங்கள் திருவசனத்தைக் கேட்கிறவர் களாய் மாத்திரம் இல்லாமல், அதன்படி நடந்து, பலருக்கு முன் மாதிரியாக வாழ எங்களுக்கு உதவி செய்யும். தினமும் எங்கள் வாழ்வில் தேர்ச்சி காணப்பட கிருபை தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.
