சங்கீதம் 91 : 11-16 23 ஆகஸ்ட், 2019 வெள்ளி
“என்னைக் காப்பாற்றி என்னை விடுவித்தருளும்; நான் வெட்கப்படாத படி செய்யும், உம்மிடத்தில் அடைக்கலம் புகுந்தேன்.” – சங்கீதம் 25 : 20
மனிதன் வெட்கப்பட பலகாரணங்கள் இருக்கின்றன. நிர்வாணம், உடல் ஊனம், முதலிய சரீர நிலையினால் வெட்கமுண்டாகலாம். இகழ்ச்சி, தாழ்மை, குறைவு, கிண்டல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டும் வெட்கம் உண்டாகலாம்.
சங்கீதக்காரன் கூறுகின்ற வெட்கம் எது? எதிரிகளினால் சூழப் பட்டிருந்தார் தாவீது. பகைவர்களிடம் மாட்டிக் கொள்வது வெட்கத் தகுந்த காரியம். ஆகவே வெட்கப் படாதபடி செய்யும் என்று ஜெபிக்கிறார். ‘உம்மை நோக்கிக் காத்திருக்கிறவன் எவனும் வெட்கப்படான்’ என்று தாவீது தனது உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வெட்கப்பட்டிருக்க வேண்டும். கடவுளின் பிள்ளையாக ஞானஸ்நானம் பெற்றிருக்கின்ற நான், எனது செயல்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டுமே! ‘இவனெல்லாம் ஒரு கிறிஸ்தவனா’ என்று பிறர் கூறும் அளவுக்கு மட்டமாக நடந்து கொண்டது குறித்து வெட்கப்பட வேண்டும். ஆனால், எனது மதி கெட்ட வாழ்வு குறித்து நான் வெட்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. இது மட்டுமல்ல, சுவிசேஷம் கூற வெட்கப்பட்டிருக்கிறேன். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் என்னைக் கிறிஸ்தவன் என்று காட்டிக்கொள்ள வெட்கப்பட்டிருக்கிறேன்.
நான் பாவம் செய்தேன். என் மீறுதல்கள் கணக்கற்றவை. நான் கடவுளின் முன்னால் எப்படி வருவது என்றுகூட வெட்கப்பட்டிருக்கிறேன்.
எத்தனைக் குறைகள் உன்னிடமிருந்தாலும் இயேசு என் மீட்பர், கிறிஸ்து என்னை விடுவித்தார் என்று நம்புகிறாயா? நீ வெட்கப்பட அவசியமே இல்லை. ஏனெனில் நீ கிறிஸ்துவிடம் அடைக்கலம் புகுந்து விட்டாய். இயேசுவின் வெட்கமும் வேதனையும் சிலுவை மரணமும் உனக்கு அடைக்கலமாகி விட்டது. நீ வெட்கத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் இயேசுவால் விடுவிக்கப்பட்டிருக்கிறாய். கடவுளில் நம்பிக்கை வைத்திருக் கிறவனைக் கடவுள் ஒரு போதும் வெட்கம் அடையச் செய்கிறதில்லை. நம்மோடு கடவுள் இருக்கிறபடியால் நாம் எதற்காகவும் வெட்கப்பட அவசியமுமில்லை. தூயவரின் பிள்ளைகள் வெட்கப்படமாட்டார்கள்.
எங்கள் இறைவா! இவ்வுலகில் உம் பிள்ளைகளாகிய எங்களை வெட்கத்திற்குரிய காரியங்களிலிருந்து விடுதலையாக்கும்! உம்மிடத்தில் அடைக்கலம் புகுந்து விட்டோம். எங்களைக் காத்து நடத்துவீர் என்று உம்மை மட்டுமே நம்பிக் காத்திருக்கிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.
