அப்போஸ்தலர் 9 : 1-6                                     07 ஆகஸ்ட், 2019 புதன்

“எஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்கு …பயமுறுத்துவதை விட்டுவிடுங்கள்.” – எபேசியர் 6 : 9

சவுல் மூர்க்கங்கொண்டவன். கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தவும், கொலை செய்யவும் முயற்சித்தான் என்று வாசிப்புப் பகுதியில் காண்கிறோம். சவுல் தனக்குத் தரிசனம் கொடுத்த ஆண்டவரிடம், ‘நீர் யார்’ என்று கேட்டான். அதற்கு ‘நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான்’ என்றார் இயேசு! துன்பப்படுபவர்களில் இயேசுவைக் கண்டார் பவுல்.

துன்பப்படுகிற வேலைக்காரருக்கு எஜமானர் உண்டு. துன்பப்படுத்தும் எஜமானருக்கும் எஜமான் உண்டு. எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் எஜமான் கிறிஸ்துவே என்பதை பவுல் இங்கே நினைவுபடுத்துகிறார். ஆகவே, எந்த முதலாளியும் தனக்குக் கீழே இருப்பவர்களைத் துன்பப் படுத்துவது பயமுறுத்துவது தெய்வீகப் பண்பல்ல எனப் பவுல் கூறுகிறார். அதிகாரம் செய்ய நமக்குப் பிடிக்கும். பிறரைப் பயமுறுத்துவதில் நமக்கு சந்தோஷம். பிறரைக் குறைத்துப் பேசுவதில் ஆனந்தம். ஆனால் இதைப் பார்க்கும் இயேசு கண்ணீர் வடிக்கிறார் என்பதை நாம் உணரவில்லை.

ஆண்டவர் அதிகாரம் பண்ணினால் நம்மால் தாங்க முடியுமா? ஆண்டவர் பயமுறுத்தினால், நீ யாரிடம் போவாய்? குடும்பத்திலோ, திருச்சபையிலோ, சமூகத்திலோ நான் எந்த நிலைமையில் வைக்கப்பட்டிருக்கிறேன்? பிறரை வழி நடத்தும் அதிகாரம் உங்களுக்கு உண்டெனில், அவர்களை அன்போடு நடத்துங்கள். பிறருக்குக் கீழ்ப்படியும் நிலையில் இருந்தால் கீழ்படியுங்கள். ஏனெனில் எல்லாருக்கும் எஜமானர் கிறிஸ்துவே. கிறிஸ்து முரட்டு ஆடுகளையும் சாதுவான ஆடுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் மேய்க்கின்ற மேய்ப்பர். பயமுறுத்துவதை விட பாசம் காட்டுவதில் பயன் அதிகம். பாசமிகு இயேசு, பாசத்துடன் இப்பொழுதும் நம்மிடையே இருக்கிறார்.

எல்லோருக்கும் எஜமானராக இருக்கும் ஆண்டவரே! எங்களது நிலைமைக்கும் மேலாக உள்ளவர்களுக்கு நாங்கள் கீழ்ப்படியவும், எங்கள் நிலைமையிலும் தாழ்வானவர்களை அன்போடு நடத்தவும் எமக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.