அப்போஸ்தலர் 4 : 8-12 07 டிசம்பர், 2019 சனி
“…நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின்கீழ் மனுஷருக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமுமில்லை.” – அப்போஸ்தலர் 4 : 12
பதினொன்றாம் நூற்றாண்டின் வரலாற்றில் ஒரு பகுதி இது. ஸ்பெயின் நாட்டை `எல்சிட்’ என்ற வீரர் பாதுகாத்தார். ஒரு கட்டத்தில் எல்சிட் போரில் இறந்துபோனார். அவருடன் சேர்ந்து போராடிய வீரர்கள், இந்த மாவீரரின் மரணத்தை எதிரிகளிடமிருந்தும், தங்கள் போர் வீரரிடமிருந்தும் மறைத்தனர். அவருக்கு இராணுவ உடை அணிவித்து, குதிரையின் மேல் அமர்த்தி, கையில் பட்டயத்தைக் கொடுத்துப் போர்க்களத்தில் முன்னேறிச் செல்ல விட்டார்கள். எல்சிட் என்ற மாவீரனைக் கண்டவுடன், எதிரி வீரர்கள் பயந்து நடுங்கி ஓடிவிடுவார்கள் என்று இவர்கள் நம்பினார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. மாவீரனின் பிணத்தைக் கண்ட எதிரி வீரர்கள் ஓடவில்லை. ஸ்பெயின் நாட்டு வீரர்களைப் புறமுதுகிட்டு ஓடும்படித் துரத்தினார்கள். ஆம்! மரணத்தைத் தழுவியவன் தலைவனாக முடியாது.
அதுபோல மரித்தவர்களை கடவுளாக ஏற்பது அறிவீனம். இது பலருக்கும் தெரியும். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் இன்னும் நம்தேசத்தின் பெரியவர்கள்கூட மனிதர்களாய் இருந்து சகல பாவங்களுடனும் வாழ்ந்து இறந்துபோனவர்கள்தான். இவர்கள் யாரும் கடவுள் ஆகமுடியாது. இவர்கள் நமது வாழ்வை வழி நடத்த முடியாது.
ஆனால் இறந்தவர்களின் தத்துவங்களைப் பின்பற்றுவோர் உலகில் இன்னும் பலர் இருக்கிறார்கள். எதையும் கடவுளாக்கலாம்…. எல்லாம் கடவுளே…. என்றெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்.
நமது தியான வசனம் பாவமன்னிப்பைப் பெற, இரட்சிக்கப்பட, வானத்தின் கீழ் இயேசு என்ற பெயரைத் தவிர வேறொரு பெயர் இல்லவே இல்லை என்கிறது. இயேசு மரித்தும் உயிர்த்தவர். அன்றும் இன்றும் என்றும் வாழ்கிறவர். ஏதேன் தோட்டத்தில் கடவுள் அவரை நமக்கு வாக்களித்தார். பெத்லெகேம் ஊரில் அவர் பிறந்தார். எருசலேமில் மரித்து, உயிர்த்து, பரமேறினார். இன்றும் வாழ்கிறார். இனி வருவார். இந்தக் காலத்திலும் எதிர்காலத்திலும் இவரே மீட்பர். வேறொருவராலும் மீட்பு இல்லை. இந்த அற்புதமான, உயிருள்ள, உண்மைச் செய்திக்காக, இயேசு அருளும் வெற்றிக்காக நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். வானத்தின் கீழ் அருளப்பட்ட இரட்சிப்பின் ஆண்டவர் இயேசு உங்களோடிருப்பாராக.
நித்திய கால கடவுளே! உலகின் பல்வேறு போதனைகளால் நாங்கள் அலைக்களிக்கப் படாதிருக்கவும் விசுவாச உறுயோடு உம்மில் நிலைத்திருக்கவும் எமக்கு உதவும். இயேசுவின் வழியே ஆமேன்.
