எபிரேயர் 5 : 1-4                            04 பிப்ரவரி, 2020-செவ்வாய்

“ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியஞ் செய்யும்படி அவனை அபிஷேகஞ்செய்து பரிசுத்தபடுத்து.” – யாத்திராகமம் 40 : 13

எல்லா நாடுகளிலும் எல்லா சமூகத்திலும் எல்லா நாட்களிலும் இறைப்பணி செய்வதற்குரிய மக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குருக்கள் என்று அழைக்கப்பட்டனர். அரசர்கள் காலத்தில் அரச குருவாக செயல்பட்டவர்களைக் குறித்து நாம் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்திருப்போம். இஸ்ரவேலரின் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக லேவி கோத்திரத்தாரையே கடவுள் தெரிந்தெடுத்தார். அதில் ஆலயத்தின் உள்ளே நடத்த வேண்டிய காரியங்களை செய்ய ஒருவர் தன் குடும்பத்தோடு ஏற்படுத்தப்பட்டார். அவர் தான் ஆரோன்.

இஸ்ரவேலர் எகிப்தினின்று விடுதலையான போது ஒரு சமூகமாக ஏற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடல் சார்ந்த தேவைகளை மோசே பார்த்துக் கொண்டார். அவர்களின் ஆன்மீகக் காரியங்களைப் பார்க்க கடவுளின் ஆலோசனையுடன் ஆரோனைத் தெரிந்தெடுத்தார்.

ஆசாரியர் அல்லது குருக்கள் மக்களுக்கு கடவுளின் செய்தியைச் சொல்லுவார்கள். இறைவனிடம் மன்றாடுவார்கள். அவர்களுக்காக பலி செலுத்துவார்கள். காணிக்கைகளை அவர் சமூகத்துக்குக் கொண்டு வருவார்கள். இவை போன்ற சமயக் கடமைகளை ஆரோன் நிறைவேற்றி வந்தார். மேலும் மக்களின் பாவங்களுக்கான பரிகார பலிகள் போன்றவற்றையும் நிறைவேற்றி வந்தார். இந்த பணியை புதிய ஏற்பாட்டில் கனமான பணி என வாசிக்கிறோம். கடவுளின் அழைப்பும் அங்கீகாரமும் இன்றி யாரும் இப்பணியில் சேரவும் முடியாது. பணியாற்றவும் முடியாது.

இன்றைக்கு ஆலயங்களில் போதகர்கள் ஆசாரியப் பணியைச் செய்து வருகின்றனர். அவர்கள் செய்கிற கனமான இப்பணியை நாம் மதிக்கிறோமா? அவர்களை கனப்படுத்துகிறோமா? கிறிஸ்து ஒரு பிரதான ஆசாரியனாக இருந்து தன்னையே பலி செலுத்தினாரே. அவரை குறித்த எண்ணம் நமக்கு இருக்கிறதா? கடவுளின் பிரதிநிதிகளாக இவர்களைப் பார்ப்போம். ஆசாரியப் பணியை மதிப்போம். இறைச் சமூகம் தழைக்க பாடுபடுவோம்.

ஆண்டவரே! இறைப்பணி ஆற்ற தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்ய அவர்களுக்கு உதவும். அவர்களை மதித்து ஆதரவளிக்க எங்களுக்கு நல்லுணர்வைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.