எபிரேயர் 13 : 1-3 02 பிப்ரவரி, 2020-ஞாயிறு
“…அந்த மனிதனை நீங்கள் விடடுவிட்டு வந்ததென்ன? போஜனம்பண்ணும்படி அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள்.” – யாத்திராகமம் 2 : 20
உதவி செய்தோருக்கு கைமாறாக எதையாவது செய்ய வேண்டும் என்பது நம்மில் பலருடைய மனப்பான்மை ஆகும். செய்த நன்றியை மறப்பது நல்லதல்லவே.
தியான வசனத்தில் இந்த நல்ல பண்பை வெளிப்படுத்திய ஒருவரைப் பார்க்கிறோம். அவர் எத்திரோ; மீதியான் தேசத்து ஆசாரியன். அவருக்கு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இந்தக் குடும்பத்தைச் சந்திக்கும் வாய்ப்பு மோசேக்கு எப்படிக் கிடைத்தது என்று காண்போம். எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்து வந்த மோசே அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனாந்திரத்திற்கு ஓடிப் போனார். எங்கு போவது என்று தெரியாமல் இருந்த அவர் அங்கிருந்த ஒரு கிணற்றுக்கருகே உட்கார்ந்தார்.
அந்த கிணற்றுக்கு எத்திரோவின் ஏழு பெண் பிள்ளைகளும் தங்கள் ஆடுகளை ஓட்டி வந்தனர். அவைகளுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இதர மேய்ப்பர்கள் இப்பெண்களைத் துரத்தி தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் தர முற்பட்டனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மோசே அம்மேய்ப்பர்களைத் துரத்தி அப்பெண்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்கச் செய்தார். பின்னர் அப்பெண்கள் தங்கள் வீட்டுக்குச் சென்றனர். தன் பிள்ளைகள் சீக்கிரம் வந்ததை கண்ட எத்திரோ என்னவென்று வினவ அவர்கள் நடந்ததைக் கூறினர். அப்போது எத்திரோ, உங்களுக்கு உதவிய அவரை உடனே அழைத்து வாருங்கள். அவரை விட்டு விட்டு வந்ததென்ன என்றார். இதுவே நமது தியானப்பகுதி. உடனே இப்பெண்கள் சென்று மோசேயை அழைத்து வந்தனர். அவருக்கு உணவளித்து தங்கள் நன்றியைக் கூறினர். எங்கே போவதென்று தெரியாமல் வந்த மோசே அங்கேயே தங்கலானார்.
நன்மை செய்த மோசேக்கு கைமாறாக எத்திரோ செய்தவை நல்ல பண்புக்கு அடையாளம். நாம் நமக்கு நன்மை செய்வோருக்கு நன்றி சொல்கிறோமா? முக்கியமாக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோமா? இயேசு நம் பாவங்களை மன்னித்து, நம் நோய்களை குணமாக்கி, நமக்கு நன்மை செய்து வருகிறார். நன்றியோடு அவருக்குப் பணிவிடை செய்வோம். பிறருக்கு நம்மால் இயன்ற உதவியும் செய்வோம்.
நல்ல ஆண்டவரே! நீர் செய்யும் நன்மைகளுக்கும் பிறர் எங்களுக்குச் செய்யும் நல்லவைகட்கும் நன்றியுள்ளவர்களாக வாழும் நல் இருதயத்தைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
