vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

நன்மை செய்வோம்

மலாக்கி 3 : 13-15                                         11 அக்டோபர் 2025, சனி

“தெய்வ பயமற்றவர்களாய் நடப்போர் பலத்து செழிக்கிறார்கள்.” – மலாக்கி 3 : 15

நல்லதுக்கு காலமில்லை. நன்மை செய்வதால் ஒரு பயனுமில்லை. என்றெல்லாம் நாம் புலம்புவதுண்டு. காரணம் இவ்வுலகில் நன்மை செய்வோர் அநேக பாடுகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் தீமை செய்வோர் மிக சுகமாய் வாழுகின்றனர். இந்த நிலை பல நேரங்களில் நமக்கு மன உளைச்சலையும் மனச் சோர்வையும் உண்டாக்குகிறது. நாமும் அவர்களைப்போல எப்படி வேண்டுமானாலும் வாழலாமே என்று சிந்திக்க வைக்கிறது. இப்படிப்பட்ட வாழ்வியல் சூழலைப்பற்றிதான் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி பேசுகிறது.

மலாக்கி தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் முறையற்று வாழ்ந்தனர். கடவுள் பயமில்லாமல் வாழ்ந்தனர். கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் தங்கள் சுய இஷ்டப்படி வாழ்ந்தார்கள். கடவுளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்தாமல் சுய நலமாய் வாழ்ந்தனர். அதே நேரத்தில் பக்தி வைராக்கியத்தோடு வாழ்ந்த மக்களும் இருந்தனர். பக்தி வைராக்கியத்தோடு வாழ்ந்த மக்கள் துன்பங்களை அனுபவித்தனர். எனவே அவர்களுக்குள் இந்த கேள்வி தோன்றியது. இத்தனை அக்கிரமம் செய்தும் இவர்கள் நலமாகத்தானே இருக்கிறார்கள். சுய இஷ்டப்படி வாழ்ந்தும், கடவுளுடைய கட்டளைகளை மீறி வாழ்ந்தும் நலமுடந்தானே இருக்கிறார்கள் என்று புலம்பினர். மலாக்கி காலத்தில் வாழ்ந்த மக்களின் புலம்பல் மட்டுமல்ல இது.

நாமும்கூட பல நேரங்களில் இப்படி சிந்திப்பதுண்டுதானே. ஆனால் அது உண்மையல்ல என்று மலாக்கி உரக்க சொல்லுகிறார். அதாவது கடவுளிடத்தில் ஜீவ புத்தகம் என்ற ஒன்று உண்டு அதில் உண்மையோடும், நேர்மையோடும், பக்தியோடும் வாழ்கிறவர்களின் பெயர்கள் மட்டும் குறிக்கப்படும். அதில் தீமை செய்வோரின் பெயர் இடம் பெறாது என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.

தீமை செய்வோரை கடவுள் அங்கீகரிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளுகிறார். அவர்கள் செழிப்பும் வாழ்வும் நிரந்தரமல்ல. எனவே தீமை செய்வோரின் செழிப்பைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நமக்காக மண்ணுலகில் வந்து சிலுவை சுமந்து நம்மை மீட்டுக் கொண்ட கிறிஸ்துவில் விசுவாசம் வைப்போம். அவரது வார்த்தைகளின்படி வாழ்வோம். எத்தனை துன்பங்கள் வந்தாலும் பொறுத்துக் கொள்வோம். கர்த்தர் எல்லாவற்றிலுமிருந்தும் நம்மை மீட்டு சுகமாய் தங்கப்பண்ணுவார். ஜீவ புத்தகத்தில் நமது பெயர் இடம் பெறும். பொல்லாதவர்களை அல்ல, தேவ தாசர்களை முன்மாதிரியாய் கொண்டு தொடர்ந்து ஓடுவோம்.

அன்பின் கடவுளே, எத்தனை சோதனையிலும் நன்மை செய்கிறவர்களாய் வாழ எங்களை வழி நடத்தும். இயேசுவின் திருப்பெயரில் ஆமேன்.

நன்மை செய்வோம்2025-10-08T06:25:00+00:00

நோய்கள் நீங்கும்

ஏசாயா 58 : 9-11                                       10 அக்டோபர் 2025, வெள்ளி

“மெய்யாகவே, நமது நோய்களை அவரே ஏற்றுக்கொண்டு, நமது வேதனைகளைச் சுமந்தார்.” – ஏசாயா 53 : 4

தற்போதைய உலகம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலம். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலம். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய இக்காலத்தில் சின்ன சின்ன பெலவீனங்கள் என்றாலும் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கிறோம். ஒரு சிறு தும்மல் இருமல் என்றாலும் அச்சப்படுகிறோம். ஒரு பேருந்திலோ, கூட்டத்திலோ ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ மிகுந்த அச்சம் தோன்றுகிறது. நோய்களைப்பற்றிய பெரும் பயம் நம்மை அறியாமலே நமக்குள் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நோயுற்றோருக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. இன்றைய தியானப் பகுதி கிறிஸ்து நோயுற்றோர் மீதும் வேதனையில் வாழ்வோர் மீதும் காண்பித்த அன்பை பற்றி மிக அழகாக விவரிக்கிறது.

இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் தொழுநோயாளிகள் புறக்கணிக்கப் பட்டவர்கள். அவர்களை பார்ப்பதையும் தொடுவதையும் மக்கள் தவிர்த்தனர். தொழுநோய்க்கு அக்காலத்தில் மருந்தில்லாததால் மக்கள் இவ்வாறு நடந்துகொண்டனர். தொழுநோயாளிகள் சரீர பெலவீனத்தின் துன்பத்தை அனுபவித்தார்கள். அதனோடே புறக்கணிப்பின் மன வேதனையையும் அனுபவித்தார்கள். இயேசு தனிமையில் இருந்தபோது ஒரு தொழுநோயாளி அவரைத் தேடி வந்தார். “உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலாகும்” என்றார். இயேசுவோ அவர் அருகில் சென்று அவரைத் தொட்டு சுகமாக்கினார்.

இச்செயல் வழியாக இயேசு நோயுற்றோர் மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்துகிறார். தொழுநோயாளியை தொட்டதின் மூலம் நோயுற்றோரை புறக்கணிக்கிறவரல்ல என்பதை ஆழமாய் புரிய வைக்கிறார். அவர்மீது மட்டுமல்ல இந்த முழு உலகத்தின்மீதும் அன்பு கொண்டவர் இயேசு. சிலுவையில் தம்மை தாமே பலியாக தந்ததன் மூலம் அனைத்து மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்தார். அனைவருக்கும் பாவ மன்னிப்பை பெற்றுத் தந்தார்.

கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் நமக்கு இந்த ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது. அவரது அன்பை பெற்ற நாம் அந்த அன்பை பகிர்வதே கடமை. நம் வீட்டில் அல்லது நம் உறவினர்களில் பெலவீனமானவர்கள் இருக்கலாம். அவர்களை வெறுக்காமல், புறக்கணிக்காமல் உதவியாய் இருக்க வேண்டியது முக்கியம். அவர்களை நாம் நேசிக்க வேண்டும். அவர்களோடு பேசுவதும் பாதுகாப்புடன் தொடுவதும் அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொண்டுவரும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இந்த செயற்பாடுகள் கிறிஸ்துவின் அன்பை அவர்கள் பெற உதவி செய்யும். கிறிஸ்துவின் அன்பு அவர்களை குணமாக்கும்.

அன்பின் பிதாவே, நோயுற்றோரை, வேதனையில் இருப்போரை நேசிக்கவும் ஜெபிக்கவும் எங்களுக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.

நோய்கள் நீங்கும்2025-10-08T06:09:56+00:00

வார்த்தைகளின் ஆற்றல்

யாக்கோபு 3 : 3-16                                            09 அக்டோபர் 2025, வியாழன்

“அப்படியே, நாவும் சிறிய அவயவமாயிருந்தும்… சிறிய நெருப்பு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது.” – யாக்கோபு 3 : 5

2024ம் ஆண்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் குமண்டி என்ற ரயில் நிலையம் அருகே ராஞ்சி சச்சரம் விரைவு ரெயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால் ரெயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அவர்கள் குதித்த சமயம் அவ்வழியே வந்த சரக்கு ரெயிலில் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு வதந்தி பெரும் விபத்தை ஏற்படுத்திவிட்டது. உண்மையா பொய்யா என்று தெரியாமல் சிலர் பரப்பிய செய்தி எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விட்டது. யாகாவாராயினும் நா காக்க என்று வள்ளுவர் கூறுகிறார். இதன் பொருள் யாராய் இருந்தாலும் தன் நாவை காக்க வேண்டும் என்பதே. ஏனெனில் வார்த்தைகள்தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது. இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் நாவின் ஆபத்தைக் குறித்து விளக்குகிறது.

நாவு நம் உடலில் ஒரு சிறிய அவயவம்தான். ஆனால் அது இரண்டு பெரிய தீமைகளை விளைவிக்கும். ஒன்று பெருமையானவைகளை பேசும். சிலரோடு நாம் பேசவே அச்சப்படுவோம். ஏனெனில் தங்கள் பெருமையையே நாளெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். நாவின் இரண்டாவது தீமை ஒரு சிறிய நெருப்பு பெரிய காட்டையே கொளுத்தி விடுவதுபோல பெரும் தீமையை நிகழ்த்திவிடும். இயேசு கிறிஸ்து தன் வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு கையாண்டார். ஒரு இடத்திலும் தன்னை பற்றி அவர் பெருமையாக பேசினதில்லை. அவரை எல்லாரும் தேவ குமாரன் என்று அழைத்தார்கள். இயேசுவோ தன்னை மனுஷ குமாரன் என்றே அழைத்தார். நன்மையானவைகளை மட்டுமே பேசினார்.

அவரது வார்த்தைகள் இன்றுவரை உலகத்தில் நன்மையானவைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக இந்த சிறியரில் ஒருவருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார். இந்த வார்த்தையை அடிப்படையாகக் கொண்டே கிறிஸ்தவ சேவை நிறுவனங்கள் துவங்கப்பட்டன. அன்னை தெரசா தொழு நோயாளிகளைப் பராமரித்தார். இலவச விடுதிகள், இலவச கல்வி நிலையங்கள், இலவச மருத்துவமனைகள் என கிறிஸ்தவம் எளிய மக்களுக்கான பல்வேறு நற்பணிகளை உலகம் முழுவதும் செய்து வருகிறது. இதுவே வார்த்தையின் ஆற்றல்.

எனவே நாமும் நம்முடைய வார்த்தைகளைக் கவனமாய் கையாள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நாம் பேசும் வார்த்தைகள் நன்மை விளைவிக்குமா தீமை விளைவிக்குமா என்று ஒருமுறை யோசிக்க வேண்டும். தீமை விளைவிக்கும் என்று உணர்வோமானால் அதை உடனே நிறுத்திவிட வேண்டும். வாழ்வு தரும் வார்த்தைகளை பேசுவோம்.

அன்புள்ள பிதாவே, நாங்கள் மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும்படி பேசாமலிருக்க எங்கள் நாவை காக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

வார்த்தைகளின் ஆற்றல்2025-10-08T06:07:20+00:00

மரியாதையின் அவசியம்

சங்கீதம் 96 : 1-9                                 08 அக்டோபர் 2025, புதன்

“… அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.” – அப்போஸ்தலர் 10 : 25

காலில் விழுந்து வணங்கும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் காலம் காலமாக இருந்து வருகிறது. திருமண நிகழ்வில் மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் தங்கள் தலைவரின் காலில் விழுந்து தங்கள் மரியாதையை செலுத்துவார்கள். ஆனால் காலில் விழும் முறை சரியானதா என்ற விவாதம் உண்டு, பொதுவாக கிறிஸ்தவர்கள் இம்முறையை பின்பற்றுவதில்லை. ஆனால் இந்த நாளுக்குரிய தியானப் பகுதியில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் பாதத்தில் விழுந்ததை குறிப்பிடுகிறது. அதைக் குறித்து விளக்கமாகக் காண்போம்.

கொர்நேலியு என்பவர் இராணுவத்தில் நூறு பேருக்குத் தலைவராக பணி செய்தவர். அவர் பேதுருவை தன் வீட்டிற்கு அழைத்தார். பேதுரு வீட்டிற்கு வந்தவுடன் கொர்நேலியு பேதுருவின் பாதத்தில் விழுந்து வணங்கினார். ஆனால் பேதுருவோ அவரை தூக்கியெடுத்தார். “எழுந்திரு நானும் ஒரு மனிதன்தான்” என்றார். இதன்மூலம் ஒரு செய்தியை பேதுரு இந்த உலகத்துக்கு அறிவிக்கிறார். அது என்னவெனில் ஒரு மனிதன் கடவுளின் பாதத்தில்தான் விழ வேண்டுமேதவிர, மனிதனின் பாதத்தில் அல்ல.

இந்த நாளுக்குரிய வாசிப்புப் பகுதியில் சங்கீதக்காரர் ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும், வல்லமையையும் செலுத்துங்கள். கர்த்தருக்கே அதை செலுத்துங்கள் என்று குறிப்பிடுகிறார். அதாவது கடவுள் மட்டுமே மகிமைக்குரியவர் என்று வலியுறுத்துகிறார். எனவேதான் கிறிஸ்தவர்களாகிய நாம் யாருடைய காலிலும் விழுவதை ஊக்கப்படுத்துவதில்லை.

நம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள பல மனிதர்களை மதிக்கிறோம். வாழ்த்துகிறோம், புகழுகிறோம். குறிப்பாக நாம் வேலை செய்யும் இடங்களில் உள்ள மேலதிகாரிகளை பெரிதும் மதிக்கிறோம். அதேபோல் எல்லாருக்கும் மேலானவரும் நம்மைப் படைத்து பாதுகாத்து வருகிறவருமான, சர்வவல்ல கடவுளுக்குரிய மகிமையை, கனத்தை செலுத்த வேண்டியது அதிக அவசியம்.

பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிறோம். கடவுளை எப்படி கனப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் கற்றுதர வேண்டும். ஆலயத்தில் அமரும்முறை, ஜெபிக்கும் முறை, திருவிருந்து ஆராதனையில் நடந்துகொள்ளவேண்டிய விதம் அனைத்தையும் கற்றுத்தர வேண்டும்.

அன்பின் தந்தையே, உம்மை மதித்து வாழ எங்களுக்குக் கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மரியாதையின் அவசியம்2025-10-06T10:43:37+00:00

ஏற்றுக்கொள்ளும் அன்பு

யோனா 4 : 1-4                                                  07 அக்டோபர் 2025, செவ்வாய்

“தகப்பனோ வெளியே வந்து,  அவனை வருந்தியழைத்தான்.” – லூக்கா 15 : 28

இந்த நாளுக்குரிய தியானப் பகுதியில் இயேசு அழகான உவமையை கூறினார். ஒரு பெரிய செல்வந்தரான தகப்பனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் பொறுப்புள்ளவன். தன் தந்தைக்கு கீழ்படிந்து வந்தான். இளையவனோ தகப்பனிடம் வந்து எனது சொத்தை பிரித்துக் கொடுங்கள் என்று சண்டையிட்டான். தகப்பனும் அவனுக்கு சேர வேண்டியதை பிரித்துக் கொடுத்தான். அவனோ வெளியூருக்கு சென்று ஊதாரித்தனமாக அனைத்தையும் செலவிட்டான். நிற்கதியாக நின்றான். எங்கே போவது என்று அவனுக்கு தெரியவில்லை. பன்றி மேய்க்கும் வேலைதான் கிடைத்தது. சரியான கூலி இல்லாமல், வேளைக்கு உணவில்லாமல் தவித்தான். பன்றிக்கு வைக்கும் தவிடை சாப்பிட்டு பசியாற விரும்பினான். அதைக்கூட அவனுக்கு யாரும் கொடுக்கவில்லை.

ஒருநாள் அமைதியாக அமர்ந்து தன் தகப்பனைப்பற்றி சிந்தித்தான். அவனது துன்பம் அவன் செய்த தவறை உணர்த்தியது, மனம் வருந்தினான். தன் தகப்பனிடம் போக முடிவெடுத்தான். தகப்பன் ஏற்றுக் கொள்வாரா என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது. எனவே தன் தகப்பனிடம் சென்று தான் செய்த தவறை அறிக்கை செய்து அவரிடத்தில் வேலை கேட்க முடிவெடுத்தான். தன் சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரனாக வாழ்ந்தாலே போதும் என்று தீர்க்கமாக தீர்மானித்தான். தன் தகப்பன் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் அருகில் வரும்போதே தகப்பன் அவனைக் கண்டு ஓடி வந்து கட்டி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தான். மகன் தகப்பனிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். தகப்பனோ தன் வேலைக்காரர்களை நோக்கி இவனுக்கு விலையுயர்ந்த ஆடை கொடுங்கள். இவன் கைக்கு மோதிரம் கொடுங்கள். விருந்து உண்டு பண்ணுங்கள் என்று வீட்டையே திருவிழாவாக்கினான்.

மூத்தவன் வயலில் தன் வேலைகளை முடித்து வீடு திரும்பினான். வீட்டில் இசை, நடன சத்தத்தை கேட்டான். வேலைக்காரன் ஒருவனை அழைத்து நடந்ததை அறிந்தான். கோபமடைந்து வெளியே நின்றான். தகப்பன் வந்து வருந்தி அழைத்தான். மூத்தவனோ, “இத்தனை வருஷமும் உமக்கு கீழ்படிந்து வாழ்ந்தேன். எனக்காக ஒரு ஆட்டைகூட அடித்ததில்லையே. வேசித்தனம் செய்து தன் ஆஸ்திகளை அழித்துப் போட்ட இவனுக்காக நீர் விருந்தை ஆயத்தம் செய்தீரே” என்றான். தகப்பனோ, “நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். என்னிடத்தில் உள்ளவையெல்லாம் உனக்குதான். இவன் மரித்தான், திரும்பவும் மனம் திரும்பி வந்திருக்கிறான். அதற்காக நாம் மகிழ வேண்டும்” என்றார்.

இதுவே பெற்றோரின் அன்பும் கடவுளின் அன்பும்கூட. அவர் அனைவரையும் நேசிக்கிறார். உங்களையும் நேசிக்கிறார். மனந்திரும்பி வருகிற யாரையும் தள்ளமாட்டார். தன் சொந்த மகனாக-மகளாக ஏற்றுக் கொள்வார். யார் வெறுத்தாலும் இயேசு வெறுக்கமாட்டார்.

அன்பின் தந்தையே, உமது அன்பில் நாங்கள் எப்போதும் வாழ எங்களை வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஏற்றுக்கொள்ளும் அன்பு2025-10-03T07:06:58+00:00

கவனமாகப் பார்த்துக் கொள்வோம்

1 கொரிந்தியர் 6 : 19-20                              06 அக்டோபர் 2025, திங்கள்

“ஐயோ என் ஆண்டவரே அது இரவல் கோடாரியாயிற்றே என்று கூவினான்.” – 2 இராஜாக்கள் 6: 5

இரவல் பெறுவது என்பது காலம் காலமாக நம் வாழ்வில் நடைமுறையில் இருக்கிற வழக்கம். ஒரு பொருளை இரவலாக பெற்றால் உரியவரிடம் சரியாக திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் அது தன்மானத்திற்கு இழுக்காக மாறும். ஒருமுறை பக்கத்து வீட்டிலிருந்து ஒரு குடும்பம் ஏணியை வாங்கியது. அதை உபயோகப்படுத்தும்போது தவறுதலாக அதன் ஒரு கட்டை உடைந்து விட்டது. உடனடியாக ஏணி சரி செய்கிற ஒருவரை அழைத்து சரிசெய்த பின்னரே திருப்பி கொடுத்தார்கள். இரவலாக பெற்றதை சரியாக திருப்பி கொடுப்பது நற்பண்பு. இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் அதைப்பற்றிதான் பேசுகிறது.

எலிசா தீர்க்கதரிசியின் சீடர்கள் தாங்கள் குடியிருக்கும் இடம் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தனர். எனவே வேறொரு இடத்தில் குடியேற விரும்பினர். அதற்காக ஓர் இடத்தை தெரிந்தெடுத்து அந்த இடத்தில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கூடாரம் அமைக்க சில மரங்களை வெட்டும்போது ஒருவருடைய கையில் இருந்த கோடாரி தவறி யோர்தான் நதியில் விழுந்தது. உடனே அவர், ‘ஐயோ ஆண்டவரே அது இரவலாக வாங்கப்பட்டதே’ என்று சத்தமிட்டார். ஆம் இரவலாக பெற்றதை உரியவரிடம் சரியாக ஒப்படைக்க வேண்டும். நாமும் அந்த கவனத்தோடும் அக்கறையோடும்தான் இந்த உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் ஒன்றை மறந்து போகிறோம். நம்முடைய உடலும் உயிரும்கூட இரவலாக பெறப்பட்டதுதான். அதை நாம் எவ்வளவு கவனாமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உடல், உயிர், அதன் இயக்கம் நாம் உண்டாக்கியவை அல்லவே. கடவுளல்லவா தமது கிருபையால் நமக்கு தந்திருக்கிறார். இதை பவுல் நமக்கு இன்றைய வாசிப்புப் பகுதியில் நியாபகப்படுத்துகிறார்.

இரவலாகப் பெறப்பட்ட இந்த உடலை கிறிஸ்துவின் மன்னிப்பினால் பெற்றுக் கொண்டதுதான் இந்த புதிய வாழ்வு. இச்சைகளால் இருதயத்தை நிரப்பி நம் வாழ்வை கெடுத்துக் கொள்வது எவ்வளவு பெரிய தவறு. அளவான ஆரோக்கியமான உணவு அருந்த வேண்டும். சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த உடலை தூய்மையாகப் பேணி காக்க வேண்டும். இது நம்முடையதல்ல. அதேபோல் தவறாமல் ஆலயத்திற்குச் சென்று இந்த ஆத்துமாவை காத்துக் கொள்ள வேண்டும். நாம் கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். இதை உணர்ந்து நம் உடலையும் வாழ்வையும் கவனமாய் காத்துக் கொள்வோம்.

அன்பின் பிதாவே, நீர் தந்த உடலையும், கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்ட இந்த புது வாழ்வையும் கவனமாக காத்துக் கொள்ள கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கவனமாகப் பார்த்துக் கொள்வோம்2025-10-03T07:04:22+00:00

கடவுளின் சாயல்

ரோமர் 11 : 33-35                                        05 அக்டோபர் 2025, ஞாயிறு

“வானங்கள் கடவுளின் மகிமையைப் பிரஸ்தாபிக்கின்றன; ஆகாய மண்டலம் அவர் கரங்களின் கிரியையை விவரிக்கிறது.”
– சங்கீதம் 19 : 1

இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் வானங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. வானம் என்றுதானே குறிப்பிட வேண்டும்! வானங்கள் என்பது பன்மைதானே… இது எப்படி சாத்தியமாகும் என்ற குழப்பம் எனக்குள் தோன்றியது. இதை தெரிந்துகொள்ள ஆவலானேன். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா (NASA), இந்த வானம் முடிவல்ல என்கிறது. இதேபோல் இன்னொரு பால்வெளி மண்டலம் இருக்கலாம் என்று கூறுகிறது. அப்படியானால் திருமறை எவ்வளவு துல்லியமான அறிவியல் உண்மைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. உயிர்கள் வாழும் ஆற்றல் பெற்ற நமது பூமியும் அதனோடு இணைந்த கோள்களும் அழகானவை. சூரியனை மையமாகக் கொண்டு இயங்கும் விந்தை ஆச்சரியமானது. இந்த அதிசயத்தின் இரகசியம் என்ன என்பதைத்தான் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி பேசுகிறது.

அதென்னவெனில் இந்த அதிசயங்கள் கடவுளின் மகிமையை நமக்கு வெளிப்படுத்துகிறது. சங்கீதக்காரர் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் படைத்தவரின் பேராற்றலை பிரதிபலிக்கிறது என்று நமக்கு விளக்குகிறார். படைக்கப்பட்ட நாமும் படைத்தவரின் மகிமைக்கு சான்றுதான். எல்லாவற்றையும் படைத்த கடவுள் அனைத்தையும் நல்லது என்று கண்டார். நம்மையும் அவரே படைத்திருக்கிறார். மண்ணில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் படைத்தவரின் மகிமையை தரித்திருக்கிறோம். உங்கள் உருவம் அவரால் வடிவமைக்கப்பட்டது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உருவ கேலி செய்யப்பட்ட சகேயுவை நேசித்தார். இவனும் ஆபிரகாமின் குமாரனே என்று அங்கீகரித்தார்.

ஆனால் நம்மில் சிலரோ தன்னைப்பற்றியும் தன் தோற்றத்தைப்பற்றியும் கவலை கொள்ளுகிறோம். நான் இன்னும் அழகாக இல்லை என்றெல்லாம் கவலை கொள்ளுகிறவர்கள் உண்டு. இப்படிப்பட்ட கவலைகள் உங்களுக்குள் இருக்குமானால் இன்றைக்கே அதை தூக்கி எறியுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவரது தோற்றத்தைப்பற்றிய கவலை இருக்குமானால் அந்த கவலையை நிறுத்துங்கள்.

நீங்கள் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். உங்கள் தோற்றம் கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகிறது. அதேபோல் பிறரது தோற்றத்தையும் கேலி செய்யாதீர்கள். அவர்களும் கடவுளின் சாயல். அவர்கள் தோற்றத்தில் கடவுளின் மகிமை வெளிப்படுகிறது. எனவே உருவ கேலிகளை அறவே தவிர்ப்போம். அனைவரது தோற்றத்திலும் கடவுளின் சாயலைக் கண்டு கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.

அன்பின் பிதாவே, உமது படைப்பின் மகத்துவத்தை எங்களில் வெளிப்படுத்தியதற்கு நன்றி. பிறரின் தோற்றத்திலும் உமது ஆற்றலைக் கண்டு வாழ கிருபை புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளின் சாயல்2025-10-03T07:01:10+00:00

பாராட்டுங்கள்

தீத்து 1 : 1-2                                     04 அக்டோபர் 2025, சனி

“…ஆதலால், உங்கள் அன்பையும் நாங்கள் உங்களைப் பற்றிய பெருமை பாராட்டிச் சொன்னதையும் சபைகள் காணும்படி அவர்களுக்கு விளங்கப்பண்ணுங்கள்.” – 2 கொரிந்தியர் 8 : 24

மனித மனம் இரண்டு விஷயங்களுக்காக ஏங்கும். ஒன்று மரியாதை இன்னொன்று பாராட்டு. குறிப்பாக பாராட்டுக்கள் ஒருவரை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக செயல்படும். பாராட்டுக்கள் மகிழ்ச்சி தரும். பாராட்டுக்கள் நல் உறவை உருவாக்கும்.

இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் பவுல் தன்னோடு இணைந்து பணி செய்த தீத்துவைப் பற்றியும் மற்ற சகோதரர்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். குறிப்பாக தீத்துவை, அவர் எனது நண்பர் என்றும் எனது உடன் பணியாளர் என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் தன்னோடு பணி செய்யும் அனைவரையும் சபைகளின் தூண்கள். கிறிஸ்துவுக்கு மகிமையானவர்கள் என்று பாராட்டுகிறார்.

உண்மையாக உழைப்பவர்களை பாராட்ட வேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவும்கூட பாராட்டத் தயங்காதவர். நூற்றுக்கதிபதி ஒருவர் இயேசுவைத் தேடி வந்தார். அவரது வேலைக்காரன் சுகவீனமாய் இருப்பதாகவும் அவனை சுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே இயேசு அவருடன் அவரது வீட்டிற்கு போகலாம் என்றார். ஆனால் அவரோ இயேசுவிடம், ‘உம்முடைய பாதம் என் வீட்டில் படுவதற்கு நான் தகுதியானவல்ல. நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வீட்டு வேலைக்காரன் குணமடைவான்’ என்றார். இயேசுவோ அவன் விசுவாசத்தைக் கண்டு, “இப்படியொரு விசுவாசத்தை இஸ்ரவேலர்களிலும் நான் கண்டதில்லை” என்று அவரை மனதார பாராட்டினார்.

நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாராட்டுவது எவ்வளவு அவசியம். நம் குடும்பத்திலிருந்தே பாராட்டுகள் துவங்க வேண்டும். கணவர் மனைவியையும், மனைவி கணவரையும் பாராட்ட வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திறமைகளைப் பாராட்டத் தயங்கக் கூடாது. நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், உடன் பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறப்பாய் செயல்படும்போது மனதார பாராட்ட வேண்டும். பாராட்டுகள் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். மேலும் நன்றாய் உழைக்க வேண்டும் என்ற இனிய சிந்தையை நமக்குள் உருவாக்கும். திட்டிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக அது உறவுகளைக் கெடுக்கும். மனதார பாராட்டுவோம். மனித மாண்பை காப்போம்.

அன்பின் தந்தையே, நாங்கள் எங்களைச் சுற்றியுள்ள மக்களின் உழைப்பை அங்கீகரித்து பாராட்டுகிற மனப்பான்மையோடு வாழ எங்களுக்கு கிருபை தந்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பாராட்டுங்கள்2025-10-03T06:58:13+00:00

கலங்காதீர்கள்

தரிசனம் 20 : 1-3                                        03 அக்டோபர் 2025, வெள்ளி

“இதோ என்றென்றைக்கும் ஜீவனுள்ளவராயிருக்கிறேன்.” – தரிசனம் 1 : 18

கடந்த ஆண்டு கேரளாவில் வயநாடு பகுதியில் பெரிய நிலச் சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மரித்து போனார்கள். அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாதிப்புகள் மிக கடுமையாக இருந்தது. இந்த சம்பவம் இன்றுவரை அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. மரணமடைந்த தங்கள் உறவுகளின் உடலைகளை தேடி கண்ணீரோடு மக்கள் அலைந்தனர். இது கல் நெஞ்சையும் கரைப்பதாக அமைந்தது.

மரணம் நம்மை பயமுறுத்தும், கலங்க செய்யும். எனவே மரணத்திற்கு அஞ்சாதவர்களே இல்லை. ஏனென்றால் மரணம் மனித வாழ்வின் முடிவாக அமைகிறது. இன்றைய தியானப் பகுதி, ‘மரித்தேன் இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்’ என்று துவங்குகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார். ஆனால் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இன்றைக்கும் அவர் உயிரோடிருக்கிறார், என்றைக்கும் அவர் உயிரோடிருப்பார். அதைத்தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. இது எப்படி சாத்தியம் என்றால், மரணத்தின் திறவு கோல் அவரிடத்தில்தான் இருக்கிறது. திறவு கோல் என்றால் சாவி என்று பொருள். அப்படியானால் ஒருவர் மரணமடைவதை தடுக்கவோ அல்லது அனுமதிக்கவோ அவரிடம் அதிகாரமுள்ளது.

இந்த வசனத்தின் வழியாக கிறிஸ்து நமக்கு தருகிற செய்தி மரணத்தைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. இதையே பவுல், “கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்” என்றார். மரணம் எப்படி ஆதாயமாகிறதென்றால், ‘என்னில் விசுவாசம் வைக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ என்று இயேசு கூறுகிறார். கிறிஸ்துவை நம்பி வாழ்வோருக்கு மரணம் முடிவல்ல. கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிற புதிய வாழ்வின் துவக்கம்.

மரணத்தைப்பற்றிய கலக்கம் இருக்குமானால் கலங்காதீர்கள். மரணத்தை கண்டு அஞ்சாதீர்கள். மரணத்தின் மீது அதிகாரம் கொண்ட இயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார். உங்களைக் காப்பார். உங்களை வழி நடத்துவார். நீங்கள் நேசித்த ஒருவரை இழந்து அவர்கள் நினைவால் வேதனைப்படுவீர்களானால் இப்போதே உங்கள் கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். மரணம் அவருக்கு முடிவல்ல. மரணத்தின் மீது அதிகாரம் கொண்ட கிறிஸ்து நித்திய வாழ்வின் வாசல்களை திறப்பார்.

அன்பின் கடவுளே, எங்களுக்கு எதிராக நேரிடும் தீங்கிலிருந்து கிறிஸ்துவின் வழியாய் எங்களை பாதுகாத்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கலங்காதீர்கள்2025-09-30T10:50:56+00:00

தாழ்மை வேண்டும்

லூக்கா 18 : 9-14                                02 அக்டோபர் 2025, வியாழன்

“தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.” – லூக்கா 18 : 14

இன்றைய தியானப் பகுதி இயேசுவின் ஓர் உவமையாகும். இரண்டு மனிதர்கள் ஜெபம் பண்ணுவதற்காக தேவாலயத்திற்கு போனார்கள். ஒருவர் பரிசேயர். அவர்கள் அக்காலத்தில் மிகவும் படித்தவர்கள். திருமறையை தங்கள் வாழ்வில் கைக்கொண்டவர்கள். மிகுந்த பக்தியாய் வாழ்ந்தவர்கள். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர்கள். இன்னொருவர் ஆயக்காரர். அவர்கள் வரி வசூலிப்பவர்கள். பொதுவாக வரி வசூலிப்பவர்கள் வாங்க வேண்டிய வரியைவிட கூடுதலாக வசூலிப்பார்கள். இதனால் மக்கள் மத்தியில் இவர்கள் தங்கள் நன்மதிப்பை இழந்தவர்கள்.

இப்போது இந்த இருவரும் ஜெபிக்க ஆலயத்திற்கு வந்துள்ளனர். பரிசேயர் ஆலயத்திற்குள் வந்து நின்று, ‘கடவுளே நான் அநியாயக்காரர், விபசாரக்காரர், போன்றவர்களை போலல்ல. இந்த ஆயக்காரனைப்போலவும் இல்லை. அதற்காக உமக்கு நன்றி. வாரத்தில் இரண்டு முறை உபவாசமிருக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்துகிறேன்’ என்று தனக்குள்ளே வேண்டுதல் செய்தார்.

ஆனால் வரி வசூலிப்பவரோ, தூரத்தில் நின்று, தன் கடவுளை நேராக பார்க்கவும் துணிவில்லாமல், தன் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்’ என்றார். இந்த இருவரில் வரிவசூலிப்பவரே நீதிமானாகத் தீர்க்கப்பட்டார் என்று இயேசு கூறுகிறார்.

இந்த எளிய உவமையில் பெரிய உபதேசத்தை வைத்திருக்கிறார். அதென்னவெனில் தன்னை உயர்வாக நினைத்ததால் இன்னொருவனை தாழ்வாக எண்ணுகிறான். உண்மையில் அவன் செய்தவை அவனது கடமைகள். கடமைகளைச் செய்வதில் என்ன பெருமை உண்டு. இப்படி தன்னைதானே உயர்வாக எண்ணுதல் பிறரை இழிவாக எண்ணும் எண்ணத்திற்கு இட்டுச் செல்கிறது. ஏழைகளை, பிற மதத்தவரை, பிற இன மொழி மக்களை இழிவாக நினைக்கும் சிந்தை இந்த தற்பெருமையிலிருந்தே வருகிறது. தாழ்மையை தரிப்பதே கிறிஸ்துவின் குணம், கிறிஸ்தவத்தின் குணம்.

பிதாவே, நாங்கள் பிறரை இழிவாக எண்ணாமல் தாழ்மையை தரித்துக்கொள்ள வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

தாழ்மை வேண்டும்2025-09-30T10:48:00+00:00
Go to Top