vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

நம்புங்கள் நல்வாழ்வு தருவார்

மார்க்கு 10 : 17-22                                            21 அக்டோபர் 2025, செவ்வாய்

“இந்த வார்த்தையை கேட்ட பொழுது துக்கத்தோடு போய்விட்டான்.”– மத்தேயு 19 : 22

இந்த உலகத்தில் வாழ்வதற்கு பணம் தேவை. ஆனால் தற்போது பணத்திற்காக வாழ்க்கை என்ற நிலை வந்துவிட்டது. மனிதர்கள் பணத்திற்காக தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக சண்டைகள், கொலைகள் நடக்கிறது. குறுக்கு வழியில் பெரும் பணம் சேர்க்க ஊழல்கள் பெருகிவிட்டது. எதை இழந்தாலும் பணத்தை இழக்க யாரும் தயாராக இல்லை. இந்த நாளுக்குரிய தியானப்பகுதியும் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஒருவர் இயேசுவைத் தேடி வந்தார். நான் விண்ணுலகம் போக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இயேசுவோ 10 கட்டளைகள்படி வாழ வேண்டும் என்றார். அவரோ நான் சிறு வயது முதல் பின்பற்றி வருகிறேன் என்று பதிலுரைத்தார். இயேசுவோ ஆனாலும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு என்றார். நீ போய் உனக்குரியவைகளை விற்று ஏழைகளுக்கு கொடு என்றார். அவரோ இந்த வார்த்தையைக் கேட்டு துக்கம் அடைந்தார். இயேசுவைவிட்டு போய்விட்டார். அவர் பெரும் செல்வந்தராய் இருந்தார். அவரால் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிய முடியவில்லை. கடவுளைவிட, அவரது வார்த்தையைவிட செல்வமே முக்கியம் என்று முடிவெடுத்தார். இன்றைக்கு அநேகர் அப்படியே இருக்கின்றனர். பணம் பணம் என்று ஓடி கடவுளை மறந்து விடுகின்றனர்.

இதற்கு பொதுவான காரணம் ஒன்று உண்டு. பணத்தை நம்புகிற அளவுக்கு கடவுளை நம்புவதில்லை. பணம் இல்லை என்றாலும் கடவுள் என்னை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை இல்லை. இயேசு கூறுகிறார் ஆகாயத்துப் பறவைகளை கவனித்து பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்ப்பதும் இல்லை. ஆனாலும் கடவுள் அவைகளின் தேவைகளை தினந்தோறும் சந்திக்கிறார். நீங்கள் அவைகளைக் காட்டிலும் சிறப்பானவர்கள் என்று கூறுகிறார். இதை கடைப்பிடிக்கிற துணிச்சல் நமக்கு தேவை.

நம் வீட்டில் குறைவுகள் இருக்கலாம். தேவைகள் அதிகமாக இருக்கலாம். பணத்தை இழந்திருக்கலாம். வியாபாரத்தில் நட்டமாகியிருக்கலாம். இந்த தருணத்தில் நாம் கிறிஸ்துவை நம்ப வேண்டும். இயேசுவை நம்புவதற்கான சிறந்த தருணம் இதுவே. உறுதியாக நம்பினால் நல்வாழ்வை பெறுவோம்.

வல்லமையுள்ள கடவுளே, உம்மை மாத்திரம் நம்பி வாழ எங்களுக்கு அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நம்புங்கள் நல்வாழ்வு தருவார்2025-10-14T05:37:21+00:00

கிறிஸ்துவில் புது வாழ்வு பெறுவோம்

ரோமர் 13 : 11-14                                     20 அக்டோபர் 2025, திங்கள்

“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்.”– ரோமர் 13 : 14

இந்தியாவில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக குடிக்கின்றனர். குடிப்பழக்கம் விளையாட்டாக துவங்குகிறது. பின்னர் அது அடிமையாக்குகிறது. உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் மனதையும் பாதிக்கிறது. போதையில் பாவமும் பெருகுகிறது.

இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் பவுல் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அணிந்து கொள்ளுங்கள் என்றால் அவரைப்போல வாழ வேண்டும் என்பதாகும். இயேசு கனிவான வார்த்தைகளை பேசினார். தவறான பழக்க வழக்கங்களுக்கு விலகி இருந்தார். பாவம் செய்யாதவராக இருந்தார். பிறருக்கு நன்மை செய்கிறவராக வாழ்ந்தார். அவரை முன்மாதிரியாகக்கொண்டு வாழ பவுல் அழைக்கிறார்.

சாதாரண மனிதர்களாகிய நாம் இப்படி வாழ்வது சாத்தியம் இல்லை. பாவம் நமக்குள் வாசம் செய்கிறது. உடல், உலகம் மற்றும் பிசாசு போன்றவை நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனாலும் கிறிஸ்து சிலுவையில் நம்மை மன்னிக்கிறார்.

மன்னிப்பை பெற்ற நாம் அதற்குத் தகுதியாய் வாழ அவரே உதவி செய்வார். ஜெபத்தினாலும், துதியினாலும் திரு சாக்கிரமெந்தினாலும், நம்மை பெலப்படுத்துகிறார். தனது திருவார்த்தையால் வழி நடத்துகிறார். நம்முடைய அறிவில் பெலத்தில் இயேசுவை அணிந்துகொள்ள முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். கிறிஸ்துவை அணிந்துகொண்டு நாம் வாழும் சமுதாயத்தில் முன்மாதிரியாக நடப்போம்.

வல்லமையுள்ள கடவுளே, கிறிஸ்துவை அணிந்து கொண்டு வாழ எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கிறிஸ்துவில் புது வாழ்வு பெறுவோம்2025-10-14T05:34:58+00:00

அரணான கடவுள்

ஏசாயா 61 : 1-5                               19 அக்டோபர் 2025, ஞாயிறு

“கர்த்தரின் நாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.” – நீதிமொழிகள் 18 : 10

ஊர்த் தலைவர் ஒருவர், அந்த கிராமத்தின் ஏரியை ஆக்கிரமித்து இருந்தார். அதே ஊரில் இருந்த ஒரு சமூக ஆர்வலர் இதை எதிர்த்தார். ஏற்கனவே நீர் நிலைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. எனவே இது கண்டிக்கத்தக்கது. ஆனால் ஊர் தலைவரோ சமூக ஆர்வலரை எச்சரித்தார், மிரட்டினார். ஆனால் எதற்கும் சமூக ஆர்வலர் அடிபணியவில்லை. ஒருநாள் சமூக ஆர்வலர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். உண்மையும் நீதியும் எங்கே இருக்கிறதோ அங்கே துன்பமும் சவால்களும் இருக்கிறது. எனவே உண்மைக்காக நீதிக்காக போராடுகிறவர்கள் எங்கே போவது என்று தவிக்கின்றனர். இந்த நாளுக்குரிய தியான வசனம் அதற்கான பதில் தருகிறது.

கடவுளின் பெயரே பெரிய கோட்டை. உண்மையுள்ளவர்கள் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறலாம் என்று சாலமோன் கூறுகிறார். உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்று கடவுளும் இதை உறுதி செய்கிறார். உண்மைக்காக நீதிக்காக இயேசு போராடினார். அடிமைத்தனத்தை உடைக்க உழைத்தார். இதனால் இயேசுவை கொலை செய்ய அதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டனர். பணம் கொடுத்து யூதாஸை வளைத்தனர். பொய் சாட்சிகளை உருவாக்கினர். சிலுவையில் அறைந்தனர். தாங்கள் இயேசுவை வீழ்த்தி விட்டதாக மகிழ்ந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி மூன்று நாள்கூட நீடிக்கவில்லை. மூன்றாம் நாள் இயேசு உயிரோடு எழுந்தார். உண்மைக்காக நீதிக்காக அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுகிறவர்களை வீழ்த்த முடியாது.

நாம் உண்மையாய் வாழ்வதால் துன்பத்தை அனுபவிக்கலாம். சோர்ந்து போக வேண்டாம். கிறிஸ்துவை உறுதியாக பற்றிக்கொள்வோம். அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பார். அரணான கோட்டையாக இருப்பார். நம் உழைப்பு வீண் போகாது. நன்மை செய்வதில் சோர்ந்து போக வேண்டாம்.

வல்லமையுள்ள பிதாவே, உண்மைக்கு குரல் எழுப்ப எங்களை பலப்படுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அரணான கடவுள்2025-10-14T05:31:07+00:00

நற்செய்தி அறிவிப்போம்

அப்போஸ்தலர் 11 : 21-26                                          18 அக்டோபர் 2025, சனி

“….. அற்பப் பிரயாசத்தினாலேயே நீ என்னைக் கிறிஸ்தவனாக்கிவிடலாம் என்றிருக்கிறாய்.” – அப்போஸ்தலர் 26 : 28

மதமாற்றம் என்ற வார்த்தை இந்தியாவிலுள்ள அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. இந்தியாவில் சில மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. பொதுவாக கிறிஸ்தவர்கள்தான் மதமாற்றம் செய்கிறவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்வதில்லை. இதைப்பற்றி இந்த நாளுக்குரிய தியானப் பகுதி நமக்குத் தெளிவாக புரிய வைக்கிறது.

பவுல் அடிகளார் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வந்தார். யூதர்களோ அவருக்கு விரோதமாக நின்றனர். அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் பவுல் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அகிரிப்பா என்பவர் முன்பாக நிறுத்தப்பட்டார். அகிரிப்பா தனது தரப்பு நியாங்களை தெரிவிக்க பவுலுக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போது பவுல் தனது வாழ்வைப் பற்றி பேச துவங்கினார். முதலில் நான் கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தினேன். தமஸ்குவிலுள்ள கிறிஸ்தவர்களை துன்புறுத்த ஆணை பெற்றேன். அதற்காக தமஸ்கு நோக்கி பயணித்தேன். போகிற வழியில் ஒரு ஒளி என்னை சுற்றிலும் பிரகாசித்தது. அதனால் தடுமாறி விழுந்தேன். அப்போது ‘சவுலே சவுலே’ என்றழைத்து இயேசுவே என்னோடு பேசினார். ‘ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்’ என்று கேட்டார். அப்போதுதான் இயேசுவின் அன்பைப் புரிந்துகொண்டேன் என்று பவுல் விளக்காமாக கூறினார். அகிரிப்பாவோ, அவரை இடைமறித்தார். “நீ என்னை கிறிஸ்தவனாக்கிவிடலாம் என நினைக்கிறாயா?” என்றார். அடித்தாலும் இயேசுவை பற்றி பேசுகிறார்.

இது திட்டமிட்டு நடப்பதில்லை. தன்னெழுச்சியாய் நடப்பது. நாம் சில நேரங்களில், அந்த கடை பிரியாணி அருமை… அந்த துணிக்கடையில் உடைகள் அழகாக உள்ளது… அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகச் சிறப்பு… என்றெல்லாம் கூறுகிறோமே, திட்டமிட்டா கூறுகிறோம். இப்படி சொல்வதால் நமக்கு எந்த நன்மையுமில்லை. ஆனாலும் கூறுவதன் நோக்கம் பிறருக்கும் பயன்படுமே என்பதுதான். அதேபோலதான் கிறிஸ்து இயேசுவில் பெற்ற நன்மையை அறிவிக்கிறோம். இயேசுவின் பாடுகளின் வழியே பெற்ற வாழ்வை அறிவிக்கிறோம். வாழ்வு பெற்றதை அறிவிப்பதில் என்ன தவறு. ஏற்பது ஏற்காததும் அவரவர் விருப்பம்.

கடவுளே, உம்மிடத்தில் பெற்ற நன்மைகளை அறிவித்து வாழ உதவி செய்யும். கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.

நற்செய்தி அறிவிப்போம்2025-10-14T05:27:30+00:00

பிள்ளைகளின் ஆசீர்வாதம்

சங்கீதம் 144 : 12-15                                      17 அக்டோபர் 2025, வெள்ளி

“எங்கள் குமாரர் விருட்சக் கன்றுகள் போல இளமையில் ஓங்கி வளருவார்கள்.” – சங்கீதம் 144 : 12

பெற்றோர் கடினமாக உழைக்கின்றனர். ஓய்வில்லாமல் ஓடுகின்றனர். வீண் செலவு செய்யாமல் பணத்தை சேகரிக்கின்றனர். தங்கள் மகிழ்ச்சியைப்பற்றி ஒரு நாளும் கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும். நன்றாய் சாப்பிட வேண்டும். நன்றாய் படிக்க வேண்டும். நல்ல வேலைக்கு போக வேண்டும். நிறைவான வருமானம் பெற வேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே. இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் பிள்ளைகளின் வாழ்வு நலமாய் அமைய வழி கூறுகிறது.

இன்றைய தியான வசனம் அப்பொழுது என்று துவங்குகிறது. அதாவது கடவுள் தமது மக்களை விடுதலை செய்யும்போது கிடைக்கும் நன்மைகளை கூறுகிறது. நமது குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் உயரமாய் வளரும் மரங்களைப்போல் இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் அரண்மனை கட்டுவதற்கு நேர்த்தியாய் செதுக்கப்பட்ட தலைக்கல் போலிருப்பார்களாம். இதுதானே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம். இந்த விருப்பத்தைப் பெறும் வழி விடுதலை. அந்த விடுதலை இயேசுவில் கிடைக்கிறது. நமக்காக சிலுவையில் தமது உயிரை தந்தவர். அவரில் விசுவாசம் வைப்போம். விசுவாசிக்கிறவர்கள் விடுதலை அடைவார்கள் என்று திருமறை கூறுகிறது.

என் பிள்ளைகள் கீழ்படியவில்லை என்ற கவலையோடிருப்பவர்கள் உண்டு. என் பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழ்கிறவர்கள் உண்டு. இயேசுவிடம் வருவோம். அவரில் நம்பிக்கை வைப்போம். அவரே நமது பிள்ளைகளின் வாழ்வை வளமாக்குவார். சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள். அவர்களை தடை செய்யாதிருங்கள் என்றார். தம்மிடம் வந்த சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கினார். நம்முடைய பிள்ளைகளையும் நேசிக்கிறார். அவர்களுக்கும் ஆசி வழங்குவார், நம்பிக்கையோடிருப்போம்.

அன்பின் கடவுளே, எங்கள் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.

பிள்ளைகளின் ஆசீர்வாதம்2025-10-14T05:23:45+00:00

கூட்டி சேர்ப்பவர்

மத்தேயு 10 : 1-8                                            16 அக்டோபர் 2025, வியாழன்

“காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.” – மத்தேயு 10 : 6

காணாமல்போன பிள்ளைகளின் பெற்றோரது தவிப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. குழந்தை எங்கிருக்கிறதோ, என்ன செய்கிறதோ என்று தெரியாமல் வலியோடும் வேதனையோடும் வாழ்கின்றனர். கடவுள் காணமல் போனவர்களைப்பற்றி கவலைப்படுகிறார். அதைப்பற்றிதான் இந்த நாளுக்குரிய தியானப்பகுதி பேசுகிறது.

கர்த்தர் தமது சீடர்களை முதன் முதலாக திருப்பணிக்கு அனுப்பினார். இஸ்ரவேலில் காணாமல் போனவர்களை தேடும்படி அவர்களுக்கு கட்டளையிட்டார். அதாவது, யாரெல்லாம் கர்த்தரை மறந்து வாழ்கிறார்களோ அவர்களைத் தேடி போகக் கட்டளையிட்டார். அவர்களை கூட்டி சேர்ப்பதில் கவனம் செலுத்தினார். தமது அன்பை புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்களையும் கடவுள் நேசிக்கிறார். பெற்றோரின் அன்பை புரிந்துகொள்ளாத பிள்ளைகள் உண்டு. இதனால் பிரிந்திருக்கிற குடும்பங்களும், உறவுகளும் உண்டு.

நம்மைவிட்டு பிரிந்து சென்றவர்களையும் நேசிப்போம். அவர்களை கூட்டி சேர்க்க முயற்சி செய்வோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மையல்லவா! ஆனால் இது எளிதானதல்ல. நமது அன்பை உதாசீனப்படுத்திப் போனவர்களை நம்மால் ஏற்க முடியாது. நமக்கு துரோகம் செய்து ஓடிப்போனவர்களை நாம் தேடி போகவேண்டிய அவசியம் இல்லைதானே. ஆனால் பாவம் செய்து கடவுளைவிட்டு பிரிந்தவர்கள் நாம். இயேசுவோ சிலுவையில் தம்மை பலியாக தந்து நம்மை சேர்த்துக் கொண்டாரே. அந்த அன்பை நாமும் தரித்துக் கொள்வோம். பிரிந்து போனவர்களை ஏற்றுக் கொள்ள கடவுள் நமக்கு பெலன் தருவார்.

அன்பின் தந்தையே, உமது சிலுவையின் அன்பை தரித்துக்கொண்டு வாழ கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கூட்டி சேர்ப்பவர்2025-10-14T05:20:25+00:00

கர்த்தருக்குக் கீழ்ப்படிவோம்

எபிரேயர் 12 : 1-3                                                        15 அக்டோபர் 2025, புதன்

“நீங்கள் நன்றாய் ஓடினீர்களே, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடுத்தது யார்? – கலாத்தியர் 5 : 7

கீழ்ப்படிதல் மிக முக்கியமான பண்பு. வீட்டில் குழந்தைகளுக்கு கீழ்ப்படிதலைக் கற்றுத் தருகிறோம். அதேபோல் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு கீழ்ப்படிதல் கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் கீழ்ப்படிதல்தான் நம்மை உயர்த்தும். பெற்றோருக்கு கீழ்ப்படிகிற பிள்ளைகள் வாழ்வில் உயருவர். பள்ளிக்கூடத்தில் கீழ்ப்படிகிற பிள்ளைகள் கல்வியில் உயருவர். அதேபோல் கடவுளுக்கு கீழ்ப்படிதல் அவசியமானது. கடவுளுக்கு கீழ்ப்படிகிற பிள்ளை ஞானத்தைப்பெறும், ஆசீர்வாதங்கள் பெறும், நித்திய ஜீவனைப் பெறும். ஆனால் கடவுளுக்கு கடைசிவரை கீழ்ப்படிந்து வாழ்வது சுலபமல்ல. அது ஒரு சவால். அதைத்தான் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி நமக்கு தெரிவிக்கிறது.

திருமறையில் சிம்சோன் என்ற இளைஞரை பற்றி வரலாறு உள்ளது. இவர் தாயின் கருவில் உருவாகும் முன்னே கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர். இஸ்ரவேலின் மீட்புக்காக கடவுள் அந்த இளைஞனை பயன்படுத்த விரும்பினார். அதற்கான ஆற்றலை கடவுள் அந்த இளைஞனுக்கு வழங்கினார். மாபெரும் சரீர பெலம் கொண்டவராக இருந்தார். இஸ்ரவேலரை கொள்ளையடித்து வந்த பெலிஸ்தியர்களுக்கு சிம்ம சொப்பனாமாக விளங்கினார். கழுதையின் தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார். அப்படிப்பட்ட பேராற்றலை கர்த்தருடைய ஆவியானவர் அவருக்கு கொடுத்தார். யாரும் நெருங்க முடியாத வீரனாய் இருந்தார் சிம்சோன்.

ஆனால் இந்த விசுவாச வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வழி விலகினார். இச்சை நிறைந்த மனிதனாகி ஒழுக்கமற்றவராக மாறினார். கடைசியில் ஒரு பெண்ணினால் தன் வலிமை இழந்து எதிரிகளால் கைது செய்யப்பட்டார். கண்கள் பிடுங்கப்பட்டார். மாவரைக்க வைத்தனர். அவரது விசுவாச வாழ்வு தோல்வியில் முடிந்தது. விசுவாசத்தில் நன்றாய் ஓடினவர் இச்சையில் வீழ்ந்து போனார்.

கலாத்திய திருச்சபை விசுவாசிகள் சிலரும் வழி விலகினர். அதைத்தான் பவுல் இங்கே கண்டிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்முடைய விசுவாச பயணத்தைக் கெடுக்க இங்கே பிசாசின் தந்திரங்கள் உண்டு. நாம்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உலகம் பாவம் பிசாசு போன்றவை நம்மை விழுங்க விரட்டிக் கொண்டே இருக்கும். அநேக கிறிஸ்தவர்கள் இதற்குள் சிக்கிக்கொள்கின்றனர். சிக்கிக் கொண்டால் நம் பயணம் தோல்வியில் முடியும். கீழ்படிந்தால் ஞானத்தையும், ஆசீர்வாதங்களையும், நித்திய ஜீவனையும் பெறுவோம். நமது பிள்ளைகளுக்கு இதை கற்றுத்தர வேண்டும். குறிப்பாக வாலிப பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். நாம் கர்த்தருக்கேற்ற பிள்ளைகளாய் வாழ அழைக்கப்பட்டவர்கள்.

அன்பின் தந்தையே, விசுவாச பயணத்தில் தடையின்றி ஓட கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கர்த்தருக்குக் கீழ்ப்படிவோம்2025-10-14T05:18:02+00:00

நம் தேவைகளைச் சந்திப்பார்

சங்கீதம் 89 : 11-14                           14 அக்டோபர் 2025, செவ்வாய்

“வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்தே எனக்குச் சகாயம் வரும்.” – சங்கீதம் 121 : 2

இந்த உலகத்தில் நம்மிடமிருந்து ஒத்தாசை பெறுவதற்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு ஒத்தாசை செய்வதற்கு யார் இருக்கிறார்கள். நமது வீடுகளில் பெற்றோர் கவலைப்படுவதே எனக்கு இந்த வீட்டில் ஒத்தாசை செய்ய யாருமே இல்லை என்பதுதான். சின்ன சின்ன வேலைகளில் மட்டுமல்ல நமது துன்பத்தில், நமது கண்ணீரில், நமது தேவைகளில் ஒத்தாசை செய்ய யாருமே இல்லையே என்று கலங்கி நிற்கிறோம். இந்த நாளுக்குரிய தியான வசனம் நமக்கு உதவி கிடைக்கும் இடத்தைப்பற்றி பேசுகிறது. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் இருக்கிறார். அவர் நமக்கு ஒத்தாசை செய்வார்.

சாரிபாத் என்ற ஊரில் ஒரு விதவை இருந்தார். அவருக்கு ஒரே மகன் இருந்தார். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொடிய பஞ்சம் நிலவியது. அவள் வீட்டில் ஒரு கைப்பிடி மாவும், ஒரு கரண்டி எண்ணெயும் மட்டும் இருந்தது. உணவுக்காக விறகு எடுக்க வெளியே வந்திருந்தாள்.

அந்நேரத்தில் எலியா என்ற கடவுளின் திருப்பணியாளர் அப்பெண்ணை வழியில் சந்தித்தார். எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடு என்றார். அவள் மறுக்காமல் கொண்டுவர சென்றாள். அவள் செல்லும்போதே சாப்பிட ஏதாகிலும் கொண்டுவா என்றார். அவளோ எங்கள் வீட்டில் ஒரு கைப்பிடி மாவும் கொஞ்சம் எண்ணெயும்தான் இருக்கிறது. இதை சாப்பிட்டு அடுத்த வேளை உணவில்லாமல் நானும் மகனும் செத்துபோவோம். ஆனாலும் நீர் கேட்டதால் கொண்டு வருகிறேன் என்றாள்.

எலியாவோ எனக்கு முதலில் கொண்டு வா. உன் வீட்டின் அப்பமும் எண்ணெயும் குறைந்து போகாது என்றார். அதேபோல் செய்தாள். பஞ்ச காலம் தீரும் வரை அவள் வீட்டில் மாவும் எண்ணெயும் குறைந்து போகவில்லை. அவள் வறுமையில் கர்த்தர் ஒத்தாசை அனுப்பினார். அவள் வீட்டின் குறைவை நிறைவாக்கினார்.

நம் வீட்டின் தேவைகளைப்பற்றிய கவலை நமக்குள் உண்டு. யாரிடத்தில் உதவி கேட்பதென்று தெரியாமல் தவிக்கிறோம். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஒத்தாசை செய்ய யாருமே இல்லையே என்று மனதுக்குள் புலம்புகிறோம். கடவுள் நம்மோடிருக்கிறார். மனுமக்கள் யாவரையும் மீட்க குமாரனாய் இந்த உலகிற்கு வந்தவர். சிலுவையில் தம்மையே நமக்காக பலியாய் தந்தவர்.

வானத்தையும் பூமியையும் படைத்தவர். அனைத்து உயிர்களையும் அற்புதமாய் பராமரிப்பவர். அவைகளின் தேவைகளை சந்திப்பவர். இன்றைக்கும் பிதாவின் வலது பாரிசத்தில் நின்று பரிந்து பேசிக்கொண்டிருப்பவர். நம்மை அறிவார், நம்முடைய தேவைகளை அறிவார். நமக்கு ஏற்ற நேரத்தில் ஒத்தாசை அனுப்புவார். கலக்கத்தைவிட்டு கர்த்தரை பற்றிக்கொள்வோம்.

அன்பின் தந்தையே, எங்கள் குடும்ப தேவைகளை அற்புதமாய் சந்தித்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நம் தேவைகளைச் சந்திப்பார்2025-10-08T06:24:06+00:00

வாழ்வை ஆசீர்வதிப்பார்

ஆதியாகமம் 32 : 27-29                                  13 அக்டோபர் 2025, திங்கள்

“நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தம்.” – யோவான் 1 : 42

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் பெயர்கள் உண்டு. பெயரில்லாமல் ஒருவருமில்லை. பெயர்கள்தான் நம்முடைய அடையாளம். ஆனால் பொதுவாக பெயருக்கும் வாழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. யாராவது ஒருவரது பெயரை நினைத்துக் கொள்ளுங்கள். அவரது பெயருக்கும் வாழ்வுக்கும் தொடர்புள்ளதா என்று சிந்தித்து பாருங்கள். பொதுவாக இருக்காது. பெயர்கள் அடையாளங்கள்தானே தவிர நம் வாழ்வோடு தொடர்புடையவையல்ல.

ஆனால் திருமறையில் கடவுள் அநேகருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார். அவர்கள் வாழ்வோடு தொடர்புள்ள பெயர்களை தந்துள்ளார். இந்த நாளுக்குரிய வாசிப்புப் பகுதியில் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் கொடுத்தார். இஸ்ரவேல் என்றால் கடவுளின் மக்கள் என்று பொருள். அதேபோல் யாக்கோபின் பிள்ளைகளைதான் தமக்கு சொந்த பிள்ளைகளாக தெரிந்துகொண்டார். அவர்களே இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் இயேசு சீமோன் என்பவரை சந்திக்கிறார். சீமோனின் சகோதரனாகிய அந்திரேயா அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார். இயேசு அவரை சந்தித்த மாத்திரத்தில், “நீ கேபா எனப்படுவாய்” என்றார். கேபா என்றால் பேதுரு என்று பொருள். பேதுரு என்றால் கற்பாறை என்று பொருள். இவரே இயேசுவின் முதன்மை சீடராக விளங்கினார். உண்மையில் இயேசு பேதுருவை சந்தித்தபோது ஒரு பாறையாகத்தான் இருந்தார். அதாவது, கல்வியறிவு அற்றவராக இருந்தார். நிலையற்ற மனிதராக இருந்தார். என்ன பேசுகிறோம் என்று தெரியாதவராக இருந்தார். ஆனால் இந்த கல்லின்மேல் சபையைக் கட்டுவேன் என்று இயேசு வாக்குறுதி தந்தார்.

அதேபோல், இயேசு மரித்து உயிர்த்தெழுந்து விண்ணிற்கு ஏறினபின், ஊழியத்தை துவங்கிய இயேசுவின் சீடர்கள் இஸ்ரவேல் தேசத்தை அசைத்தனர். குறிப்பாக பேதுருவின் பிரசங்கம் இஸ்ரவேலை அதிரச் செய்தது அவரது முதல் பிரசங்கத்தில் 3000 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். பாறையாக வந்த பேதுருவை திருச்சபையின் அடிக்கல்லாக மாற்றினார்.

தம்மிடம் வருகிற ஒவ்வொருவரையும் சிறப்பு மிக்கவர்களாக இயேசு மாற்றுகிறார். நீங்களும் தொடர்ந்து இயேசுவில் நம்பிக்கை வையுங்கள். உங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். என்ன வாழ்க்கை இது என்று நீங்கள் கலங்கி இருக்கலாம். வாழவே பிடிக்கவில்லை என்று புலம்பி இருக்கலாம். மரித்துப் போனால் நலமாய் இருக்கும் என்றுகூட சிந்தித்திருக்கலாம். இயேசுவை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். அப்பொழுது உறுதியான வாழ்வை அவர் தருவார். யாக்கோபின் வாழ்வை மாற்றியவர், சீமோனின் வழ்வை மாற்றியவர் உங்கள் வாழ்விலும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவார்.

அன்பின் பிதாவே, எங்கள் வாழ்வை பொருளுள்ளதாக மாற்றியருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.

வாழ்வை ஆசீர்வதிப்பார்2025-10-08T06:21:21+00:00

நியாயம் – இரக்கம் – தாழ்மை

மீகா 6 : 8-11                                  12 அக்டோபர் 2025, ஞாயிறு

“மனிதனே, நலமானது இன்னதென அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார்.” – மீகா 6 : 8

ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் என்.சி.சி கேம்ப் ஒரு வாரம் நடந்துள்ளது, அந்த ஒரு வாரமும் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்திலேயே தங்கியுள்ளனர். முகாம் நடத்தியவன், தங்கியிருந்த மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளான். அந்த குழந்தைகள் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளனர். இக்காலத்தில் எந்தளவுக்கு மனித நேய மாண்பு அழிந்து போயிருக்கிறது என்பதற்கு கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் சாட்சி. நியாயமற்ற, இரக்கமற்ற மிருகங்களாய் சில மனிதர்கள் இக்காலத்தில் மாறி வருகின்றனர்.

இந்த நாளுக்குரிய தியானப் பகுதி கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எப்படி வாழ வேண்டுமென்று குறிப்பிடுகிறது. கடவுள் நம்மிடத்தில் மூன்று காரியங்களை எதிர்பார்க்கின்றார். ஒன்று நியாயம், இரண்டாவது இரக்கம், மூன்றாவது தாழ்மை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் இவைகளை கற்றுக்கொள்ளலாம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திருப்பணியில் இருந்தபோது விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவருக்கு முன்னால் நிறுத்தினார்கள். “போதகரே இந்த பெண் விபச்சாரம் செய்தபோது பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களை மோசேவின் நியாயப்பிரமாணத்தின்படி கல்லெரிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்லுகிறீர்” என்று இயேசுவிடம் கேட்டார்கள். இயேசுவோ, “உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதல் கல்லெறியட்டும்” என்றார். ஒருவரும் கல்லெறியவில்லை. ஏனெனில், யாரும் உத்தமர்கள் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் செய்தார். அவர் நித்திய நியாயாதிபதியானவர்.

நாயீன் என்கிற ஊரில் வாழ்ந்து வந்த ஒரு விதவை, தன் ஒரே மகனை இழந்தாள். இயேசு அவள் மீது இரக்கம் கொண்டார். அவளது ஒரே மகனை உயிரோடு எழுப்பி கொடுத்தார். அவர் இரக்கம் உள்ளவர். ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு. நரிகளுக்கு குழிகளுண்டு. மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.

இவ்வாறு தாழ்மையும் எளிமையுமாக இந்த உலகத்தில் வாழ்ந்தார். அப்படியே நாமும் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நியாயம், இரக்கம், தாழ்மை இவையே அடிப்படை கிறிஸ்தவ குணங்கள். இக்காலத்தில் இளைஞர்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் இதை கற்றுத் தரவேண்டியது நம்முடைய பொறுப்பு. பொல்லாப்பு நிறைந்த உலகத்தில் மென்மையாய் வாழ கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்.

அன்பின் தந்தையே, நீதி, இரக்கம், தாழ்மையை தரித்து வாழ எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நியாயம் – இரக்கம் – தாழ்மை2025-10-08T06:18:22+00:00
Go to Top