மீகா 6 : 8-11                                  12 அக்டோபர் 2025, ஞாயிறு

“மனிதனே, நலமானது இன்னதென அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார்.” – மீகா 6 : 8

ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் என்.சி.சி கேம்ப் ஒரு வாரம் நடந்துள்ளது, அந்த ஒரு வாரமும் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்திலேயே தங்கியுள்ளனர். முகாம் நடத்தியவன், தங்கியிருந்த மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளான். அந்த குழந்தைகள் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளனர். இக்காலத்தில் எந்தளவுக்கு மனித நேய மாண்பு அழிந்து போயிருக்கிறது என்பதற்கு கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் சாட்சி. நியாயமற்ற, இரக்கமற்ற மிருகங்களாய் சில மனிதர்கள் இக்காலத்தில் மாறி வருகின்றனர்.

இந்த நாளுக்குரிய தியானப் பகுதி கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எப்படி வாழ வேண்டுமென்று குறிப்பிடுகிறது. கடவுள் நம்மிடத்தில் மூன்று காரியங்களை எதிர்பார்க்கின்றார். ஒன்று நியாயம், இரண்டாவது இரக்கம், மூன்றாவது தாழ்மை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் இவைகளை கற்றுக்கொள்ளலாம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திருப்பணியில் இருந்தபோது விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவருக்கு முன்னால் நிறுத்தினார்கள். “போதகரே இந்த பெண் விபச்சாரம் செய்தபோது பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களை மோசேவின் நியாயப்பிரமாணத்தின்படி கல்லெரிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்லுகிறீர்” என்று இயேசுவிடம் கேட்டார்கள். இயேசுவோ, “உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதல் கல்லெறியட்டும்” என்றார். ஒருவரும் கல்லெறியவில்லை. ஏனெனில், யாரும் உத்தமர்கள் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் செய்தார். அவர் நித்திய நியாயாதிபதியானவர்.

நாயீன் என்கிற ஊரில் வாழ்ந்து வந்த ஒரு விதவை, தன் ஒரே மகனை இழந்தாள். இயேசு அவள் மீது இரக்கம் கொண்டார். அவளது ஒரே மகனை உயிரோடு எழுப்பி கொடுத்தார். அவர் இரக்கம் உள்ளவர். ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு. நரிகளுக்கு குழிகளுண்டு. மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.

இவ்வாறு தாழ்மையும் எளிமையுமாக இந்த உலகத்தில் வாழ்ந்தார். அப்படியே நாமும் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நியாயம், இரக்கம், தாழ்மை இவையே அடிப்படை கிறிஸ்தவ குணங்கள். இக்காலத்தில் இளைஞர்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் இதை கற்றுத் தரவேண்டியது நம்முடைய பொறுப்பு. பொல்லாப்பு நிறைந்த உலகத்தில் மென்மையாய் வாழ கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்.

அன்பின் தந்தையே, நீதி, இரக்கம், தாழ்மையை தரித்து வாழ எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.