சங்கீதம் 89 : 11-14                           14 அக்டோபர் 2025, செவ்வாய்

“வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்தே எனக்குச் சகாயம் வரும்.” – சங்கீதம் 121 : 2

இந்த உலகத்தில் நம்மிடமிருந்து ஒத்தாசை பெறுவதற்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு ஒத்தாசை செய்வதற்கு யார் இருக்கிறார்கள். நமது வீடுகளில் பெற்றோர் கவலைப்படுவதே எனக்கு இந்த வீட்டில் ஒத்தாசை செய்ய யாருமே இல்லை என்பதுதான். சின்ன சின்ன வேலைகளில் மட்டுமல்ல நமது துன்பத்தில், நமது கண்ணீரில், நமது தேவைகளில் ஒத்தாசை செய்ய யாருமே இல்லையே என்று கலங்கி நிற்கிறோம். இந்த நாளுக்குரிய தியான வசனம் நமக்கு உதவி கிடைக்கும் இடத்தைப்பற்றி பேசுகிறது. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் இருக்கிறார். அவர் நமக்கு ஒத்தாசை செய்வார்.

சாரிபாத் என்ற ஊரில் ஒரு விதவை இருந்தார். அவருக்கு ஒரே மகன் இருந்தார். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொடிய பஞ்சம் நிலவியது. அவள் வீட்டில் ஒரு கைப்பிடி மாவும், ஒரு கரண்டி எண்ணெயும் மட்டும் இருந்தது. உணவுக்காக விறகு எடுக்க வெளியே வந்திருந்தாள்.

அந்நேரத்தில் எலியா என்ற கடவுளின் திருப்பணியாளர் அப்பெண்ணை வழியில் சந்தித்தார். எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடு என்றார். அவள் மறுக்காமல் கொண்டுவர சென்றாள். அவள் செல்லும்போதே சாப்பிட ஏதாகிலும் கொண்டுவா என்றார். அவளோ எங்கள் வீட்டில் ஒரு கைப்பிடி மாவும் கொஞ்சம் எண்ணெயும்தான் இருக்கிறது. இதை சாப்பிட்டு அடுத்த வேளை உணவில்லாமல் நானும் மகனும் செத்துபோவோம். ஆனாலும் நீர் கேட்டதால் கொண்டு வருகிறேன் என்றாள்.

எலியாவோ எனக்கு முதலில் கொண்டு வா. உன் வீட்டின் அப்பமும் எண்ணெயும் குறைந்து போகாது என்றார். அதேபோல் செய்தாள். பஞ்ச காலம் தீரும் வரை அவள் வீட்டில் மாவும் எண்ணெயும் குறைந்து போகவில்லை. அவள் வறுமையில் கர்த்தர் ஒத்தாசை அனுப்பினார். அவள் வீட்டின் குறைவை நிறைவாக்கினார்.

நம் வீட்டின் தேவைகளைப்பற்றிய கவலை நமக்குள் உண்டு. யாரிடத்தில் உதவி கேட்பதென்று தெரியாமல் தவிக்கிறோம். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஒத்தாசை செய்ய யாருமே இல்லையே என்று மனதுக்குள் புலம்புகிறோம். கடவுள் நம்மோடிருக்கிறார். மனுமக்கள் யாவரையும் மீட்க குமாரனாய் இந்த உலகிற்கு வந்தவர். சிலுவையில் தம்மையே நமக்காக பலியாய் தந்தவர்.

வானத்தையும் பூமியையும் படைத்தவர். அனைத்து உயிர்களையும் அற்புதமாய் பராமரிப்பவர். அவைகளின் தேவைகளை சந்திப்பவர். இன்றைக்கும் பிதாவின் வலது பாரிசத்தில் நின்று பரிந்து பேசிக்கொண்டிருப்பவர். நம்மை அறிவார், நம்முடைய தேவைகளை அறிவார். நமக்கு ஏற்ற நேரத்தில் ஒத்தாசை அனுப்புவார். கலக்கத்தைவிட்டு கர்த்தரை பற்றிக்கொள்வோம்.

அன்பின் தந்தையே, எங்கள் குடும்ப தேவைகளை அற்புதமாய் சந்தித்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.