ஏசாயா 61 : 1-5 19 அக்டோபர் 2025, ஞாயிறு
“கர்த்தரின் நாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.” – நீதிமொழிகள் 18 : 10
ஊர்த் தலைவர் ஒருவர், அந்த கிராமத்தின் ஏரியை ஆக்கிரமித்து இருந்தார். அதே ஊரில் இருந்த ஒரு சமூக ஆர்வலர் இதை எதிர்த்தார். ஏற்கனவே நீர் நிலைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. எனவே இது கண்டிக்கத்தக்கது. ஆனால் ஊர் தலைவரோ சமூக ஆர்வலரை எச்சரித்தார், மிரட்டினார். ஆனால் எதற்கும் சமூக ஆர்வலர் அடிபணியவில்லை. ஒருநாள் சமூக ஆர்வலர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். உண்மையும் நீதியும் எங்கே இருக்கிறதோ அங்கே துன்பமும் சவால்களும் இருக்கிறது. எனவே உண்மைக்காக நீதிக்காக போராடுகிறவர்கள் எங்கே போவது என்று தவிக்கின்றனர். இந்த நாளுக்குரிய தியான வசனம் அதற்கான பதில் தருகிறது.
கடவுளின் பெயரே பெரிய கோட்டை. உண்மையுள்ளவர்கள் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறலாம் என்று சாலமோன் கூறுகிறார். உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்று கடவுளும் இதை உறுதி செய்கிறார். உண்மைக்காக நீதிக்காக இயேசு போராடினார். அடிமைத்தனத்தை உடைக்க உழைத்தார். இதனால் இயேசுவை கொலை செய்ய அதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டனர். பணம் கொடுத்து யூதாஸை வளைத்தனர். பொய் சாட்சிகளை உருவாக்கினர். சிலுவையில் அறைந்தனர். தாங்கள் இயேசுவை வீழ்த்தி விட்டதாக மகிழ்ந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி மூன்று நாள்கூட நீடிக்கவில்லை. மூன்றாம் நாள் இயேசு உயிரோடு எழுந்தார். உண்மைக்காக நீதிக்காக அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுகிறவர்களை வீழ்த்த முடியாது.
நாம் உண்மையாய் வாழ்வதால் துன்பத்தை அனுபவிக்கலாம். சோர்ந்து போக வேண்டாம். கிறிஸ்துவை உறுதியாக பற்றிக்கொள்வோம். அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பார். அரணான கோட்டையாக இருப்பார். நம் உழைப்பு வீண் போகாது. நன்மை செய்வதில் சோர்ந்து போக வேண்டாம்.
வல்லமையுள்ள பிதாவே, உண்மைக்கு குரல் எழுப்ப எங்களை பலப்படுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
