vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

ஓய்வின்றி உழைப்பவர்

மார்க்கு 6 : 30-32                                       31 அக்டோபர் 2025, வெள்ளி

“அங்கே ஒரு வீட்டுக்குட்சென்று, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்க முடியாமற்போயிற்று.”
– மார்க்கு 7 : 24

அக்டோபர் 31 லுத்தரன் திருச்சபைகளில் சீர்திருத்த நாளாக கொண்டாடப்படுகிறது. மார்டின் லுத்தர் அவர்கள் திருச்சபை சீர்திருத்தத்திற்காக அயராது உழைத்தார். கள்ள உபதேசங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். முக்கியமாக லத்தீன் மொழியில் மட்டுமே இருந்த திருமறையை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்தார். அவரது இந்த பெரும் முயற்சியால்தான் இன்று திருமறை நம் கையில் இருக்கிறது. இனி ஒருவரும் கடவுள் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்ற முடியாது. மார்டின் லுத்தர் ஓய்வில்லாமல் உழைத்ததின் விளைவை இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவும் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தவர். ஒரு நாள் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வெடுக்க ஒரு வனாந்தரமான இடத்தைத் தேடி போனார். ஜனங்கள் இதை அறிந்து கொண்டனர். அவருக்கு முன்னதாக வனாந்தரத்தில் வந்து நின்றனர். அவர்களோடு பேசத் தொடங்கி விட்டார். ஓய்வை மறந்து விட்டார். இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் இயேசு ஒரு வீட்டிற்குள் தனித்திருக்க விரும்பினார். ஆனால் அதையும் ஜனங்கள் அறிந்து கொண்டனர். வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். இயேசுவும் தம்மைத் தேடி வந்த ஜனங்களை வெறுமையாக அனுப்பாமல் அவர்களோடு திருப்பணி செய்யத் துவங்கி விட்டார். இந்த நிகழ்வுகள் மூலம் இயேசு நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறோம்.

தனது ஓய்வைவிட, தன் தூக்கத்தைவிட நம்மை நேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த தந்தையையோ தாயையோ எழுப்பும்போது அவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். இந்த வீட்டில் கொஞ்ச நேரம்கூட எனக்கு ஓய்வெடுக்க முடியவில்லை என்று சலித்துக் கொள்வார்கள்.

இயேசு கிறிஸ்துவோ எவ்வித சலிப்புமின்றி மக்களை ஏற்றுக் கொண்டார். சிலுவையில் அவர் அன்பின் உச்சத்தை நாம் பெற்றுக் கொண்டோம். அவர் அன்பு பிசாசுகளை விரட்டுகிறது. நோய்களை குணமாக்குகிறது. பாவத்திலிருந்து விடுவிக்கிறது. விண்ணுலக வாழ்வைத் தருகிறது. இவை அனைத்திற்கும் அவர் அன்பு நம்மை தகுதிப்படுத்துகிறது.

அன்பின் கடவுளே, உமது அன்பில் நிலைத்து வாழ எங்களுக்கு கிருபை தாரும். சிலுவை நாதர் இயேசுவின் வழியாய் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.

ஓய்வின்றி உழைப்பவர்2025-10-27T05:25:03+00:00

மன்னிப்பதில் வள்ளல்

தானியேல் 9 : 20-22                                   30 அக்டோபர் 2025, வியாழன்

“பாதகம் முடிவாவதற்கும் பாவங்கள் முற்றுப்பெறுவதற்கும்… எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.” – தானியேல் 9: 24

இந்த உலகத்தில் விலையேறப்பெற்ற பொருள் ஒன்று உண்டென்றால். அதுதான் மன்னிப்பு. யாராவது ஒருவர் நம்மை மிகக் கடுமையாக துன்பப்படுத்தும்போது அதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை அவர்கள் மன்னிப்பு கேட்டாலும்கூட நம் மனம் அமைதல் அடைவதில்லை. நீ செய்த தவறை என்னால் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் நம்முடைய கடவுள் மன்னிப்பதில் வல்லவராக இருக்கிறார்.

‘நீதிமான் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை’ என்று திருவசனம் கூறுகிறது. அதன்படி நாம் யாரும் நல்லவர்கள் இல்லை. இதை யாரும் நமக்கு கற்பிக்க வேண்டியதில்லை. நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்கே தெரியும். பாவத்தின் சம்பளம் மரணம். இதுவே கடவுளின் நீதி. ஆனால் கடவுள் நம் மீது இரக்கம் கொண்டு நம்மை மன்னிக்க சித்தமாய் இருக்கிறார். அதற்காகவே தமது சொந்த குமாரனை இந்த உலகத்துக்குள் அனுப்பினார். அவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

அவர் இந்த உலகத்தில் வந்து நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார். பாவம் அறியாத அவர்மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி சிலுவையில் அறைந்தனர். சிலுவையிலிருந்து வெளியேறும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனாலும் அதை ஏற்றுக் கொண்டார். ஏற்றுக்கொண்டதற்கு காரணம் நம் பாவங்களை மன்னிக்க தம்மை பலியாக தந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் பாவ மன்னிப்பைத் தரும் தகுதி உடையவர்கள். நம் பாவத்தை அறிக்கை செய்யும்போது அவர் மன்னிக்கிறார்.

இயேசுவின் வழியாய் மன்னிப்பு பெறுகிற நாம் பிறரை மன்னிக்க அவரால் அழைக்கப்படுகிறோம். ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஏழு 70 தரம் மன்னியுங்கள் என்று இயேசு நமக்கு ஆலோசனை வழங்குகிறார். வீட்டுக்குள், உறவுகளுக்குள், திருச்சபைக்குள் யாரையெல்லாம் மன்னிக்க முடியாமல் தவிக்கிறோமோ அவர்களை இன்றைக்கே மன்னிப்போம். ஏனெனில் இயேசு நம்மை மன்னித்திருக்கிறார். நாம் ஏன் மன்னிக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் மன்னித்து கிறிஸ்தவ மாண்புடன் வாழ கடவுள் நமக்கு ஒத்தாசை செய்வாராக.

மன்னிக்கும் பிதாவே, ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ எங்களுக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே, ஆமேன்.

மன்னிப்பதில் வள்ளல்2025-10-27T05:20:13+00:00

மன நிறைவு

1 தீமோத்தேயு 6 : 6-10                                           29 அக்டோபர் 2025, புதன்

“மனோரம்மியத்தோடு கூடிய தேவ பக்தியே சிறந்த ஆதாயம்.”– 1 தீமோத்தேயு 6 : 6

உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பதில் நாம் அனைவரும் கவனம் செலுத்துகிறோம். நடைப்பயிற்சி செய்வது, அளவாக உண்பது, உடற்பயிற்சி செய்வதன் வழியாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் மனதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. மன அழுத்தங்கள் இக்காலத்தில் பெருகி வருகிறது. இந்த நாளுக்குரிய தியானப் பகுதி மனநிறைவோடு வாழ அழைக்கிறது.

திருமறையில் லோத்து என்பவர் மனைவி பிள்ளைகளுடன் சோதோம் கொமாரா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அப்பகுதி மிகவும் செழிப்பாக இருந்தது. மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். தேவையான அளவுக்கு பணமும் பொருளும் அவருக்கு இருந்தது. ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒழுக்கமற்றவர்களாக காணப்பட்டனர். எனவே கடவுள் அந்த ஊரை அழிக்க முடிவு செய்தார். ஆனால் லோத்தும் அவர் குடும்பத்தினரும் கடவுளுக்கு பயந்து வாழ்ந்தார்கள். எனவே கடவுள் அவர்களைக் காப்பாற்ற விரும்பினார். அந்த ஊரை விட்டு புறப்படச் சொன்னார். திரும்பி பார்க்காமல் போக கட்டளையிட்டார். ஆனால் லோத்தின் மனைவியோ போகிற வழியில் திரும்பி பார்த்தார். இது ஒரு மன நிறைவற்ற நிலை. தன் வீடுகளும் சொத்துகளும் அழிந்து போவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்றைக்கு இப்படியே பலரும் உலகத்தில் வாழ்கிறோம். உழைப்பதைக் கொண்டும் இருப்பதைக் கொண்டும் மன ரம்மியமாய் வாழ்வதே அவசியம். மன நிறைவோடுகூட தேவபக்தியே ஆகாயமானது என்று பவுல் குறிப்பிடுகிறார்.

குடும்ப வாழ்வில் மன நிறைவு அவசியம். அதுவே வீட்டுக்குள் மகிழ்ச்சி தரும். செய்கிற வேலைகளில் மன நிறைவு அவசியம். தொடர்ந்து வேலை செய்ய அது உதவி செய்யும். ‘வாழ்ந்திருக்கவும் தெரியும் தாழ்ந்திருக்கவும் தெரியும். எந்த நிலையிலும் மன ரம்மியமாய் இருக்க கற்றுக் கொண்டேன்’ என்று பவுல் கூறுகிறார். எப்படியெனில் அவர் முழுவதுமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்பினார்.

கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்கிற விசுவாசம்தான் மன நிறைவைத் தரும். வீட்டில் குறைவுகள் இருக்கலாம், வேலையில் குறைவுகள் இருக்கலாம். கர்த்தர் அதைப் பார்த்துக் கொள்வார். இந்த விசுவாசம் மன நிறைவைத் தரும். அதுவே பக்தியான வாழ்க்கை. அதுவே நம் வாழ்வுக்கான ஆசீர்வாதங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

ஆசீர்வதிக்கும் கடவுளே, மன நிறைவுடன் வாழ கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மன நிறைவு2025-10-27T05:17:34+00:00

திருவிருந்தின் மேன்மை

ஆதியாகமம் 28 : 10-17                               28 அக்டோபர் 2025, செவ்வாய்

“எவன் அபாத்திரமாய் ஆண்டவரின் அப்பத்தை புசித்து அவர் பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் ஆண்டவரின் சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றவாளியாவான்.” – 1 கொரிந்தியர் 11 : 27

‘குருவை மிஞ்சிய சீடன்’ என்று ஒரு வாசகம் உண்டு. ஆனால் உலகத்தில் பொதுவாக எந்த குருவும் தன்னுடைய சீடன் தன்னைவிட மிஞ்சியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தமது சீடர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க விரும்பினார். நீங்கள் என்னிலும் வல்ல காரியங்களை செய்வீர்கள் என்று சொன்னார். ஒரு நல்ல குருவாக செயல்பட்டார். தம்மை பின்பற்றுகிறவர்கள் தம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதனால்தான் இயேசு கிறிஸ்து ‘என்னைப் பின்பற்றுங்கள்’ என்று அழைக்கிறார். தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் அவராகவே மாற்ற திட்டமிட்டார். அதன் அடையாளமாக அவருடைய சரீரத்தையும் ரத்தத்தையும் கொடுத்தார். அதையே திருவிருந்து என்று கூறுகிறோம்.

திருவிருந்தில் பங்கு எடுக்கிற ஒவ்வொருவரும் திருவிருந்தின் மகத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று பவுல் குறிப்பிடுகிறார். அபாத்திரமாய் பங்கெடுக்கக் கூடாது என்று கூறுகிறார். அபாத்திரம் என்றால் அலட்சியமாக என்று பொருள். எனவேதான் திருவிருந்தில் பங்கெடுப்பதற்கு முன்பு திருச்சபைகளில் அதற்காக வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதுவே திடப்படுத்தல் வகுப்புகள். இன்றைய அவசர உலகத்தில் தற்கால இளைஞர்களும் பெற்றோர்களும் திடப்படுத்தல் வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் திருவிருந்தில் எப்படி பங்கெடுக்க வேண்டுமென்று தெரியாமல் போகிறது. பாவ அறிக்கையில் பங்கெடுப்பதில்லை. நேராக திருவிருந்தில் பங்கெடுப்பது போன்ற பல தவறுகள் இன்றைக்கு நடக்கின்றன. இப்படி நடந்து கொள்வது கடவுளுடைய பார்வையில் குற்றமாகும் என்று பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகிறார்.

ஏதாவது ஒரு விருந்திற்கு போகிற நாம் ஆயத்தத்தோடு போகிறோம். அதற்கு ஏற்றபடி உடை உடுத்துகிறோம். நேரத்துக்குச் செல்கிறோம். ஒரு சாதாரண விருந்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படியானால் திருவிருந்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ‘ஞானஸ்தானத்திலும் திருவிருந்திலும் பங்கடைகிற நாம் குட்டி கிறிஸ்துக்களாக மாறுகிறோம்’ என்று அறிஞர் மார்ட்டின் லுத்தர் குறிப்பிடுகிறார். அந்த கவனத்தோடு அக்கறையோடு ஆயத்தத்தோடு திருவிருந்தில் பங்கெடுப்போம்.

பரம தந்தையே, பயபக்தியோடு திருவிருந்தில் பங்கெடுக்கும் ஞானத்தை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

திருவிருந்தின் மேன்மை2025-10-27T05:14:30+00:00

நற்பணி செய்வோம்

மத்தேயு 7 : 24-27                                27 அக்டோபர் 2025, திங்கள்

“கிறிஸ்துவின் நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டுமென்பதே என் பேராவல்.” – ரோமர் 15 : 21

கார்ல் கஸ்டவ் தியோடர் நேத்தர் என்ற மிஷினரி, ஜெர்மனியிலிருந்து தரங்கம்பாடியில் திருப்பணி செய்ய வந்தார். அங்கு ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் அங்கிருந்து வெளியேறினார். தாம் திருப்பணி செய்ய வேறொரு இடத்தை தேர்ந்தெடுக்க தீர்மானித்தார். அதற்காக சேலம் மாகாணத்தை தெரிந்து கொண்டார். கிருஷ்ணகிரியை மையமாகக் கொண்டு திருப்பணி தொடங்கினார். அப்பணி வளர்ந்து இன்றைக்கு இந்தியா முழுக்க திருச்சபைகளை உருவாக்கி மக்களுக்காகப் பணியாற்றி வருகிறது.

பல சிரமங்கள் இருந்தாலும் அவர் வெகுதூரம் கடந்து வந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. ஏற்கனவே திருப்பணி நடைபெற்ற இடத்தில் பணி செய்யக்கூடாது. அங்கு இருக்கிற மக்களுக்கு தான் அறிமுகமாகி இருந்தாலும், அங்கே திருப்பணி செய்வது எளிதாக இருந்தாலும் வேறொரு பணி நடைபெறுகிற இடத்தில் தான் திருப்பணி செய்வதை அவர் விரும்பவில்லை. இதைத்தான் பவுலடிகளார் தம் திருப்பணியில் பின்பற்றினார். அப்போஸ்தலர்கள் திருப்பணி செய்துகொண்டிருந்த இடங்களை விட்டு புதிய இடங்களைத் தேடி போனார். அதைத்தான் ‘மற்றவனுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டாமல்’ என்று சொல்லுகிறார்.

இன்றைக்கு பல திருப்பணிகள் இந்தியாவில் பெருகிவிட்டது. ஆனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. ஏனென்றால் புதிய இடங்களை, புதிய மக்களை தற்கால திருப்பணி, தேடிச் செல்லவில்லை. ஏற்கனவே திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிற இடங்களில் சென்று அப்பணியை செய்வதுதான் அதிகரித்திருக்கிறது.

கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கப்படாத இடங்கள் இன்னும் உண்டு. இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் இயேசுவோடு திருப்பணியில் இருந்தபோது, சீடரல்லாத ஒருவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிவித்துக் கொண்டிருந்தார். அவரைத்தடுக்கும்படி இயேசு ஆண்டவரிடம் கேட்டார்கள். இயேசு கிறிஸ்து அவரை தடுக்க வேண்டாம் என்று சொன்னார். அவரவர் பணியை அவரவர் செய்ய வேண்டும். திருப்பணியில் மட்டுமல்ல, எந்த பணியிலும் யாரையும் இடையூறு செய்யக்கூடாது. அதுவே வளர்ச்சியை கொடுக்கும்.

ஆற்றல் மிக்க கடவுளே, யாருக்கும் இடையூறு செய்யாமல் எங்கள் பணியை செய்ய வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நற்பணி செய்வோம்2025-10-21T10:33:00+00:00

தகுதியுள்ள வாழ்க்கை

1 கொரிந்தியர் 10 : 23-29                             26 அக்டோபர் 2025, ஞாயிறு

“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது… எல்லாம் பக்தி விருத்திக்கேதுவாகாது.”     – 1 கொரிந்தியர் 10 : 23

ஒரு குழந்தை தன் தந்தையோடு விளையாடும்போது தந்தையை திட்டும், அடிக்கும், கொஞ்சி விளையாடும். தந்தை அதைக்கண்டு மகிழ்வார். அதே குழந்தை வளர்ந்து வாலிப பருவத்தை எட்டும்போது இதேபோல விளையாடினால் தந்தை மகிழ மாட்டார், கோபப்படுவார். ஏனென்றால் வயது கூடியிருக்கிறது. கல்வி அறிவு கிடைத்திருக்கிறது. அதற்கேற்றபடி தான் வாலிபப் பருவத்தில் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல கிறிஸ்தவ வாழ்க்கைக்கென ஒரு தகுதி இருக்கிறது. அதைப்பற்றித்தான் பவுல் இன்றைக்குரிய தியானப் பகுதியில் பேசுகிறார்.

பவுல் அடிகளார் திருப்பணி செய்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் வழிபாட்டிலும் விழாக்களிலும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர். சில தீய பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். தங்கள் உறவினர்களையும் இதுபோன்ற விழாக்களுக்கு அழைத்தார்கள். சிலர் அங்கு போய் அவர்களோடு இணைந்து அவர்கள் செய்யும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். இதை பவுல் கடுமையாக கண்டிக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற வாழ்க்கை. அதை மறந்து சுய விருப்பத்தின்படி வாழ்வதை பவுல் கண்டிக்கிறார். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் தகுதியாய் இராது. எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது என்று புரிய வைக்கிறார்.

நம்மில் சிலர் ஆலயத்திற்கு ஒழுங்காக வருவதில்லை. திருவசனத்திற்கு செவி கொடுப்பதில்லை. தன் சுய விருப்பத்தின்படி வாழ்வது. கடவுள் பயமற்று திரிவது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது. இப்படி பல தகுதியற்ற செயல்களில் ஈடுபடுகிறோம்.

இதிலிருந்து வெளிவர பவுல் நம்மை அழைக்கிறார். நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அது நமக்கு தகுதியானதா… அதனால் நமக்கு பக்தி விருத்தி உண்டாகுமா… என்று சிந்திக்க வேண்டும். தகுதி அல்லாததாக இருந்தால் பக்திவிருத்திக்கு உதவி செய்யவில்லையென்றால் அந்த செயலை செய்யக்கூடாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற ரத்தத்தால் வாழ்வு பெற்றவர்கள் நாம். கடவுளின் பிள்ளைகள் என்கிற உரிமை பெற்றவர்கள். அதற்கேற்ற வாழ்வு வாழ கடவுள் நம்மை அழைக்கிறார்.

அருள் நிறைந்த கடவுளே, குமாரன் வழியாய் நீர் தந்த வாழ்விற்கு தகுதியுள்ளவர்களாய் வாழ வழி நடத்தும். இயேசுவின் வழியாய் ஜெபிக்கிறோம் பிதவே, ஆமேன்.

தகுதியுள்ள வாழ்க்கை2025-10-21T10:31:10+00:00

நம்மை மறவாதவர்

ஆதியாகமம் 40 : 20-23                             25 அக்டோபர் 2025, சனி

“யோசேப்பை நினையாமல் அவனை மறந்து விட்டான்.” – ஆதியாகமம் 40 : 23

மறதி என்பது எல்லாருக்கும் இருக்கிற குணங்களில் ஒன்று. ஒரு நாளில் ஒரு முறையாவது ஏதேனும் ஒன்றை நாம் மறந்து விடுவோம். சில நேரங்களில் இந்த மறதி மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். நாம் வாசிக்கிற தியானப் பகுதிகூட ஒருவனுடைய மறதியை பற்றியது.

யோசேப்பு உண்மையும் நேர்மையுமான மனிதர். அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்த காலத்தில் அவரோடு அரண்மனைப் பணியாளர்களில் ஒருவரும் சிறையில் இருந்தார். அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவு என்னவெனில் ஒரு திராட்சைச்செடி தனக்கு முன்பாக இருக்கக் கண்டார். அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது அது துளிர்க்கிறதாயிருந்தது. அதில் பூக்கள் மலர்ந்திருந்தது. அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. அரசனுடய பாத்திரம் அவன் கையிலே இருந்தது. அவர் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளை அரசனுடய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தை அரசர் கையிலே கொடுத்தார். இந்த கனவுக்கு பொருள் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார். யோசேப்பு அந்த கனவுக்கு விளக்கம் கொடுத்தார். மூன்று நாளில் நீ மீண்டும் அரசு வேலை பெறுவாய். நீ அரசருக்கு உணவு பரிமாறுகிற வேலையை பெறுவாய். இப்படி நடக்கும் போது அரசரிடத்தில் தன்னை பற்றி சொல்லி தனக்கு விடுதலை கிடைக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். யோசேப்பு சொன்னது போலவே நடந்தது. ஆனால் அவனோ யோசேப்பை முற்றிலும் மறந்து விட்டான்.

யோசேப்புக்கு மட்டுமல்ல, நம்முடைய வாழ்விலும் இப்படி நடக்கிறது. நம்மிடத்தில் நன்மை பெற்றவர்கள் நம்மை எளிதில் மறந்து விடுவார்கள். நமக்கு மிகுந்த கோபமும், ஆத்திரமும் வரும். இப்படி நம்மை ஏமாற்றி விட்டார்களே. நன்மைப் பெற்றுக் கொண்டு நம்மை மறந்து போனார்களே என்றெல்லாம் புலம்புவோம்.

நம்மை மறவாத கடவுள் இருக்கிறார். தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்னவர். உள்ளங்கைகளில் நம்மை வரைந்து வைத்திருக்கிறார். நமக்காக தமது சொந்த குமாரனையும் தந்தவர். ஒருபோதும் நம்மை மறக்க மாட்டார்.

நித்திய பிதாவே, எங்களை ஒருபோதும் மறவாமல் காத்து வழிநடத்தும். இயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே, ஆமேன்.

நம்மை மறவாதவர்2025-10-21T10:29:17+00:00

பொல்லாப்புக்கு பயப்படாதீர்கள்

சங்கீதம் 97 : 10-12                                      24 அக்டோபர் 2025, வெள்ளி

“நீர் பொல்லாப்பைப் பார்த்து மகிழும் தெய்வம் அல்ல, தீமைக்கு உம்மண்டை இடமில்லை.” – சங்கீதம் 5 : 4

திருமறையில் தாவீதை கடவுள் மிகவும் நேசித்தார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை அழைத்தார். சாமுவேல் தீர்க்கதரிசியின் வழியாக அரசராக நியமித்தார். தாவீது அரசரும் கடவுளுக்கு பயந்தவராக இருந்தார். கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தார். மிகச்சிறந்த அரசராக செயல்பட்டார். மக்கள் அவரை பெரிதும் புகழ்ந்தனர். ஆனால் தாவீது அரசர் ஒருமுறை தவறினார். உரியா என்பவருடைய மனைவியை முறைகேடாக திருமணம் செய்து கொண்டார். உரியாவை திட்டமிட்டு கொலை செய்தார்.

கடவுள் நாத்தான் என்ற தீர்க்கதரிசியை அனுப்பி தாவீது செய்த குற்றத்தை சுட்டிக் காட்டினார். தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தார். தன் உடைகளை கிழித்துக்கொண்டார். ஏழு நாட்கள் உணவுருந்தாமல் தண்ணீர் குடிக்காமல் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கர்த்தரோ தாவீதுக்கும் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தையை அடித்தார். தன் வாழ்நாள் முழுக்க உண்மையுள்ளவராக வாழ்ந்தவர். கடவுளுக்கு கீழ்ப்படிந்தவர். ஒருமுறை தானே பொல்லாங்கு செய்தார். கடவுள் அவரை மன்னிக்கவில்லை. அவர் செய்த தவறை அவருக்கு உணர்த்தினார். கடவுள் பொல்லாப்பை விரும்புவதில்லை. எந்த தீமையான செயலுக்கும் கடவுளிடத்தில் இடமில்லை.

கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்கிற நாம் அறிந்தோ அறியாமலோ ஒரு தீமை செய்வோமானால் கடவுள் அதை ஏற்பதில்லை. அதேபோல் நமக்கு விரோதமாக பிறர் பொல்லாப்பு செய்யலாம். திட்டமிட்டு தீமை செய்யலாம். கடவுள் வேடிக்கை பார்க்க மாட்டார். என் குடும்பத்துக்கு பொல்லாப்பு செய்கிறார்களே என்று நாம் கவலையில் இருக்கலாம். என் பிள்ளைகளுக்கு விரோதமாய் தீமை செய்கிறார்களே என்ற பதட்டத்தில் நாம் இருக்கலாம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் கடவுள் கவனித்துக் கொண்டு இருக்கிறார். உண்மையுடன், நேர்மையுடன், துணிவுடனும் வாழ்வோம். கடவுள் நம்மை காப்பார்.

கிருபையின் பிதாவே, எங்கள் வாழ்வினில் எங்களுக்கு எதிராக உருவாகும் தீமைக்கு விலக்கி காத்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பொல்லாப்புக்கு பயப்படாதீர்கள்2025-10-21T10:27:27+00:00

நம்மை பாதுகாக்கும் கடவுள்

ஏசாயா 10 : 27-34                                  23 அக்டோபர் 2025, வியாழன்

“நானே அதற்கு சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பேன்.” – சகரியா 2 : 5

நாம் வாழும் உலகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. சாலை விபத்துக்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. புதிய புதிய நோய் தொற்றுகள் உண்டாகி வருகிறது. பல நாடுகளில் பஞ்சம் பெருகி வருகிறது. குறிப்பாக நமிபியாவில் ஒருவேளை உணவுக்கு லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். தினந்தோறும் பட்டினியால் செத்து மடிகின்றனர். இந்த உலகம் பாதுகாப்பற்ற உலகமாக உருமாறிவிட்டது. நாம் உயிர் வாழ்வதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை. எனவே தினம் தினம் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறோம். ஆனால் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி கடவுளுடைய ஜனங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சகரியா தீர்க்கதரிசி கடவுள் எருசலேம் நகரத்தை எப்படி பாதுகாக்கிறார் என்று விவரிக்கிறார். எருசலேம் நகரம் முழுவதையும் கடவுள் அளந்து வைத்திருக்கிறார். அதில் கூடிவருகிற மக்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார். நகரத்தை சுற்றிலும், கூடிவருகிற திரள் மக்களுக்கு அரணாக இருக்கிறார். அக்கினி மதிலாய் இருப்பேன் என்று கடவுள் குறிப்பிடுகிறார். தீயைத் தாண்டி ஒருவரும் வர முடியாது. கடவுள் அக்கினி மதிலாய் பாதுகாக்கிறார். எருசலேம் நகரத்திற்கும், எருசலேம் நகரத்தில் கூடி வருகிற மக்களுக்கும் மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் அவரே பாதுகாவல். வீட்டை சுற்றிலும் காவலாளர்கள் நிற்கலாம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். பாதுகாப்பு கர்த்தரிடத்திலிருந்தே வரும்.

வீட்டின் பாதுகாப்பைப்பற்றிய கவலை நமக்கு இருக்கலாம். பிள்ளைகளின் பாதுகாப்பைப்பற்றிய கவலை இருக்கலாம். கவலைகளை ஒதுக்கி வைப்போம். அக்கினி மதிலாய் கடவுள் நம்மை சுற்றி இருக்கிறார். சிங்காசனத்தை விட்டு மெய்யான மனிதனாக இவ்வுலகத்திற்கு இயேசு கிறிஸ்து வந்தார். நமக்காக பாடுபட்டார். நமக்காக மரித்தார். நமக்காக உயிர்த்தெழுந்தார். நம் ஒவ்வொருவருக்காக பிதாவின் வலது பாரிசத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். உலகின் முடிவுவரை நான் உங்களோடு இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அவரது பாதுகாப்பு நமக்குண்டு, தைரியமாய் வாழ்வோம்.

மகிமையின் பிதாவே, எங்கள் வாழ்வினில் வரும் இன்னல்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நம்மை பாதுகாக்கும் கடவுள்2025-10-21T10:25:47+00:00

மன்னித்து வாழ்வோம்

2 சாமுவேல் 12 : 11 -15                                   22 அக்டோபர் 2025, புதன்

“நமது பாவங்களை அறிக்கையிட்டால்….. நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் நம்பத்தக்கவரும் நீதியுள்ளவருமாயிருக்கிறார்.”

– 1 யோவான் 1 : 9

சிறு பிள்ளைகளுக்கு இனிப்புகள் பிடிக்கும். வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு தெரியாமல் இனிப்புகளை மறைத்து வைப்பார்கள். சில வேளைகளில் குழந்தைகள் திருடி சாப்பிடுவார்கள். எளிதில் கண்டுபிடித்து விடுவோம். நீ சாப்பிட்டாயா என்று கேட்டால் உடனே இல்லை என்பர். சிறு குழந்தைகள்கூட தன் தவறை ஒப்புக் கொள்வதில்லை. பெரியவர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. தன் தவறை மறைப்பார்கள். கண்டுபிடித்துவிட்டால் நியாயப்படுத்துவார்கள். மறந்தும்கூட தன் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நமது தவறுகளை ஒப்புக்கொண்டு கடவுளிடம் அறிக்கையிடுவதில் உண்டாகும் நன்மைப்பற்றி, இன்றைய தியான வசனம் குறிப்பிடுகிறது.

இயேசு கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள். அதில் முக்கியமானவர் சீமோன் பேதுரு. மோசமானவர் யூதஸ்காரியோத். 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்தார். சீமோன் பேதுரு தன் உயிருக்கு பயந்து இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இருவரும் பாவம் செய்தார்கள். இருவரது பாவமும் பெரியதுதான். இயேசுவுக்கு விரோதமாக துரோகம் செய்தார்கள். ஆனால் பேதுரு தனது பாவங்களை உணர்ந்தார். அதற்காக மனம் கசந்து அழுதார். இயேசு அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார். யூதாஸ் தன் பாவத்தை உணர்ந்தார், ஆனால் அறிக்கையிடவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் தன் வாழ்வை இழந்து போனார். பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று திருமறை கூறுகிறது.

நாமும்கூட நம்முடைய வாழ்வை சோதித்துப் பார்ப்போம். தவறுகளை ஒப்புக்கொண்டு கடவுளிடத்தில் அறிக்கையிட்டால் உடனே அவர் மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்வார். அதேபோல் நமக்கு எதிராக செயல்படுகிறவர்கள் இருப்பார்கள். அவர்கள் நம்மிடம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நாம் அவர்களை மன்னிக்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதே கிறிஸ்தவ குணம். கிறிஸ்து நம்மை மன்னித்து ஏற்றுக் கொண்டதுபோல் நாமும் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்வோம்.

அன்பின் கடவுளே, நீர் எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டதுபோல நாங்களும் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். சிலுவை நாயகர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.

மன்னித்து வாழ்வோம்2025-10-14T05:40:00+00:00
Go to Top