மார்க்கு 6 : 30-32 31 அக்டோபர் 2025, வெள்ளி
“அங்கே ஒரு வீட்டுக்குட்சென்று, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்க முடியாமற்போயிற்று.”
– மார்க்கு 7 : 24
அக்டோபர் 31 லுத்தரன் திருச்சபைகளில் சீர்திருத்த நாளாக கொண்டாடப்படுகிறது. மார்டின் லுத்தர் அவர்கள் திருச்சபை சீர்திருத்தத்திற்காக அயராது உழைத்தார். கள்ள உபதேசங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். முக்கியமாக லத்தீன் மொழியில் மட்டுமே இருந்த திருமறையை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்தார். அவரது இந்த பெரும் முயற்சியால்தான் இன்று திருமறை நம் கையில் இருக்கிறது. இனி ஒருவரும் கடவுள் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்ற முடியாது. மார்டின் லுத்தர் ஓய்வில்லாமல் உழைத்ததின் விளைவை இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவும் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தவர். ஒரு நாள் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வெடுக்க ஒரு வனாந்தரமான இடத்தைத் தேடி போனார். ஜனங்கள் இதை அறிந்து கொண்டனர். அவருக்கு முன்னதாக வனாந்தரத்தில் வந்து நின்றனர். அவர்களோடு பேசத் தொடங்கி விட்டார். ஓய்வை மறந்து விட்டார். இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் இயேசு ஒரு வீட்டிற்குள் தனித்திருக்க விரும்பினார். ஆனால் அதையும் ஜனங்கள் அறிந்து கொண்டனர். வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். இயேசுவும் தம்மைத் தேடி வந்த ஜனங்களை வெறுமையாக அனுப்பாமல் அவர்களோடு திருப்பணி செய்யத் துவங்கி விட்டார். இந்த நிகழ்வுகள் மூலம் இயேசு நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறோம்.
தனது ஓய்வைவிட, தன் தூக்கத்தைவிட நம்மை நேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த தந்தையையோ தாயையோ எழுப்பும்போது அவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். இந்த வீட்டில் கொஞ்ச நேரம்கூட எனக்கு ஓய்வெடுக்க முடியவில்லை என்று சலித்துக் கொள்வார்கள்.
இயேசு கிறிஸ்துவோ எவ்வித சலிப்புமின்றி மக்களை ஏற்றுக் கொண்டார். சிலுவையில் அவர் அன்பின் உச்சத்தை நாம் பெற்றுக் கொண்டோம். அவர் அன்பு பிசாசுகளை விரட்டுகிறது. நோய்களை குணமாக்குகிறது. பாவத்திலிருந்து விடுவிக்கிறது. விண்ணுலக வாழ்வைத் தருகிறது. இவை அனைத்திற்கும் அவர் அன்பு நம்மை தகுதிப்படுத்துகிறது.
அன்பின் கடவுளே, உமது அன்பில் நிலைத்து வாழ எங்களுக்கு கிருபை தாரும். சிலுவை நாதர் இயேசுவின் வழியாய் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.
