1 தீமோத்தேயு 6 : 6-10 29 அக்டோபர் 2025, புதன்
“மனோரம்மியத்தோடு கூடிய தேவ பக்தியே சிறந்த ஆதாயம்.”– 1 தீமோத்தேயு 6 : 6
உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பதில் நாம் அனைவரும் கவனம் செலுத்துகிறோம். நடைப்பயிற்சி செய்வது, அளவாக உண்பது, உடற்பயிற்சி செய்வதன் வழியாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் மனதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. மன அழுத்தங்கள் இக்காலத்தில் பெருகி வருகிறது. இந்த நாளுக்குரிய தியானப் பகுதி மனநிறைவோடு வாழ அழைக்கிறது.
திருமறையில் லோத்து என்பவர் மனைவி பிள்ளைகளுடன் சோதோம் கொமாரா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அப்பகுதி மிகவும் செழிப்பாக இருந்தது. மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். தேவையான அளவுக்கு பணமும் பொருளும் அவருக்கு இருந்தது. ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒழுக்கமற்றவர்களாக காணப்பட்டனர். எனவே கடவுள் அந்த ஊரை அழிக்க முடிவு செய்தார். ஆனால் லோத்தும் அவர் குடும்பத்தினரும் கடவுளுக்கு பயந்து வாழ்ந்தார்கள். எனவே கடவுள் அவர்களைக் காப்பாற்ற விரும்பினார். அந்த ஊரை விட்டு புறப்படச் சொன்னார். திரும்பி பார்க்காமல் போக கட்டளையிட்டார். ஆனால் லோத்தின் மனைவியோ போகிற வழியில் திரும்பி பார்த்தார். இது ஒரு மன நிறைவற்ற நிலை. தன் வீடுகளும் சொத்துகளும் அழிந்து போவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்றைக்கு இப்படியே பலரும் உலகத்தில் வாழ்கிறோம். உழைப்பதைக் கொண்டும் இருப்பதைக் கொண்டும் மன ரம்மியமாய் வாழ்வதே அவசியம். மன நிறைவோடுகூட தேவபக்தியே ஆகாயமானது என்று பவுல் குறிப்பிடுகிறார்.
குடும்ப வாழ்வில் மன நிறைவு அவசியம். அதுவே வீட்டுக்குள் மகிழ்ச்சி தரும். செய்கிற வேலைகளில் மன நிறைவு அவசியம். தொடர்ந்து வேலை செய்ய அது உதவி செய்யும். ‘வாழ்ந்திருக்கவும் தெரியும் தாழ்ந்திருக்கவும் தெரியும். எந்த நிலையிலும் மன ரம்மியமாய் இருக்க கற்றுக் கொண்டேன்’ என்று பவுல் கூறுகிறார். எப்படியெனில் அவர் முழுவதுமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்பினார்.
கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்கிற விசுவாசம்தான் மன நிறைவைத் தரும். வீட்டில் குறைவுகள் இருக்கலாம், வேலையில் குறைவுகள் இருக்கலாம். கர்த்தர் அதைப் பார்த்துக் கொள்வார். இந்த விசுவாசம் மன நிறைவைத் தரும். அதுவே பக்தியான வாழ்க்கை. அதுவே நம் வாழ்வுக்கான ஆசீர்வாதங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
ஆசீர்வதிக்கும் கடவுளே, மன நிறைவுடன் வாழ கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
