தானியேல் 9 : 20-22                                   30 அக்டோபர் 2025, வியாழன்

“பாதகம் முடிவாவதற்கும் பாவங்கள் முற்றுப்பெறுவதற்கும்… எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.” – தானியேல் 9: 24

இந்த உலகத்தில் விலையேறப்பெற்ற பொருள் ஒன்று உண்டென்றால். அதுதான் மன்னிப்பு. யாராவது ஒருவர் நம்மை மிகக் கடுமையாக துன்பப்படுத்தும்போது அதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை அவர்கள் மன்னிப்பு கேட்டாலும்கூட நம் மனம் அமைதல் அடைவதில்லை. நீ செய்த தவறை என்னால் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் நம்முடைய கடவுள் மன்னிப்பதில் வல்லவராக இருக்கிறார்.

‘நீதிமான் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை’ என்று திருவசனம் கூறுகிறது. அதன்படி நாம் யாரும் நல்லவர்கள் இல்லை. இதை யாரும் நமக்கு கற்பிக்க வேண்டியதில்லை. நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்கே தெரியும். பாவத்தின் சம்பளம் மரணம். இதுவே கடவுளின் நீதி. ஆனால் கடவுள் நம் மீது இரக்கம் கொண்டு நம்மை மன்னிக்க சித்தமாய் இருக்கிறார். அதற்காகவே தமது சொந்த குமாரனை இந்த உலகத்துக்குள் அனுப்பினார். அவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

அவர் இந்த உலகத்தில் வந்து நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார். பாவம் அறியாத அவர்மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி சிலுவையில் அறைந்தனர். சிலுவையிலிருந்து வெளியேறும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனாலும் அதை ஏற்றுக் கொண்டார். ஏற்றுக்கொண்டதற்கு காரணம் நம் பாவங்களை மன்னிக்க தம்மை பலியாக தந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் பாவ மன்னிப்பைத் தரும் தகுதி உடையவர்கள். நம் பாவத்தை அறிக்கை செய்யும்போது அவர் மன்னிக்கிறார்.

இயேசுவின் வழியாய் மன்னிப்பு பெறுகிற நாம் பிறரை மன்னிக்க அவரால் அழைக்கப்படுகிறோம். ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஏழு 70 தரம் மன்னியுங்கள் என்று இயேசு நமக்கு ஆலோசனை வழங்குகிறார். வீட்டுக்குள், உறவுகளுக்குள், திருச்சபைக்குள் யாரையெல்லாம் மன்னிக்க முடியாமல் தவிக்கிறோமோ அவர்களை இன்றைக்கே மன்னிப்போம். ஏனெனில் இயேசு நம்மை மன்னித்திருக்கிறார். நாம் ஏன் மன்னிக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் மன்னித்து கிறிஸ்தவ மாண்புடன் வாழ கடவுள் நமக்கு ஒத்தாசை செய்வாராக.

மன்னிக்கும் பிதாவே, ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ எங்களுக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே, ஆமேன்.