சங்கீதம் 97 : 10-12                                      24 அக்டோபர் 2025, வெள்ளி

“நீர் பொல்லாப்பைப் பார்த்து மகிழும் தெய்வம் அல்ல, தீமைக்கு உம்மண்டை இடமில்லை.” – சங்கீதம் 5 : 4

திருமறையில் தாவீதை கடவுள் மிகவும் நேசித்தார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை அழைத்தார். சாமுவேல் தீர்க்கதரிசியின் வழியாக அரசராக நியமித்தார். தாவீது அரசரும் கடவுளுக்கு பயந்தவராக இருந்தார். கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தார். மிகச்சிறந்த அரசராக செயல்பட்டார். மக்கள் அவரை பெரிதும் புகழ்ந்தனர். ஆனால் தாவீது அரசர் ஒருமுறை தவறினார். உரியா என்பவருடைய மனைவியை முறைகேடாக திருமணம் செய்து கொண்டார். உரியாவை திட்டமிட்டு கொலை செய்தார்.

கடவுள் நாத்தான் என்ற தீர்க்கதரிசியை அனுப்பி தாவீது செய்த குற்றத்தை சுட்டிக் காட்டினார். தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தார். தன் உடைகளை கிழித்துக்கொண்டார். ஏழு நாட்கள் உணவுருந்தாமல் தண்ணீர் குடிக்காமல் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கர்த்தரோ தாவீதுக்கும் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தையை அடித்தார். தன் வாழ்நாள் முழுக்க உண்மையுள்ளவராக வாழ்ந்தவர். கடவுளுக்கு கீழ்ப்படிந்தவர். ஒருமுறை தானே பொல்லாங்கு செய்தார். கடவுள் அவரை மன்னிக்கவில்லை. அவர் செய்த தவறை அவருக்கு உணர்த்தினார். கடவுள் பொல்லாப்பை விரும்புவதில்லை. எந்த தீமையான செயலுக்கும் கடவுளிடத்தில் இடமில்லை.

கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்கிற நாம் அறிந்தோ அறியாமலோ ஒரு தீமை செய்வோமானால் கடவுள் அதை ஏற்பதில்லை. அதேபோல் நமக்கு விரோதமாக பிறர் பொல்லாப்பு செய்யலாம். திட்டமிட்டு தீமை செய்யலாம். கடவுள் வேடிக்கை பார்க்க மாட்டார். என் குடும்பத்துக்கு பொல்லாப்பு செய்கிறார்களே என்று நாம் கவலையில் இருக்கலாம். என் பிள்ளைகளுக்கு விரோதமாய் தீமை செய்கிறார்களே என்ற பதட்டத்தில் நாம் இருக்கலாம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் கடவுள் கவனித்துக் கொண்டு இருக்கிறார். உண்மையுடன், நேர்மையுடன், துணிவுடனும் வாழ்வோம். கடவுள் நம்மை காப்பார்.

கிருபையின் பிதாவே, எங்கள் வாழ்வினில் எங்களுக்கு எதிராக உருவாகும் தீமைக்கு விலக்கி காத்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.