1 கொரிந்தியர் 10 : 23-29 26 அக்டோபர் 2025, ஞாயிறு
“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது… எல்லாம் பக்தி விருத்திக்கேதுவாகாது.” – 1 கொரிந்தியர் 10 : 23
ஒரு குழந்தை தன் தந்தையோடு விளையாடும்போது தந்தையை திட்டும், அடிக்கும், கொஞ்சி விளையாடும். தந்தை அதைக்கண்டு மகிழ்வார். அதே குழந்தை வளர்ந்து வாலிப பருவத்தை எட்டும்போது இதேபோல விளையாடினால் தந்தை மகிழ மாட்டார், கோபப்படுவார். ஏனென்றால் வயது கூடியிருக்கிறது. கல்வி அறிவு கிடைத்திருக்கிறது. அதற்கேற்றபடி தான் வாலிபப் பருவத்தில் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல கிறிஸ்தவ வாழ்க்கைக்கென ஒரு தகுதி இருக்கிறது. அதைப்பற்றித்தான் பவுல் இன்றைக்குரிய தியானப் பகுதியில் பேசுகிறார்.
பவுல் அடிகளார் திருப்பணி செய்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் வழிபாட்டிலும் விழாக்களிலும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர். சில தீய பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். தங்கள் உறவினர்களையும் இதுபோன்ற விழாக்களுக்கு அழைத்தார்கள். சிலர் அங்கு போய் அவர்களோடு இணைந்து அவர்கள் செய்யும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். இதை பவுல் கடுமையாக கண்டிக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற வாழ்க்கை. அதை மறந்து சுய விருப்பத்தின்படி வாழ்வதை பவுல் கண்டிக்கிறார். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் தகுதியாய் இராது. எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது என்று புரிய வைக்கிறார்.
நம்மில் சிலர் ஆலயத்திற்கு ஒழுங்காக வருவதில்லை. திருவசனத்திற்கு செவி கொடுப்பதில்லை. தன் சுய விருப்பத்தின்படி வாழ்வது. கடவுள் பயமற்று திரிவது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது. இப்படி பல தகுதியற்ற செயல்களில் ஈடுபடுகிறோம்.
இதிலிருந்து வெளிவர பவுல் நம்மை அழைக்கிறார். நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அது நமக்கு தகுதியானதா… அதனால் நமக்கு பக்தி விருத்தி உண்டாகுமா… என்று சிந்திக்க வேண்டும். தகுதி அல்லாததாக இருந்தால் பக்திவிருத்திக்கு உதவி செய்யவில்லையென்றால் அந்த செயலை செய்யக்கூடாது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற ரத்தத்தால் வாழ்வு பெற்றவர்கள் நாம். கடவுளின் பிள்ளைகள் என்கிற உரிமை பெற்றவர்கள். அதற்கேற்ற வாழ்வு வாழ கடவுள் நம்மை அழைக்கிறார்.
அருள் நிறைந்த கடவுளே, குமாரன் வழியாய் நீர் தந்த வாழ்விற்கு தகுதியுள்ளவர்களாய் வாழ வழி நடத்தும். இயேசுவின் வழியாய் ஜெபிக்கிறோம் பிதவே, ஆமேன்.
