ஆதியாகமம் 28 : 10-17 28 அக்டோபர் 2025, செவ்வாய்
“எவன் அபாத்திரமாய் ஆண்டவரின் அப்பத்தை புசித்து அவர் பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் ஆண்டவரின் சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றவாளியாவான்.” – 1 கொரிந்தியர் 11 : 27
‘குருவை மிஞ்சிய சீடன்’ என்று ஒரு வாசகம் உண்டு. ஆனால் உலகத்தில் பொதுவாக எந்த குருவும் தன்னுடைய சீடன் தன்னைவிட மிஞ்சியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தமது சீடர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க விரும்பினார். நீங்கள் என்னிலும் வல்ல காரியங்களை செய்வீர்கள் என்று சொன்னார். ஒரு நல்ல குருவாக செயல்பட்டார். தம்மை பின்பற்றுகிறவர்கள் தம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதனால்தான் இயேசு கிறிஸ்து ‘என்னைப் பின்பற்றுங்கள்’ என்று அழைக்கிறார். தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் அவராகவே மாற்ற திட்டமிட்டார். அதன் அடையாளமாக அவருடைய சரீரத்தையும் ரத்தத்தையும் கொடுத்தார். அதையே திருவிருந்து என்று கூறுகிறோம்.
திருவிருந்தில் பங்கு எடுக்கிற ஒவ்வொருவரும் திருவிருந்தின் மகத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று பவுல் குறிப்பிடுகிறார். அபாத்திரமாய் பங்கெடுக்கக் கூடாது என்று கூறுகிறார். அபாத்திரம் என்றால் அலட்சியமாக என்று பொருள். எனவேதான் திருவிருந்தில் பங்கெடுப்பதற்கு முன்பு திருச்சபைகளில் அதற்காக வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதுவே திடப்படுத்தல் வகுப்புகள். இன்றைய அவசர உலகத்தில் தற்கால இளைஞர்களும் பெற்றோர்களும் திடப்படுத்தல் வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் திருவிருந்தில் எப்படி பங்கெடுக்க வேண்டுமென்று தெரியாமல் போகிறது. பாவ அறிக்கையில் பங்கெடுப்பதில்லை. நேராக திருவிருந்தில் பங்கெடுப்பது போன்ற பல தவறுகள் இன்றைக்கு நடக்கின்றன. இப்படி நடந்து கொள்வது கடவுளுடைய பார்வையில் குற்றமாகும் என்று பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகிறார்.
ஏதாவது ஒரு விருந்திற்கு போகிற நாம் ஆயத்தத்தோடு போகிறோம். அதற்கு ஏற்றபடி உடை உடுத்துகிறோம். நேரத்துக்குச் செல்கிறோம். ஒரு சாதாரண விருந்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படியானால் திருவிருந்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ‘ஞானஸ்தானத்திலும் திருவிருந்திலும் பங்கடைகிற நாம் குட்டி கிறிஸ்துக்களாக மாறுகிறோம்’ என்று அறிஞர் மார்ட்டின் லுத்தர் குறிப்பிடுகிறார். அந்த கவனத்தோடு அக்கறையோடு ஆயத்தத்தோடு திருவிருந்தில் பங்கெடுப்போம்.
பரம தந்தையே, பயபக்தியோடு திருவிருந்தில் பங்கெடுக்கும் ஞானத்தை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
