vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

சுத்த இருதயத்துடன் வாழ்வோம்

சங்கீதம் 101 : 1-4                                          09 நவம்பர் 2025, ஞாயிறு

“குற்றமற்ற இருதயமுள்ளவனாய் என் வீட்டிலே நடந்து கொள்வேன்.” – சங்கீதம் 101 : 2

பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள். ஏனென்றால் வீட்டில் பிள்ளைகள் இருப்பதுபோல் வெளியில் இருப்பது இல்லை. வீட்டில் நல்ல பிள்ளைகளாய் இருப்பவர்கள் வெளியில் பொல்லாதவர்களாய் நடக்க வாய்ப்பு உள்ளது.

பொன் மொழி ஒன்று உண்டு. “உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று கூறிவிடுகிறேன்” என்பதாகும்.

ஒழுக்கம் முதலில் வீட்டில் இருந்துதான் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. பழைய போதகர்களின் குடும்பங்களை பார்த்து இருக்கிறோம். போதகர்கள் வீட்டில் குடும்ப ஜெபம் காணப்படும். போதகரம்மா பெண்கள் ஊழியத்தில் முக்கிய பங்கு கொண்டு செயல்படுவார்கள். போதகரின் பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனி மரியாதை இருக்கும். இவை எல்லாம் போதகர் குடும்பம் என்ற நிலையில் கண்டோம்.

போதகர் வீடு சந்திக்கும் போது குடும்ப பிரச்சனைகளை அவரிடம் கூறவும், குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் எப்படி கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர வேண்டும் என கற்று தந்தார்கள். அவர்கள் வாழ்ந்தும் காட்டினார்கள்.

தாவீது ராஜா கடவுளிடம், “கடவுளே சுத்த இருதயத்தை எனக்குத் தாரும்” என்று வேண்டுதல் செய்தார். மனிதனின் இருதயம் மகா கேடுள்ளது என்பதையும் வேதத்தில் நாம் காண்கிறோம்.

நமது குடும்பங்களில் சுத்த இருதயம் உடையவர்களாய், உண்மையை பேசி நியாயத்தை கடைபிடித்து, நீதியை செய்கிறவர்கள் குறைந்து கொண்டு இருக்கிறார்கள்.

பிறர் மனதை துக்கப்படுத்துகிற நிகழ்வுகளை நாம் நினைவுகூருவோம். நாம் வாழும் திருச்சபைகளில் சுத்த இருதயமுடையவர்களாக வாழ வேண்டும். நம்மை பார்க்கிறவர்கள் நமது செயல்களை கண்டு கடவுளை மகிமைப்படுத்த வேண்டும்.

இளைய மகன் மனந்திரும்பி தந்தையிடம் வந்தபோது உம்முடைய வீட்டில் வேலைக்காரனாக இருந்து வாழ்கிறேன் என்றான். அதற்கு பொருள் குற்றமற்ற இருதயமுள்ளவனாக இருப்பேன் என்பதாகும்.

தாலந்து பெற்றவர்களில் 10, 5 பெற்றவர்கள் எஜமானுக்கு குற்றமற்ற இருதயமுடையவர்களாய் காணப்பட்டு அதனை 10 மடங்காக, 5 மடங்காக சம்பாதித்து எஜமானிடம் நற்பெயரை பெற்றார்கள். 1 தாலந்தை வாங்கியவன் நிலத்தில் புதைத்ததால் எஜமானனின் கோபத்திற்கு ஆளாகி விடுகிறான்.

கடவுளிடம் குற்றமற்ற இருதயமுடையவர்களாய் வருவோம். ஆசீர்வாதத்தை பெறுவோம்.

அன்புள்ள கடவுளே! உமது நாமத்தினால் மீட்கப்பட்ட மக்களாகிய நாங்கள் உமக்கு முன் குற்றமற்ற இருதயமுள்ளவர்களாய் வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

சுத்த இருதயத்துடன் வாழ்வோம்2025-11-06T06:19:34+00:00

நம் படைப்பிற்காக நன்றி செலுத்துவோம்

ஆதியாகமம் 1 : 26-27                                             08 நவம்பர் 2025, சனி

“அற்புதமும் ஆச்சரியமுமாய் நான் உண்டாக்கப்பட்டேன்.” – சங்கீதம் 139 : 14

அற்புதமும் ஆச்சரியமுமாய் உண்டாக்கப்பட்டேன். ஆதலால் உமக்கு நன்றி செலுத்துவேன்.

நமது தேசத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறுவது சட்ட விரோதம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏன் என்றால் பெண் குழந்தைகளை கருவில் அழிக்கும் மனசாட்சியற்ற மனிதர்களால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருவில் உருவாகும் முதல் உறுப்பு இருதயம் என நாம் அறிவோம். நாம் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் வளருகிறோம். என்ன ஆச்சரியம்! தாயின் வயிற்றில் எழும்புகளுடனும், சதையுடனும், தோலுடனும், இருதயம், கண், காது இவைகளுடன் முழு உருவம் பெற்று வளருகிறோம்.

ஆதாம், ஏவாள் இருவரையும் கடவுள் அவரின் சாயலாக உருவாக்கினார் என ஆதியாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். கடவுளின் சாயல் என்பது பரிசுத்தம், நீதி, உண்மை இவைகளாகவே உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதனை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

எத்தனையோ பேர்கள் கண்பார்வை இல்லாமல் பிறக்கிறார்கள், கை, கால் இல்லாமல் பிறக்கிறார்கள். வாய் பேச முடியாதவர்களாய் பிறக்கிறார்கள். ஆனால் முழு மனிதர்களாக உருவாக்கப்பட்டு கடவுள் அற்புதமாய் நம்மை இவ்வுலகில் வாழ செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்.

நமது முதியோர்கள் நமக்கு நல்ல பாடம் கற்று தந்துள்ளார்கள். செருப்பு இல்லை என்று கோபப்படும் போது கால் இல்லாதவர்களை நினைத்து கடவுள் நல்ல கால்களை எனக்கு படைத்ததற்காக நன்றி சொல்ல வேண்டும்.

நமக்கு நேரம் கிடைக்கும் போது கண் பார்வையற்ற இல்லங்களுக்கு சென்று அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும்.

மனநிலை பாதிக்கப்பட்ட இல்லங்களுக்கு சென்று அவர்களின் துன்பங்களை அறிந்தும், கை, கால்கள் இழந்தவர்கள் உணர்வுகளை அறிந்து அவர்களுக்காக ஜெபிக்கவும், கொடுக்கவும் முன்வருவோம்.

மருத்துவமனைக்கு சென்று குறைகளோடு, நோய்களோடு காணப்படுகிற சக மனிதர்களிடம் உறவாடி வருவோம். ஊழியங்களில் மருத்துவமனை ஊழியம் மிக முக்கிய ஊழியமாக கருத வேண்டும்.

கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும் சுகமாய் நடத்துவதற்கு நன்றி சொல்ல வேண்டும். குறைகளாய் இவ்வுலகில் வாழ்ந்து வருகிற சக விசுவாசிகள், குடும்பத்தின் அங்கங்கள், நம் சுற்று வட்டத்தில் வாழ்கிறவர்கள், இவர்கள் வாழ்வுக்காக ஜெபித்து, உதவிகரம் நீட்ட அழைக்கப்படுகிறோம்.

வியாதியாக இருந்தேன் பார்க்க வந்தீர்கள் என்ற இயேசுவானவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் முன் வருவோம்.

சுத்த இருதயத்துடன் வாழ்வோம்

அன்புள்ள கடவுளே! எங்களின் சரீர சுகத்திற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் அவயங்கள் உமக்கு பிரியமானதை செய்ய ஆவியானவரின் துணையை தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

நம் படைப்பிற்காக நன்றி செலுத்துவோம்2025-11-06T06:15:59+00:00

தாலந்தை பயன்படுத்துவோம்

லூக்கா 12 : 4-7                                               07 நவம்பர் 2025, வெள்ளி

“பயந்து சென்று உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.” – மத்தேயு 25 : 25

பயம் மனிதனை ஒடுக்கிவிடுகிற ஓரு நோயாகும். இயேசு பிறப்பின்போது மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்ட முதல் வார்த்தை பயப்படாதிருங்கள் என்பதாகும்.

இருள் நிறைந்த ஓர் இரவில் தந்தையும், மகளும் ஓர் காட்டின் பகுதியை கடந்தார்கள். இருள் பகுதிகள் முடிந்து வெளிச்சம் நிறைந்த பகுதிக்கு வந்தபோது தந்தை மகளிடம் இருள்நிறைந்த பகுதியை நாம் கடக்கும்போது பயந்துவிட்டாயா? என கேட்டார். மகள் இல்லையப்பா உங்கள் கைகள் என்னை இறுக பற்றிக்கொண்டு இருந்தபடியால் பயம் எனக்கு வரவில்லை என்றாள். கடவுள் நமது கரங்களை பிடித்துள்ளார் என்ற நம்பிக்கை நம்மில் காணப்பட்டால் இவ்வுலக வாழ்வில் எதற்கும் பயப்பட தேவை இல்லை என்பதனை உணர்வோம்.

சோம்பேறிகள் பயம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு தாலந்தை வாங்கியவன் அதனை பயன்படுத்தாமல் சோம்பேறியாய், கவலையற்றவனாய் இருந்தான். எஜமானனின் குணங்களை விமர்சிக்கிறவனாக காணப்படுகிறான். தாலந்தை பயன்படுத்தாமல் புதைத்து வைக்க பயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி தப்பித்து கொள்ள பார்க்கிறான். ஆனால் எஜமான் அவனுக்கு தண்டனை கொடுக்கிறார்.

அநீதி நடக்கும்போது பயத்தினால் நம்முடைய வாழ்க்கையில் அமைதியாக இருப்போமானால் நீதி சாகடிக்கப்படும். நீதியை நிலை நாட்ட தைரியமாக பேச வேண்டும். பயந்து ஒதுங்கினால் நீதி அநீதியாக மாறும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

கோலியாத்தை எதிர்க்க இஸ்ரவேலர் ராணுவத்தினர் பயந்தார்கள். ஆனால் தாவீது எதிர்த்து வெற்றி பெறுகிறார். ஏனெனில் தாவீதுக்கு பயம் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்ததால் வெற்றியும் பெற முடிந்தது.

பயம் நிறைந்த வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாய் அமையாது.

இயேசு சிலுவையின் பாடுகளைக் கண்டு பயப்படவில்லை. அதனை எதிர்கொண்டு உயிரை விடவும் துணிந்தார். அதனால் உலகம் மீட்கப்பட்டு, வாழ்வு பெற்றது. பிதாவுடன் ஐக்கியப்பட்டு வாழும் வாழ்வு மனித குலத்திற்கு கிடைத்தது.

அநீதியை நம்முடைய வாழ்வில், சமூக வாழ்வில், திருச்சபை வாழ்வில் நீக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

அன்பின் கடவுளே! எங்களில் காணப்படும் பயம் உள்ள வாழ்வை நீக்கி எங்கள் தாலந்துகளை பிறருக்கு பயன்பட்டு உமக்கு பிரியமாக வாழ உதவி தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

தாலந்தை பயன்படுத்துவோம்2025-11-06T06:11:41+00:00

சோதனை நல்லது

1 தெசலோனிக்கேயர் 5 : 12-21                                        06 நவம்பர் 2025, வியாழன்

“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்து கொள்ளுங்கள்.” – 1 தெசலோனிக்கேயர் 5 : 21

அழகான பொன்மொழி ஒன்று உண்டு. உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பதாகும். அது எவ்வளவு உண்மையானது.

எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை தேர்வு செய்ய வேண்டும். அதனை பிடித்துக்கொள்ள வேண்டும். ஓரு பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும்போது மாப்பிள்ளையைப் பற்றி பல கோணங்களில் விசாரிக்கிறோம். அவரின் நற்குணங்கள் மேலோங்கி நின்றால் பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.

எந்த பொருளையும் மனிதன் சோதித்து பார்த்து நல்லது என கண்டால் அதனை பெற்று கொள்ளுகிறான்.

திருடனுடன், பொய் பேசுகிறவர்களுடன், ஒழுக்கமற்று வாழ்பவனுடனும் யாரும் சேர்ந்து வாழ விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களுடன், நாமும் இருப்பதாக மக்கள் அறிந்தால் நம் பெயர் கெட்டுப் போகும். எனவே சோதனை செய்வது எவ்வளவு நல்லது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யோசுவா இஸ்ரவேலர் ஜனங்களிடம் எகிப்தில் இருந்து நடத்தி வந்து கானான் தேசத்தை தந்த கடவுளின் செய்கைகளை நினைவு படுத்துகின்றார். இந்த கடவுளை தவிர வேறு கடவுள் உலகில் இல்லை என உறுதியாக சொல்வதுமன்றி நானும் என் வீட்டாரும் கர்த்தரை மட்டும் சேவிப்போம் என உறுதி அளிக்கிறார். ஜனங்களும் அவரின் போதனைகளுக்கு கீழ்படிந்து ஜீவனுள்ள கடவுளையே சேவிப்போம் என்றார்கள்.

கிதியோன் கடவுளின் ஆற்றல் மிகு வல்லமையை சோதித்து தெளிவு பெற்றார். யுத்த களத்தில் கர்த்தரின் நாமத்தில் வெற்றி பெற்றார்.

தானியேல் அடிமை தேசத்தில் சைவ உணவுகளை மட்டுமே உண்டார். அவரை சோதித்தபின் மற்றவர்களின் வலிமையைவிட தானியேலின் பலம் மிகுதியாக காணப்பட்டது என அறியலாம்.

சோதனை வருவது நல்லது. இதில் உண்மையான நண்பர்கள் யார் என தெரிந்து கொள்ளலாம். சோதனையின் மூலம் கடவுளின் வழிநடத்துதலையும், அவரின் கிருபையின் மூலம் மகிமையையும் அறிந்து கொள்ளலாம். இயேசுவானவர் பிசாசினால் சோதிக்கப்பட்டார். வேத வசனங்களால் இயேசுவானவரை தோல்வி அடைய செய்யலாம் என நினைத்தான். ஆனால் இயேசுவானவர் நல்வார்த்தையினால் பிசாசை தோற்கடித்தார் என்பதனை நாம் உணர வேண்டும்.

நல்லதை பெற்றுக்கொள்ள சோதனை அவசியமாகும். சோதனை நல்ல பாடங்களை நமக்கு கற்று தரும்.

அன்புள்ள கடவுளே! நாங்கள் எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நன்மையானதை பின்பற்றி வாழ ஆவியானவரின் துணையை தந்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

சோதனை நல்லது2025-11-05T08:56:05+00:00

அன்பு பாராட்டுதல்

1 யோவான் 2 : 22-25                            05 நவம்பர் 2025, புதன்

“பிதா நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு மேன்மையானதென்று பாருங்கள்.” – 1 யோவான் 3 : 1

கடவுள் நம்மீது பாராட்டிய அன்பை குறித்து கேள்விபட்டிருக்கிறோம். இந்திய தேசத்திலே நம்முடைய முன்னோர்களின் வாழ்வு எப்படி இருந்தது என அறிவோம். கல்வியானது கிடைக்கவில்லை, உரிமைகள் மறுக்கப்பட்டன, அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.

பாவிகள் என்று அழைக்கப்பட்ட நாம் இன்று கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படும் நிலைக்கு கடவுள் உயர்த்தினார்.

ஊழியர்களின் வருகையினால் கடவுளிடமிருந்து அன்பை, வரங்களை பெற்று இருக்கிறோம். அன்பு மிகுதியால் திறமைகளை நமக்கு தந்து உயர்த்துகிறார். ஆனால் நாம் திறமைகளை பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோம்.

இன்று நாம் பெற்று இருக்கிற வாழ்வு கிறிஸ்துவின் அஸ்திபாரம் என்பதனை மறந்துவிட வேண்டாம். சிலுவையில் இயேசுவானவர் மரித்து, இன்றுள்ள மகிமையான வாழ்வை நமக்கு தந்து இருக்கிறார்.

பிதாவின் அன்பை பெற்றுள்ள நாம் பிறருக்கு இந்த அன்பை கொடுக்க வேண்டும்.

அன்பு குறைந்துவிட்டதால் வீடுகளில் பிரச்சனை, கணவன், மனைவி இருவருக்குள் சண்டைகள், பிரிவினைகள், பெற்றோர் குழந்தைகளின் அன்பு மறைந்து விடுகிறது.

திருச்சபைகளில் இந்த அன்பு குறைவினால் பிரிவினைகள். இதனால் கிறிஸ்தவத்தின் மகிமை குறைந்துள்ளது. பிறர் ஏளனமாக பார்க்கும் நிலையில் உள்ளோம்.

1 கொரிந்தியரில் பவுல் அன்புக்கு 13-ம் அதிகாரத்தை எழுதி தந்துள்ளார். அன்பு எவைகளையெல்லாம் செய்யும், எவைகளையெல்லாம் செய்யாது என விளக்குகிறார். கடவுளின் அன்பு மாறாதது. மனிதனின் அன்பு மாறக்கூடியது.

கிறிஸ்து நம்மீது வைத்துள்ள அன்பை தினமும் நினைவு கூருவோம். அன்புள்ள தகப்பன் அப்பத்திற்கு பதில் பிள்ளைகளுக்கு பாம்பை கொடுப்பதில்லை.

கடவுள் நம்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினால் வாழ்கிறோம். நாம் பிழைத்து இருப்பது கர்த்தரின் கிருபையே என்பதனை உணர்வோம். கடவுளிடம் அன்பை பெற்று வாழ்கிற நாம் பிறருக்கு அந்த அன்பை காட்டாமல் இருப்பது எவ்வளவு தவறு என்பதனை உணர்வோம்.

அன்பின் கடவுளே! நீர் எங்கள் மீது வைத்த அன்பினை உலகத்திற்கு காண்பிக்க உம் சொந்த குமாரனாகிய இயேசுவை சிலுவையில் அறைய கொடுத்தீர். அந்த அன்பை உணர்ந்து உமது பிள்ளைகளாய் வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அன்பு பாராட்டுதல்2025-11-03T07:17:12+00:00

முடிவு மகிமையாய் காணப்படட்டும்

கலாத்தியர் 3 : 1-5                              04 நவம்பர் 2025, செவ்வாய்

“ஆவியில் தொடங்கிய நீங்கள் இப்பொழுது மாம்சத்தில் முடிக்கப் போகிறீர்களோ?” – கலாத்தியர் 3 : 3

தொடக்கம் அற்பமாக காணப்பட்டாலும் முடிவு மகிமையாக காணப்பட வேண்டும் என மக்கள் அனைவரும் விரும்பும் ஓரு நல்ல வார்த்தையாகும்.

ஒரு வீட்டை கட்டுகிறபோது அது அற்பமாக காணப்படும். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு மிக நேர்த்தியாக அலங்கரிக்கிறபோது அதன் மதிப்பு பல மடங்காகக் காணப்படும்.

கிறிஸ்தவம் இன்று ஓரு மாய ஜாலம் காட்டும் கண்ணாடிபோல காணப்படுகிறது. விசுவாசத்துடன் வரும் விசுவாசிகள் தொடக்க காலத்தில் உறுதியான விசுவாசத்தில் காணப்பட்டாலும் தொடர்ந்து விசுவாச வாழ்வில் வாழாமல் உலக வாழ்வில் முடித்து கொள்கிறார்கள்.

இன்று கிறிஸ்துவை தங்கள் தேவைகளை கிடைக்க செய்யும் ஒருவர் போல நினைக்க தொடங்கி விட்டார்கள்.

கிறிஸ்துவின் சிலுவை வழியாக நமக்கு கிடைத்து இருக்கிற விலையில்லா மீட்பு, இரட்சிப்பு, வாய்மை, மேன்மை, சமாதானம், சந்தோஷம், விசுவாச வாழ்க்கை, பரிசுத்த வாழ்க்கை, கிருபையின் நாட்கள் இதற்கு மேலாக பிதாவோடு ஐக்கியப்பட்டு வாழும் வாழ்வு இவை அனைத்தையும் மறந்து போய் இருக்கிறோம்.

நம்முடைய முற்பிதாக்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்ட போது விசுவாச வாழ்வில் நிலைத்து இருந்தார்கள். ஆலயத்திற்கு செல்வார்கள், வீடுகளில் வேதம் வாசித்து ஜெபித்தார்கள், பிறருக்கு தீமை செய்யாத வாழ்வை மேற்கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து மரித்தார்கள். இன்று அந்த விசுவாச வாழ்வு குறைவுபட்டு உள்ளது.

கிறிஸ்துவை இவ்வுலக வாழ்வக்காக மட்டும் நாம் ஏற்றுக் கொண்டு வாழ்வதால் எந்த பலனும் இல்லை. மரித்த பின் ஓரு வாழ்வு அவரோடு உள்ளது. அதற்காக, வாழும் காலம்வரை சாட்சியுள்ள வாழ்வு வாழும்படி அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

நம்முடைய குடும்பங்களில் குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேத வாசிப்பு, தினம்தோறும் நடைபெற வேண்டும். திருச்சபைகளில் நாம் முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்ட வேண்டும். கிறிஸ்துவின் உண்மையான பிள்ளைகள் என நம்மை சுற்றியுள்ள சமூகம் கூற வேண்டும்.

கிறிஸ்துவை தலையாகக் கொண்டு கடைசி வாழ்வு வரை ஆவியில் நடத்தப்பட்டு சாட்சியாய் வாழ ஆவியானவர் துணை புரியட்டும்.

அன்புள்ள கடவுளே! நீங்கள் எங்களில் வாழும் கடவுளாக இருக்கிறபடியால் எங்கள் சரீரங்களை பரிசுத்தமாக என்றும் காத்திட அருள்தாரும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.

முடிவு மகிமையாய் காணப்படட்டும்2025-11-03T07:14:39+00:00

முடிவு மகிமையாய் காணப்படட்டும்

கலாத்தியர் 3 : 1-5                           04 நவம்பர் 2025, செவ்வாய்

“ஆவியில் தொடங்கிய நீங்கள் இப்பொழுது மாம்சத்தில் முடிக்கப் போகிறீர்களோ?” – கலாத்தியர் 3 : 3

தொடக்கம் அற்பமாக காணப்பட்டாலும் முடிவு மகிமையாக காணப்பட வேண்டும் என மக்கள் அனைவரும் விரும்பும் ஓரு நல்ல வார்த்தையாகும்.

ஒரு வீட்டை கட்டுகிறபோது அது அற்பமாக காணப்படும். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு மிக நேர்த்தியாக அலங்கரிக்கிறபோது அதன் மதிப்பு பல மடங்காகக் காணப்படும்.

கிறிஸ்தவம் இன்று ஓரு மாய ஜாலம் காட்டும் கண்ணாடிபோல காணப்படுகிறது. விசுவாசத்துடன் வரும் விசுவாசிகள் தொடக்க காலத்தில் உறுதியான விசுவாசத்தில் காணப்பட்டாலும் தொடர்ந்து விசுவாச வாழ்வில் வாழாமல் உலக வாழ்வில் முடித்து கொள்கிறார்கள்.

இன்று கிறிஸ்துவை தங்கள் தேவைகளை கிடைக்க செய்யும் ஒருவர் போல நினைக்க தொடங்கி விட்டார்கள்.

கிறிஸ்துவின் சிலுவை வழியாக நமக்கு கிடைத்து இருக்கிற விலையில்லா மீட்பு, இரட்சிப்பு, வாய்மை, மேன்மை, சமாதானம், சந்தோஷம், விசுவாச வாழ்க்கை, பரிசுத்த வாழ்க்கை, கிருபையின் நாட்கள் இதற்கு மேலாக பிதாவோடு ஐக்கியப்பட்டு வாழும் வாழ்வு இவை அனைத்தையும் மறந்து போய் இருக்கிறோம்.

நம்முடைய முற்பிதாக்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்ட போது விசுவாச வாழ்வில் நிலைத்து இருந்தார்கள். ஆலயத்திற்கு செல்வார்கள், வீடுகளில் வேதம் வாசித்து ஜெபித்தார்கள், பிறருக்கு தீமை செய்யாத வாழ்வை மேற்கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து மரித்தார்கள். இன்று அந்த விசுவாச வாழ்வு குறைவுபட்டு உள்ளது.

கிறிஸ்துவை இவ்வுலக வாழ்வக்காக மட்டும் நாம் ஏற்றுக் கொண்டு வாழ்வதால் எந்த பலனும் இல்லை. மரித்த பின் ஓரு வாழ்வு அவரோடு உள்ளது. அதற்காக, வாழும் காலம்வரை சாட்சியுள்ள வாழ்வு வாழும்படி அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

நம்முடைய குடும்பங்களில் குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேத வாசிப்பு, தினம்தோறும் நடைபெற வேண்டும். திருச்சபைகளில் நாம் முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்ட வேண்டும். கிறிஸ்துவின் உண்மையான பிள்ளைகள் என நம்மை சுற்றியுள்ள சமூகம் கூற வேண்டும்.

கிறிஸ்துவை தலையாகக் கொண்டு கடைசி வாழ்வு வரை ஆவியில் நடத்தப்பட்டு சாட்சியாய் வாழ ஆவியானவர் துணை புரியட்டும்.

அன்புள்ள கடவுளே! நீங்கள் எங்களில் வாழும் கடவுளாக இருக்கிறபடியால் எங்கள் சரீரங்களை பரிசுத்தமாக என்றும் காத்திட அருள்தாரும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.

முடிவு மகிமையாய் காணப்படட்டும்2025-10-31T09:46:27+00:00

கர்த்தரையே ஆராதிப்போம்

1 சாமுவேல் 7 : 2-4                     03 நவம்பர் 2025, திங்கள்

“உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராகத் திருப்பி, அவர் ஒருவரையே சேவியுங்கள்.” – 1 சாமுவேல் 7 : 3

கர்த்தருக்கு ஆராதனை செய்வது, சேவிப்பது, துதிப்பது அனைத்தும் அவரின் பிள்ளைகள் என்பதனை உணரச் செய்யும் காரியங்கள் ஆகும்.

யோசுவா இஸ்ரவேலர் ஜனங்களை நோக்கி கடவுள் எகிப்திலிருந்து நடத்தி வந்த அதிசயமான காரியங்களை கூறினார். வல்லமையுள்ள கடவுளுக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. அவர் என்றும் வாழ்கின்ற கடவுள் என்பதனை விளக்கிக் கூறினார். இந்த மகா பெரிய கடவுளை நானும் என் வீட்டாரும் சேவிப்போம். நீங்கள் வேண்டுமானால் அந்நிய கடவுளை சேவியுங்கள் என கூறியபோது, இஸ்ரவேலர் ஒரே மனம் படைத்தவர்களாக கடவுளையே சேவிப்போம் என்றார்கள்.

நம்முடைய இருதயம் மகா கேடுள்ளது. கடவுளின் செயல்களையும், அற்புதங்களையும் மறந்து உலக காரியங்களை சிந்திக்கும்.

இஸ்ரவேலர் கடவுளை மறந்தார்கள். அவர்கள் இருதயம் கடவுளை விட்டு அகன்று போயிற்று. இதனால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலர் மக்களிடம், நீங்கள் முழு இருதயத்துடன் கடவுளை தேடினால் மட்டுமல்ல, அந்நிய தெய்வங்களை உங்கள் நடுவிலிருந்து அகற்றிவிட வேண்டும். கர்த்தரை மட்டுமே தெய்வமாக கொண்டு அவரை சேவிக்க வேண்டும். அப்பொழுது பெலிஸ்தியர் கையிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் என்றார்.

நியாயப்பிரமாணத்தின் முதல் கட்டளை என்னையன்றி வேறு தெய்வம் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்பதாகும். அதனை கடவுள் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார். ஏனெனில் அவர் மட்டுமே உலகத்தை படைத்து ஆளும் மெய்யான கடவுளாக இருக்கிறார்.

ஆபிரகாமை கடவுள் அழைத்தபோது உன் இன, ஜன, பந்துக்கள் அனைவரையும்விட்டு வர வேண்டும் என்று மட்டும் சொல்லாமல், நீ வணங்கும் தெய்வங்களையும், விட்டு வரும்படியாக அழைத்தார். ஆபிரகாம் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கடவுளின் வார்த்தையை விசுவாசித்து வாழ்ந்தார். எனவே விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இன்று நாம் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இருதயத்தையும், அவருக்கு கொடுக்க வேண்டிய கனம், மகிமையும் மனிதர்களுக்கு கொடுக்கிறோம். கடவுள் நமக்கு பாராட்டி வருகிற கிருபையை மறந்து குறி சொல்லுகிறவர்களிடமும், மந்திரவாதிகளிடமும் நம்பிக்கை கொண்டு செல்லுகிறோம். இது தவறு என உணர்வோம். நம் முழு இருதயத்துடன் கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! உம்மையே நாங்கள் முழு இருதயத்துடன் ஆராதனை செய்து உம் மகிமையை பிறருக்கு எடுத்துகாட்ட உதவிபுரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கர்த்தரையே ஆராதிப்போம்2025-10-31T09:50:44+00:00

அழ வேண்டாம் சந்தோஷப்படுவோம்

மத்தேயு 16 : 9-11                               02 நவம்பர் 2025, ஞாயிறு

“அம்மா ஏன் அழுகிறாய்?” – யோவான் 20 : 15

இயேசு உயிர்த்தெழுந்த பின் மரியாளிடம் கேட்கும் வார்த்தை ஏன் அழுகிறாய்?

அழுகையில் பலவகையுண்டு. குழந்தையின் அழுகை எதற்காக என்று தாய் அறிந்துகொண்டு பாலூட்டுகிறாள். சில குழந்தைகள் சில பொருள்களை அழுது பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் இழப்பினால் அழுகிறோம். மகிழ்ச்சியின் மிகுதியால் அழுகிறோம்.

இயேசுவும் லாசருவின் கல்லறையில் நின்று அழுதார் என வேதத்தில் வாசிக்கிறோம்.

யோசேப்பு சகோதரர்களிடம் தன்னை வெளிப்படுத்தியபோது அழுதார், ஆகார் தன் பிள்ளைக்காக அழுதாள், அன்னாள் பிள்ளை வேண்டி அழுதாள், பேதுரு மனங்கசந்து அழுதார் என்று வேதத்தில் பார்கிறோம்.

தியானப்பகுதியில் மரியாள் இயேசுவின் சரீரத்தை காணவில்லை என்று அழுகிறார். நாயீன் ஊர் வாலிபனை அடக்கம் செய்ய கொண்டு போகும்போது தாயாரின் அழுகையை இயேசு கண்டு மனம் உருகி வாலிபனை உயிரோடு எழுப்பி தாயாரின் கண்ணீரைத் துடைத்தார்.

திருமண வீட்டிற்கு செல்வதைவிட மரண வீட்டிற்கு செல்லுங்கள். தந்தை, தாயை இழந்து அழும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து கண்ணீர் வடிக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு ஆறுதல் எங்கிருந்து கிடைக்கும். இவர்களின் கண்ணீரை துடைப்பதற்கு நாம் என்ன செய்துள்ளோம். நாம் சார்ந்த திருச்சபை என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பதனை எண்ணிப் பார்த்து அவர்களின் கண்ணீரை துடைக்க முன்வருவோம்.

தேசத்திற்காக, நீதிக்காக, பரிசுத்தத்திற்காக, நேர்மைக்காக அழ வேண்டும். நாம் துக்கமடைந்து அழும்போது மனிதர்கள் நம் துக்கத்ததை துடைக்க முன்வராமல் போகலாம். ஆனால் கடவுள் நம் துக்கத்தை துடைக்க வருகிறார். நாம் அழுவதற்காக இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. நாம் பாவத்தைவிட்டு மகிழ்ச்சியான வாழ்வு பெறவே மரித்து, உயிர்த்தெழுந்தார்.

அழுகையின் மூலம் ஓரு களிப்பு, மகிழ்ச்சி பிறக்க வேண்டும். இயேசு அழுதார், அதன் மூலமாக கடவுள் லாசருவை உயிரோடு எழும்ப செய்தார். அன்னாள் அழுதார், முதல் தீர்க்கதரிசியாய் சாமுவேல் பிறந்தார். தாவீது ராஜா அழுதார், பாவ மன்னிப்பை பெற்றார்.

நம் அழுகை பிறர் வாழ்வுக்காக மட்டுமே என்பதனை உணருவோம்.

அன்புள்ள இயேசுவே! நாங்கள் கண்ணீரின் பிள்ளைகளாய் அல்ல பிறர் அழுகையை துடைக்கிற மக்களாய் வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

அழ வேண்டாம் சந்தோஷப்படுவோம்2025-10-31T09:41:06+00:00

கடவுள் நமக்கு தந்தையாக வாழ்கிறார்

சங்கீதம் 46 : 7-11                             01 நவம்பர் 2025, சனி

“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்.” – யோவான் 14 : 18

கணவனை இழந்த மனைவி, அவரின் உடலுக்கு அருகில் இருந்து கொண்டு புலம்பி அழுவதை பார்த்திருக்கிறோம். எங்களை விட்டு போய் விட்டீர்களே! என்னையும் பிள்ளைகளையும் அனாதையாக்கி விட்டு சென்றுவிட்டீர்களே என்ற வார்த்தைகளை கேட்டு கலங்கி நிற்கிறோம்.

தியானப்பகுதியில் சீஷர்களிடம் இயேசு மரணத்தை வெளிப்படையாக சொல்லியபோது கலங்கி நிற்கிறார்கள். அப்பொழுது இயேசு கூறிய நல்வார்த்தை, “நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்,” என்பதாகும்.

அன்னை தெரசா அவர்களைப்பற்றி கூறும்போது, அன்னையே நீ திருமணமாகி குழந்தை பெற்று இருந்தால் அக்குழந்தைகளுக்கு மட்டும் தாயாகி இருப்பாய். ஆனால் அவற்றை துறந்ததால் அநேக அனாதை பிள்ளைகளுக்கு தாயாகிவிட்டாய் என போற்றப்படுகிறார்.

இவ்வுலக வாழ்வில் யார் நம்மை கைவிட்டாலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். தாய் மறந்தாலும், தந்தை மறந்தாலும் அவர் நம்மை மறப்பதில்லை. கடவுள் நம்மை அவர் உள்ளங்கையில் வரைந்து இருக்கிறார் என்ற வாக்குத்தத்தம் அவர் நம்மை திக்கற்றவர்களாக விடுவது இல்லை என்பதை உணர்த்தும்.

நாம் வாழும் சமூகத்தில் திக்கற்றவர்களை ஆதரிக்க வேண்டும். நம்முடைய பிறந்த நாள், திருமணநாள், ஞானஸ்நானம் பெற்ற நாள் போன்ற நல்ல நாட்களில் அருகில் உள்ள அனாதை இல்லங்களுக்கும், கைவிடப்பட்ட முதியோர் இல்லங்களுக்கும் சென்று அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி, வார்த்தைகளால் அவர்களை தேற்றி வருவது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் என்பதனை உணர்ந்து அதனை செய்வோம்.

தனிமைப்பட்டு நாம் நிற்கும்போதும், கலங்கும்போதும் கடவுள் நம்முடன் இருக்கிறார். நாம் திக்கற்றவர்கள் அல்ல என்ற விசுவாசத்துடன் வாழும் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்வோம்.

அன்புள்ள கடவுளே! இவ்வுலக வாழ்வில் நாங்கள் திக்கற்றவர்கள், அனாதைகள் என்று உணரும்போது உமது ஆவியானவர் மூலம் நீர் எங்களுடன் இருக்கிறீர் என்ற நம்பிக்கையை தந்து வாழச் செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுள் நமக்கு தந்தையாக வாழ்கிறார்2025-10-31T09:38:40+00:00
Go to Top