1 தெசலோனிக்கேயர் 5 : 12-21                                        06 நவம்பர் 2025, வியாழன்

“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்து கொள்ளுங்கள்.” – 1 தெசலோனிக்கேயர் 5 : 21

அழகான பொன்மொழி ஒன்று உண்டு. உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பதாகும். அது எவ்வளவு உண்மையானது.

எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை தேர்வு செய்ய வேண்டும். அதனை பிடித்துக்கொள்ள வேண்டும். ஓரு பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும்போது மாப்பிள்ளையைப் பற்றி பல கோணங்களில் விசாரிக்கிறோம். அவரின் நற்குணங்கள் மேலோங்கி நின்றால் பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.

எந்த பொருளையும் மனிதன் சோதித்து பார்த்து நல்லது என கண்டால் அதனை பெற்று கொள்ளுகிறான்.

திருடனுடன், பொய் பேசுகிறவர்களுடன், ஒழுக்கமற்று வாழ்பவனுடனும் யாரும் சேர்ந்து வாழ விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களுடன், நாமும் இருப்பதாக மக்கள் அறிந்தால் நம் பெயர் கெட்டுப் போகும். எனவே சோதனை செய்வது எவ்வளவு நல்லது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யோசுவா இஸ்ரவேலர் ஜனங்களிடம் எகிப்தில் இருந்து நடத்தி வந்து கானான் தேசத்தை தந்த கடவுளின் செய்கைகளை நினைவு படுத்துகின்றார். இந்த கடவுளை தவிர வேறு கடவுள் உலகில் இல்லை என உறுதியாக சொல்வதுமன்றி நானும் என் வீட்டாரும் கர்த்தரை மட்டும் சேவிப்போம் என உறுதி அளிக்கிறார். ஜனங்களும் அவரின் போதனைகளுக்கு கீழ்படிந்து ஜீவனுள்ள கடவுளையே சேவிப்போம் என்றார்கள்.

கிதியோன் கடவுளின் ஆற்றல் மிகு வல்லமையை சோதித்து தெளிவு பெற்றார். யுத்த களத்தில் கர்த்தரின் நாமத்தில் வெற்றி பெற்றார்.

தானியேல் அடிமை தேசத்தில் சைவ உணவுகளை மட்டுமே உண்டார். அவரை சோதித்தபின் மற்றவர்களின் வலிமையைவிட தானியேலின் பலம் மிகுதியாக காணப்பட்டது என அறியலாம்.

சோதனை வருவது நல்லது. இதில் உண்மையான நண்பர்கள் யார் என தெரிந்து கொள்ளலாம். சோதனையின் மூலம் கடவுளின் வழிநடத்துதலையும், அவரின் கிருபையின் மூலம் மகிமையையும் அறிந்து கொள்ளலாம். இயேசுவானவர் பிசாசினால் சோதிக்கப்பட்டார். வேத வசனங்களால் இயேசுவானவரை தோல்வி அடைய செய்யலாம் என நினைத்தான். ஆனால் இயேசுவானவர் நல்வார்த்தையினால் பிசாசை தோற்கடித்தார் என்பதனை நாம் உணர வேண்டும்.

நல்லதை பெற்றுக்கொள்ள சோதனை அவசியமாகும். சோதனை நல்ல பாடங்களை நமக்கு கற்று தரும்.

அன்புள்ள கடவுளே! நாங்கள் எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நன்மையானதை பின்பற்றி வாழ ஆவியானவரின் துணையை தந்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.