கடவுள் நிறைவேற்றுவார் என்பதனை உணர்வோம்
1 பேதுரு 4 : 8-10 18 நவம்பர் 2025, செவ்வாய்
“எனக்கு அவர் குறித்ததை நிறைவேற்றுவார்.” – யோபு 23 : 14
நம்முடைய வாழ்க்கையில் கடவுள் என்ன சித்தம் கொண்டு இருக்கிறாறோ அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும்.
கார்மைக்கேல் அமமையார் திருநெல்வேலி மாவட்டம் டோனாவூர் பகுதியில் மிஷெனரியாக வாழ்ந்த மருத்துவர். சிறுவயதில் அம்மையாரின் கண்கள் ஆங்கிலேயரின் கருவிழிகளைப் போல் காணப்படாமல் இந்தியர்களின் கருவிழிகளைப் போல கருப்பாக இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மிகுந்த கவலையாயிற்று. ஆனால் இந்திய தேசத்தில் அவர்கள் வந்து பணிபுரிந்தபோது தான் கடவுள் தன்னுடைய கண் கருவிழிகளை இந்தியர்களைப்போல் படைத்துள்ளார் என வியந்து கடவுளை துதித்துள்ளார்கள்.
கடவுள் நம்மை குறித்த காரியங்களை நிறைவேற்ற வேண்டுமானால், யோபுவைப் போல் கடவுளின் கற்பனையின்படி நடந்து வசனத்தின்படி வாழ வேண்டும்.
கடவுளின் அன்பு நம்முடைய பாவங்களை மூடியுள்ளது. கிருபை அளித்து வாழ வைக்கிறது. அந்த அன்பிலே நாமும் ஒருவருக்கொருவர் வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
இயேசுவானவர் சிலுவையில் மொழிந்த தியான வசனங்களை தியானிக்கிறபோது வேத வாக்கியம் நிறைவேறும் விதமாக தாகமாயிருக்கிறேன் என்ற வசனத்தை தியானிக்கிறோம். கடவுளின் சித்தம் இயேசுவின் வழியாக நிறைவேறியது என்பதனை உணர செய்கிறது.
ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் கொடுத்து அவர் அழைத்தார். ஆபிரகாமின் ஜனம் எகிப்தில் அடிமைப்பட்டது. ஆனால் கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார். மோசேயின் மூலமாக அவர்கள் விடுதலையாக்கப்பட்டனர். 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்தப்பட்டு கானான் தேசத்தை அவர்களுக்கு கொடுத்து வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார்.
நம்முடைய வாழ்க்கையில் அவர் ஒரு நோக்கம் வைத்துள்ளார். அதனை நிறைவேற்றுவார் என விசுவாசிப்போம். எந்த நோக்கமும் இல்லாமல் அவர் நம்மை உருவாக்கவில்லை.
கடவுளின் சித்தத்தை செய்ய கீழ்படிவோம். அவர் நம்மை கொண்டு அவரின் சித்தத்தை நிறைவேற்றுவார்.
அன்புள்ள கடவுளே! நீர் எங்கள் வாழ்வில் குறித்ததை நிறைவேற்றும்படியால் உமக்கு கீழ்படிந்து வாழ அருள் தாரும் ஆண்டவரே, இயேசுவின் வழியே, ஆமேன்.
