ரோமர் 12 : 1-2                                               15 நவம்பர் 2025, சனி

“உங்களுக்குத் தெரியாதா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள். ஆதலால் உங்கள் சரீரத்தினால் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.”
– 1 கொரிந்தியர் 6 : 20

நமது உடல், உள்ளம், ஆத்மா இவைகளை கொண்டது சரீரம். இவை மூன்றும் பரிசுத்தமாக காணப்பட வேண்டும். இவைகளில் கடவுள் மகிமைப்படுகிறார்.

வாய்க்குள்ளே போகிறது எந்த மனுஷனையும் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து வெளிப்படுவது தீட்டுப்படுத்தும். ஏனெனில் இருதயத்தில் பொல்லாத சிந்தனை, கொலைபாதகம், விபசாரங்கள் வேசித்தனங்கள், களவுகள், பொய்சாட்சிகள், தூஷணங்கள் அடங்கி இருக்கிறது. இவை அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவது இல்லை.

மாறாக இனிமையான வார்த்தைகள், ஆறுதலான மொழிகள், புன்முறுவல், உண்மையான வார்த்தைகளை பேசுதல், இவைகள் கடவுளை மகிமைப்படுத்தும்.

நம்முடைய சரீரம் நம் முற்பிதாக்கள் ஆதாம், ஏவாளின் சரீரத்துடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. சரீர இச்சையினால் பாவம் செய்ததினால் தேவ மகிமையை இழந்து ஏதேன் தோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட பாவிகளாய் காணப்பட்டார்கள்.

சிம்சோன் தன் சரீர இச்சைக்கு இடம் கொடுத்து பெலிஸ்தியர்களால் கொலை செய்யப்பட்டு கடவுளின் நாமத்தை களங்கப்படுத்தினார்.

யோசேப்பு சரீர இச்சைக்கு இடம் கொடாமல் கர்த்தரின் நாமம் மகிமைப்படும்படியாக பாவத்தை செய்யாமல் ஓடினார்.

இயேசுவானவர், நம் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள மட்டும் இரத்தம் சிந்தவில்லை. நம் சரீரத்தையும் மீட்டுக்கொள்ள இரத்தம் சிந்தினார். எனவே தான் நாம் அவரது பிள்ளைகள் ஆனோம்.

பவுல் எபேசியருக்கு எழுதும்போது கடவுளிடம் இருந்து பிரிந்து போன நாம் மீண்டும் இயேசு தம் சரீரத்தை ஒப்புகொடுத்ததினால் ஒப்புரவாக்கி இருக்கிறோம் என்கிறார்.

எனவே சரீரமாகிய நமது உடலால் கடவுளின் நாமம் மகிமைப்படவேண்டும். நமது வார்த்தைகள், நடத்தை, செய்கைகள், பார்வை, சிந்தனை யாவும் பரிசுத்தமாக காக்கப்பட்டு கடவுளை மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம்.

நம்முடைய சரீரம், கடவுள் தங்கும் ஆலயமாகும். பரிசுத்த வாழ்வை வாழ்ந்து கடவுளின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாக வாழ அழைக்கப்படுகிறோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் சரீரம் நீர் தங்கும் ஆலயமாக இருப்பதால் எங்கள் சரீரத்தினை முழுமையாக பரிசுத்தமாய் காத்து உம்மிடம் ஒப்படைத்து வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.