vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

பகையை மறந்து ஒன்றுபடுவோம்

2 கொரிந்தியர் 5 : 11-21                                     28 நவம்பர் 2025, வெள்ளி

“ஒப்புரவாகுதலைப் பற்றிய வார்த்தையை எங்களிடம் ஒப்புவித்தார்.” – 2 கொரிந்தியர் 5 : 19

இரண்டு சகோதரர்களுக்கு தந்தையின் சொத்துக்களைப் பிரிப்பதில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிவினையில் முடிந்தது. வெகு காலமாக இரு குடும்பத்தாருக்கும் பேச்சுக்கள் இல்லை. தந்தையின் நண்பர் இளைய சகோதரரை ஓரு நாள் சந்தித்தார். முத்த மகன் படிக்காமல் தந்தையுடன் கூலிவேலை செய்து படிக்க வைத்த காலத்தினை நினைவுபடுத்தினார். உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த உயர்வுக்கு மூத்த சகோதரரும் காரணம் என்பதனை புரிய வைத்தார். இளைய சகோதரர் மூத்தவருடன் உள்ள கசப்பை மறந்து ஒப்புரவானார். தன் தந்தையின் நண்பரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினார்.

வேதாகமத்தில் தந்தையின் சொல் கேளாமல் சொத்துக்களை வாங்கி அதனை இல்லாமல் ஆக்கிவிட்டு வெறும் கையுடன் வந்தான் இளைய மகன். தந்தை சேர்த்ததை மூத்த மகன் கோபங்கொண்டு வீட்டினுள் வராதபடி காணப்பட்டான். ஆனால் அன்பு மிகுந்த தந்தை அவனிடம் காரியங்களை எடுத்துக்கூறி ஒப்புரவாக செய்தார் என்பதை பார்க்கிறோம்.

பிதாவுக்கும், மனிதராகிய நமக்கும் ஏதேன் தோட்டத்தில் பாவக்கறைகளினால் ஏற்பட்ட பிரிவினையை இயேசுவானவர் சிலுவையில் தன் உயிரை கொடுத்து பிதாவையும், நம்மையும் ஒப்புரவாக்கியுள்ளார் என்ற சத்தியத்தை அறிவோம்.

திருச்சபையில் இருபிரிவுகள் காணப்படுகிறது என்பது உண்மை. இந்த இருபிரிவுகளையும் ஒன்று சேர்த்து திருச்சபையின் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரிவினையை அதிகப்படுத்தி ஒப்புரவாகாமல் இருக்க செய்வதை கண்டிக்க வேண்டும்.

இன்று நமது சபைகளில் காணப்படும் பிரிவினைகளை சரிசெய்ய நாம் என்ன செய்கிறோம். ஒப்புரவாக்குதலில் ஈடுபடும் போது நமக்கு கஷ்டங்கள் வரலாம். ஆனால் இருதரப்பினரையும் ஒப்புரவாக்குவது நமது கடமை என உணர வேண்டும்.

குடும்பங்களில் கணவன், மனைவி ஒப்புரவாகாமல் இருந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும். ஒப்புரவாகுதலில் ஒருவர் தாழ்மைபட வேண்டும். தாழ்மைபடுவது கோழைத்தனம் இல்லை என்பதனை வாழ்க்கையில் உணர்வோம்.

பிதாவோடு, நாம் ஒப்புரவாக்கப்பட்டது போல சக மனிதர்களிடம் ஒப்புரவாகி கிறிஸ்து மகிமை பட வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் மனதில் காணப்படும் கசப்புகளை மாற்றி, அனைத்து மக்களோடும் சமாதானமாய் வாழ்வதற்கு அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

பகையை மறந்து ஒன்றுபடுவோம்2025-11-26T09:06:24+00:00

கடவுள் நம்மை வாழ வைக்கிறார்

சங்கீதம் 50 : 10-15                            27 நவம்பர் 2025, வியாழன்

“எல்லாருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும்… கொடுக்கிறவர்.” – அப்போஸ்தலர் 17 : 25

நாம் இவ்வுலகில் உயிர் இருப்பவர்களாக வாழ சுவாசம் மிக அவசியம். ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு சான்று சுவாசம் ஆகும். சுவாசிக்கவில்லை என்றால் உயிர் இல்லை என்று பொருள்.

ஆனால் ஜீவனை நமக்கு யாராவது கொடுக்க முடியுமா? புத்தரின் வாழ்க்கையில் தன் மகனை உயிரோடு திரும்ப திருப்பி வேண்டி கொண்ட போது, அந்த தாயாரிடம் அம்மா, ‘மரணம் இல்லா வீட்டில் சென்று ஒருபிடி அரிசி வாங்கி வாருங்கள்’ என்று சொன்னார். அந்த தாயார் ஒவ்வொரு வீட்டிலும் சென்று அரிசிக்காக விசாரிக்கிறபோது ஒவ்வொரு வீட்டிலும் மரணம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்டார். புத்தரிடம் ‘மரணம் இல்லா வீடு இல்லை’ என கூறியபோது புத்தர் ‘மரணம் எல்லாருக்கும் பொதுவானது’ என தேற்றி அனுப்பினார்.

ஆனால் இயேசு நாயீன் ஊர் வாலிபன் இறந்தபோதும், லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியபோதும், யவீரு மகள் மரித்த போதும் அவர்களுக்கு மீண்டும் ஜீவனைக் கொடுத்து மீண்டும் சுவாசிக்க செய்தார் என வேதத்தில் வாசிக்கிறோம்.

உலகில் வாழும் ஒவ்வொருவரின் தேவைகளை நாம் அறிவோம். தேவைகள் நிறைவேற்றபடாமல் போகலாம். நிறைவேறாத தேவைகளால் உயிர் வாழலாம். மாடி வீட்டில் வாழுகிறவர்களுக்கும், குடிசை வீட்டில் வாழுகிறவர்களுக்கும் வசதிகளில் வித்தியாசம் உண்டு. ஆனால் இருவருக்கும் ஜீவன் இல்லாவிட்டால் எந்த பயனும் இல்லை.

நம்முடைய வீட்டில் தந்தை நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க உழைக்கிறார். தாயார் தன் உயிரையும் கொடுத்து இவ்வுலகத்திற்கு நம்மைக் கொண்டு வந்துள்ளார். குடும்பங்களில் அன்பு கொடுக்கிறவர்கள் உறவினர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் ஜீவனை, சுகத்தை கடவுள் ஒருவர் தான் நமக்கு கொடுக்க முடியும். அதை மனிதர்கள் யாரும் கொடுக்க முடியாது. ஜீவனும், மரணமும் கடவுளிடம் உள்ளதை நம்பி வாழ்வோம்.

ஜீவனை பெற்று இருக்கிறோம் என்றால் நம் வாழ்வு அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும். விசுவாசமுள்ள வாழ்வாக இருக்க வேண்டும். இவை இல்லை என்றால் நாம் வாழும் வாழ்வு செத்ததாக இருக்கும் என்பதனை புரிந்து வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! உமது சுவாசத்தையும் ஜீவனையும் பெற்று வாழும் எங்கள் வாழ்வு பிறருக்கு முன்மாதிரியான ஜீவனுள்ள வாழ்வாக அமைய அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுள் நம்மை வாழ வைக்கிறார்2025-11-25T07:05:40+00:00

நறுமண வாசனையாய் வாழ்வோம்

2 கொரிந்தியர் 2 : 14-17             26 நவபர்ம் 2025, புதன்

“கடவுளுக்கு நாங்கள் கிறிஸ்துவின் சுகந்த வாசனையாயிருக்கிறோம்.” – 2 கொரிந்தியர் 2 : 15

வாசனை திரவியங்கள் இன்று அதிகமாக பயன்பட்டு வருகிறது. வள்ளுவர் கூறுகிறார் புறந்தூய்மை நீரால் அமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும். நம்முடைய உடலை நீரால் கழுவி சுத்தப்படுத்தலாம். அகம் என்ற இருதயத்தின் தூய்மை உண்மை பேசுவதால் சுத்தப்படுத்தப்படும் என்ற குறள் மிக சிறப்பானதாகும்.

கடவுளுக்கு நறுமண வாசனையாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என உணர்வோம். நம்மிடம் காணப்படும் உண்மை, நேர்மை, பரிசுத்தம், நீதி, நியாயம், பிறருக்கு உதவி செய்தல் இவை அனைத்தும் மிகுந்த கனிகளைக் கொண்ட வாசனை குணங்களாகும்.

மோசே கடவுளின் சித்தத்தை செய்வதற்காக பொறுமை என்னும் வாசனையாக வாழ்ந்தார். யோசேப்பு கடவுள் தன்னைப் பார்க்கிறார் என்ற பயத்துடன் வாழ்ந்து பாவ இச்சையில் விழாமல் பரிசுத்தம் என்ற வாசனையாக வாழ்ந்தார்.

ஆபிரகாம் விசுவாசம் என்ற வாழ்வை வாழ்ந்து கடவுளுக்கு வாசனையாக வாழ்ந்தார். அதன் மூலமாக 100வது வயதில் ஈசாக்கைப் பெற்றார். இன்று உலகில் நாம் ஆபிரகாமின் சந்ததியார் என்று அழைக்கப்படும் பாக்கியத்தைப் பெற்று தந்தார்.

நகோமியின் கடவுள், என்னுடைய கடவுளாக இருப்பார் என்ற நம்பிக்கையின் வாசனையாக ரூத் வாழ்ந்தார்.

தாவீது தவறை உணர்ந்து பாவ மன்னிப்பை பெற்று நறுமண வாசனையாக வாழ்ந்தார். அதனால் பாவங்களை கடவுளிடம் கொண்டு வரும்போது பாவங்களை மன்னிக்கிறார் என்ற மெய் ஞானத்தைப் பெற்று இருக்கிறோம்.

எஸ்தர் தன் ஜனத்திற்காக உயிர் தியாகம் செய்து துணிந்து கடவுளுக்கு வாசனையாக வாழ்ந்தார். இன்று நம் ஜனத்திற்காக வேண்டுதல் செய்ய வேண்டும் என கற்பித்தார். நம்முடைய வாழ்வு கடவுளுக்கு நறுமண வாசனையாக இருக்க வேண்டும்.

நாம் நம் குடும்பங்களுடன் ஒழுங்காக ஆலயத்திற்கு சென்று ஆராதிப்பதன் மூலம், காணிக்கைகள் செலுத்துவதன் மூலம், வீடுகளில் தினமும் குடும்ப ஜெபம், வேத வாசிப்பு போன்ற காரியங்கள் மூலம் கடவுளுக்கு நறுமண வாசனையாக திகழ்வோம்.

நம்முடைய முன்மாதிரியான வாழ்வு மட்டுமே கடவுளுக்கு நறுமண வாசனையாக இருக்க முடியும். பொய்யான வாழ்வு ஒருபோதும் கடவுளின் நாமத்திற்கு நறுமண வாசனையாக இருப்பதில்லை.

எப்பொழுதும் கிறிஸ்துவில், அவரின் பிள்ளைகளாய் வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் வாழ்வு உமக்கு நறுமண வாசனையாக காணப்பட மெய் வாழ்வை வாழ அருள்புரியும். இயேசுவின் வழியே, ஆமேன்.

நறுமண வாசனையாய் வாழ்வோம்2025-11-25T06:49:41+00:00

இருதயத்தை சுத்தமாக வைப்போம்

மத்தேயு 12 : 33-37                                    25 நவம்பர் 2025, செவ்வாய்

“பொல்லாத சிந்தனைகள், கொலை பாதகங்கள், விபசாரங்கள்… இவைகள் இருதயத்திலிருந்து வெளிப்பட்டு வரும்.”

– மத்தேயு 15 : 19

நான் ஆம்பூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 1983-85 படித்து கொண்டு இருக்கும்போது எங்களுடைய முதல்வர் திரு.ஐசக் ஆசிரியர் கடவுள் நம்மிடம் கை, கால், காது, மூக்கு, நாக்கு இவைகளைக் கேட்டால் கொடுக்கலாம். ஆனால் எவ்வளவு ரகசியங்களையும், சிந்தனைகளையும், ஆசைகளையும் மறைத்து வைத்து வாழுகிற இருதயத்தைக் கேட்கிறார். எப்படி கொடுக்க முடியும் என்பார். எவ்வளவு உண்மை.

புகை பிடிப்பது, குடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது இந்த மனிதர்களை வெளிப்படையாக பாவம் செய்கிறார்கள் என கூறிவிடலாம். ஆனால் பொல்லாத சிந்தனைகளையும், கொலை பாதகத்தையும், விபசாரங்களையும் இருதயத்தில் வைத்து வாழுகிறவர்கள் பாவி என கண்டுபிடிக்க முடியாது.

யோசேப்பை, குழியில் தள்ளிவிடப்பட்டதும் எகிப்திற்கு அவனை அடிமையாக விற்றதும், யாக்கோபிடம் யோசேப்பின் ஆடைகளை காண்பித்து விலங்குகள் அவனை கொன்று இருக்கலாம் என சகோதரர்கள் கூறியது இருதயத்தின் கேடுகளால் விளைந்தவை என்பதனை அறிவோம்.

தாவீது உரியாவின் மனைவியை அடைவதற்கு இருதயத்தில் பொல்லாத சிந்தனைக் கொண்டார். கொலை செய்து உரியாவின் மனைவியை அடைந்தது எவ்வளவு பெரிய பாவம். நாத்தான் தீர்க்கதரிசி உணர்த்துவதை மூலம் படிக்கிறோம்.

இயேசுவானவர் ஒரு பெண்ணை இச்சையாக பார்க்கிறவன் அவளோடு விபசாரம் செய்து விட்டான் என கூறுகிறார். கடவுள் பரிசுத்தத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என அறியலாம்.

இருதயத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்றால் நல்ல சிந்தனைகள், எண்ணங்கள் அங்கு தங்க வேண்டும். அதற்காகவே கடவுளின் வசனம் நமக்கு கொடுக்கப்படுகிறது. ஆலய ஆராதனைக்கு செல்வது ஓர் பரிசுத்த வாழ்வை நாம் பெற்றுக் கொள்வதற்காக என்பதனை எப்போதும் இருதயத்தில் வைத்துக் கொள்வோம்.

குடும்பங்களில் தாய், தந்தை தங்களின் இருதயத்தில் நல்ல சிந்தனைகள் கொண்டு இருப்பதால் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வழிவகை செய்துள்ளார்கள்.

பொல்லாத சிந்தனைகளால் எத்தனை கொலைகள் நாட்டில் நடக்கிறது, களவுகள் நடக்கிறது இருதயத்தில் சுத்தம் காணப்பட்டால் பிறரின் குறைகள் பெரிதாக தெரிவது இல்லை. பிறர் குறைகளை மன்னிக்க தோன்றும், மன்னிப்போம். நல்ல மரம் எப்போதும் நல்ல கனி கொடுக்கும் என்பதனைப் புரிந்துக் கொள்வோம்.

கடவுளின் இருதயம் அன்பு, இரக்கம், கருணை, கீழ்படிதல், பாவங்களை வெறுத்தல், ஏழைகளுக்கு இரங்குதல், இவைகளால் நிரம்பி இருக்கிறது. அவரைப் போல் இருதயத்தைப் பெற்று உலகில் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளைப்போல் வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் இருதயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறோம். நல் மனசாட்சியுடன் வாழ நீர் எங்களுக்கு உதவி புரியும். உமது கருணைமிக்க இருதயத்தைப் பெற்று வாழ அருள்புரியும். இயேசுவின் வழியே, ஆமேன்.

இருதயத்தை சுத்தமாக வைப்போம்2025-11-25T06:42:56+00:00

பலவீனர்களை தாங்குவோம்

ரோமர் 12 : 19-21                                              24 நவம்பர் 2025, திங்கள்

“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் ….. பலவீனருடைய பலக்குறைவுகளைச் சுமக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.” – ரோமர் 15 : 1

நாகர்கோவிலில் செவன்ட்-டே ஆலயத்தில் போதகராக ஊழியம் செய்து வரும் போதகர் அவர்கள் தினமும் காலையில் அவரின் வீட்டில் காலை உணவு தயார் செய்து தன் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று நாகர்கோவில் சுற்றியுள்ள மனநிலை பாதிக்கப்பட்டு சாலை ஓரங்களிலும், சுற்றி திரிபவர்களுக்கும் ஆகாரம், தண்ணீர் கொடுத்து போஷித்து வருகிறார். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல தினமும் இந்த அருட்பணியை செய்து வருகிறார். பலவீனர்களுக்கு உதவி செய்யும் இந்த போதகரை பாராட்டாதவர்கள் இல்லை.

உலகில் ஒரு கூட்டம் மக்கள் தங்களுக்காக வாழ்கிறார்கள், இன்னும் சிலர் தங்கள் குடும்பங்களுக்காக வாழ்கிறார்கள். பலர் தங்கள் சார்ந்த மக்களுக்காக வாழ்கிறார்கள். பலர் குறைவுள்ளவர்களுக்காய், ஏழைகளுக்காய், நீதிமறுக்கப்பட்டவர்களுக்காய், வாழ்பவர்கள் என அறிந்து கொள்ளலாம்.

இயேசு இவ்வுலகில் எதற்காக வந்தார் என லூக்காவின் புத்தகத்தில் வாசிக்கிறோம். தரித்திரருக்கு நற்செய்தி அறிவிக்க, சிறைப்பட்டவர்களை விடுவிக்க, குருடர் பார்வையடைய, நொருங்குண்டவர்களை விடுதலையாக்க என்ற பகுதியில் யாரெல்லாம் பலவீனராக இருக்கிறார்களோ அவர்களின் குறைகளை நீக்கி அனுப்பப்பட்டதாக அறிந்து கொள்ளலாம்.

நம்முடைய மிஷனரிகள் செய்த தியாகங்களை மறந்து போக வேண்டாம். செல்வமிகுந்த குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் இயேசுவின் அன்பில் ஈர்க்கப்பட்டு உலக மீட்பர், இரட்சகர் இயேசுவை அறிவிக்க இந்திய தேசத்திற்கு வந்தார்கள். ஏழ்மையில், வறுமையில், அடிமைத்தனத்தில், இருந்த மக்களுக்காக பரிதாபப்பட்டு அவர்களை உயர்ந்த நிலைக்க கொண்டுவர பாடுபட்டார்கள் என்பதனை அறிவோம்.

உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடிய பழக்கத்திலிருந்து விடுதலை பெற்று தந்தார்கள். கல்வி அறிவு பெற முடியாதவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுத்தார்கள். மருத்துவ வசதி பெற முடியாத மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்ப்படுத்தினார்கள். இறைவனை வழிபட முடியாத மக்களை கடவுளை துதிக்க ஆராதிக்க ஆலயங்கள் கட்டினார்கள். இவை அனைத்தும் பலம் குறைந்த மக்களுக்கு ஆற்றிய அரும் தொண்டாகும்.

ஏழைக்கு இரங்குகிறவன், கடவுளுக்கு கடன் கொடுக்கிறார் என வேதத்தில் வாசிக்கிறோம். பலவீனருடைய சுமைகளை தாங்க நம்மை அவருடைய பிள்ளைகளாய் அழைத்து இருக்கிறார். நம்முடைய வாழ்வில் காணப்படும் பலமுள்ள செய்கைகள், பலவீனருடைய விசுவாச வாழ்வுக்கு தடை பண்ணாதபடி கவனமாக இருப்போம்.

அன்னை தெரசா அம்மையார் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று தொழு நோயாளிகளின் மருத்துவ செலவிற்கு கொடுத்தது பலவீனரை தாங்கிய செயலாகும்.

நம்முடைய வாழ்வில் பலவீனராகிய நம்முடைய சகோதர, சகோதரிகளை அரவணைப்போம், பிறருக்காக வாழ கற்றுக் கொள்வோம்.

திருசபையில் எளிய விசுவாசிகளை தூக்கி விடுவோம். அவர்கள் விசுவாசம் குறையாதபடி நம்முடைய வாழ்க்கை அவர்களுக்கு முன்மாதிரியாக அமையட்டும். பலவீனரை தாங்குவோம்.

அன்புள்ள கடவுளே! நீங்கள் எங்களை பலவீனர்களை தாங்கி வழிநடத்த அழைத்திருக்கிறீர். அந்த அழைப்பை சரியாக செய்ய அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

பலவீனர்களை தாங்குவோம்2025-11-13T06:15:28+00:00

கடவுளுக்கு கீழ்படிவோம்

எசேக்கியல் 33 : 11-13                                    23 நவம்பர் 2025, ஞாயிறு

“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிடவே, அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.” – யோனா 2 : 10

கட்டளையும் , கீழ்படிதலும் மிக முக்கிய பங்கினை நமக்கு கற்று தருகிறது. ஆதாம், ஏவாள் இருவருக்கும் ஏதேன் தோட்டத்தில் காணப்படும் கனிகளில் ஒன்றை புசிக்க வேண்டாம் எனக் கட்டளையிட்டார். ஆனால் அந்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியாததால் பாவத்தில் மனிதகுலம் விழுந்தது என படிக்கிறோம்.

இஸ்ரவேல் மக்களுக்கு நியாயப்பிரமாணம் என்ற கட்டளை கொடுக்கப்பட்டது. கட்டளையை மீறும்போது எல்லாம் அவர்கள் அந்நிய தேசத்தாருக்கு அடிமையானார்கள்.

சவுல் ராஜாவுக்கு எதிரி நாட்டை வெற்றிக்கொண்டு திரும்ப வரும்போது அங்கிருந்து ஒன்றையும் எடுத்து வரவேண்டாம் என கட்டளை கொடுக்கப்பட்டது. கீழ்ப்படியாமையால் அரசாட்சியை இழக்கும் நிலையை அடைந்தார்.

இஸ்ரவேலர் மக்களை மோசே நடத்திவரும்போது செங்கடல் தடையாக இருந்தது, மோசேயிடம் கடவுள் கோலை கடலுக்கு நேராக நீட்ட கட்டளையிட்டார். மோசே கீழ்படிந்து கோலை நீட்டியபோது செங்கடல் இரண்டாக பிளந்து நின்றது. இஸ்ரவேலர் பாதை வழியாக நடந்தார்கள், தப்பினார்கள்.

யோனா கடவுளின் கட்டளைக்கு கீழ்படியாதபோது சோதனை வந்தது, மீனின் வயிற்றில் இருக்க நேர்ந்தது. மீனுக்கு கடவுள் கட்டளையிட்டார் அது கீழ்படிந்தது யோனா தப்பித்தான்.

கடவுளின் வார்த்தை வல்லமையுள்ளது. நாம் அதற்கு கீழ்படிய வேண்டும். கீழ்படிகிறபோது ஆசீர்வாதமான வாழ்வு கிடைக்கிறது, கீழ்படியாதபோது சாபமான வாழ்வு நமக்கு வருகிறது.

நம்முடைய பிள்ளைகள் நமக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்களாகிய நாம் முதலில் கீழ்படிந்து வாழ்ந்து அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வை காட்டவேண்டும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

திருசபைகளில் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து முன்மாதிரியான வாழ்வை மேற்கொள்ள அழைக்கப்படுகிறோம்.

கீழ்படிந்து வாழ்ந்து கடவுளை மகிமைப்படுத்துவோம்.

அன்புள்ள கடவுளே! அனைத்து படைப்புகளும் உம் வார்த்தைக்கு கீழ்படிவது போல நாங்களும் உமது வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளுக்கு கீழ்படிவோம்2025-11-13T06:12:56+00:00

சிந்திப்போம், செயல்படுவோம்

கலாத்தியர் 3 : 24-29                                  22 நவம்பர் 2025, சனி

“நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தைப் போலச் சிந்தித்தேன்.” – 1 கொரிந்தியர் 13 : 11

குழந்தைகளின் குணநலன்களை பார்த்து இருக்கிறோம். குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள், உண்மையுள்ளவர்கள், முகம்பார்த்து தீர்ப்பு சொல்லாதவர்கள், சண்டையிடாதவர்கள், சண்டைப்போட்டாலும் ஒரு நிமிடத்தில் உறவு கொள்பவர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

பெரியவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குணம் கொண்டவர்கள், வைராக்கியம் கொண்டு பிறரோடு உறவை முறித்து கொள்பவர்கள், உண்மை இல்லாதவர்கள், பிறருக்கு தீங்கு செய்பவர்கள், பெருமை உடையவர்கள், சூழ்ச்சி செய்பவர்கள் இப்படி விரிவாக காணலாம்.

பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதும் கடிதத்தில் அன்பினை முன்நிறுத்துகிறார். அன்பு கொண்டவர்கள் எப்படி வாழ்வார்கள். சாந்த குணம் உடையவர்களாக, பொறாமை இல்லாதவர்களாக, கோபம் கொள்ளாதவர்களாக, பொறுமை உடையவர்களாக என கூறிக்கொண்டு செல்கிறார். இவை அனைத்தும் குழந்தைகளின் குணங்களாகும்.

அன்பு இல்லையெனில் கடவுளோடு நாம் வாழ்கிறோம் அவரின் வரங்களை பெற்று இருக்கிறோம் என்று சொன்னாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை.

சீஷர்கள் ஒருமுறை தங்களில் யார் உயர்ந்தவர்கள் என்ற வாக்குவாதம் செய்தார்கள். இயேசு சிறுபிள்ளைகளை போல் மாறுங்கள் என்று புத்தி சொன்னதை பார்க்கிறோம். குழந்தைகளை போல் மாறாவிட்டால் பரலோக ராஜ்யம் உங்களுக்கு சொந்தம் இல்லை என்றார்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்” என வாள்ளுவர் கூறுகிறார். அன்பை அடைத்து வைக்க முடியாது. கடவுள் நம்மீது வைத்துள்ள அன்பினால் தன் சொந்த குமாரனாகிய இயேசுவை, இவ்வுலகத்திற்கு தந்து அன்பினை வெளிப்படுத்தினார்.

இயேசுவானவர் நாம் இரட்சிக்கபட வேண்டும், மீட்பை பெறவேண்டும், பிதாவோடு மீண்டும் உறவு கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சிலுவையின் பாடுகளின் வழியே இவ்வுலக மக்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்.

நமது அன்பு குடும்பங்களில் காணப்படும், பிறரிடமும் காண்பிக்கப்பட வேண்டும். எளியோரிடம் காண்பிக்க வேண்டும், அன்புக்காக ஏங்குவோருக்கு அன்பை கொடுத்து இயேசுவின் பிள்ளைகளாய் வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! நாங்கள் குழந்தையை போல் வாழ அழைக்கப்படுகிறோம். எங்கள் சிந்தை செயல், வாழ்வு கபடமில்லாமல் குழந்தைகளை போல் காணப்பட அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

சிந்திப்போம், செயல்படுவோம்2025-11-13T06:10:51+00:00

பலப்படுத்தும் கடவுள்

2 தினவர்த்தமானம் 20 : 1-4                     21 நவம்பர் 2025, வெள்ளி

“எங்களுக்கு விரோதமாக வருகிற இந்த ஏராளமான கூட்டத்தின் முன் நிற்க எங்களுக்கு பலமில்லை.” – 2 தினவர்த்தமானம் 20 : 12

எங்களுக்கு விரோதமாக வருகிற இந்த ஏராளமான கூட்டத்தின் முன் நிற்க எங்களுக்கு பலமில்லை.

யோசபாத் அரசன் இஸ்ரவேலரை ஆண்டு வரும் நாட்களில் அவரை எதிர்க்க மோவாபியர், அம்மோனியர் மெயூனியர் ஒன்றுகூடி இஸ்ரவேலரை அழிக்க முன்வந்தபோது கூறிய வார்த்தைகளாகும்.

பொதுவாக எதிராளிகளின் பலத்தை கண்டு அஞ்சி நடுங்குகிறோம். ஒருவேளை பணம் படைத்தவர்களாக, படைபலம் உடையவர்களாக, உயர் பதவியில் உள்ளவர்களாக, ஆள்கூட்டம் நிறைந்தவர்களாக இருப்பவர்களை கண்டு பயப்படுகிறோம். இவர்களால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் தீங்கு ஏற்படலாம் என பயப்படுகிறோம்.

எதிரிகளை விட நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு விரோதமாக எழும்பி நிற்கும்போது பயப்படுகிறோம். அதுபோலவே இஸ்ரவேலர் கானான் தேசத்திற்கு கடந்து போகும் போது மோவாபியர், அம்மோனியர், மெயூனியர் வாழும் பகுதியில் மக்களும் நிலங்களும் சேதம் அடையாததற்கு அவர்கள் வாழும் பகுதி வழியாக வழிநடத்தப்படாமல், வேறு வழியாக நடத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இன்று ஒன்றுகூடி இஸ்ரவேலரை அழிக்க வந்து இருப்பதுதான் வேதனை அளிப்பதனை யோசபாத் அரசர் கூறுகிறார்.

சவுல் ராஜாவும், இஸ்ரவேலர் ராணுவ வீரர்களும் கோலியாத்தை எதிர்க்க பலமில்லை என ஒதுங்கி நின்றார்கள் என பார்க்கிறோம். ஆனால் தாவீது அவனின் பலத்தையும், உருவத்தையும் பார்க்காமல் தன்னுடன் வாழும் கடவுளின் பலத்தையும், வல்லமையையும் பார்த்தான். கோலியாத்தை வெற்றி கண்டார். எதிராளியின் பலத்தை பார்க்காமல் நாம் ஆராதிக்கிற கடவுளின் வல்லமையை பார்த்து தைரியம் கொண்டு வெற்றி பெற வேண்டும்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மூவரும் தீயில் போடுவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டார்கள். அது தங்களை கொன்றுபோடும் என தெரிந்து கொண்டனர். ஆனாலும் அவர்கள் தீயைவிட கடவுளின் வல்லமையை நினைவு கூர்ந்தார்கள். அவற்றில் இருந்து விடுவிக்க கடவுள் வல்லவர் என வார்த்தைகளால் விசுவாசத்தை பகிர்ந்தார்கள் வெற்றி கண்டார்கள்.

தானியேல் சிலையை வணங்காவிட்டால் சிங்க கெபியில் போடபடுவேன் என அறிந்தும் கடவுளுக்கு செலுத்த வேண்டிய கனத்தை செலுத்தி ஜெபித்தார். சிங்க கெபியிலே போட்டபோது கடவுள் சிங்கங்களின் வாயை கட்டிபோட்டார். தானியேல் அரசனுக்கு பதில் கூறியதை கேட்ட அரசர் தானியேலின் கடவுளே வாழும் கடவுள் என பறைசாற்றினார்.

நம்முடைய வாழ்விலே கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாசத்துடன் வாழ கற்று கொண்டால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை. கடவுளை நம் பலமாக கொண்டு வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! எங்களுக்கு எதிராக வரும் சோதனைகளை மேற்கொள்ள உமது பலத்தை தாரும். எங்கள் பலம் உமது கிருபையால் கிடைக்க அருள்தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பலப்படுத்தும் கடவுள்2025-11-13T06:08:40+00:00

கடவுள் நமக்கு அடைக்கலமானவர்

சங்கீதம் 32 : 6-7                                 20 நவம்பர் 2025, வியாழன்

“சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் உயர்ந்த அடைக்கலமானவர்.” – சங்கீதம் 9 : 9

அடைக்கலம் என்பதற்கு பாதுகாப்பு என்று பொருள்படும். கொரனா காலத்தை ஞாபகப்படுத்துவோம். அநேக மக்களை அந்த கொடுர நோய் வாரிக்கொண்டு போனது. பயம், திகில் அனைத்து மக்களையும் சந்தித்தது. ஆலயங்களில் இறைவழிபாடு இல்லாமல் போயிற்று. அனைவரும் வீட்டில் முடக்கப்பட்டார்கள்.

ஆனால் எத்தனை தொண்டு நிறுவன ஊழியர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரவும் பகலும் உழைத்தார்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் என்ற பட்டணத்தில் கத்தோலிக்க போதகர் தன் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டியை திறந்து வெளியே வைத்தார்கள். தேவையான பணத்தை இல்லாதவாகள் எடுத்துக்கொண்டு பிழைத்து கொள்ளுங்கள். மீண்டும் உழைக்கும் காலத்தில் கொண்டு வாருங்கள். ஏழை மக்களுக்கு கடவுளின் அன்பை காண்பித்தார்.

இஸ்ரவேலர் மக்களை பார்த்து மோசே கூறும்போது நீங்கள் கொஞ்ச ஜனமாக இருந்ததினால் உங்களை தம் ஜனமாக கடவுள் தெரிந்து கொண்டார் என பார்க்கிறோம்.

பிற மதத்தில் இருந்து கிறிஸ்துவை ஏற்று கொண்ட சகோதரி ஒருவர் கடவுளை ஏற்றுக் கொண்டு குடும்பமாக அவரை ஆராதித்து வந்தார்கள். வயதான காலத்தில் குடும்பத்துடன் சென்ற பயணத்தில் விபத்தில் கணவர் மரித்து போனார். அவருடைய குடும்பத்தார் கிறிஸ்துவை உன் கடவுளாக ஏற்று கொண்டதால் இன்று இந்த நிலைமை என கூறினார்கள். அந்த சகோதரியோ விபத்தில் என் கணவர் மரித்தாலும் நானும் என் பிள்ளைகளும் அற்புதமாக காப்பாற்றியவர் இயேசு அவரே மெய்யான கடவுள் சாட்சி கூறினார்கள்.

ஒவ்வொரு நாளும் கடவுள் ஜீவனை தந்து பாதுகாப்பது கடவுளின் கிருபையால்தான். எத்தனையோ ஆபத்துகள், கொடிய நோய்கள், பஞ்சம், பட்டினி இவைகளில் இருந்து காப்பவர் கடவுள் என்பதனை அறிவோம்.

நமது திருச்சபையிலே ஏழ்மை நிலையில் இருந்து கர்த்தரை விசுவாசித்து வாழும் குடும்பங்களுக்கு உதவி செய்திட அழைக்கப்படுகிறோம். எத்தனையோ திருச்சபைகளில் ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமண உதவிதொகை, கல்வி உதவிதொகை இவைகள் சிறப்பு திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன.

நம்முடைய சமூகத்தில் சிறுமைப்பட்டவர்களுக்கு நாம் உதவிட அழைக்கப்படுகிறோம். சிறிய பண உதவிகள், பாதுகாப்பு, சிறந்த வார்த்தைகள், விசாரிப்புகள் இவைகளின் மூலம் அவர்களுக்கு அடைக்கலமாக வாழ்வோம். கடவுள் நம்மை வாழ வைத்துள்ளார். சிறுமைபட்டவர்களின் ஒளியாக வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! சிறுமைப்பட்ட எங்களை உமது கிருபையால் உயர்த்தி வாழ செய்கிறீர். நாங்களும் பிறருக்கு அரணாக வாழ கிருபை புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுள் நமக்கு அடைக்கலமானவர்2025-11-13T06:06:14+00:00

கடவுளின் ராஜ்யத்திற்கு முடிவில்லை

மத்தேயு 13 : 40-44                                    19 நவம்பர் 2025, புதன்

“அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” – லூக்கா 1 : 33

உலகத்தில் ராஜாக்கள் அரசாண்ட காலங்களை வரலாற்றில் படித்து இருக்கிறோம். ஒவ்வொரு ராஜாக்களும் பதவி ஏற்ற நாளிலிருந்து பதவி முடிந்த நாள் வரை அறிந்திருக்கிறோம். உலகத்தை தன் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டுவர புறப்பட்ட மகா அலெக்சாண்டர், நெப்போலியன் அரசர்களின் வரலாறுகளும் முடிந்து போயிருக்கின்றன.

யூதர்களை கொன்று, குவித்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் மரித்து போனார். ஆனால் கடவுளின் ராஜ்யம் முடிவில்லாதது என பார்க்கிறோம்.

வேதத்தில் நாம் படிக்கிறோம். கர்த்தர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். கர்த்தர் மோசேயை இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலைக்காக அனுப்பினார். மோசே ஜனங்களிடம் கர்த்தர் இருக்கிறவராகவே இருக்கிறார் என்று சொல்வதன் மூலம் கர்த்தர் என்றும் அரசாளுகிறார் என தெரிந்து கொள்ளலாம்.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் ஆதியும், அந்தமும் நானே என்கிறார். அல்பா, ஒமேகா என்கிறார். அவரின் ராஜ்யத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ தலைமுறையினர் இவ்வுலக வாழ்வை முடித்துள்ளனர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மேய்ப்பர்களுக்கு கூறிய நற்செய்தி இன்றும் அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனை நாம் சிந்தித்தால் கடவுளின் ராஜ்யம் முடிவில்லாதது என அறியலாம்.

தியான பகுதியில் மரியாளிடம் தேவதூதன் சொன்ன வாக்குத்தத்தம் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது என்பதாகும். நம்முடைய விசுவாச பிரமாணத்தில் அதனை தினமும் உறுதிபடுத்துகிறோம்.

இயேசுவானவர் சீஷர்களுக்கும் நமக்கும் கற்று தந்த ஜெபத்தில் உம்முடைய ராஜ்யம் வருவதாக என உறுதி படுத்துகிறோம்.

கடவுளின் ராஜ்யத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தினந்தோறும் வளர வேண்டும். நாம்
நிர்மூலமாகாமல் இருப்பது கடவுளின் கிருபையாகும். அவர் வாழ்கிறார் என்பதால் நாமும் வாழ்கிறோம்.

நாம் சாட்சியாக வாழும் போது பிறர் கடவுளின் ராஜ்யம் உண்மையாகவே இன்றும் ஆட்சி செய்கிறது என்பதனை அறிய முடியும்.
கடவுளின் ராஜ்யத்திற்கு நாமே சாட்சிகள் என்பதனை உணர்ந்து வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! உம்முடைய ஆட்சியில் நாங்களும் வாழும்படியாக அழைக்கப்படுகிறோம். அந்த அழைப்பை ஏற்று உமது ராஜ்யத்தின் பிள்ளைகளாக வாழ அருள்தாரும் ஆண்டவரே, இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளின் ராஜ்யத்திற்கு முடிவில்லை2025-11-13T06:04:04+00:00
Go to Top