நியாயாதிபதிகள் 13 : 4-7                                 17 நவம்பர் 2025, திங்கள்

“தான் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று தானியேல் தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டு…” – தானியேல் 1 : 8

தீட்டு என்ற வார்த்தை இந்திய தேசத்தில் அநேக ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்பதனை நாம் அறிவோம். உயர் ஜாதியினர், பிற ஜாதியினர் என பிரிவுகள் இருந்த அக்காலத்தில் உயர்ஜாதியினரின் பொருட்களை, ஆடைகளை பிற ஜாதியினார் தொட்டால் அது தீட்டு என சொல்லி வந்து இருக்கிறார்கள்.

இன்றும் அநேக கிராமங்களில் தேனீர் அருந்தும் கடைகளில் ஒரு பிரிவினர் குடிக்கும் தேனீர் கப்புகளை பிறருக்கு கொடுப்பது இல்லை. தேங்காய் சிரட்டைகளில் தேனீர் கொடுக்கப்படுவதாக அறிந்து இருக்கிறோம்.

தானியேல், அடிமையாக கொண்டு போகபட்ட பாபிலோன் தேசத்தில் இருக்கும்போது தன்னை தீட்டுப்படுத்தும் பானத்தையும், போஜனத்தையும், ஏற்கக்கூடாது என தீர்மானம் செய்தார். அதில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றார்.

சிறைசாலைக்கு சென்று பார்த்தால் அங்குள்ள அனைவருக்கும் ஒரே உணவு பரிமாறப்படும். வேறுபாடு கிடையாது. வீட்டில் நம் விருப்பமான உணவை விரும்பிய நேரத்தில் உண்போம். அங்கு அது கிடையாது.

தானியேல் அடிமையாக பாபிலோன் தேசத்திற்கு வந்தாலும், கடவுளுக்கு பிரியமாக வாழ விரும்பினார். எனவே தன்னை தான் தீட்டுப்படுத்த விரும்பவில்லை.

நம்முடைய குடும்பத்திற்கு பிற மதத்தினர் விருந்தினராக வந்தால் நம்முடைய அனுதின ஜெபத்தை நிறுத்தி விடுவோம். வேத வாசிப்பை நிறுத்திவிடுவோம். ஆலயத்திற்கு செல்ல மாட்டோம். அவர்களுக்கு பிரியமான உணவை சமைப்போம். அவர்களோடு உண்போம். குறிப்பாக லெந்து நாட்களில் நாம் கடைபிடிக்கும் நடைமுறைகளை தளர்த்தி விடுவதும் உண்டு. இதுவும் தவறு என்பதனை உணர வேண்டும். எப்பொழுதும் கடவுளுக்கு பிரியமாக இருக்க கற்றுக் கொள்வோம்.

பவுலடியார் கொரிந்து சபைக்கு எழுதும் கடிதத்தில் பிசாசுக்கு படைக்கப்பட்ட உணவு தீட்டுள்ளது என தெரிவிக்கிறார். பலவீனமான விசுவாசத்தில் நாம் உண்ணும் உணவு நம் விசுவாசத்திற்கு இடையூராக இருக்கும் என்கிறார்.

பிறர் நோய்வாய்பட்டு இருக்கும்போது நாம் திருப்தியான உணவை உண்டால் அது தீட்டு என்பதனை உணர்வோம.

போஜனம் நமக்கு தேவை. ஆனால் அந்த உணவே, கடவுளின் சித்தத்தை செய்யவிடாமல் தடுக்காதவாறு வாழ முயற்சிப்போம்.

அன்புள்ள கடவுளே! யாரும் தொட்டு தூக்க அருகதையில்லாத எங்களை இயேசுவின் மூலம் தூக்கி நிறுத்தி உயர்வான வாழ்வை தந்தீரே உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் வழியே, ஆமேன்.