ஏசாயா 9 : 1-5 13 நவம்பர் 2025, வியாழன்
“உன் கட்டுகளை அறுப்பேன்.” – எரேமியா 30 : 8
பாவங்களை பாவகட்டுகள் என்ற வார்த்தையினால் அழைக்கிறோம், நோய் கட்டுகள், வியாதி கட்டுகள், பிசாசின் கட்டுகள், என கூறிக் கொண்டே போகலாம். மரண கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டன என தாவீது ராஜா கூறுகிறார்.
இஸ்ரவேலர் மக்களுக்கு கடவுள் மீண்டும் கொடுத்த வாக்குத்தத்த வசனத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப நிலைமையை மாற்றி அவர்கள் பிதாக்களுக்கு வாக்கு கொடுத்த தேசத்திற்கு திரும்ப வரப்பண்ணுவேன் என்பதாகும்.
குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலை ஆவீர்கள் என்ற வசனத்தை நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். நமது கட்டுகளை மனிதன் விடுதலை ஆக்க முடியாது கடவுள் மட்டுமே விடுதலையாக்க முடியும்.
இயேசு, 12 வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரியின் கட்டுகளை அவிழ்த்தார். லாசருவை உயிரோடு எழுப்பி கட்டுகளை அவிழ்க்க சொன்னார். பிசாசின் பிடியிலிருந்தவர்களின் கட்டுகளை அவிழ்த்தார். நோய் கட்டுகளை குணமாக்கினார்.
இன்று நாம் எதினால் கட்டப்பட்டு இருக்கிறோம். பாவங்களினால், சாபங்களினால், நோய்களினால், வருத்தங்களினால், கண்ணீர்களால் போன்ற கட்டுகளினால் வாழலாம். விடுதலையின் வாழ்வை தருவதற்கு இயேசு தம் கரங்களால் நம்மை அரவணைக்கிறார். விசுவாசத்துடன் அவரிடம் வந்து விடுதலை வாழ்வு பெற்று கொள்வோம்.
அன்பின் கடவுளே! எங்களின் கட்டுகளை அவிழ்த்து உமது நாமத்தை துதிக்கவும், தோத்தரிக்கவும் வல்லமையான கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
