ஏசாயா 44 : 1-3 16 நவம்பர் 2025, ஞாயிறு
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னைத் தெரிந்து கொண்டேன்.” – எரேமியா 1 : 5
தாயின் வயிற்றில் உருவாகிறோம். பத்து மாதம் தாயின் வயிற்றில் வளர்கிறோம். அதன்பின் பூமியில் பிறக்கிறோம். அப்பொழுதுதான் நம் தாய், தந்தை, உறவினர்களுக்கு புதிய குழந்தையாக பூமியில் வந்துள்ளோம் என தெரியும்.
சகரியா, எலிசபெத்திற்கு யோவான் ஸ்நானகன் உருவாகும் முன்னே பெயரிடப்பட்டார். அவர் பரிசுத்த ஆவியினால் பெயரிடப்பட்டு நிரப்பப்பட்டு இருப்பார் என்று லூக்கா நற்செய்தி புத்தகத்தில் வாசிக்கிறோம்.
இயேசுவானவர் உருவாகும் முன்னே மரியாளிடம் ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என பெயரிடப்படுவாய் என்றார் தூதன். அவர் பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டுள்ளார்.
அநேக பெண் குழந்தைகள் கருவில் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் நமக்கு தெரியும். அதனால் இந்திய தேசத்தில் தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறியப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சங்கீதக்காரர் நான் அக்கிரமத்தில் பிறந்தவன் என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று கூறுகிறார். நாம் தானாக இவ்வுலகத்திற்கு வரவில்லை. கடவுள் நம்மை உருவாக்கி அனுப்பி இருக்கிறார். அவர் நம்மை அனுப்பியதால் ஒரு நோக்கம் உண்டு என்பதனை அறிவோம்.
அன்னை தெரசாவை உருவாக்கிய ஆண்டவர் இந்திய தேசத்தில் அருட்பணி புரிய வைத்தார். சமூக சேவைகள் மூலம் பல உயிர்களிடம் கடவுளின் அன்பை காண்பித்து எளிமையாக வாழ்ந்தார்.
இந்திய தேசத்தில் மிஷெனரியாக வந்து தொண்டாற்றிய நேத்தர் ஐயர், சீகன்பால் ஐயர், இவர்கள் உருவாக்கப்பட்டு கடவுளால் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள்.
நாமும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறோம். கடவுளின் அன்பை பிறருக்கு காண்பிக்க மன்னிப்பை கொடுக்க, தாழ்மையாய் நடக்க, பிறரை தூக்கிவிட, பிறர் கண்ணீரை துடைக்க உருவாக்கப்பட்டவாகள் என உணர்ந்து வாழ்வோம். கடவுளின் கண்களுக்கு எதுவும் மறைந்து காணப்படுவது இல்லை. தாயின் வயிற்றில் இருக்கும் போதும் உலகில் வாழும் போதும் அவரின் சிந்தனையோடு வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! எங்கள் தாயின் கருவில் நீர் எங்களை உருவாக்கி பெயரிட்டு, உமது பிள்ளைகளாய் பூமியில் வாழ அனுப்பியுள்ளீர் என்ற நம்பிக்கையில் வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
சகரியா எலிசபெத்திற்கு யார் உருவாகும் முன்னே பெயரிடப்பட்டார்?
