ரோமர் 8 : 36-39 14 நவம்பர் 2025, வெள்ளி
“ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, ஜீவ தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு வழிநடத்துவார்.” – தரிசனம் 7 : 17
வழிநடத்துதல் என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். வழிநடத்துகிறவர் எப்படியோ அப்படியே அவரை பின்பற்றி வருகிறவர்களும் நடப்பார்கள் என்பதனை புரிந்து கொள்வோம்.
தாவீது ராஜா கர்த்தர் என் மேய்ப்பராக, இருக்கிறபடியால் எனக்கு குறைவு இல்லை என்று கூறுகிறார். அவர் என்னை அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்துகிறார். கடவுள் நம் தலைவராக இருந்தால் நம் பாதைகள் செம்மையாகவும், நேர்மையாகவும், உண்மையுள்ளதாகவும் இருக்கும்.
எகிப்தில் இருந்து மோசேயினால் விடுதலை பயணத்தை மேற்கொண்ட இஸ்ரவேலரை கடவுள் வழி நடத்தினார். செங்கடல் இரண்டாக பிளந்தது, பாலைவன பயணத்தில் அப்பமும், காடையும் உணவாக கிடைத்தது.மேகம், அக்னி வழியாக இரவு, பகல் நடத்தப்பட்டார்கள். அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், காலணிகள் பழுது அடையவில்லை. எதிர்த்த அரசர்கள் தோல்வியை கண்டார்கள். கானான் தேசத்தை கொடுத்தார். இதுவே கடவுளின் வழிநடத்துதல்.
இந்திய தேசம் ஆங்கிலேயரின் கீழ் அடிமைப்பட்டபோது தேச விடுதலைக்காக பல தலைவர்கள் உருவானார்கள். அவர்களில் காந்தியடிகள் மட்டுமே அகிம்சை வழியில் போராடினார். கத்தியின்றி, இரத்தமின்றி ஆங்கிலேய அரசை எதிர்த்து மக்களை போராட வழிநடத்தினார். அவரின் வழிநடத்துதலில் உயிர் சேதங்கள் இல்லை, போர்கள் இல்லை, இரத்தம் சிந்தப்படவில்லை முடிவில் நமது தேசத்திற்கு காந்தியடிகளின் கீழ் சுதந்திரம் கிடைத்தது. அவரை நாம் தேச தந்தை என அழைக்கிறோம்.
நம்முடைய குடும்பங்களில் தந்தை தாய் நம்மை வழிநடத்துகிறார்கள். குடும்ப தேவைகளுக்காக உழைக்கிறார்கள். அனைத்து தேவைகளும் சந்திக்கிறார்கள்.
தந்தை யாகிய குடும்ப தலைவர் தினந்தோறும் குடும்ப ஜெபத்தில், வேத வாசிப்பில் வழிநடத்த வேண்டும். ஆலய ஆராதனைகளில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். கடவுளுக்கு பிரியமாக வாழும் வாழ்வை வழிநடத்த வேண்டும்.
சமூகத்தில் தலைவராக காணப்படுகிறவர்கள் முன்மாதிரியான நடத்தைகளை செய்து வழிகாட்ட வேண்டும். தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதனை மனதில் வைத்து மக்களை வழிநடத்த வேண்டும்.
கடவுள் நம்முடைய மரணத்திற்கு பின்னும் வழிநடத்துகிறார் என்ற உண்மையை அறிந்து முன்மாதிரியான வாழ்வு மேற்கொள்ள வேண்டும்.
அன்புள்ள கடவுளே! நீர் எங்கள் நல்ல மேய்ப்பராக இருக்கிறபடியால் உமது சத்தத்திற்கு கீழ்படிந்து உமது வழியில் நடக்க ஆவியானவரின் துணையை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
