ரோமர் 13 : 11-14 20 அக்டோபர் 2025, திங்கள்
“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்.”– ரோமர் 13 : 14
இந்தியாவில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக குடிக்கின்றனர். குடிப்பழக்கம் விளையாட்டாக துவங்குகிறது. பின்னர் அது அடிமையாக்குகிறது. உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் மனதையும் பாதிக்கிறது. போதையில் பாவமும் பெருகுகிறது.
இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் பவுல் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அணிந்து கொள்ளுங்கள் என்றால் அவரைப்போல வாழ வேண்டும் என்பதாகும். இயேசு கனிவான வார்த்தைகளை பேசினார். தவறான பழக்க வழக்கங்களுக்கு விலகி இருந்தார். பாவம் செய்யாதவராக இருந்தார். பிறருக்கு நன்மை செய்கிறவராக வாழ்ந்தார். அவரை முன்மாதிரியாகக்கொண்டு வாழ பவுல் அழைக்கிறார்.
சாதாரண மனிதர்களாகிய நாம் இப்படி வாழ்வது சாத்தியம் இல்லை. பாவம் நமக்குள் வாசம் செய்கிறது. உடல், உலகம் மற்றும் பிசாசு போன்றவை நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனாலும் கிறிஸ்து சிலுவையில் நம்மை மன்னிக்கிறார்.
மன்னிப்பை பெற்ற நாம் அதற்குத் தகுதியாய் வாழ அவரே உதவி செய்வார். ஜெபத்தினாலும், துதியினாலும் திரு சாக்கிரமெந்தினாலும், நம்மை பெலப்படுத்துகிறார். தனது திருவார்த்தையால் வழி நடத்துகிறார். நம்முடைய அறிவில் பெலத்தில் இயேசுவை அணிந்துகொள்ள முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். கிறிஸ்துவை அணிந்துகொண்டு நாம் வாழும் சமுதாயத்தில் முன்மாதிரியாக நடப்போம்.
வல்லமையுள்ள கடவுளே, கிறிஸ்துவை அணிந்து கொண்டு வாழ எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
