தீத்து 1 : 1-2 04 அக்டோபர் 2025, சனி
“…ஆதலால், உங்கள் அன்பையும் நாங்கள் உங்களைப் பற்றிய பெருமை பாராட்டிச் சொன்னதையும் சபைகள் காணும்படி அவர்களுக்கு விளங்கப்பண்ணுங்கள்.” – 2 கொரிந்தியர் 8 : 24
மனித மனம் இரண்டு விஷயங்களுக்காக ஏங்கும். ஒன்று மரியாதை இன்னொன்று பாராட்டு. குறிப்பாக பாராட்டுக்கள் ஒருவரை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக செயல்படும். பாராட்டுக்கள் மகிழ்ச்சி தரும். பாராட்டுக்கள் நல் உறவை உருவாக்கும்.
இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் பவுல் தன்னோடு இணைந்து பணி செய்த தீத்துவைப் பற்றியும் மற்ற சகோதரர்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். குறிப்பாக தீத்துவை, அவர் எனது நண்பர் என்றும் எனது உடன் பணியாளர் என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் தன்னோடு பணி செய்யும் அனைவரையும் சபைகளின் தூண்கள். கிறிஸ்துவுக்கு மகிமையானவர்கள் என்று பாராட்டுகிறார்.
உண்மையாக உழைப்பவர்களை பாராட்ட வேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவும்கூட பாராட்டத் தயங்காதவர். நூற்றுக்கதிபதி ஒருவர் இயேசுவைத் தேடி வந்தார். அவரது வேலைக்காரன் சுகவீனமாய் இருப்பதாகவும் அவனை சுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே இயேசு அவருடன் அவரது வீட்டிற்கு போகலாம் என்றார். ஆனால் அவரோ இயேசுவிடம், ‘உம்முடைய பாதம் என் வீட்டில் படுவதற்கு நான் தகுதியானவல்ல. நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வீட்டு வேலைக்காரன் குணமடைவான்’ என்றார். இயேசுவோ அவன் விசுவாசத்தைக் கண்டு, “இப்படியொரு விசுவாசத்தை இஸ்ரவேலர்களிலும் நான் கண்டதில்லை” என்று அவரை மனதார பாராட்டினார்.
நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாராட்டுவது எவ்வளவு அவசியம். நம் குடும்பத்திலிருந்தே பாராட்டுகள் துவங்க வேண்டும். கணவர் மனைவியையும், மனைவி கணவரையும் பாராட்ட வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திறமைகளைப் பாராட்டத் தயங்கக் கூடாது. நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், உடன் பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறப்பாய் செயல்படும்போது மனதார பாராட்ட வேண்டும். பாராட்டுகள் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். மேலும் நன்றாய் உழைக்க வேண்டும் என்ற இனிய சிந்தையை நமக்குள் உருவாக்கும். திட்டிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக அது உறவுகளைக் கெடுக்கும். மனதார பாராட்டுவோம். மனித மாண்பை காப்போம்.
அன்பின் தந்தையே, நாங்கள் எங்களைச் சுற்றியுள்ள மக்களின் உழைப்பை அங்கீகரித்து பாராட்டுகிற மனப்பான்மையோடு வாழ எங்களுக்கு கிருபை தந்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
