vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

மகிழ்ச்சி

லூக்கா 24 : 50-53                          01 அக்டோபர் 2025, புதன்

“அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷமாய் எருசலேமுக்குத் திரும்பி வந்து, நாடோறும் தேவாலயத்திலே கடவுளைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள்.” – லூக்கா 24 : 52-53

பிரிவுகள் மிகுந்த கவலையளிக்கும். முதல்முறை வீட்டை விட்டு பள்ளிக்கு போகிற குழந்தை அழுது அடம் பிடிக்கும். தரையில் புரண்டு அழும். பெற்றோர் ஒரு புறம் கண் கலங்கி நிற்பார்கள். உண்மையில் இது ஒரு தற்காலிகப் பிரிவு. சில மணி நேரங்கள்தான் பிரியப்போகிறார்கள். ஆனால் அந்த பிரிவை பெற்றோர்களாலும் பிள்ளைகளாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் ஒரு பிரிவைப் பற்றியது. மூன்றறை ஆண்டுகள் ஒன்றாய் திருப்பணி செய்த இயேசுவை சீடர்கள் பிரியும் தருணம். ஆனால் இங்கே கலக்கம் இல்லை. கண்ணீர் இல்லை மாறாக சந்தோஷமாய் திரும்பி வந்தார்கள். தங்களை வழி நடத்தினவரை பிரிவதில் என்ன சந்தோஷம் இருக்கமுடியும். தங்களுக்கு அடையாளம் தந்து வாழ்வு தந்தவரை பிரிவதில் அப்படியென்ன மகிழ்ச்சியாக இருக்கமுடியும். உண்மையில் இது பிரிவல்ல, புதிய உறவுக்கான பாலம். ஏனெனில் இயேசு, தாம் பரலோகத்திற்கு போவதற்குமுன், ‘யுக முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடுகூட இருப்பேன்’ என்றார்.

அதன்படி இயேசு பரலோகத்திற்கு ஏறின பின்பு, பெந்தேகொஸ்தே பண்டிகை அன்று பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது ஊற்றப்பட்டார். பரிசுத்த ஆவியானவராய் இந்த உலகின் முடிவு பரியந்தம் நம்மோடு இருக்கிறார். இதை வாசிக்கும் கிறிஸ்துவின் அடியார்களே, பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்குத் துணையாக நிற்கிறார். நீங்கள் கல்வியினிமித்தமாகவோ அல்லது வேலையின் நிமித்தமாகவோ உங்கள் பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் இருக்கலாம். அல்லது பெற்றோர்களைப் பிரிந்து கவலையில் இருக்கலாம். பிறரால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். எல்லாரும் இருந்தும் ஒருவித தனிமை உணர்வால் நீங்கள் கலங்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். நீங்கள் தனித்தவர்கள் அல்ல. கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்கிறார்.

அன்பின் தந்தையே, தனிமையில் இருப்போருக்கு துணை நின்று காத்துக் கொள்ளும். மகிழ்ச்சியில் அவர்கள் வாழ்வை வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மகிழ்ச்சி2025-09-30T10:44:31+00:00

முழுமையாக அர்ப்பணித்தல்

2 சாமுவேல் 23 : 13-17                                          30 செப்டம்பர் 2025, செவ்வாய்

“…இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.” – 2 சாமுவேல் 23 : 17

பாலைவனத்தில் மிகவும் சோர்ந்து நாவு வறண்ட நிலையில், தண்ணீர் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த போர் சேவகர்கள். அவர்களில் ஒரு வீரரிடம் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. அந்த வீரர் தன்னிடம் உள்ள தண்ணீரை அருந்தவில்லை. ‘ஏன், நீ தண்ணீர் குடிக்கவில்லை’ என்று கேட்டபோது ‘மற்றவர்களுக்கு இல்லாதது எனக்கும் வேண்டாம்’ என்றார்.

தியானபாகத்தில், தாவீது பெத்லெகேமில் இருந்து தண்ணீர் கொண்டுவரும்படி தனது பராக்கிரமசாலிகளான வீரர்களிடம் கூறினார். உடனே அவர்கள் பெலிஸ்தியர் கட்டுப்பாட்டில் இருந்த பெத்லெகேமுக்குத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தண்ணீர் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அத்தண்ணீரைப் பருகாமல், ‘‘உயிரைப் பணயம் வைத்து கொண்டுவந்தார்கள். அதை நான் குடித்தால் அவர்கள் இரத்தத்தைக் குடிப்பதற்கு சமம். இது விலைமதிக்கமுடியாத ஒன்று. எனவே, இந்த தண்ணீரை கர்த்தருக்கு ஊற்றிவிடுவேன்’’ என்று ஊற்றிவிட்டார்.

கடவுள் தமது குமாரன் இயேசுவின் உயிரை பணயமாக மனுக்குலத்தின் மீட்பிற்கு அனுப்பினார். கடவுள் நம்மை பொன்னினாலும் அல்ல, வெள்ளினாலும் அல்ல, விலையேறப்பட்ட இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார். ஒரே சரீரத்தின் மாம்சத்தையும், இரத்தத்தையும் பெற்றுக்கொள்வதினால் பாவமன்னிப்பின் வாழ்வை நாம் பெற்றுக் கொள்கிறோம். இயேசுவின் இரத்தத்தினால் புது வாழ்வு பெற்று உள்ளோம். நமது இரட்சிப்பு விலைமதிக்கமுடியாதது. எபிரேயர் நிருப ஆசிரியர் நமக்கு உறுதியாக்கப்பட்ட இவ்வளவு பெரிதான இரட்சிப்பைப் பற்றி கவலை அற்றிருப்போமானால் நாம் எப்படி தப்பித்துக் கொள்வோம் என்று இரட்ச்சிப்பின் மேன்மையை குறிப்பிடுகிறார்.

நாம் உலகப்பிரகாரமான காரியங்களுக்காக கவலைகொள்கிறோம். உலகமுழுவதும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் லாபம் என்ன? என்று ஆண்டவர் கேட்கிறார். தன் வாழ்வை நமக்காய் சாப சிலுவை ஏற்றுக்கொண்டு தமது மரணத்தினால் மேலான வாழ்வை நமக்குத் தந்துள்ளார். விலைமதிக்கமுடியாத வாழ்வில் நிலைத்து வாழ கடவுள் உதவி செய்வார்.

அன்பின் கடவுளே, உமது குமாரனில் நீர் தந்த இரட்சிப்பின் வாழ்வில் நிலைத்து வாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

முழுமையாக அர்ப்பணித்தல்2025-09-24T04:56:36+00:00

ஏற்றுக்கொள்ளும் மனம்

பிலேமோன் 9-12                                 29 செப்டம்பர் 2025, திங்கள்

“…. என்னைப் போலவே அவனை ஏற்றுக்கொள்.” – பிலேமோன் 17

சிறைச்சாலையிலிருந்து தண்டனை முடிந்துவரும் ஒரு கைதியை எளிதில் ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினம். ஒருவேளை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டாலும், சமுதாயம் அவரை குற்றவாளியாகவே பார்க்கும். அவரின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியே. சில கிறிஸ்துவ தன்னார்வ நிறுவனங்கள் கைதிகளின் மறுவாழ்வுக்கான நன்மைகளை செய்துகொண்டு வருவதை நாம் அறிவோம்.

தியானபாகத்தில், பவுல் பிலேமோன் என்பவருக்கு சொல்லுகின்ற வார்த்தை. பவுலை மிகவும் அன்போடு ஏற்றுக்கொண்டார் பிலேமோன். பவுலின் வழியாக நற்செய்தியைக் கேட்டு இயேசுவுக்குள் வழிநடத்தப்பட்டார்.

சிறைச்சாலையில் பவுல் ஒநேசிமு என்பவரை சந்திக்கிறார். ஒநேசிமு பிலேமோன் வீட்டில் இருந்து தப்பிவந்த அடிமை என்பதை அறிந்துகொள்ளுகிறார். பவுல் அவருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார். மனமாற்றத்திற்குள் வருகிறார். தன் தவறை உணர்ந்து மீண்டும் தன் எஜமான் பிலேமோன் வீட்டிற்கு போக விரும்பினார்.

பவுல் ஒரு சிபாரிசு கடிதமாக சிறைச்சாலையில் இருந்து எழுதுகிறார். பவுல் பிலேமோனிடம், ‘என்னை எவ்விதம் கடவுளின் பிள்ளையாய், இயேசுவில் மன்னிப்பு பெற்றவராக ஏற்றுக்கொண்டதுபோல ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார். ‘முன்னே பிரயோஜனமற்றவன், இப்பொழுதோ பிரயோஜனமுள்ளவன் என்று கூறி உன் வீட்டு அடிமையானாலும், கிறிஸ்துவுக்குள் சகோதரனாக ஏற்றுக்கொள்’ என்று குறிப்பிடுகிறார்.

மரண தண்டனைக்குரியவர்களான நம்மையும் கடவுள் தமது கிருபையினால் இயேசு கிறிஸ்துவில் விடுதலையாக்கினார். நாம் மன்னிப்புப் பெற்றவர்கள். கடவுளின் அன்பைப் பெற்றவர்கள். நம்முடைய திருச்சபைகளில் எத்தனை பாகுபாடுகள். ஏழை-பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்று பாகுபாடுகளை வைத்துக்கொண்டு கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறோம். கிறிஸ்துவின் வழியாக கடவுள் எந்த நிபந்தனையும் இல்லாமல் நம்மை ஏற்றுக்கொண்டாரோ, அவ்விதமே நாமும் எவ்வித வேற்றுமையும் இன்றி அனைவரையும் நேசித்து வாழ தூயாவியானவர் துணைசெய்வார்.

கிருபையும் இரக்கமுள்ள கடவுளே, நீர் உமது குமாரனில் எவ்வித நிபந்தனையும் இன்றி மன்னித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்களும் வேறுபாடின்றி அனைவரையும் நேசிக்க கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஏற்றுக்கொள்ளும் மனம்2025-09-24T04:58:28+00:00

இயேசு நம் அருகில்

யாத்திராகமம் 13 : 17-22                                     28 செப்டம்பர் 2025, ஞாயிறு

“நின்றவர் இயேசு என்று சீஷருக்குத் தெரியவில்லை.” – யோவான் 21 : 4

மீனவர்கள் இரவு நேரத்தில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வார்கள். அதிகாலையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். தொடர்ந்து வலைகளில் இருந்து மீன்களைப் பிரித்து எடுப்பார்கள். எடுத்த மீன்களை வியாபாரத்திற்குக் கொண்டு செல்வார்கள். இது மீனவர்களின் வாழ்க்கையில் வழக்கமான ஒன்றாகும்.

தியானபாகத்தில் இயேசுவின் சீடர்கள், சீமோன் பேதுரு, தோமா, நாத்தான்வேல், செபெதேயுவின் குமாரர்கள் இருவரும் மீன்பிடிக்க இரவு சென்றார்கள். ஒன்றும் வலையில் அகப்படாமல் மிகவும் சோர்வுடன், விரக்தியோடு அதிகாலையில் கரை வந்து சேருகிறார்கள். ஆண்டவர் இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர்கள் இயேசு என்று உணராதிருந்தார்கள். சோர்ந்துபோயிருக்கின்ற வேளையில் இயேசு நம் அருகில் இருக்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

ஆண்டவர் நம்முடைய வாழ்வில் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். சோர்ந்துபோகும்பொழுது நம்மருகில் இருக்கிறார். இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திர பயண வாழ்விலும் கடவுள் அவர்களோடு இருந்தார். பகலில் மேகஸ்தம்பத்தையும், இரவில் அக்னிஸ்தம்பத்தையும் தந்து, தமது நீங்கா பிரசன்னத்தை வெளிப்படுத்தினார்.

எவ்விதம் சீடர்கள் அருகில் இயேசுவானவர் இருந்தும் உணராது இருந்தார்களோ, அவ்விதம் நாமும் உணராமல் போகிறோம். நம்முடைய சோர்வுகள், தளர்வுகள் நம்முடன் இருக்கும் இயேசுவானவரை காணமுடியாமல் செய்கிறது. நம்முடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மையமாக கொண்டு வாழும்பொழுது இயேசுவை காண இயலாது. நமதாண்டவர் உறங்குவதும் இல்லை, தூங்குகிறதும் இல்லை. அவரின் பார்வை எப்பொழுதும் நம்மேல்தான்.

இன்றும் அவரின் திருவார்த்தையினால் நம்மைச் சந்திக்கிறார், பெலப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார், புதுபெலனைத் தருகிறார். எந்த சூழ்நிலையானாலும் நம்முடன் நீங்காத நேசராக இருக்கின்ற இயேசு ஆண்டவரை அவரின் வார்த்தையிலும், சாக்கிரமெந்திலும் கண்டு, அவரில் பெலப்படுவோம். நமது அழைப்பை உணர்ந்து அவரின் பிள்ளைகளை வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, துன்ப துயர வேளையில் எங்கள் அருகில் இருக்கும் உமது பிரசன்னத்தை திருவார்த்தையினால் உணர கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இயேசு நம் அருகில்2025-09-24T05:01:17+00:00

விசுவாசமாய் இருங்கள்

லூக்கா 8 : 22-25                                     27 செப்டம்பர் 2025, சனி

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிச் செய்யும் என்று சத்தமிட்டுக் கேட்டாள்.” – மார்க்கு 9 : 24

ஒரு சிறுபையன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென்று அலையால் இழுத்துச் செல்லப்பட்டான். உடனே அங்கிருந்த உயிர்காப்பாளர் அச்சிறுவனைக் காப்பாற்றும்படி சென்றார். நம்பிக்கை இல்லாமல் சிறுவன் தள்ளிப்போக, நான் உன்னைக் காப்பாற்ற வந்த உயிர் காப்பாளர் என்று சொன்னபிறகு நம்பிக்கையோடு அச்சிறுவன் அவரைப் பிடித்துக்கொண்டு கரையேறினான்.

தியானபாகத்தில், அசுத்த ஆவிபிடித்த தனது மகனை சுகப்படுத்தும்படி தகப்பன் சீஷரிடம் கொண்டுபோனார். ஆனால் அவர்களால் சுகப்படுத்த முடியவில்லை. நம்பிக்கை இழந்த தகப்பன், ‘உம்மால் ஏதாகிலும் செய்யமுடியுமானால் செய்யும்’ என்று இயேசுவிடம் கேட்கிறார். ‘முடியுமானால் என்றாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்’ என்று கூறுகிறார். தகப்பன் விசுவாசம் உண்டு. என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்தருளும் என்று வேண்டிக்கொள்ளுகிறார். இயேசு அசுத்தாவியைத் துரத்தி மகனை சுகப்படுத்தினார்.
நாமும் பல நேரங்களில் கடவுளிடம் அவிசுவாசத்துடனே நடந்து கொள்ளுகிறோம். ஒரு தேவைக்காக ஜெபிப்போம். ஜெபித்துவிட்டு சந்தேகத்துடன் அத்தேவைக்கு பதிலை உலகப்பிரகாரமான காரியங்களில் தேட முயற்சிப்போம். அவிசுவாசத்தோடு அல்ல, விசுவாசத்தோடு ஆண்டவரிடம் கேட்க விரும்புகிறார்.

அன்னாள் என்கிற பெண்மணி நம்பிக்கையோடு தனது தேவையை கர்த்தரிடம் கேட்கிறார். கேட்டபின் அவர் துக்கமுகமாய் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தர் விண்ணப்பத்தைக் கேட்டார். சாமுவேல் என்ற பிள்ளையைத் தந்தார். விசுவாசி, அப்பொழுது கடவுளின் மகிமையை காண்பாய் என்று ஆண்டவர் நம்மை அழைக்கிறார். விசுவாசமுள்ளவர்களாய் வாழ்வோம். அவிசுவாசத்தை நீக்கிப்போடும் என்று வேண்டிக்கொள்வோம். ஆண்டவரின் அன்பில் நிலைத்து இருப்போம்.

கிருபையுள்ள கடவுளே, உம்முடைய குமாரன் இயேசுவின் வழியாக உம்மில் நம்பிக்கைக்கொண்டு வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

விசுவாசமாய் இருங்கள்2025-09-24T05:02:57+00:00

தீமையை நன்மையால் வெல்லுவோம்

நீதிமொழிகள் 25 : 21-23                                        26 செப்டம்பர் 2025, வெள்ளி

“தீமையினாலே வெல்லப்படாமல், நன்மையினாலே தீமையை வெல்லு.” – ரோமர் 12 : 21

சூரியகாந்தி செடி வளரும்போது அச்செடியை நசுக்கிப்போட களைகள் கூடவே வளருமாம். நசுக்கிப்போட வந்த களையானாலும், சூரியகாந்தி செடி வளர்ந்து அந்த களைக்கு நிழல் தரும். அந்த நிழல் நிமித்தம் சூரிய வெளிச்சம் இல்லாமல் அந்த களைகள் கருகிப் போகுமாம். நன்மையால் தீமையை வென்ற நிலை.

தியானபாகத்தில், பவுல் தீமையை நன்மையால் வெல்லு என்று குறிப்பிடுகிறார். தீமைக்குத் தீமை செய்யாதே. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது கிறிஸ்துவ வாழ்வின் அறம் அல்ல. சத்துருவையும் நேசிப்பதே கிறிஸ்துவ வாழ்வின் அடையாளம். நமதாண்டவர் கற்றுத்தந்த பாடம் அதுவே. அவர் வாழ்ந்து செய்துகாட்டினார். கன்னத்தில் அறைந்து, வாரினால் அடிப்பித்து, தூஷித்து சிலுவையில் அறைந்தனர். பிதாவே இவர்களை மன்னியும் என்று சிலுவையில் கூறினார். இவர் மெய்யாகவே நீதிபரன் என்று நூற்றுக்கதிபதி சாட்சிப் பகர்ந்தார். சிலுவை மரணம் இயேசுவிற்கு தீமையாக யூதர்கள் செய்தனர். ஆனால் அவரின் சிலுவை மரணம் உலக மீட்பிற்குக் காரணமானது. நமது மீட்பிற்கும் காரணமானது.

கடவுளின் பிள்ளைகளாய் இயேசுவில் அழைத்துள்ளார். நன்மை செய்யும்படி அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நமக்குள் எத்தனை வைராக்கியங்கள், பழி வாங்கத் துடிக்கும் உணர்வுகள், அடுத்தவரைக் கெடுக்க நினைக்கும் சூழ்ச்சிகள். இப்படித்தான் வாழ நினைக்கிறார்கள் பலர். பழிவாங்குவது என் காரியம் என்று கடவுள் சொல்லுகிறார்.

பழைய ஏற்பாட்டில் யோசேப்பு என்பவர் தமது சகோதரர்களால் வெறுக்கப்பட்டார், விற்றுப்போடப்பட்டார். கடவுள் அவரை எகிப்தில் உயர்த்தினார். தன் சகோதரர்களைப் பழிவாங்காமல் அவர்களை நிறைவாய் போஷித்தார். நாமும் தீமைக்கு தீமை செய்யாமல் நன்மையினால் தீமையை வெல்லும்படி அன்புகூருவோம். கிறிஸ்துவின் அன்பினால் அவர்களை வெல்ல தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, சத்துருக்களாய் இருந்த எங்களை உம்முடைய குமாரன் இயேசுவின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டதற்க்காக நன்றி செலுத்துகிறோம். நன்மைசெய்து வாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்

தீமையை நன்மையால் வெல்லுவோம்2025-09-24T05:04:55+00:00

கவலை வேண்டாம்

தரிசனம் 2 : 1-7                           25 செப்டம்பர் 2025, வியாழன்

“நீ அநேக காரியங்களைப்பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய், தேவையானது கொஞ்சமே, தேவையானது ஒன்றே…”
– லூக்கா 10 : 41, 42

உளவியல் நிபுணர்கள் ஒரு மனிதனின் கவலையில் தேவையற்ற, அவசியமற்ற கவலைகள்தான் ஏராளம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தியானபாகத்தில், இயேசு ஆண்டவர் பெத்தானியா என்ற கிராமத்தில் உள்ள மார்த்தாள்-மரியாள் வீட்டிற்குச் செல்கிறார். மார்த்தாள் பரபரப்பாக ஆண்டவருக்கு பணிவிடை செய்வதில் இருக்கிறார். மரியாளோ இயேசுவின் பாதத்தண்டை உட்கார்ந்து ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். மார்த்தாள், ‘நான் தனியாக வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறது உமக்கு கவலையில்லையா’ என்று ஆண்டவரைப் பார்த்து கேட்கிறார்.

அப்பொழுது ஆண்டவர் அநேக காரியங்களைக் குறித்து கவலைப் படுகிறாய் என்று மார்த்தாளிடம் கூறுகிறார். பணிவிடை செய்வது அவசியம்தான். அதைக்காட்டிலும் மேலானது கடவுளின் வார்த்தையைக் கேட்பதாகும்.

நாம் நமது தேவைகளுக்காய் கவலைப்படுகிறோம் என்றால், கடவுளின்மேல் அவரின் வார்த்தையின்மேல் நம்பிக்கையற்றவர்கள் என்று அர்த்தம். இயேசுவில் நாம் அவருடைய பிள்ளைகள். நாம் கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். நம்முடைய தேவைகளை சந்திக்க அவர் எப்பொழுதும் ஆயத்தமாக உள்ளார். நாம் அவரில் அன்புகூர்ந்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ அர்ப்பணிப்போம்.
கவலைப்படுவதினால் ஒருவன் தன் சரீரத்தில் ஒரு முழத்தைக் கூட்ட முடியாது என்று ஆண்டவர் தமது மலைப்பிரசங்கத்தில் குறிப்பிடுகிறார். கவலை கடவுளின்மேல் நாம் கொண்ட அன்பு குறைவதின் வெளிப்பாடு. உலகப் பிரகாரமான கவலைகள் கடவுளின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கிறது. எபேசு திருச்சபை இவ்விதமாகத்தான் உலகப் பிரகாரமான கவலையினால் கடவுளின் அன்பைவிட்டு விலகினார்கள். ஆவியானவர் மனம்திரும்பிவர ஓர் அழைப்புக் கொடுக்கிறார். இன்று நம்மையும் கவலைகளைவிட்டு மனம்திரும்பி வாழ அழைக்கிறார். கடவுளின் வார்த்தையில் நம்பிக்கைக்கொள்வோம். அவரில் அன்புகூருவோம்.

அன்பின் கடவுளே, நாங்கள் அநேக காரியங்களைக் குறித்து கவலைப்படாமல் இயேசுவில் அன்புகூர்ந்து உம்முடைய வார்த்தைகளில் விசுவாசம் வைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கவலை வேண்டாம்2025-09-22T10:54:14+00:00

கடவுளின் பண்ணை

1 கொரிந்தியர் 3 : 16-17                      24 செப்டம்பர் 2025, புதன்

“நாங்கள் கடவுளின் உடன் ஊழியர், நீங்கள் கடவுளின் பண்ணை, கடவுளின் கட்டடம்.” – 1 கொரிந்தியர் 3 : 9

அரிசி உணவை நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறோம். அரிசியாக வருவதற்கு முன் எத்தனை நிலையைக் கடந்து வருகிறது. எத்தனை விதமான பணிகள், பணியாள்கள். பலன்தரக்கூடியதாக வர எத்தனை பணிகள்.

தியானபாகத்தில், பவுல் தான் கடவுளின் பணியாள் என்றும், கொரிந்து திருச்சபையை கடவுளின் பண்ணை என்றும் குறிப்பிடுகிறார். வசன விதையை விதைத்து ஒருவரை ஆண்டவருக்குள்ளும், விசுவாசத்திற்குள்ளும் வழிநடத்துவது, கிறிஸ்துவின் பூரண வளர்ச்சிக்கு பரிசுத்தவான்களைப் பக்குவப்படுத்தும்படி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பணியாள்தான் ஊழியக்காரர் என்று தன்னையே பவுல் குறிப்பிடுகிறார்.

திருச்சபை கடவுளின் பண்ணையாக, கனிகொடுக்கக்கூடியதாக இருக்க கடவுள் அனுமதித்திருக்கிறார். கடவுள் நம்மை தமது குமாரன் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக முழு மனுகுலத்தையும் மீட்டுக்கொண்டார். அவருடைய வார்த்தையைக் கேட்டு இயேசுவில் விசுவாசம் வைப்பவர்களை கடவுளின் பண்ணையாக – திருச்சபையாக உருவாக்குகிறார்.

ஆண்டவர் திருச்சபையாக கனிகொடுத்து வாழ அழைத்திருக்கிறார். ஆண்டவர் இயேசு ஓர் அத்திமர உவமையைக் கூறி கனி கொடுப்பதின் அவசியத்தை லூக்கா நற்செய்தியில் 13ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். ஆவியானவர் கடவுள் வார்த்தையினாலும் சாக்கிரமெந்திலும் நம்மை சுத்தப்படுத்தி கனிகொடுக்கக்கூடியவர்களாக வழிநடத்துகிறார்.

இன்று நாம் கடவுளின் பண்ணை. இயேசு எனும் ஜீவகாரத்தை மற்றவர்களுக்குத் தரக்கூடிய பண்ணையாக இருக்கிறோம். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயாளம், நற்குணம், உண்மை, சாந்தம், இச்சையடக்கம் என்கிற ஆவியின் கனிகளைக் கொடுக்கவேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். இக்கனிகளில் இயேசு வெளிப்படுகிறார். இயேசுவானவரை வெளிப்படுத்தும் பண்ணைகளாய் வாழ தூயாவியானவர் நமக்குத் துணைசெய்வார்.

சகல சிருஷ்டிக்கும் காரணராகிய கடவுளே, உமது குமாரன் இயேசுவில் எங்களை உமது பண்ணையாக ஏற்றுக்கொண்டதற்கு தோத்திரம் செலுத்துகிறோம். உமது பண்ணைகளாகக் கனிகொடுத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளின் பண்ணை2025-09-22T10:55:56+00:00

மறுபிறப்பு

யோவான் 3 : 1-15                                                 23 செப்டம்பர் 2025, செவ்வாய்

“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் கடவுள் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கமுடியாதென்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” – யோவான் 3 : 5

தியானபாகத்தில், ஆன்மீக வாழ்வில் மறுவாழ்வு எவ்விதம் கிடைக்கும் என்பதற்கானத் தெளிவு குறிப்பிடப்பட்டுள்ளது. நிக்கொதேமு என்ற பரிசேயன் ஓர் இரவு இயேசுவைச் சந்திக்க வருகிறார். இயேசுவானவர் கடவுளிடத்தில் இருந்து வந்தவர் என்பதை அறிக்கை செய்கிறார்.

ஆண்டவர் அவருக்கு கடவுள் இராஜ்யத்தின் மறுப்பிறப்பைக் குறித்து விளக்கமளிக்கிறார். ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பதே மறு வாழ்வு-கடவுள் இராஜ்யத்தில் பிரவேசிக்கக்கூடிய வழியாகும். என் தாய் என்னை பாவத்தில் பிறப்பித்தாள் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறபடி ஒருவன் பிறக்கும்போது பாவத்தில் பிறக்கிறான். பாவத்தின் சம்பளம் மரணம். எனவே கடவுள் இராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது.

இயேசுவை விசுவாசித்து திருமுழுக்கு பெற்றுக்கொள்ளும்போது கடவுள் இராஜ்யத்தில் இணைக்கப்படுகிறோம். தண்ணீரினால் திருமுழுக்குப் பெறும்பொழுது ஆவியானவர் அருளப்படுகிறார். இயேசுவில் மறுபிறப்பை பெற்றுக்கொள்ளுகிறார். நாமும் இயேசுவில் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவை தரித்துக்கொண்டுள்ளோம். கடவுள் நம்மை அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டுள்ளார். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதிய சிருஷ்டியாய் இருக்கிறான் என்று பவுல் குறிப்பிடுகிறார்.

நாம் மறுவாழ்வு – புதிய வாழ்வு பெற்றவர்கள். பரிசுத்தமான வாழ்வு பெற்றவர்கள். கடவுள் இராஜ்யத்தின் அடையாளம் பரிசுத்தமான வாழ்வாகும். பரிசுத்த வாழ்வு என்பது ஏதோ தியான நேரம், ஆராதனை நேரம் மட்டுமல்ல, நம் வாழ்க்கையின் எல்லா நிலையிலும் வெளிப்படுத்துவது. நம் செயல், சிந்தனை, சொல் எல்லாவற்றிலும் பரிசுத்தத் தன்மை வெளிப்படுதல் அவசியம். அதெற்கென்றே அழைக்கப்பட்டுள்ளோம். நாம் பணிசெய்கின்ற இடத்திலும் கடவுள் இராஜ்யத்தின் பிள்ளைகளாய் வாழ வேண்டும். ஆவியில் பிறந்தவர்களாக வாழ கடவுள் விரும்புகிறார். ஜலத்திலானாலும் ஆவியினாலும் பிறந்தவர்களாக வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது கிருபையினால் இயேசுவில் எங்களை மறுபடியும் பிறக்கச் செய்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய பிள்ளைகளாய் வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மறுபிறப்பு2025-09-19T05:32:49+00:00

உண்மையுள்ளவர்

மத்தேயு 27 : 11-24                                  22 செப்டம்பர் 2025, திங்கள்

“நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார் அவர் தம்மைத் தாம் மறுதலிக்க முடியாது.” – 2 தீமோத்தேயு 2 : 13

ஒருமுறை ஒரு தகப்பனார் தன்னுடைய மகனைக் குறித்து வேதனையோடு பேசினார். ‘ஐயா, என் ஒரே மகனை செல்லமாக வளர்த்தோம். ஆனால் இப்பொழுதோ சொல்பேச்சை அவன் கேட்பதே இல்லை. எவ்வளவோ புத்திமதி சொல்லியும் கேக்கறமாதிரியே இல்லை. ஆனாலும் அவனை வெறுத்து ஒதுக்க முடியல. அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுக்கிறோம். எப்போதான் அவன் எங்க அன்பை புரிஞ்சு கொள்வானோ’ என்று தமது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். மகன் அவர்களை உதாசீனப்படுத்தினாலும் தகப்பன் தமது அன்பில் உண்மையுள்ளவராக இருந்தார்.

தியானபாகத்தில், நாம் உண்மைற்றவர்களாக இருந்தும் நமதாண்டவர் இயேசு உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார் என்று பவுல் குறிப்பிடுகிறார். மனுக்குலம் பாவிகளாய், அவபக்தர்களாய் இருந்தபோதே குறித்த காலத்தில் கடவுள் தமது அன்பை வெளிப்படுத்த, தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். பிதாவின் சித்தத்தை செய்வதே தமது பணி என்று கடவுளுக்கு உண்மையுள்ளவராக ஆண்டவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். மரண பரியந்தம்வரை உண்மையாக தம்மைத் தாழ்த்தினார். இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பு இலவசமாக அவரை விசுவாசிப்பவர்களுக்குத் தரப்படுகிறது.

இயேசுவில் கடவுளின் அன்பைப் பெற்றுள்ளோம். திருமுழுக்கின் வழியாக அவருடைய பிள்ளைகளாய் நம்மை அழைத்துள்ளார். அழைத்த கடவுள் உண்மையுள்ளவராக நம்மை போஷிக்கிறார், பராமரிக்கிறார், பாதுகாக்கிறார். நாம் பெற்றுக்கொண்ட பிள்ளை என்கிற உரிமையில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். அவரோடு ஜெபத்தில் பேசுவதில், அவருடைய வார்த்தையைக் கேட்பதில், அவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில், அவரை நேசிப்பதில் உண்மையாக இருப்பதற்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறார்.

அழைத்த கடவுள் தமது வாக்குத்தத்தில் உண்மையுள்ளவராக இன்றுவரை நம்மை வழிநடத்திக்கொண்டுள்ளார். மாறாத கடவுளின் உண்மையான அன்பை உணர்ந்து அவரில் நாம் உண்மையுள்ளவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

எங்களை நேசிக்கும் அன்பின் கடவுளே, நீர் உமது குமாரனில் எங்களிடம் உம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

உண்மையுள்ளவர்2025-09-19T05:30:50+00:00
Go to Top