யாத்திராகமம் 13 : 17-22 28 செப்டம்பர் 2025, ஞாயிறு
“நின்றவர் இயேசு என்று சீஷருக்குத் தெரியவில்லை.” – யோவான் 21 : 4
மீனவர்கள் இரவு நேரத்தில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வார்கள். அதிகாலையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். தொடர்ந்து வலைகளில் இருந்து மீன்களைப் பிரித்து எடுப்பார்கள். எடுத்த மீன்களை வியாபாரத்திற்குக் கொண்டு செல்வார்கள். இது மீனவர்களின் வாழ்க்கையில் வழக்கமான ஒன்றாகும்.
தியானபாகத்தில் இயேசுவின் சீடர்கள், சீமோன் பேதுரு, தோமா, நாத்தான்வேல், செபெதேயுவின் குமாரர்கள் இருவரும் மீன்பிடிக்க இரவு சென்றார்கள். ஒன்றும் வலையில் அகப்படாமல் மிகவும் சோர்வுடன், விரக்தியோடு அதிகாலையில் கரை வந்து சேருகிறார்கள். ஆண்டவர் இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர்கள் இயேசு என்று உணராதிருந்தார்கள். சோர்ந்துபோயிருக்கின்ற வேளையில் இயேசு நம் அருகில் இருக்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.
ஆண்டவர் நம்முடைய வாழ்வில் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். சோர்ந்துபோகும்பொழுது நம்மருகில் இருக்கிறார். இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திர பயண வாழ்விலும் கடவுள் அவர்களோடு இருந்தார். பகலில் மேகஸ்தம்பத்தையும், இரவில் அக்னிஸ்தம்பத்தையும் தந்து, தமது நீங்கா பிரசன்னத்தை வெளிப்படுத்தினார்.
எவ்விதம் சீடர்கள் அருகில் இயேசுவானவர் இருந்தும் உணராது இருந்தார்களோ, அவ்விதம் நாமும் உணராமல் போகிறோம். நம்முடைய சோர்வுகள், தளர்வுகள் நம்முடன் இருக்கும் இயேசுவானவரை காணமுடியாமல் செய்கிறது. நம்முடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மையமாக கொண்டு வாழும்பொழுது இயேசுவை காண இயலாது. நமதாண்டவர் உறங்குவதும் இல்லை, தூங்குகிறதும் இல்லை. அவரின் பார்வை எப்பொழுதும் நம்மேல்தான்.
இன்றும் அவரின் திருவார்த்தையினால் நம்மைச் சந்திக்கிறார், பெலப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார், புதுபெலனைத் தருகிறார். எந்த சூழ்நிலையானாலும் நம்முடன் நீங்காத நேசராக இருக்கின்ற இயேசு ஆண்டவரை அவரின் வார்த்தையிலும், சாக்கிரமெந்திலும் கண்டு, அவரில் பெலப்படுவோம். நமது அழைப்பை உணர்ந்து அவரின் பிள்ளைகளை வாழ தூயாவியானவர் துணை செய்வார்.
அன்பின் கடவுளே, துன்ப துயர வேளையில் எங்கள் அருகில் இருக்கும் உமது பிரசன்னத்தை திருவார்த்தையினால் உணர கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
