vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 617 blog entries.

உண்மையுள்ளவர்

மத்தேயு 27 : 11-24                                  22 செப்டம்பர் 2025, திங்கள்

“நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார் அவர் தம்மைத் தாம் மறுதலிக்க முடியாது.” – 2 தீமோத்தேயு 2 : 13

ஒருமுறை ஒரு தகப்பனார் தன்னுடைய மகனைக் குறித்து வேதனையோடு பேசினார். ‘ஐயா, என் ஒரே மகனை செல்லமாக வளர்த்தோம். ஆனால் இப்பொழுதோ சொல்பேச்சை அவன் கேட்பதே இல்லை. எவ்வளவோ புத்திமதி சொல்லியும் கேக்கறமாதிரியே இல்லை. ஆனாலும் அவனை வெறுத்து ஒதுக்க முடியல. அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுக்கிறோம். எப்போதான் அவன் எங்க அன்பை புரிஞ்சு கொள்வானோ’ என்று தமது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். மகன் அவர்களை உதாசீனப்படுத்தினாலும் தகப்பன் தமது அன்பில் உண்மையுள்ளவராக இருந்தார்.

தியானபாகத்தில், நாம் உண்மைற்றவர்களாக இருந்தும் நமதாண்டவர் இயேசு உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார் என்று பவுல் குறிப்பிடுகிறார். மனுக்குலம் பாவிகளாய், அவபக்தர்களாய் இருந்தபோதே குறித்த காலத்தில் கடவுள் தமது அன்பை வெளிப்படுத்த, தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். பிதாவின் சித்தத்தை செய்வதே தமது பணி என்று கடவுளுக்கு உண்மையுள்ளவராக ஆண்டவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். மரண பரியந்தம்வரை உண்மையாக தம்மைத் தாழ்த்தினார். இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பு இலவசமாக அவரை விசுவாசிப்பவர்களுக்குத் தரப்படுகிறது.

இயேசுவில் கடவுளின் அன்பைப் பெற்றுள்ளோம். திருமுழுக்கின் வழியாக அவருடைய பிள்ளைகளாய் நம்மை அழைத்துள்ளார். அழைத்த கடவுள் உண்மையுள்ளவராக நம்மை போஷிக்கிறார், பராமரிக்கிறார், பாதுகாக்கிறார். நாம் பெற்றுக்கொண்ட பிள்ளை என்கிற உரிமையில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். அவரோடு ஜெபத்தில் பேசுவதில், அவருடைய வார்த்தையைக் கேட்பதில், அவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில், அவரை நேசிப்பதில் உண்மையாக இருப்பதற்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறார்.

அழைத்த கடவுள் தமது வாக்குத்தத்தில் உண்மையுள்ளவராக இன்றுவரை நம்மை வழிநடத்திக்கொண்டுள்ளார். மாறாத கடவுளின் உண்மையான அன்பை உணர்ந்து அவரில் நாம் உண்மையுள்ளவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

எங்களை நேசிக்கும் அன்பின் கடவுளே, நீர் உமது குமாரனில் எங்களிடம் உம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

உண்மையுள்ளவர்2025-09-19T05:30:50+00:00

ஜனத்தின் நன்மை

எஸ்தர் 4 : 12-14                           21 செப்டம்பர் 2025, ஞாயிறு

“அவன் பேசியதெல்லாம் தன் குலத்தாரின் வாழ்வுக்கு ஏதுவாயிருந்தது.”– எஸ்தர் 10 : 3

தென் ஆப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. கறுப்பர் இன மக்களின் நேசிக்கப்பட்ட தலைவர். இன வேறுபாடு கூடாது, அனைவரும் சமம் என்று கறுப்பர் இன வேறுபாட்டிற்கு எதிராக போராடினார். தன் ஜனத்தின் விடுதலைக்காக பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். ஏழ்மை ஒழிக்க அயராது உழைத்தவர். தனது ஜனத்தின் விடுதலையே எனது விடுதலை என்று கூறியவர் நெல்சன் மண்டேலா.

தியானபாகத்தில், பாரசீகத்தில் வாழ்ந்த யூதனாகிய மொர்தெகாய் எவ்விதம் தமது ஜனமாகிய யூதர்களுக்கு நன்மை செய்தார் என்பதை குறிப்பிடுகிறது. அகாஸ்வேரு அரசாட்சின் கீழ் உயர் பதவி வகித்து வந்தார். மொர்தெகாயின் சித்தப்பா மகளாகிய எஸ்தர் அகஸ்வேரின் இராணியாக்கப்பட்டார். யூதர்களை அழிக்க ஆமான் சூழ்ச்சி செய்கிறான். இதை அறிந்த மொர்தெகாய் எஸ்தரைக் கொண்டு யூதர்களைக் காப்பாற்றுகிறார். அதோடு அகாஸ்வேரு அரசனின் நன்மதிப்பையும் பெறுகிறார். கடவுள் அவர்களுக்குக் கொடுத்த உயர்வை தம் ஜனத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தியவர்கள் மொர்தெகாயும், எஸ்தரும் ஆவார்கள்.

நாமும் கடவுளின் கிருபையை ஆண்டவர் இயேசுவின் வழியாக பெற்றுள்ளோம். நாம் விடுதலையாக்கப்பட்டவர்கள். கடவுள் நம்மை ஆசீர்வதித்துள்ளார். நாம் நன்மை பெற்றவர்கள். நன்மை பெற்ற நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படியாக கடவுள் விரும்புகிறார். கிறிஸ்துவ வாழ்வின் சுருக்கமே கடவுளிடம் அன்புகூருதல், அயலானிடம் அன்புகூருதல் ஆகும். சுயநலத்தோடு வாழ்வது கிறிஸ்துவ வாழ்வு அல்ல. நன்மைச் செய்ய அறிந்தும் செய்யாமல் இருப்பது பாவம் என்று யாக்கோபு தமது நிருபத்தில் குறிப்பிடுகிறார். அயலானின் நலனில் அக்கறை கொள்வோம். கிறிஸ்துவின் சுவிஷேசத்திற்கு செயல் வடிவம் கொடுக்க தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது அன்பை கிறிஸ்துவில் எங்களுக்குத் தந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்துவின் அன்பை அயலான் நலனில் அக்கறை கொண்டவர்களாக வெளிப்படுத்த எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஜனத்தின் நன்மை2025-09-19T05:28:48+00:00

பொருளைச் சாராதே

ஆதியாகமம் 19 : 15-26                             20 செப்டம்பர் 2025, சனி

“உங்கள் கச்சைகளில்… வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரன்.” – மத்தேயு 10 : 9-10

கேரளாவில் வயநாட்டில் ஒரு மிகப்பெரிய நிலச்சரிவினால் ஏராளமானோர் தங்களின் வீடுகளை இழந்தார்கள். அநேகர் மரித்துப்போனர்கள். இவ்விதமாக தங்களின் உடைமைகளை இழந்தும், அன்பானவர்களை இழந்தும் தவித்த தவிப்பை நாம் அறிந்திருக்கிறோம். அதன்பின் அப்பகுதிகளில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது பல இடங்களில் பல கட்டுகள் பணமும், தங்க நகைகளும் கண்டு எடுக்கப்பட்டது. பரிதாபம் என்னவென்றால் இது யாருக்குரியது என்று தெரியாததால் அரசின் கைவசம் ஆனது. சேர்த்துவைத்தது உரியவருக்கு பயனற்றுப்போனது.

தியானபாகத்தில், ஆண்டவர் இயேசுவானவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் தெரிந்தெடுத்து, திருப்பணிக்கு அனுப்புகிறார். பன்னிருவரையும் அனுப்பும் பொழுது முக்கியமான அறிவுரைகளைச் சொல்லி அனுப்புகிறார். பொன், வெள்ளிக் காசுகளை உங்கள் கச்சைகளில் வைத்துக்கொள்ளாதிருங்கள் என்று குறிப்பிடுகிறார். கடவுளை முற்றிலும் சார்ந்திருங்கள். உலக பொருட்களை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். தமது மலைப் பிரசங்கத்திலும் பூமியிலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழிக்கும். பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் என்று குறிப்பிடுகிறார்.

இவ்வுலக வாழ்விற்கு பணம், பொருள் தேவை. ஆனால் அவைதான் வாழ்க்கை என்று இன்றைய மனிதர்கள் ஓடுகின்றனர். நம்முடைய வாழ்விற்கான ஆதாரம் கடவுள். அவர் நம் தேவைகளை எல்லாம் சந்திப்பார் என்று நம்பிக்கைக்கொள்ளாமல் வாழ்கின்றனர். பணம், பொருள் தேவையாக அல்ல, ஆசையாக – பேராசையாக மாறியுள்ளது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கிறது என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். பொருள் ஆசையினால் தனக்குக் கிடைத்த அற்புதமான வாழ்க்கையை இழந்த லோத்துவின் மனைவியை அறிவோம். கடவுள் இயேசுவில் நம்மை அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டு உள்ளார். நம்முடைய தேவைகளை எல்லாம் கடவுள் சந்திப்பார் என்று அவரையே சார்ந்து வாழ அர்ப்பணிப்போம்.

சகல ஆசீர்வாதத்திற்கும் ஆதாரமாகிய கடவுளே, நாங்கள் எல்லா நிலையிலும் உம்மையே சார்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பொருளைச் சாராதே2025-09-19T05:27:00+00:00

கடவுள் காத்திருப்பார்

ஏசாயா 30 : 18-21                                              19 செப்டம்பர் 2025, வெள்ளி

“அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.” – ஏசாயா 30 : 18

நம்முடைய வீட்டில் உள்ள ஒருவர், பணிநிமித்தம் அயல்நாடு சென்று மூன்று ஆண்டுகள் கழித்து வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வரும் நாளை எதிர்நோக்கி குடும்பமாய் காத்திருப்போம். விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருப்போம் அல்லவா. இங்கு காத்திருப்பு அவசியம். அது மகிழ்ச்சி தரக்கூடிய காத்திருப்பு.

தியானபாகத்தில், கடவுள் தமது ஜனத்திற்கு தயவு பாராட்டும்படி காத்திருப்பார் என்று ஏசாயா தீர்க்கர் குறிப்பிடுகிறார். யூதாவிலுள்ள இஸ்ரவேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையை மீறினார்கள். கடவுளுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். கடவுள் நாமத்தை தூஷித்தார்கள். கடவுளின் வார்த்தையை உதாசீனப்படுத்தினார்கள். கொடுமையிலும் மறுபாட்டிலும் நம்பிகை வைத்தார்கள். எனவே கடவுள் ஏசாயா தீர்க்கரைக் கொண்டு நியாயத் தீர்ப்பு உண்டு என்று கூறுகிறார். தீய வழியை விட்டு மனந்திருந்த வாய்ப்புத் தருகிறார். நீங்கள் மனம்திரும்பி கடவுளிடம் வாருங்கள். உங்களுக்குத் தயவு பாராட்டும்படி கடவுள் காத்திருப்பார் என்று குறிப்பிடுகிறார்.

கடவுள் தமது குமாரன் இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக நம்மை புதிய இஸ்ரவேலாக தெரிந்துகொண்டுள்ளார். தமது தூயாவி கொண்டு தமது வார்த்தையினால் பரிசுத்தமான வாழ்வு வாழ வழிநடத்துகிறார். நாம் பல வேளைகளில் நமது சுய விருப்பத்தின்படி வாழ முயற்சிக்கிறோம். வேலை… வேலை என்று கடவுளின் வார்த்தையை வாசிக்க நேரம் செலவிடுவதில்லை. ஜெபிக்க நேரம் இல்லை. இப்படித்தான் நமது தேவையை, நாம்தான் சந்தித்துக்கொள்ளவேண்டும் என்று சுய பெலத்தோடு ஓடுகிறோம். திரும்பி வா என்று மீண்டும் நம்மை தமது வார்த்தையைக் கொண்டு அழைக்கிறார். திரும்பி வர கடவுள் தயவு பாராட்டும்படி காத்துக்கொண்டிருக்கிறார். திரும்புவோம், கடவுளின் அன்பில் நிலைத்திருப்போம்.

அன்பின் கடவுளே, நீர் எப்பொழுதும் இயேசுவில் இரக்கம் பாராட்டக்கூடியவராக இருப்பதற்காக உம்மை தோத்தரிக்கிறோம். நாங்கள் இரக்கத்தில், அன்பில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுள் காத்திருப்பார்2025-09-17T10:49:23+00:00

நம்மைப் பலப்படுத்துவார்

சங்கீதம் 27 : 11-14                                18 செப்டம்பர் 2025, வியாழன்

“கடைசியாக, ஆண்டவரிலும் அவர் சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.” – எபேசியர் 6 : 10

“க்ஷடிடிளவ ளை வாந ளநஉசநவ டிக அல நநேசபல” என்ற விளம்பரம்போல் பல விளம்பரங்கள் சரீரத்தை பெலப்படுத்த இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு சத்து பானங்கள் அருந்த வேண்டும். ஏனெனில், சரீரம் பலத்தோடு இருந்தால்தான் உழைக்கமுடியும்.

தியானபாகத்தில் பவுல் ஆன்மீக வாழ்விலும் பலப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவ வாழ்வு இலேசானதொன்றுமல்ல. அது போராட்டங்கள் நிறைந்தது. கிறிஸ்துவ வாழ்வு ஒர் ஆன்மீக ஓட்டம். பலமின்றி ஓடுவது கடினம். எனவே பவுல், கடவுளின் வல்லமையிலும் சத்துவத்திலும் பலப்படும்படி அழைப்புக் கொடுக்கிறார்.

கடவுள் கிறிஸ்துவில் நம்மை அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டுள்ளார். பரிசுத்தமாய் வாழவேண்டும் என்று விரும்புகிறார். தன்னில்தானே நாம் பரிசுத்தமாய் வாழ இயலாது. நாம் பலவீனமானவர்கள், சோர்ந்துபோகக்கூடியவர்கள். ஏனென்றால் இவ்வுலகம் பாவம் நிறைந்தது. பிசாசு நம்மை கடவுளிடம் இருந்து பிரித்துவிட செயல்படுகிறான். தேவையற்ற கவலையில் நம்மை மனமடியச் செய்கிறான்.

இச்சூழலில், நாம் கடவுளின் பிள்ளைகளாய் வாழ கடவுளின் வல்லமையும் சத்துவமும் அவசியமாக இருக்கிறது. கடவுளின் வார்த்தையினாலும் சாக்கிரமெந்தாலும் பலத்தைத் தருகிறார். நாம் கடவுளுக்கு காத்திருப்பது அவசியம். கடவுளின் வார்த்தையை கவனமாகக் கேட்டு, அவ்வசனத்தை என் வாழ்வுக்குரியதாக விசுவாசித்து, என் வாழ்வோடு இணைத்துக்கொள்ளும்போது ஆன்மீக வாழ்வில் பலப்படுகிறோம். சாக்கிரமெந்தில் ஆண்டவர் இயேசுவின் மெய்யான சரீரமும், இரத்தமும் நம்மை பலப்படுத்துகிறது.

‘கர்த்தருக்குக் காத்திருப்பவர்கள் புதுப் பெலன் பெற்று, கழுகுகளைப் போல் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்’ என்று ஏசாயா குறிப்பிடுகிறார். கர்த்தருக்குக் காத்திருப்போம். புதுப் பெலன் பெற்று தைரியத்துடன் ஓடுவோம். கடவுள் நம்முடன் இருக்கிறார்.

எங்கள் பெலனாகிய கடவுளே, தொடர்ந்து உமது வார்த்தையினால் சத்துவத்தையும் பெலத்தையும் நாங்கள் பெற்றுவாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நம்மைப் பலப்படுத்துவார்2025-09-15T09:20:22+00:00

இரட்சிப்புப் பெறுங்கள்

எபேசியர் 2 : 7-10                                 17 செப்டம்பர் 2025, புதன்

“நானே கடவுள், எனக்கு இணை இல்லை.” – ஏசாயா 45 : 22

கேரள மாநிலத்திலுள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவு நமக்கு நினைவில் இருக்கும். நிலச் சரிவு, வெள்ளப் பெருக்கு என்ற நிலையில் துண்டிக்கப்பட்ட கிராமங்கள். மீட்புப் பணிச் செய்ய இயலாத நிலை. இந்நிலையில் இந்திய இராணுவ வீரர்கள் பலர் ஒன்றிணைந்து இரவு பகல் என்று பாராமல் துரிதமாக செயல்பட்டு தற்காலிகப் பாலத்தை அமைத்து, அநேகரை மீட்டார்கள். துண்டிக்கப்பட்ட கிராம மக்களின் ஒரே நம்பிக்கை அந்த பாலம்.

தியானபாகத்தில், பாபிலோனிய சிறையிருப்பில் இருந்த இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பிற்கான ஒரே நம்பிக்கை கடவுள் என்பதை ஏசாயா தெளிவுப்படுத்துகிறார். நீண்டகால சிறையிருப்பு இஸ்ரவேல் மக்களை சோர்வடையச் செய்தது. பாபிலோனிய கடவுள்களை வணங்கலாம் என்ற சோதனைக்கு ஆளானார்கள். இந்நிலையில் கடவுளே அவர்களுக்கு விடுதலையின் வாழ்வைத் தரக்கூடியவர். அவரே இரட்சகர். அவருக்கு நிகர் வேறு தெய்வங்கள் இல்லை என்பதை ஏசாயா சுட்டிக்காட்டுகிறார். கடவுள் ஒருவரே, அவர் நீதியின் கடவுள். அவரே இரட்சிக்கிறவர். அவரே உங்கள் நம்பிக்கை. சிறையிருப்பின் விடுதலை அவராலே என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இன்றைய உலகில் மானிட மீட்பைத் தேடி ஆன்மீகம் என்ற பெயரில் பல முயற்சிகளை மேற்கொண்டுவருவது நாம் அறிந்ததே. மானிட மீட்பிற்கு என்று கடவுளால் அனுப்பப்பட்டவர் இயேசு. அவரால் மட்டுமே இரட்சிப்பு- பாவ விமோசனம். இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக இரட்சிப்பு இன்றும் இலவசமாய் கொடுக்கப்படுகிறது. ஆண்டவர் இயேசுவை விசுவாசிப்பதினால் கடவுள் இரட்சிப்பை இலவசமாகத் தருகிறார்.

இலவசமான இரட்சிப்பை நீங்களும் நானும் இயேசுவில் அவரின் திருவார்த்தையின் வழியாக பெற்று இருக்கிறோம். பெற்றுக்கொண்ட புதிய வாழ்வை மற்றவருடன் பகிர்ந்துகொள்வோம். இரட்சணிய சந்தோஷத்தில் நிலைத்திருப்போம்.

கிருபையுள்ள கடவுளே, உமது பேரன்பினால் சொந்த குமாரன் இயேசுவின் வழியாக இரட்சிப்பைத் தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இரட்சணிய சந்தோஷத்தில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன். 

இரட்சிப்புப் பெறுங்கள்2025-09-15T09:18:06+00:00

நம்மை மீட்டுக்கொள்பவர்

1 பேதுரு 1 : 17-21                              16 செப்டம்பர் 2025, செவ்வாய்

“…அவனைத் தப்பவிட்டவன் ஜீவன் ஈடாகும் என்றான்.” – 2 இராஜாக்கள் 10 : 24

கள்ளக்குறிச்சியில் 30 பேர் கள்ள சாராயம் குடித்து பலி! என்ற செய்தி தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் பரபரப்பாக பேசப்பட்டதை நாம் அறிவோம். இச்சம்பவத்தின் எதிரொலியாக சரியான கண்காணிப்பு இல்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறிய காவல் அதிகாரிகள், அரசுத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பலர் இடமாற்றம் பெற்றனர். உயிரிழப்பிற்குக் காரணம் அதிகாரிகளின் கவனக்குறைவே.

தியானபாகத்தில், யேகூ, ஆகாப் வழியாக பரவிக்கிடந்த பாகால் தீர்க்கர்களையும், பாகாலின் பக்தர்களையும் முழுமையாக அழித்திட விரும்பினார். அதற்கு தான் பாகாலின் பக்தி வைராக்கியம் கொண்ட எல்லோரையும் ஒரு இடத்தில் கூட்டுகிறார். அந்த இடத்தில் இருந்து பாகாலின் ஆட்கள் தப்பித்துப் போகாதபடி ஆட்களை நிறுத்தி அவர்களிடம் சொன்ன வார்த்தை: ‘உங்கள் கவனக்குறைவினால் ஒருவன் தப்பித்தாலும் அதற்கு இணையாக உங்கள் ஜீவன் எடுக்கப்படும்’ என்று உத்தரவுபோடுகிறார். கடவுளுக்கு பக்தி வைராக்கியத்தோடு யேகூ நடந்துக்கொண்டார்.

நாமும் முன்னே நமது அக்கிரமங்களினாலும் பாவத்தினாலும் ஜீவன் அற்று இருந்தோம். நமது ஜீவனை மீட்டுக்கொள்ளும்படி கடவுள் தமது குமாரனாம் இயேசுவின் ஜீவனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார். பொன்னினாலும் அல்ல, வெள்ளியானாலும் அல்ல, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டுக் கொண்டு நமது ஜீவனை இரட்சித்தார்.

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கில் கடவுள் இயேசுவில் நம்மை மீட்டுக் கொண்டார். நாம் கடவுளின் பிள்ளை என்கிற அடையாளத்தைப் பெற்றுக்கொண்டோம். தொடர்ந்து கடவுளின் பிள்ளையாய் பக்தி வைராக்கியத்துடன் வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது குமாரன் இயேசுவின் இரத்தத்தினால் எங்களை மீட்டுக்கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்முடைய பிள்ளைகளாய் பக்தி வைராக்கியத்துடன் வாழ கிருபை செய்தருளும், ஆமேன்.

நம்மை மீட்டுக்கொள்பவர்2025-09-15T09:15:27+00:00

ஜெபத்திற்கு செவிகொடுப்பவர்

ஏசாயா 59 : 1-3                                         15 செப்டம்பர் 2025, திங்கள்

“…. அவரோ என் மன்றாட்டைத் தள்ளிவிட்டார்.” – புலம்பல் 3 : 8

ஒருவர் நான்காம் தளத்தில் உள்ள அலுவலகத்திற்குப் போக வேகமாக லிப்ட்டில் ஏறினார். இரண்டு தளம் கடந்த நிலையில் திடீரென்று லிப்ட் பழுதடைந்து நின்றுபோனது. உதவிக்கு அழைத்தார். ஆனால் அங்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. நேரம் கடந்தது. மிகவும் நொந்துபோன நிலையில் வேதனையோடு காத்திருந்தார். ஒரு மணி நேரம் கழித்து லிப்ட் சரி செய்யப்பட்டது. உதவிகேட்டு செய்ய யாருமில்லை என்ற நிலை எத்தனை வேதனைக்குரியது.

தியானபாகத்தில், எரேமியா, தனது மன்றாட்டை கடவுள் தள்ளிவிட்டார், உதவியே இல்லை என்கிற நிலையை குறிப்பிடுகிறார். தன்னை கடவுள் முழுமையாய் துன்பத்துக்கு ஆளாக்கினார். ஆனாலும் நான் அழியாதிருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை சுட்டிக்காட்டுகிறார். கடவுளின் இரக்கத்திற்கு முடிவில்லை. இஸ்ரவேல் மக்களின் பாவமே அவர்களின் சிறையிருப்பிற்கும் தமது துன்பத்திற்கும் காரணம் என்றும் எரேமியா கூறுகிறார்.

கடவுள் நமது ஜெபத்துக்கு செவிகொடுக்கிறவர். பதில் தருகிறவர். சில வேளைகளில் தாமதிப்பார். தாமதிப்பதற்குக் காரணம் நமது பாவங்களாக இருக்கலாம் என்று ஏசாயா தீர்க்கர் குறிப்பிடுகிறார். தாமதம் நமது மனமாற்றத்திற்கான காலம் என்று எடுத்துக்கொள்ளுதல் அவசியம். கடவுள் தள்ளிவிடுகிறவர் அல்ல. மாறாக இரக்கம் பாராட்டுகின்றவர். நமது ஜெபங்கள் அவரின் சித்தத்திற்கு ஏற்ப இருத்தல் அவசியம். ஆண்டவர் இயேசு ஜெபித்தார். நாம் செய்யவேண்டிய ஜெபத்தையும் கற்றுத் தந்தார்.

நாமும் கடவுளிடம் கேட்போம். முழுமனதோடும், நம்பிக்கையோடும், மனம் திருந்தினவர்களாக கேட்போம். கடவுள் இயேசுவில் கேட்பார். என் நாமத்தினால் கேளுங்கள், பிதாவானவர் தந்தருளுவார் என்று ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுத்துள்ளார். வாக்குத்தத்ததைப் பிடித்துக்கொண்டு கடவுளிடம் கேட்க தூயாவியானவர் துணை செய்வார்.

ஜெபத்தைக் கேட்கிற எங்கள் அன்பின் கடவுளே, உமது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இயேசுவில் ஜெபிக்க கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஜெபத்திற்கு செவிகொடுப்பவர்2025-09-10T10:02:11+00:00

நம்பிக்கையின் கடவுள்

சங்கீதம் 22 : 8-11                                14 செப்டம்பர் 2025, ஞாயிறு

“… என்னை நம்பிக்கையாய் இருக்கப் பண்ணினீர்.” – சங்கீதம் 22 : 9

வளரும் குழந்தை தாயின் பராமரிப்பில் இருப்பதை நாம் அறிவோம். ஒரு குழந்தை அழும்போது, அது பசிக்கு அழுகிறதா அல்லது வேறு காரணம் ஏதும் இருக்குமோ என்பதை உள்ளுணர்ந்து, அதற்கேற்ப செயல்படுவதே தாயின் சிறப்பு. குழந்தையும் எனது தாயே என் தேவைகளைச் சந்திப்பவர் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும்.

தியானபாகத்தில், கடவுளே நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர். அவரே நம்மை அவரில் நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறவர். எவ்விதம் ஒரு குழந்தை தன் தாயை நம்பியிருக்கிறதோ, அதேபோல் நாமும் கடவுள் என்னை போஷிப்பார் என்று நம்பி வாழ ஒரு அழைப்பை சங்கீதக்காரன் தருகிறார்.

கடவுள் நம்மையும் அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டுள்ளார். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக நம்மை மீட்டுக்கொண்டு கடவுளை ‘அப்பா பிதாவே’ என்று அழைக்கின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக ‘கடவுளின் பிள்ளை’ என்கிற சிலாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது.

நம்முடைய வாழ்வு அவருடையது. குழந்தை எவ்விதம் தனது தாயை சார்ந்து வாழ்கிறதோ அவ்விதம் நாம் கடவுளைச் சார்ந்து வாழ கடவுள் விரும்புகிறார். இன்றைய உலகில் நாம் மனிதர்களையும், நமது பணத்தையும், பொருளையும் நம்பி வாழ முயற்சிக்கிறோம். இறுதியில் தோல்வி, சோர்வுகள், மனப்போராட்டங்கள்தான் மிஞ்சுகிறது. மனுஷனில் நம்பிக்கை வைப்பதைக்காட்டிலும், கர்த்தரிடம் நம்பிக்கை வைப்பது நலம் என்று திருமறை சொல்லுகிறது.

கடவுள் நமது தேவைகளை திருப்தியாய் தரக்கூடியவர். அவரிடம் பெறுவதே நிறைவானது. கடவுளைச் சார்ந்து வாழ அர்பணிப்போம். அவ்விதம் அர்ப்பணித்து வாழ தூயாவியானவர் துணைசெய்வார்.

அன்பின் கடவுளே, இயேசுவில் உம்முடைய பிள்ளைகளான நாங்கள் எப்பொழுதும் உம்மையே சார்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நம்பிக்கையின் கடவுள்2025-09-10T09:59:21+00:00

பயமில்லை

மார்க்கு 4 : 35-41                            13 செப்டம்பர் 2025, சனி

“உங்களுக்கு ஏன் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றார்.” – மார்க்கு 4 : 40

பயம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படுகின்ற ஒர் உணர்வு. எதிர்காலத்தைக் குறித்த பயம், தேவைகள் நினைத்து பயம், மரண பயம் போன்றவைகள் நம்முடைய வாழ்வில் வந்து போகக்கூடிய பயங்கள். பயம் ஒருவரின் அவநம்பிக்கையின் வெளிப்பாடு. பயம் நம்மோடு இருக்கிறவைகளையும், இருக்கிறவரையும் மறக்க செய்யும். உளவியல் நிபுணர்கள் ஒரு மனிதரின் வாழ்வில் ஏற்படுகின்ற 70 சதவீத பயங்கள் அவசியமற்றது என்று குறிப்பிடுகிறார்கள்.

தியானபாகத்தில், இயேசுவின் சீடர்களின் பய அனுபவத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இயேசுவும் சீடர்களும் ஒருநாள் படகில் ஏறிப் போனார்கள். இயேசு கீழ்தட்டில் இருந்தார். படகு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று பலத்த சுழல் காற்று உண்டானது. அலைகள் படகின் மேல் மோதவே, சீடர்களுக்கு மரணபயம் உண்டாயிற்று. ஆண்டவர் உடன் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்பதற்கு பதிலாக அவரை சீடர்கள், ‘நாங்கள் மடிந்து போகிறோம், உமக்கு கவலை இல்லையா’ என்று கடிந்துக்கொள்கிறார்கள். அவரோ அவர்களிடம் ஏன் பயப்படுகிறீர்கள், இன்னும் நம்பிக்கை வரவில்லையா என்று கூறி, காற்றையும் கடலையும் அதட்டினார். அமைதலுண்டாயிற்று. இயற்கையின் மேல் அதிகாரம் உடைய ஆண்டவராகத் தம்மை வெளிப்படுத்தினார்.

நம்மை பயத்தினின்று விடுதலையாக்க வந்தவர் நமது ஆண்டவர் இயேசு. இன்றும் நம்மோடுகூட இருக்கிறார். நம் வாழ்கைப் பயணத்தில் நமது துணையாக இருக்கிறார்.

நமது சூழ்நிலைகள், எதிர்பார்ப்புகள் மத்தியில் நம்மோடு இருக்கின்ற இயேசுவை மறந்துபோகின்றோம். சீடர்களைப்போல் கலங்கி நிற்கிறோம், கவலைப்படுகிறோம், பயந்துபோகிறோம். ஆண்டவர், “பயப்படாதிருங்கள், நான்தான்” என்று தமது வார்த்தையினால் நம்மை சந்திக்கிறார், தைரியப்படுத்துகிறார். அவ்விதம் பயமின்றி ஆண்டவரில் நம்பிக்கைக்கொண்டு வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, ஆபத்து காலத்தில் எப்பொழுதும் எங்கள் வாழ்வில் இருக்கிறீர் என்று இயேசுவில் நம்பிக்கைக்கொண்டு வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன். 

பயமில்லை2025-09-10T09:56:03+00:00
Go to Top