ஏசாயா 30 : 18-21 19 செப்டம்பர் 2025, வெள்ளி
“அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.” – ஏசாயா 30 : 18
நம்முடைய வீட்டில் உள்ள ஒருவர், பணிநிமித்தம் அயல்நாடு சென்று மூன்று ஆண்டுகள் கழித்து வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வரும் நாளை எதிர்நோக்கி குடும்பமாய் காத்திருப்போம். விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருப்போம் அல்லவா. இங்கு காத்திருப்பு அவசியம். அது மகிழ்ச்சி தரக்கூடிய காத்திருப்பு.
தியானபாகத்தில், கடவுள் தமது ஜனத்திற்கு தயவு பாராட்டும்படி காத்திருப்பார் என்று ஏசாயா தீர்க்கர் குறிப்பிடுகிறார். யூதாவிலுள்ள இஸ்ரவேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையை மீறினார்கள். கடவுளுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். கடவுள் நாமத்தை தூஷித்தார்கள். கடவுளின் வார்த்தையை உதாசீனப்படுத்தினார்கள். கொடுமையிலும் மறுபாட்டிலும் நம்பிகை வைத்தார்கள். எனவே கடவுள் ஏசாயா தீர்க்கரைக் கொண்டு நியாயத் தீர்ப்பு உண்டு என்று கூறுகிறார். தீய வழியை விட்டு மனந்திருந்த வாய்ப்புத் தருகிறார். நீங்கள் மனம்திரும்பி கடவுளிடம் வாருங்கள். உங்களுக்குத் தயவு பாராட்டும்படி கடவுள் காத்திருப்பார் என்று குறிப்பிடுகிறார்.
கடவுள் தமது குமாரன் இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக நம்மை புதிய இஸ்ரவேலாக தெரிந்துகொண்டுள்ளார். தமது தூயாவி கொண்டு தமது வார்த்தையினால் பரிசுத்தமான வாழ்வு வாழ வழிநடத்துகிறார். நாம் பல வேளைகளில் நமது சுய விருப்பத்தின்படி வாழ முயற்சிக்கிறோம். வேலை… வேலை என்று கடவுளின் வார்த்தையை வாசிக்க நேரம் செலவிடுவதில்லை. ஜெபிக்க நேரம் இல்லை. இப்படித்தான் நமது தேவையை, நாம்தான் சந்தித்துக்கொள்ளவேண்டும் என்று சுய பெலத்தோடு ஓடுகிறோம். திரும்பி வா என்று மீண்டும் நம்மை தமது வார்த்தையைக் கொண்டு அழைக்கிறார். திரும்பி வர கடவுள் தயவு பாராட்டும்படி காத்துக்கொண்டிருக்கிறார். திரும்புவோம், கடவுளின் அன்பில் நிலைத்திருப்போம்.
அன்பின் கடவுளே, நீர் எப்பொழுதும் இயேசுவில் இரக்கம் பாராட்டக்கூடியவராக இருப்பதற்காக உம்மை தோத்தரிக்கிறோம். நாங்கள் இரக்கத்தில், அன்பில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
