vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 617 blog entries.

இரக்கம் செய்கிறவர்

உபாகமம் 30 : 15-20                       12 செப்டம்பர் 2025, வெள்ளி

“நீ அவைகளை வணங்கவும் சேவிக்கவும் வேண்டாம் ….. ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராய் இருக்கிறேன்.”
– யாத்திராகமம் 20 : 5-6

இன்றைய உலகின் இரக்க குணம் அலைபேசியோடு முடிந்து போகிறது என்ற வாசகத்தை வாசிக்க நேர்ந்தது. ஆம், உண்மைதான். ஆபத்து- விபத்து எதுவானாலும் அலைபேசியில் படம்பிடித்து முகநூலில் பதிவுசெய்து லைக் வாங்கும் வரைதான் இரக்ககுணம். சுயநலம் மிஞ்சிய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைமுறை.

தியானபாகத்தில், கடவுள் இரக்ககுணமுள்ளவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடவுளிடம் அன்புகூர்ந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்யக்கூடியவராக இருக்கிறார்.

ஆதாமின் பாவத்தின் நிமித்தம் கெட்டுபோய் சபிக்கப்பட்ட மனுக்குலத்தின் மேல் கடவுள் இரக்கம் கொண்டார். தமது ஒரே பேறான குமாரன் இயேசுவை அனுப்பினார். ஆண்டவர் இயேசு கடவுளின் இரக்கத்தையும், அன்பையும் தமது சிலுவை மரணத்தின் வழியாக வெளிப்படுத்தினார். இயேசுவை விசுவாசிப்பதன் வழியாக கடவுள் தமது இரக்கத்தை நமக்கு இலவசமாய் தருகிறார். கடவுளின் இரக்கத்தின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்படுகிறோம்.

கடவுள் தமது இரக்கத்தை இயேசுவின் வார்த்தையிலும் சாக்கிரமெந்திலும் வெளிப்படுத்துகிறார். மனம் திருந்திய மகனுக்கு இரக்கம் காட்ட தந்தை எப்படி காத்துக்கொண்டிருந்தாரோ, அதேபோல் இன்றும் நமக்கு இரக்கம் காட்ட கடவுள் காத்துக்கொண்டுள்ளார். திரும்புவோம், அவரில் மாத்திரம் அன்புகூர்ந்து அவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ அர்ப்பணிப்போமாக. அவ்விதம் அர்ப்பணித்து வாழ தூயாவியானவர் நமக்கு துணை செய்வார்.

இரக்கமுள்ள கடவுளே, உம்மில் அன்புகூர்ந்து உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இரக்கம் செய்கிறவர்2025-09-10T09:53:35+00:00

ஆவியில் தாழ்மையுடையோர்

2 கொரிந்தியர் 11 : 20-22                         11 செப்டம்பர் 2025, வியாழன்

“ஆவியின் தரித்திரர் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” – மத்தேயு 5 : 3

ஒரு பிச்சைக்காரன் கந்தலான ஆடையோடு தாராள மனசுள்ள இராஜாவை சந்திக்க சென்றான். இராஜா உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பிச்சைக்காரன், அரசே நான் ஏழை, என்னிடத்தில் ஒன்றும் இல்லை. நான் வெறுமையானவன் என்றான். அதற்கு இராஜா, நல்லது உன்னிடத்தில் ஒன்றும் இல்லாத நிலையில் நான் உனக்கு நன்மை செய்வேன் என்று சொல்லி உதவினார். பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி, புதிய வாழ்வு பெற்றவனாய் மனநிறைவோடு வாழ்ந்தான்.

இன்றைய தியானபாகத்தில் பாக்கிய வசனங்களின் முதல் பாக்கிய வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவர் இயேசு தமது மலைப்பிரசங்கத்தின் முதற் பகுதியாக பாக்கிய வசனங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்பது பாக்கிய வசனங்களில் முதலாவது, ஆவியில் தரித்திரர் என்பதாகும். பரலோக இராஜ்யம் அவர்களுடையது என்று குறிப்பிடுகிறார்.

நான் வெறுமையானவன், ஒன்றுமில்லாதவன். என் வாழ்வு முழுவதும் கடவுளைச் சார்ந்தது என்று, முழுவதுமாக நம்பி வாழ்கின்ற வாழ்விற்கு ஆவியில் தரித்திரர் என்று சொல்லப்படுகிறது. இன்று வேகமாக போய்க்கொண்டிருக்கிற உலகில் மனிதர்கள் தங்களது பணத்தை, கல்வியை, செல்வாக்கை சார்ந்து வாழ்கின்றார்கள். கடவுள் எதிர்பார்ப்பது அவரையே சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கையாகும். ஒருமுறை இருவர் ஜெபிப்பதற்காக ஆலயத்திற்குச் சென்றனர். ஒருவர் சுயநீதியோடு ஜெபிக்கிறார். மற்றோருவர் கடவுளை ஏறெடுத்துப் பார்க்கத் துணியாமல் கடவுளே பாவியாக எனக்கு இரங்கும் என்று மன்றாடுகிறார். ஆண்டவர், அவனல்ல (சுயநீதியோடு ஜெபித்தவன்) இவனே (தன்னை தாழ்த்தி ஜெபித்தவனே) நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் என்று குறிப்பிடுகிறார்.

கடவுள் இயேசுவில் செயல்படுகிறார். நம்மை அவரின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டுள்ளார். பரலோக இராஜ்யம் நமக்குரியது. நமது வாழ்வு கடவுள் கொடுத்தது என்று விசுவாசித்து அவரை சார்ந்து வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது குமாரனில் எங்களை உம்முடைய பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்மைச் சார்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஆவியில் தாழ்மையுடையோர்2025-09-10T09:50:25+00:00

அனைவருக்கும் நற்செய்தி

1 கொரிந்தியர் 4 : 1-4                                     10 செப்டம்பர் 2025, புதன்

“… அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.” – அப்போஸ்தலர் 16 : 3

1606-1656இல் மதுரையில் தூதுப்பணி ஆற்ற வந்தவர் இராபர்ட் நோபிலி என்கிற பாதிரியார். மற்ற மதத்தின் கலாசாரத்திற்கு உட்பட்டு நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்று விரும்பினார். மதுரையில் காவி உடை அணிந்த சந்நியாசிகள் மத்தியில் நற்செய்தியை அறிவிக்க தானும் காவி உடை அணிந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். இந்திய திருச்சபை வரலாற்றில் ஒரு சிறப்பு மிகுந்த தூதுப்பணி காலம் என்று சொல்லப்படுகிறது .

தியானபாகத்தில் பவுல் தமது ஊழியத்தில் உதவியாக இருக்க தீமோத்தேயுவை அழைத்துக்கொண்டு போக விரும்பினார். தீமோத்தேயு பிறப்பால் ஒரு கிரேக்கர். ஏனென்றால் அவர் தாய் கிரேக்கம். தகப்பனார் யூதர். பவுல் யூதர்கள் மத்தியில் நற்செய்தி சொல்ல அவர்கள் நிமித்தம் பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம் செய்ய வைத்தார். யூதர்களை கிறிஸ்துவிற்குள் கொண்டுவர இவ்விதம் செய்தார். பவுல் கிறிஸ்துவுக்குள் எல்லாரையும் கொண்டுவர எல்லாருக்கும் எல்லாம் ஆனேன் என்று குறிப்பிடுகிறார்.

கடவுளின் அன்பு கிறிஸ்துவில் முழு மனுகுலத்திற்கும் கொடுக்கப்பட்டது. கிறிஸ்துவின் சிலுவை மரணம், ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவன் பெறவேண்டும் என்பதற்காகவே. அனைவருக்கும் நற்செய்தி போகவேண்டும் என்பதே இன்றைய திருச்சபையின் தாகமாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனின்மேல் விழுந்த கடமை, திருச்சபை அனைவருக்கும் உரியது என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். என்னுடைய தனிப்பட்ட கிறிஸ்துவ வாழ்வு மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கவேண்டும். கிறிஸ்துவுக்காய் ஒருவரையாவது நமது வாழ்வில் ஆதாயப்படுத்துவதே நமது பணி என்பதை உணர்ந்து செயல்பட தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, இயேசுவை நற்செய்தியாகக் கூறி அறிவிக்க எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அனைவருக்கும் நற்செய்தி2025-09-10T05:27:12+00:00

கிறிஸ்துவில் பிழைத்திருக்கிறோம்

ரோமர் 6 : 2-11                                    09 செப்டம்பர் 2025, செவ்வாய்

“நாம் அவரோடுகூட மரித்தால் அவரோடுகூட பிழைத்துமிருப்போம்.” – 2 தீமோத்தேயு 2 : 11

ஒருவர் இருதய அறுவை சிகிச்சை முடிந்து வந்தார். அவரைப் பார்த்து ஜெபிக்கச் சென்றபோது, ‘ஐயா நான் செத்து பிழைத்தவன்’ என்று அவர் கூறும்போது மறுவாழ்வு பெற்ற மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.

தியானபாகத்தில் பவுல் ஆன்மீக வாழ்வில் ஒருவர் கிறிஸ்துவில் செத்து பிழைத்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். ஒருவர் தான் பெற்றுக்கொள்ளும் திருமுழுக்கில், கிறிஸ்துவோடு தமது பாவ சரீரத்தில் மரித்து கிறிஸ்துவோடு எழுப்பப்படுகிறார், கிறிஸ்துவோடு பிழைக்கிறார். கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவராய் புதிய அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுகிறார். ரோமர் நிருபத்தில், பவுல் திருமுழுக்கில் ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் அற்புத செயலை இவ்விதமாக குறிப்பிடுகிறார். ஒருவர் திருமுழுக்கில், தமது பாவ சரீரம் கிறிஸ்துவின் மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு, அவரோடு அடக்கம்பண்ணப்பட்டு, அவரோடு எழுப்பப்படுகிறார். திருமுழுக்கில் ஒருவர் இவ்விதமாய் செத்து பிழைக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

கிறிஸ்துவ வாழ்வு என்பது பாவத்திற்கு செத்து, நீதிக்கு-கிறிஸ்துவுக்குள் பிழைத்திருப்பதாகும். நாம் அவரோடுகூட பிழைத்திருக்கிறோம் புதிய படைப்பாய் இருக்கிறோம். பழைய பாவ சரீரம் இல்லை. திருமுழுக்கில் பாவ சரீரத்தோடு சிலுவையில் நாமும் அறையப்பட்டோம். எனவே இனி கிறிஸ்துவுக்குள் மரித்தவன் பாவத்திற்கு கடன்பட்டவனல்ல. கடவுளின் பிள்ளை, கிறிஸ்தவர் என்ற அடையாளத்தைப் பெற்றுக்கொண்டோம்.

இன்று பரபரப்பான இவ்வுலக வாழ்வில் நம்முடைய அடையாளத்தைத் தொலைத்துப்போடுகிறோம். கடவுள் கிறிஸ்துவில் நம்மேல் கொண்ட அன்பின் நிமித்தம் கிறிஸ்துவின் மெய்யான சரீரத்திலும், மெய்யான இரத்தத்திலும் நம்முடைய பாவங்களை மன்னித்து, நமது அடையாளத்தைப் புதுப்பிக்கிறார். எனவே, கிறிஸ்துவில் நமது வாழ்வு, நாம் அவரில் பிழைத்திருக்கிறோம் என்று உணர்ந்து வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

கிருபையுள்ள கடவுளே, உமது குமாரனில் எங்களை புதிய படைப்பாய் ஏற்றுக்கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கிறிஸ்துவில் பிழைத்திருக்க உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கிறிஸ்துவில் பிழைத்திருக்கிறோம்2025-09-08T10:50:48+00:00

அன்பு சினமறியாது

யாக்கோபு 1 : 19-21           08 செப்டம்பர் 2025, திங்கள்

“மனுஷ கோபம் தேவநீதியை நடப்பிக்கிறதில்லையே.” – யாக்கோபு 1 : 20

ஒருவர் ஒரு புதிய கார் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். மனைவி மற்றும் அவரின் ஒரே செல்லப் பிள்ளைக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சின் இடையே மகன் வீட்டிற்குள் சென்றான். வேகமாக வந்து காரின் பின்னாடி நின்று ஏதோ செய்து கொண்டிருந்தான். என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை சரியாகக் கவனிக்காமல் காரில் ஏதோ அசுத்தம் செய்கிறான் என்று நினைத்து, கோபத்தில் பையனை அடிக்கிறார். வலி தாங்காமல் மகன் அழுதுகொண்டு அம்மாவிடம் ஓடுகிறான். கோபம் கண்ணை மறைத்தது, சந்தோசம் போனது. சிறிது நேரம் கழித்து காரின் பின்பக்கம் போய் பார்த்தபோது ‘னுயன ஐ டடிஎந லடிர’ என்ற அழகான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கவனிக்காமல் கோபத்தில் மகனை அடித்தது தவறு என்பதை உணர்ந்தார். கோபம் மற்றவரின் அன்பை மறைக்கிறது.

தியானபாகத்தில், மனுஷ கோபம் தேவ நீதியை நடப்பிக்கிறது இல்லை என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். நமது கோபம் கடவுளின் அன்பை விட்டு நம்மை பிரிக்கிறது. கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள தடையாக இருக்கிறது. கோபிக்கிறதுக்குத் தாமதமாய் சகலவித சாந்தத்தோடு கடவுளின் வசனத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நமது கீழ்ப்படியாமையினால் நாம் கடவுளின் கோபாக்கினை பிள்ளைகளாய் இருந்தோம். அன்பு சினமறியாது. கடவுள் தமது அன்பை இயேசுவில் வெளிப்படுத்தினார். ஆண்டவர் இயேசு தமது சிலுவை மரணத்தின் வழியாக நம்மை கடவுளின் கோபத்திலிருந்து விலக்கினார். கடவுளின் அன்பை இயேசுவில் பெற்ற நாம் கோபப்படுகிறதுக்கு தாமதிக்கிறவர்களாக பெற்றுக்கொண்ட அன்பை பகிர்ந்துகொண்டு வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, நாங்கள் கோபப்படுகிறதுக்கு தாமதித்து, சாந்தத்தோடு உம்முடைய வார்த்தையைக் கேட்டு வாழ உதவிச் செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அன்பு சினமறியாது2025-09-08T06:33:34+00:00

காத்திருக்கின்றோம்

எபிரேயர் 4 : 1-11                                 25 ஆகஸ்ட் 2025, திங்கள்

“எவனும் கீழ்ப்படியாமையைக் காண்பித்து விழுந்துபோகாதபடிக்கு, இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க விடாமுயற்சியாயிருப்போமாக.” – எபிரேயர் 4 : 11

நம் வாழ்வில் பல துறைகளில் கவனமாய் இருக்க தவறிப்போகிறோம். எபிரேயர் நிருபத்தின் ஆக்கியோன், “இளைப்பாறுதலில் பிரவேசிக்க கவனமாயிருக்கக்கடவோம்” என்று நமக்கு அறிவுறுத்துகிறார். எபிரேயர்களின் சூழலில், “இளைப்பாறுதல்” என்பது கடவுளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதால் வரும் ஆன்மீக ஓய்வைக் குறிக்கிறது. இது வெறும் சரீர ஓய்வு அல்ல, ஆனால் கிறிஸ்துவின் உயிர்தெழுதலினால் பாதுகாக்கப்படும் நமது இரட்சிப்பினால் வரும் ஆழ்ந்த, ஆன்மா-இளைப்பாறுதலாகும். ஆதாமும் ஏவாளும் ஏதேனில் கடவுளில் அனுபவித்த இளைப்பாறுதல், கானான் தேசத்தில் இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இளைப்பாறுதல், இப்போது கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் கடவுளின் அற்புதங்களைக் கண்டும், வாக்குறுதிகளைப் பெற்றும் கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்தின் காரணமாக கடவுளின் இளைப்பாறுதலில் நுழையத் தவறிவிட்டனர். ‘கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க கவனமாயிருக்கக்கடவோம்’ என்பதின்படி அதே கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்திற்கு எதிராக வாழ நம்மைக் காத்துக்கொள்வோம்.

இளைப்பாறுதலில் பிரவேசிக்க கவனமாயிருக்கக்கடவோம் என்பது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நம் வாழ்க்கையை சீரமைப்பது மற்றும் அவருடைய வாக்குறுதிகளை உறுதியாகப் பற்றிக்கொள்வதாகும். பயணம் கடினமாக இருந்தாலும், நம்முடைய சுய பலத்தினால் முயற்சி செய்வது அல்ல, மாறாக ஆண்டவர் நம்மை இளைப்பாறுதலில் கொண்டு சேர்ப்பார் என்று விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதுதான்.

நாம் காத்திருக்கும் இளைப்பாறுதல் என்பது அவருடைய கிருபை போதுமானது என்றும், அவருடைய வாக்குறுதிகள் உண்மை என்றும், அவருடைய அன்பு மாறாதது என்றும் நம்பி நமது எதிர்காலம் கிறிஸ்துவில் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையுடன் நிகழ்காலத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. இந்த நிச்சயத்தில் வாழ்வோம், மறுமையில் நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிப்போம்.

நித்திய வாழ்வின் அதிபதியே, உமது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு இயேசுவிடம் விசுவாசம் வைத்து வாழ்வின் எல்லா நிலையிலும் துறையிலும் நிச்சயத்தோடு வாழ அருள்செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

காத்திருக்கின்றோம்2025-08-22T07:49:27+00:00

நீதி வழங்குங்கள்

எசேக்கியேல் 45 : 9-12                                 22 ஆகஸ்ட் 2025, வெள்ளி

“இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும், நீங்கள் கொடுமையையும் அழிவையும் அகற்றி நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்.” – எசேக்கியேல் 45 : 9

இன்றைய தியான வாக்கியப் பகுதியில் இஸ்ரவேல் சமூகத்தில் இருந்த அநீதி மற்றும் அடக்குமுறைகளை தலைவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் தவிர்க்க கடவுள் அறிவுறுத்துகிறார். கடவுள் தங்களுக்கு வகுத்த நீதியான பாதையிலிருந்து விலகியிருந்த இஸ்ரவேலின் தலைவர்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி வழியாக கடவுள் எச்சரிக்கை செய்கிறார். தலைவர்கள் தங்கள் பதவிகளை வைத்து அப்பாவி மக்களை சுரண்டிக்கொண்டும் மக்களின் துன்பங்களுக்கும் உரிமையின்மைக்கும் காரணமாயிருந்தனர். நேர்மையுடன் வழி நடத்த வேண்டிய ஆட்சியாளர்கள், அதிகாரப் பதவிகளைப் பயன்படுத்தி அடக்குமுறையாளர்களாக மாறிவிட்டனர்.

நீதி என்பது கடவுளால் விதிக்கப்பட்ட ஒரு நியமமாகும். இங்கு ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையோடு செய்யத் தவறியதற்காக கடவுள் எசேக்கியேல் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார். தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள மக்களை வஞ்சிக்கிற ஆட்சியாளர்கள் கடவுளுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இஸ்ரவேலின் அதிபதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டி கொடுமைப்படுத்தி கொள்ளையிடுகிறவர்களாக இருந்துள்ளனர். கடவுள் அவர்களை நியாயத்தையும் நீதியையும் செய்யும்படி அழைக்கிறார்.

இஸ்ரவேலரின் ஆட்சியாளர்கள் முன்மாதிரியான நீதியுள்ள தலைவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்தார். நீதியை நிலைநிறுத்துவதில் அவர்கள் தோற்றபோது அவர்கள் கடவுளின் அழைப்புக்குப் பாத்திரராய் இல்லாமற் போனார்கள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்பது கடவுளுக்கு எதிரான பாவமாகும். உண்மையான தலைமை என்பது அனைத்து மக்களையும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்களையும் நியாயமான முறையில் நடத்துவதை உள்ளடக்கியது. இயேசுவில் கடவுளின் பிள்ளைகளாக நீதியின் வழியில் நடந்து அன்பைப் பகிர்ந்து வாழுவோம்.

நீதியின் கடவுளே! நீதி நியாயத்துக்கான உமது அழைப்பை ஏற்று, அநியாயத்தை அழிக்க உமது பலத்தை எங்களுக்குத் தாரும். சரியானதை பகுத்தறிந்து பாதிக்கப்படக்கூடியவர்களுக்காகப் போராடி நீதியைப் பெற்றுத்தர உம் வல்லமையை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நீதி வழங்குங்கள்2025-08-21T10:52:55+00:00

கொள்ளையிடாதிருங்கள்

ஏசாயா 3 : 8-15                                     21 ஆகஸ்ட் 2025, வியாழன்

“சிறுமையானவனிடம் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.” – ஏசாயா 3 : 14

ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இதயத்தை துளைக்கும் செய்தியை கூறுகிறார், “ஏழைகளிடம் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் வீடுகளில் உள்ளது.” இந்த வசனம் தலைவர்கள் சிறுமைப்பட்டவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்து பராமரிக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. ‘ஏழைகளிடம் கொள்ளையிட்டது உங்கள் வீட்டில் உள்ளது’ என்ற சொற்றொடர் இன்றும் பொருத்தமானதாகவும் ஏழைகளுக்கு எதிராக தொடரும் அநீதியையும் சுட்டிக்காட்டுகிறது. ஏழைகளின் செல்வம் மற்றும் வளங்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் அநியாயமாக எடுத்துச் சென்று பதுக்கி வைக்கப்படும் அவலத்தைக் குறிக்கிறது. இஸ்ரவேலில் இருந்த தலைவர்கள் கடவுளின் மக்களை நீதியோடும் இரக்கத்தோடும் பரமாரிக்கும்படி பணிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏழை மக்களின் பொருட்களை அபகரித்துக்கொண்டனர்.

எல்லா பிரச்சனைகளிலும் கடவுள் நியாயந்தீர்க்கிறார் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கான செயல்களை செய்யாமலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் செயல்படுவதுமே கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். சமூகத்தில் இத்தகைய மக்களோடு இயேசு நின்றார். அவர்களுக்காக குரல் கொடுத்தார்.

நம்மைச் சுற்றிப் பாதிக்கப்படும் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாப்போம். அவரது நியாயமான உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம். தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்துவோம். தேவைப்படுபவர்களுக்கு உதவ நேரத்தையும் வளங்களையும் தாராளமாக வழங்குவோம். நம்மைப்போல ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களை மகிழ்வோடு வாழ வழி நடத்துவோம்.

நீதியின் கடவுளே, சிறுமைப்படுத்தப்பட்டவர்களின் துன்பங்களுக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் தைரியத்தையும், எங்கள் வளங்களை அவர்களுக்காக பயன்படுத்தும் ஞானத்தையும் எங்களுக்குத் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கொள்ளையிடாதிருங்கள்2025-08-21T10:51:06+00:00

நாட்டைக் குறித்து மகிழுங்கள்

ஏசாயா 66 : 5-10                                  19 ஆகஸ்ட் 2025, செவ்வாய்

“எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடே மகிழ்ந்து அவளைப் பற்றிக் களிகூருங்கள்.” – ஏசாயா 66 : 10

பாபிலோன் சிறையிருப்பினால் எருசலேம் மக்கள் துன்பத்தை அடைந்தார்கள். தாய்நாடு தோல்வியுற்று நாடுகடத்தப்பட்டதினால் கைவிடப்பட்ட உணர்வையும் அனுபவித்தனர். ஆனால் கடவுள் அம்மக்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை வாக்களித்து அவர்களுடைய துக்கத்திற்கு பதிலாக மகிழ்ச்சியையும் அவர்களது வலிக்கு பதிலாக இளைப்பாறுதலையும் ஏற்படுத்தினார். ஏசாயாவின் தீர்க்கர் கடவுளின் மறுசீரமைப்பின் தன்மையைப் பற்றிய ஆழமான உண்மையை அறிய நம்மை அழைக்கிறார். இது ஒரு ஆழமான, உருமாறும் புதுப்பித்தலைக் குறிக்கிறது, அதாவது மரணம் இருந்த இடத்தில் வாழ்க்கையையும், துக்கம் இருந்த இடத்தில் மகிழ்ச்சியையும் தருகிறது. துக்கமடைந்தவர்களுக்கும், விரக்தியின் பள்ளத்தாக்குகளின் வழியாக நடந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அடைவதற்கான அழைப்பு உறுதிசெய்யப்படுகிறது.

நம் சொந்த வாழ்க்கையில், நாம் அடிக்கடி துக்கத்தின் படிநிலைகளை அனுபவிக்கிறோம். தனிப்பட்ட இழப்பு, ஏமாற்றம் அல்லது உலகில் நாம் காணும் சம்பவங்களின் கூட்டு வலி காரணமாக இருக்கலாம். ஆனாலும் நம் துக்கத்தின் நடுவில் கடவுள் இருக்கிறார் என்பதை இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது. மகிழ்வதற்கான அழைப்பு வெளிப்புறக் கொண்டாட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல கடவுள் இயேசுவில் தந்த விடுதலையில் விசுவாசம் வைப்பதற்கும், நம்முடைய ஆழ்ந்த துக்கங்களை மகிழ்ச்சியாக மறுசீரமைப்புச் செய்வதற்கும் ஆற்றல் படைத்தவர் என்பதை நம்புவதற்கும் நம்மை வழிநடத்துகிறது.

எருசலேமுடன் மகிழ்வதற்கான அழைப்பு தனிநபர்களுக்கு மட்டுமல்ல எருசலேமை நேசிக்கிற அனைவருக்குமானது. நாம் துக்கப்படுகிறவர்களுடன் துக்கப்படவும், மகிழ்ச்சியோடிருக்கிற வர்களுடன் மகிழ்ச்சியடையவும்; அழைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு செய்வதன் வழியாக கடவுளின் விருப்பத்தை பிரதிபலிக்கிறோம். இத்தகைய பண்புகளில் நிலைநின்று வாழுவோம்.

சுயாதீனமாக எங்களைப் படைத்த கடவுளே! நீர் இயேசுவில் அருளியிருக்கிற வாக்குறுதிகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்க்கையில் உமது கரம் வேலை செய்வதைக் காண என் கண்களைத் திறந்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நாட்டைக் குறித்து மகிழுங்கள்2025-08-18T10:13:41+00:00

கடவுளுடைய கிருபை

லூக்கா 2 : 40-52                               22 ஜூலை 2025, செவ்வாய்

“கடவுளுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.” – லூக்கா 2 : 40

மனுக்குலம் பாவஞ்செய்து கடவுளோடுள்ள உறவை இழந்தது. இந்த உறவை மீண்டும் நிலைநாட்ட மனுக்குலம் மிருகங்களையும் பறவைகளையும் பலியிட்டது.

பவுலடிகளார் எபிரேயருக்கு ‘இரத்தஞ் சிந்தாதபடி மன்னிப்பில்லை’ என்று எழுதுகிறார். அவர் பறவைகள், மிருகங்கள் இவற்றின் இரத்தம் நிரந்தரத் தீர்வைத் தராது என்றும் எழுதுகிறார்.

பாவம் மனிதனால் வந்தது. அதுபோல பாவமன்னிப்பும் மனிதனால்தான் வரவேண்டும். இதற்காக கடவுள் மேசியாவான இயேசுவை மெய்யான மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்பினார்.

அறிவர் மார்டின் லூத்தர் கத்தெகிஸ்மு புத்தகத்தில் இயேசு கிறிஸ்து யார் என்று கேள்வி கேட்டுவிட்டு, இயேசுகிறிஸ்து பிதாவினிடம் அநாதியாய் பிறந்த மெய்யான கடவுளும், கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாய் இருக்கிறார் என்று சொல்லுகிறார்.

இயேசுவின் குழந்தைப் பருவ வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் இயேசுவுக்கு தேவையாயிருந்தன. உலகில் உள்ள மற்ற குழந்தைகளைப் போல இயேசுவும் சரீரத்திலும் அறிவிலும் வளர்ந்தவர். ஏனெனில் உன்னதமானவருடைய குமாரனான இயேசு மனிதனாக தோற்றம் அளிக்கவில்லை. மெய்யான மனிதனாகவே ஆனார். கடவுளின் கிருபையைப் பெற்றவராக வளர்ந்தார்.

இயேசு வளர்ந்து பலங்கொண்டு ஞானத்தினால் நிறைந்திருந்தார். கடவுளுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. கடவுளின் கட்டளைப்படியும் வழக்கப்படியும் இஸ்ரவேலர் பண்டிகை கொண்டாட எருசலேமுக்கு செல்வார்கள். யோசேப்பும் கன்னிமரியாளும் இயேசுவும் பன்னிரெண்டாம் வயதில் பண்டிகை கொண்டாட எருசலேமுக்கு வந்தார்கள்.

பண்டிகை முடிந்து இயேசு தாய் தந்தையருடன் செல்லாமல் தேவாலயத்தில் தங்கி, ரபிமாருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இயேசுவைத் தேடிவந்த பெற்றோரிடம் நான் என் பிதாவின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது தெரியாதா? என்று கேட்டார்.

கடவுளின் கிருபை இயேசுமீது இருந்தது. அவர் ஞானத்திலும் வளர்த்தியிலும் அதிகரித்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பிரியமாக மென்மேலும் வளர்ந்தார். கிருபையை நிறைவாய் பெற்றார். குழந்தை இயேசுவின் மாதிரியை பின்பற்றுவோம். கடவுளின் கிருபைகளை பெற்றுக்கொள்ளுவோம்.

வாக்குமாறாத கடவுளே! உம் நேசகுமாரனை மனிதனாக அனுப்பினீர். அவர் மீது அமர்திருந்த கிருபையை அறிகிற நாங்கள் உம் கிருபையை நாடி தேடி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளுடைய கிருபை2025-07-21T08:01:09+00:00
Go to Top